ரெமுணா

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

ஒடிஸாவிலுள்ள இக்கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் திருடராக போற்றப்படுகிறார்

வழங்கியவர்: தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது.

நாங்கள் சந்தன யாத்திரையின் இறுதியில் ரெமுணாவிற்கு வந்தோம், சந்தன யாத்திரை என்பது குளிர்ந்த சந்தனத்தினால் விக்ரஹங்கள் அலங்கரிக்கப்படும் காலமாகும். கடும் வெப்பம் நிலவும் பகல் நேரத்தில், இங்குள்ள மதன மோஹனர், கோவிந்தர், கோபிநாதர் ஆகிய மூன்று கிருஷ்ண விக்ரஹங்களின் மார்பிலும் பிராமணர்கள் சந்தனம் பூசுகின்றனர். அக்ஷய திரிதியை அன்று மட்டும் விக்ரஹங்கள் முழுவதும் சந்தனம் பூசப்படுகிறது.

ரெமுணாவின் ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.00 மணிக்கு ஹரே கிருஷ்ண மந்திர ஒலிப்பெருக்கி இசையுடன் களைகட்டத் தொடங்குகிறது. இஸ்கான் கொல்கத்தாவில் பதிவு செய்யப்பட்ட இந்த பஜனைப் பாடல் வங்காளத்திலும் ஒடிஸாவிலும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

பிரபலமான கோயிலாக இல்லாதபோதிலும், ரெமுனாவில் உள்ள க்ஷீர-சோர கோபிநாதரின் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.

பகவானை தரிசனம் செய்தல்

“காலை 6.30 மணிக்கு வந்து பகவானின் உடையலங்காரத்தைக் காண வேண்டும்” என்று அங்கிருந்த பூஜாரி என்னிடம் கூறினார். அதன்படி நாங்களும் அங்கு சென்றோம். பகவானின் உடையலங்காரத்தைக் காண அனுமதி பெறுவது மிகவும் அரிது, ஆனால் இங்கு யார் வேண்டுமானாலும் அதனைக் காணலாம். ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக கோபிநாதர் காட்சியளிக்கிறார், ஆயினும் அவரது உருவம் தெளிவாகத் தெரிகிறது. (கோபிநாதர் எவ்வாறு ரெமுணாவிற்கு வந்தார் என்பது தனியே விளக்கப்பட்டுள்ளது.) அக்கல்லில் இருக்கும் இதர சிற்பங்களையும் பூஜாரி எங்களுக்குக் காட்டினார். அவை யாவும் இராமசந்திரராக பகவான் அவதரித்தபோது அவரால் செதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுபவை.

கோபிநாதரின் புல்லாங்குழல் குழலாக இல்லாமல் ஏன் செவ்வக வடிவில் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். கோபிநாதருடன் இணைந்துள்ள புல்லாங்குழல் செவ்வகமாக இருப்பதால், வெளிப்புற புல்லாங்குழலும் அவ்வாறு உள்ளது.

உடையலங்காரம் ஆரம்பமானபோது, நானும் மஹாவிஷ்ணு தாஸரும் மட்டுமே அங்கிருந்தோம். நேரம் ஆகஆக மேலும் சிலர் அங்கு வந்து பகவானின் அழகைக் கண்டுகளித்தனர். நாங்கள் அங்கேயே அமர்ந்து ஜபம் செய்தபடி, கோவிந்தர், கோபிநாதர், மற்றும் மதன மோஹனரின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். கோவிந்தரும் மதன மோஹனரும் சுமார் 1935இல் சைதன்ய தாஸ பாபாஜி என்ற பக்தரால் விருந்தாவனத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டனர்.

அந்த பூஜாரி எளிமையான துணிகளைக் கொண்டு, மிக விரைவாகவும் திறமையாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பகவானுக்கு உடையணிவித்தார்.

