கிருஷ்ணர் எதற்காக அவதரிக்கிறார்?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

மேதகு உயர் ஆணையர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, கிருஷ்ணர் அவதரித்த இந்த ஜன்மாஷ்டமி திருவிழாவில் கலந்துகொள்ள இங்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். பகவத் கீதையில் [4.9] கிருஷ்ணர் கூறுகிறார்,

ஜன்ம கர்ம ச மே திவ்யம்

ஏவம் யோ வேத்தி தத்த்வத:

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம

நைதி மாம் ஏதி ஸோ ’ர்ஜுன

“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.”

நாம் அழிய மாட்டோம்

பிறப்பு இறப்பு சுழற்சியினை நிறுத்தி, பிறவா நிலையினை நம்மால் அடைய முடியும் என்பது உண்மையே. ஆனால் நவீன நாகரிகத்தைச் சார்ந்த பெரும் தத்துவவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளிடம்கூட அமரத்துவம் அல்லது அழியா நிலையினை அடைவதைப் பற்றிய எந்தவித சிந்தனையும் இல்லை. நாம் அனைவரும் அமரர்கள், இறப்பற்றவர்கள் (அம்ருத). பகவத் கீதையில் [2.20], ந ஜாயதே ம்ரியதே வா கதாசின், உயிர்வாழிகளான நாம் ஒருபோதும் இறப்பதோ பிறப்பதோ இல்லை. அஜோ நித்ய: ஷாஷ்வதோ ’யம் புராணோ ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே, நாம் பழமையானவர்கள், ஆரம்பமும் முடிவுமற்ற நித்தியமானவர்கள். இந்த உடல் அழிவுறும்போதிலும் நாம் அழிவதில்லை. இருப்பினும், இந்த உடல் அழிவுற்றவுடன், நாம் வேறு உடலை ஏற்றாக வேண்டும்.

தற்போதைய தருணத்தில், உலகம் முழுவதுமுள்ள மக்களிடம் எளிமையான அறிவுகூட இல்லை: நாம் அனைவரும் கிருஷ்ணரின் அம்சங்கள் என்பதையும், கிருஷ்ணரைப் போன்றே நாமும் நித்தியமானவர்கள், ஆனந்தமானவர்கள், அறிவு நிறைந்தவர்கள் என்பதையும் அவர்கள் அறிவதில்லை. வேத சாஸ்திரங்களில் கிருஷ்ணர் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளார்:

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண:ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ:

அநாதிர் ஆதிர் கோவிந்த:ஸர்வ-காரண-காரணம்

“கோவிந்தர் என்று அழைக்கப்படும் கிருஷ்ணரே புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள். அவர் ஆனந்தமும் அறிவும் நிறைந்த நித்தியமான ஆன்மீக உடலையுடையவர். அவரே அனைத்திற்கும் தோற்றுவாய், அவருக்கு தோற்றுவாய் என்று யாருமில்லை, அவரே அனைத்து காரணங்களுக்கும் காரணம்.”

ஆதி புருஷராகிய கிருஷ்ணர்

கிருஷ்ணர் என்று நான் கூறும்போது, அது கடவுளைக் குறிக்கிறது. சில சமயங்களில் “கடவுளுக்குப் பெயரில்லை” என்று கூறப்படுவதுண்டு. அஃது உண்மையே. ஆனால், அவரின் செயல்பாடுகளை வைத்து அவருக்கு பெயரிடப்படுகின்றது.

கிருஷ்ணரே ஆதி புருஷர், முதல் நபர். அப்படியெனில் கிருஷ்ணர் வயதானவரா? இல்லை. நவ-யௌவனம் ச, என்றும் இளமையானவர். குருக்ஷேத்திர யுத்தத்தின்போது கிருஷ்ணர் இருபது அல்லது அதிகபட்சம் இருபத்துநான்கு வயது வாலிபனைப் போன்று இருந்தார். ஆனால், அத்தருணத்தில் அவருக்கு கொள்ளுபேரப்பிள்ளைகள் இருந்தனர். எனவே, கிருஷ்ணர் எப்பொழுதும் இளமையானவரே. இது வேத சாஸ்திரங்களில் உள்ள வார்த்தைகளாகும்.

வேதங்கள் அனைத்தும் கிருஷ்ணரை அறிந்துகொள்வதற்கு உரித்தானவை என்றபோதிலும், வேதங்களை வெறுமனே “படிக்க வேண்டும்” என்பதற்காகப் படித்தால், கிருஷ்ணர் யார் என்பதை அறிந்துகொள்வது மிகவும் கடினம். பகவத் கீதையில் [15.15] கிருஷ்ணர், வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ, “எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே” என்று கூறுகிறார். நீங்கள் கிருஷ்ணரை அறிந்துகொள்ளவில்லை எனில் வேதங்களைப் படிப்பதன் பயன் என்ன? பரம புருஷரை, பரம தந்தையை, பரம காரணத்தை அறிந்துகொள்வதே கல்வியின் இறுதி இலக்காகும். இது வேதாந்த சூத்திரத்திலும் கூறப்பட்டுள்ளது, அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா, “இப்பொழுது, இந்த மனித வாழ்வில், இதுதான் பரம பூரண உண்மையைப் பற்றி, பிரம்மனைப் பற்றி, விவாதிக்க வேண்டிய தருணம்.”

இந்த பிரம்மன் என்பது என்ன? ஜன்மாத்யஸ்ய யத:, யாரிடமிருந்து எல்லாம் வெளிப்படுகின்றதோ அவரே பிரம்மன். அனைத்திற்கும் ஆதிமூலத்தைக் கண்டறிவதே அறிவியல் என்றும் தத்துவம் என்றும் கூறப்படுகிறது. வேத சாஸ்திரங்களிலிருந்து நாம் எதைப் பெறுகிறோம்? கிருஷ்ணரே ஸர்வ-காரண-காரணம், எல்லா காரணங்களுக்கும் காரணம்.

கிருஷ்ணரை அறிவதன் பயன்

எனவேதான் கிருஷ்ணர், “எனது திவ்யமான தோற்றம் மற்றும் செயல்களைப் பற்றி அறிந்துகொள்” என்று கூறுகிறார். கிருஷ்ணரின் வருகை மிகவும் இன்றியமையாதது. ஏன் அவர் அவதரித்தார், ஏன் இந்த ஜடவுலகிற்கு இறங்கி வருகிறார், அவரது நோக்கம் என்ன, அவரது செயல்கள் என்ன என்று நாம் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதன் பயன் என்ன?

த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி
ஸோ ’ர்ஜுன,
நாம் அமரத்துவம் அடைவோம், அதுவே பயன்.

வாழ்வின் இலக்கு அமரத்துவம் அடைவதே (அம்ருதத்வாய கல்பதே). கிருஷ்ணர் அவதரித்த இன்று நாம் கிருஷ்ணரைப் பற்றிய தத்துவங்களைப் புரிந்துகொள்ள முயலலாம்.

துரதிர்ஷ்டவசமாக, நாம் அதனை ஏற்க மறுக்கிறோம் அல்லது திரித்துவிடுகிறோம். பகவத் கீதையில் [9.34] கிருஷ்ணர், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு, “எப்பொழுதும் என்னைப் பற்றி நினைத்து, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக” என்று கூறுகிறார். இது கடினமான காரியமா? கிருஷ்ணரின் விக்ரஹம் உள