ரெமுணாவின் புனித ஸ்தலங்கள்

நான் ரெமுணாவிற்கு முதன்முதலாக 1978இல் வந்தேன். தற்போது இவ்விடம் ஓரளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது. பிரமாதமாக ஏதுமில்லை, சில கடைகள் உள்ளன, பகவானை தரிசிக்க சற்று அதிகமான பக்தர்கள் வருகின்றனர். தமது மகன்களுக்கும் மகள்களுக்கும் திருமணம் நடத்துவதற்காக பலர் இங்கு வருகின்றனர்.

நாள் முழுவதும் யாத்திரிகர்களின் வருகை ஒரே சீராக உள்ளது. புரி, திருப்பதி, அல்லது நாத்வாராவில் காணுமளவிற்கு பெரிய கூட்டம் இங்கு இல்லை. சில நூறு யாத்திரிகர்கள் தினமும் வருகின்றனர், ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். அதிக கூட்டம் இல்லாத கோடை காலத்தில் நாம் இங்கு வந்துள்ளோம். குளிர் காலத்தில் அதிகமான பக்தர்கள், பெரும்பாலும் ஒடிஸாவிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வருகின்றனர். இங்கு வருபவர்களில் பலர் வெவ்வேறு கௌடீய வைஷ்ணவ பிரிவைச் (சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் பிரிவைச்) சேர்ந்த பக்தர்களாக உள்ளனர். பல கௌடீய குடும்பங்கள் இங்கு வந்து குடியேறியுள்ளன.

முன்பு வங்காளத்திற்கும் புரிக்கும் இடையிலான நேரடி வழியில் ரெமுணா அமைந்திருந்தது. ஆனால் இப்போது சற்று விலகியுள்ளது. முக்கிய இரயில் பாதை இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பலேஷ்வர் வழியாகச் செல்கிறது. கௌர-தண்ட என்ற பெயர் கொண்ட பழைய வழித்தடம் இன்றும் உள்ளது. கௌர தண்ட என்றால், “பகவான் சைதன்யரின் திருப்பாதங்கள் பதிந்த பாதை,” என்று பொருள்.

ரெமுணா கிராமத்திலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலப்பரப்பில் கோபிநாதர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் பிரதான நுழைவாயிலில் பெரிய கிளைகளுடன் கூடிய மகிழ மரம் ஒன்று அமைந்துள்ளது. இவ்விடம் அரசர் நரசிம்மதேவரால் முதன்முதலில் கட்டப்பட்ட கோயிலைக் குறிக்கிறது.

தற்போதைய கோயிலிருந்து இருநூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இராமசண்டி, மற்றும் கர்கேஷ்வரர் கோயிலுக்கு அருகில் கிராமவாசிகளுக்காக சந்தை ஒன்று இருந்து வந்துள்ளது. அஃது இடையர்கள் வசிக்கும் கிராமத்திற்குச் சொந்தமானது என்றும், அம்ருத-கேலி எனப்படும் மணம் கமழும் திரட்டுப் பாலை தயாரிப்பதற்காக அவர்கள் தினமும் அறுபது லிட்டர் பாலை வழங்கி வந்தனர் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்தையில்தான் மாதவேந்திர புரி ரெமுணாவிற்கு வந்தபோது தங்கியதாக சொல்லப்படுகிறது. (“கோபிநாதர் ஏன் க்ஷீர-சோரா என்று அழைக்கப்படுகிறார்?” என்பதைப் படிக்கவும்). மாதவேந்திர புரி அமர்ந்த இடமும் அவரது மரப் பாதுகைகளும் அங்குள்ள சிறிய கோயிலில் வழிபடப்படுகிறது. அந்த கோயிலே மாதவேந்திர புரியின் சமாதியாகும்.

கோபிநாதர் கோயிலில் இரண்டு இடங்களில் உள்ள சைதன்ய மஹாபிரபுவின் பாதச் சுவடுகளை இங்கு வரும் யாத்திரிகர்கள் வழிபடுகின்றனர். புரியில் பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடனைத் தாங்கி நிற்கும் கருட ஸ்தம்பத்திற்கு அருகில் சைதன்ய மஹாபிரபு தினமும் நின்றதால் பதிவான சுவடுகளைக் கொண்டு இங்குள்ள பாதச் சுவடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பகவான் ஜகந்நாதரைக் கண்டவுடன், தனது பாதங்கள் உருகி, நின்றிருந்த கல் தரையில் சுவடு ஏற்படுமளவிற்கு பகவான் சைதன்யர் மிகுந்த பரவசமடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

கோபிநாதரின் கோயிலுள்ள சிறிய கடையில் கோயிலின் பெருமைகளை விவரிக்கும் புத்தகங்கள் ஒடியா, வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் விநியோகிக்கப்படுகின்றன. விக்ரஹத்தினை புகைப்படம் எடுப்பது யாத்திரிகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது, இருப்பினும் இக்கடையில் கோபிநாதரின் படங்கள் விற்கப்படுகின்றன. பகவானுக்கு நைவேத்யம் செய்வதற்கான இனிப்புகளும் இக்கடையில் விற்கப்படுகின்றன. இந்தியாவில் பொதுவாக அனுசரிக்கப்படும் வழக்கத்தின்படி, அந்த இனிப்புகள் பகவானுக்குப் படைக்கப்பட்ட பின்னர், வாங்கியவருக்கே திருப்பித் தரப்படுகின்றன.

கோயிலின் நுழைவாயிலுக்கு சற்று வெளியே ஒரு சிறிய குளம் வெட்டப்பட்டுள்ளது. இக்குளத்தில் படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இதில் யார் வேண்டுமானாலும் நீராடலாம். கோயிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவில் மற்றொரு பழமையான குளம் உள்ளது. புரியில் வசித்த பகவான் சைதன்யரை தரிசிக்கச் சென்ற வங்காள பக்தர்கள் இக்குளத்தில் நீராடுவது வழக்கம். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீ நித்யானந்த பிரபு, ஸ்ரீ மாதவேந்திர புரி என பல்வேறு சிறந்த ஆத்மாக்கள் இதில் நீராடியுள்ளனர். இப்போது அந்த வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது நமது அதிர்ஷ்டமே. இக்குளத்தினை கிராமவாசிகள் தங்களது துணிகளைத் துவைப்பதற்கு உபயோகித்தாலும், இதில் நீராடுவதன் ஆன்மீக பயன் பாதிக்கப்படுவதில்லை.

க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலிலிருந்து பத்து நிமிட நடைதொலைவில் கௌடீய மடத்தின் கிளை அமைந்துள்ளது. கௌடீய மடம் என்பது பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதியினால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும். அவர் இவ்வுலகை விட்டு மறைவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தார், அப்போது அவர் தனது மடத்தின் கிளை ஒன்றினை இங்கு ஆரம்பிக்க விரும்பினார். ஆயினும் அந்த விருப்பத்தை அவரால் நிறைவேற்ற இயலவில்லை. இருப்பினும், அவர் இவ்வுலகை விட்டு மறைந்த குறுகிய காலத்திற்குள், ரெமுணாவிலிருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜகந்நாதரின் கோயிலை ஒருவர் கௌடீய மடத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இங்கே ஜகந்நாதர் விக்ரஹங்கள் மட்டுமின்றி, தற்போதைய வங்காளதேசத்தில் உள்ள மைமென்சிங் என்னும் இடத்தில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராதா-கிருஷ்ண விக்ரஹங்களும் உள்ளனர். வங்காளப் பிரிவினையின்போது ராதா-கிருஷ்ணர் விக்ரஹங்கள் இங்கு கொண்டு வரப்பட்டனர்.

ஸ்ரீமத் பாகவதத்திற்கு முதன்முதலில் உரையெழுதிய ஸ்ரீதர சுவாமியும், பகவான் சைதன்யரின் வழிவந்த பெரும் ஆன்மீக குருவான ஸ்ரீ பலதேவ வித்யாபூஷணரும் ரெமுணாவில்தான் அவதரித்தனர். அவர்களது அவதார ஸ்தலங்களைக் காண வேண்டுமெனில், அவற்றைத் தெரிந்து வைத்துள்ள வழிகாட்டி ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும். இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு அவற்றைப் பற்றி ஏதும் தெரியாது.

கோபிநாதரின் கோயிலுக்கு அருகில் இருக்கும் ராமசண்டீ துர்கையின் கோயில்

பகவானின் திருப்திக்காக மிருதங்கம் வாசிக்கும் பக்தர்கள்

பகவானை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் அருகிலுள்ள இக்குளத்தில் நீராடிச் செல்வது வழக்கம்.

அமிர்தத்தைச் சுவைத்தல்

க்ஷீர-சோரா கோபிநாதரின் கதையை அவர் முன்பாகவே படிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் விருப்பம் கடந்த இரவு நிறைவேறியது. அதிர்ஷ்டவசமாக இங்குள்ள ஒருவரிடம் சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதி ஒன்று இருந்தது. அதனை பகவானின் முன்பு படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். மாயாபுரிலிருந்து புரிக்குச் செல்லும் வழியில் இங்கு வந்திருந்த எட்டு பக்தர்கள், இன்றிரவு அக்கதையினை அவர்களுக்காக படிக்கும்படி என்னிடம் கேட்டுள்ளனர்.

மிகவும் இனிப்பான அம்ருத-கேலி எனப்படும் திரட்டுப் பால் ரெமுணாவில் புகழ்பெற்றதாகும். மேலும், மற்றோர் இனிப்பு அமிர்தமான சைதன்ய சரிதாம்ருதத்தையும் நாங்கள் இங்கு அனுபவிக்கின்றோம். இந்த இரண்டு இனிய அமிர்தங்களுமே இங்கு அனுபவிக்கத்தக்கது, ரெமுணா தெய்வீக இனிமையின் ஸ்தலமாயிற்றே.

 

இடது: பதினாறாம் நூற்றாண்டில் ரெமுனாவிற்கு வருகை புரிந்த சைதன்ய மஹாபிரபுவின் பாதச் சுவடுகள் கோயிலின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. வலது: கோபிநாருக்கு மிகவும் பிரியமான அமிர்த-கேலி எனப்படும் திரட்டுப்பால்

தினமும் இரு வேளைகள் கிடைக்கும் பிரசாதத்திற்காக கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்யும் பக்தர்கள்.

ரெமுணாவிற்கு வருபவர்களின் யாத்திரை கோபிநாதரின் இனிமையான பிரசாதத்தை சுவைக்காமல் முடிவு பெறுவதில்லை.

ஆரவாரமான வழிபாடு

க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலில் நடைபெறும் மாலை நேர ஆரத்தி ஒரு கண்கொள்ளா காட்சியாகும். இரவு 7.00 மணிக்குச் சற்று முன்பாக விக்ரஹத்தின் முன்பு இருக்கும் திரை மூடப்படுகிறது. விக்ரஹ அறையிலுள்ள இரண்டு பூஜாரிகள் வெங்கலத்தினால் ஆன பெரிய தட்டுகளைக் கொண்டு டங், டங், டங் என்று ஒலி எழுப்புகின்றனர், பிரகாரத்திலுள்ள ஒருவர் பெரிய மத்தளத்தை வாசிக்கிறார், கீர்த்தனக் குழுவினர் மிருதங்கத்தையும் கரத்தாளத்தையும் வாசித்து பாடுகின்றனர், இவையனைத்தும் பெருத்த ஓசையை ஏற்படுத்துகிறது.

ஏழு மணிக்குத் திரை விலக்கப்படுகிறது. விக்ரஹ அறைக்கு வெளியிலுள்ள அனைவரும் பகவானை விழுந்து வணங்குகின்றனர், மீண்டும் பெருத்த ஒலியுடன் கீர்த்தனம் தொடர்கிறது. ஒரு பூஜாரி தூபத்தையும் கற்பூரத்தையும் காட்ட, இரண்டாவது பூஜாரி பகவானுக்கு சாமரம் வீசுகிறார். கோயிலில் மின்விளக்குகள் உள்ளபோதிலும், ஆரத்தியின் போது பாரம்பரியம் மிக்க எண்ணெய் பந்தத்தை ஒருவர் ஏற்றிப் பிடித்திருக்கிறார்.

தூப ஆராதனை முடிந்ததும் நெய் விளக்கினை ஏற்றுவதற்காக விக்ரஹத்தின் முன்னுள்ள திரையினை பூஜாரி மூடினார். இதற்கிடையில் கீர்த்தனம் தொடர்ந்து நடக்கிறது, கதவு மீண்டும் திறக்கப்பட்டபோது கீர்த்தனம் மிகவும் தீவிரமடைகிறது, பெருத்த ஓசை காணப்படுகிறது.

பூஜாரி நெய்விளக்கில் ஆரத்தி செய்கிறார். அதைத் தொடர்ந்து சங்கில் நீரெடுத்து ஆரத்தி செய்கிறார். அவற்றை முடித்த பின்னர், கீர்த்தனம் நடைபெறும் பிரகாரத்திற்கு வந்து இருபுறமும் உள்ள பக்தர்களுக்கு தீர்த்தத்தைத் தெளிக்கிறார். அனைத்து பக்தர்களும் பணிவுடன் தீர்த்தத்தை தலையில் தரித்துக் கொள்கின்றனர். இந்த ஆரத்தி சுமார் பத்து நிமிடங்கள் நீடிக்கின்றது.

கோபிநாதர் ரெமுணாவிற்கு எவ்வாறு வந்தார்?

ரசிகானந்தரின் சீடரான ஸ்ரீ கைஷோரானந்த தேவ கோஸ்வாமி என்பவர், ரெமுணாவிற்கு கோபிநாதர் எவ்வாறு வந்தார் என்பதை ஒடிய மொழியில் தாம் எழுதிய நூலில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

சுமார் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, திரேதா யுகத்தில் பரம புருஷ பகவான் இராமரும் அவரது பத்தினி சீதாதேவியும் வட இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள சித்திரகூடத்தில் சிலகாலம் வாழ்ந்து வந்தனர். ஒரு மழைக் காலத்தில் பெரும் புயலின் காரணமாக இராமரும் சீதையும் முனிவர்களின் ஆசிரமத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கிருந்த பசுக்களைக் கண்டதாலும் அவற்றின் ஒலியைக் கேட்டதாலும் பகவான் இராமசந்திரர் துவாபர யுக லீலைகள் நினைவிற்கு வருவதாக சீதையிடம் குறிப்பிட்டார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? தயவுசெய்து அந்த லீலைகளை எனக்குக் கூறுங்கள்” என்று சீதாதேவி இராமரிடம் வினவ, “ஒரு வாரம் பொறுத்திரு. ஒரு கருப்புப் பாறையில் அந்த லீலைகளை அம்பினால் சிற்பமாகச் செதுக்குகிறேன், அப்போது அவற்றை நீ காணலாம்,” என்று இராமர் பதிலுரைத்தார்.

ஆனால் நான்கு நாள்களே கழிந்த நிலையில், “இதற்கு மேல் என்னால் காத்திருக்க இயலாது, தாங்கள் செதுக்கியுள்ள சிற்பங்களைக் காட்டுங்கள்,” என்று சீதை வேண்டினாள்.

சீதையை மகிழ்விக்க பகவான் இராமர் தாம் செதுக்கிய சிற்பங்களைக் காண்பித்தார். அவர் கோபால கிருஷ்ணரின் விக்ரஹத்தை முடித்திருந்தார், அவரது முதுகுப்புறம் இன்னமும் கல்லுடன் ஒட்டியிருந்தது. அக்கல்லிலேயே கிருஷ்ணரின் எட்டு கோபியர்களையும் கோபியரின் நான்கு சேவகிகளையும் வரைந்திருந்தார். அத்துடன் பன்னிரண்டு பசுக்கள், முஷ்டிகனுடன் பலராமர் மல்யுத்தம் செய்தல், சாணூரனுடன் கிருஷ்ணர் மல்யுத்தம் செய்தல், மற்றும் இதர சில காட்சிகளையும் அவர் வடித்திருந்தார்.

இவற்றையெல்லாம் கண்டு மகிழ்ந்த சீதை சித்திரகூடத்தில் கோபால விக்ரஹத்தை வழிபடத் தொடங்கினாள்.

சில நாள்களுக்குப் பின்பு இராமரும் சீதையும் அங்கிருந்து வெளியேறியதால், பிரபஞ்சத்தின் படைப்பாளியான பிரம்மதேவர் அங்கு வந்து விக்ரஹத்தை வழிபடத் தொடங்கினார். திரேதா யுகத்தின் எஞ்சிய காலம், முழு துவாபர யுகம், கலி யுகத்தின் பல நூற்றாண்டுகள் என நீண்ட காலமாக அவர் இந்த சேவையை தொடர்ந்து செய்து வந்தார்.

அசுரனான இராவணனைக் கொன்று, இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர், பகவான் இராமர் தற்போது ரெமுணா என்று அறியப்படும் இந்த இடத்தில் நான்கு நாள்கள் தங்கியிருந்தார். சீதாதேவி கங்கையில் நீராட விரும்பியதால், பகவான் இராமர் ஏழு அம்புகளைச் செலுத்தி கங்கையை அங்கேயே தோற்றுவித்தார். இன்று அந்த இடம் சப்த-ஷர, “ஏழு அம்புகள்” என்று அழைக்கப்படுகிறது. கர்கேஷ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் இங்கே பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இராமசண்டி எனப்படும் துர்காதேவியின் விக்ரஹமும் அருகில் உள்ளது. பகவான் இராமசந்திரர் இவ்விடத்தில் மகிழ்ச்சியுடன் (ரமண) இருந்ததால், இந்த இடம் ரெமுணா என்று பெயர் பெற்றது.

பதிமூன்றாம் நூற்றாண்டில் ஒடிஸாவைச் சார்ந்த மன்னர் லங்குல நரசிம்ம தேவர் தமது இராணியுடனும் முனிவர்கள் பலருடனும் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். சித்திரகூடத்தில் அவர்கள் கோபாலரின் விக்ரஹத்தைக் கண்டனர். பிரம்மதேவர் தினமும் அங்கு வருவதை அறியாத அரசர், இந்த அழகிய விக்ரஹத்தை யாரும் வழிபடுவதில்லை எனக் கருதி வியப்புற்றார்.

அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பகவான், மக்கள் அதிகமாக வசிக்கும் இடத்திற்கு தம்மை எடுத்துச் செல்லுமாறு கூறினார். கோபாலரை ஜகந்நாத புரிக்கு எடுத்துச் செல்ல மன்னர் முடிவு செய்தார்.

விக்ரஹத்தை வழிபடுவதற்கு சில தகுதி வாய்ந்த பிராமணர்களை தேர்ந்தெடுத்து விட்டு மன்னர் புரிக்கு கிளம்பினார். ஆனால் அவர்கள் இடையர்கள் வாழும் அழகிய கிராமமான ரெமுணாவை அடைந்தபோது, மன்னரின் கனவில் மீண்டும் தோன்றிய பகவான் கோபாலர் அந்த கிராமத்திலேயே தம்மை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூறினார். இதையறிந்து குதூகலமடைந்த கிராமவாசிகள் தினமும் ஏராளமான பாலையும் பால் பொருட்களையும் பகவானுக்கு வழங்கினர். விக்ரஹத்துடன் எட்டு முக்கிய கோபியர்களும் இணைந்து செதுக்கப்பட்டுள்ளதைக் கண்ட இராணி, அவருக்கு கோபிநாதர், அதாவது, கோபியர்களின் இறைவன்” என்று பெயர் சூட்டினாள்.

க்ஷீர-சோரா கோபிநாதர், மூல விக்ரஹத்தின் புகைப்படம்

கோபிநாதர் ஏன் க்ஷீர-சோரா என்று அழைக்கப்படுகிறார்?

“க்ஷீர சோரா” என்ற பெயருக்கு “திரட்டுப் பாலைத் திருடியவர்” என்று பொருள்.

ரெமுணாவில் உள்ள கோபிநாதர் கோயிலுக்கு பகவான் சைதன்யர் விஜயம் செய்தபோது, தன்னுடன் பயணம் செய்த பக்தர்களிடம் பகவானுக்கு ஏன் அப்பெயர் ஏற்பட்டது என்பதைக் கூறினார். மாதவேந்திர புரியின் சீடரும் தனது ஆன்மீக குருவுமான ஈஸ்வர புரியிடமிருந்து இக்கதையை பகவான் சைதன்யர் கேட்டறிந்தார். மாதவேந்திர புரிக்காக திரட்டுப் பால் திருடப்பட்டதாக சைதன்ய சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாதவேந்திர புரி பகவான் கிருஷ்ணரின் மிகவுயர்ந்த பக்தராக திகழ்ந்தார். பகவானின் லீலைகளை நினைத்தபடி அவர் விருந்தாவனத்தில் இருந்தபோது, கிருஷ்ணர் அவரது கனவில் தோன்றி, அருகிலுள்ள அடர்ந்த காட்டில் தாம் நீண்ட காலமாகப் புதைந்து கிடப்பதாக கூறினார். தம்மை மாதவேந்திர புரி தோண்டி எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பினார். பகவானின் அறிவுரையைப் பின்பற்றி, உள்ளூர் மக்களின் உதவியுடன் கோபாலன் என்னும் கிருஷ்ண விக்ரஹத்தை அவர் கண்டெடுத்தார்.

கோபாலனுக்காக கோயிலை எழுப்பிய மாதவேந்திர புரி அங்கே அவருக்கு இரண்டு ஆண்டுகள் சேவை செய்து வந்தார். பின்னர், மீண்டும் அவரது கனவில் தோன்றிய கோபாலன், ஒடிஸாவிற்குச் சென்று தமது உடலில் பூசுவதற்காக சந்தனம் கொண்டு வரும்படி கூறினார்.

ஒடிஸா செல்லும் வழியில் மாதவேந்திர புரி ரெமுணாவில் உள்ள கோபிநாதர் கோயிலுக்கு வந்தார். கோபிநாதருக்கு படைக்கப்படும் உணவினை தனது கோபாலனுக்கும் படைக்க வேண்டும் என்று விரும்பிய அவர், கோபிநாதருக்கு எத்தகைய உணவு படைக்கப்படுகிறது என்பதை பூஜாரியிடம் கேட்டார். அமிர்தம் போன்ற சுவை கொண்ட அம்ருத-கேலி எனப்படும் திரட்டுப் பால் (க்ஷீர) மிகவும் பிரபலமானது என்று பூஜாரி பதிலளித்தார்.

அன்று மாலை பூஜாரி பகவானுக்குத் திரட்டுப் பாலைப் படைத்தபோது, அதில் சிறிதை சுவை பார்த்தால், அதே போன்ற திரட்டுப் பாலை தனது கோபாலனுக்கும் படைக்கலாமே என்று மாதவேந்திர புரி நினைத்தார். இருப்பினும், பகவானுக்கு நைவேத்தியம் நடைபெறும் சமயத்தில் அதனை ருசி பார்க்க விரும்பியதை எண்ணி உடனடியாக வருந்தினார். பெரும் அபராதம் செய்துவிட்டதாக உணர்ந்து கோயிலை விட்டு வெளியேறி சந்தை பக்கம் சென்று பகவானின் நாமங்களை ஜெபிக்கத் தொடங்கினார்.

அன்றிரவு, பூஜாரியின் கனவில் தோன்றிய பகவான் கோபிநாதர், தமது ஆடைகளுக்குப் பின்புறம், திரட்டுப் பால் பானை ஒன்றினை தாம் மறைத்து வைத்துள்ளதாகவும், அதனை மாதவேந்திர புரியிடம் ஒப்படைக்கும்படியும் கூறினார். பூஜாரியும் அவ்வாறே செய்தார்.

பகவான் தனக்காக திரட்டுப் பாலைத் திருடி வைத்திருந்ததை அறிந்து மாதவேந்திர புரி பரவசமடைந்தார். பாலை அருந்திய பின், அப்பானையினை மாதவேந்திர புரி தன்னுடன் வைத்துக் கொண்டார், அப்பானையின் சிறிய துகளை ஒவ்வொரு நாளும் அவர் உண்டு வந்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives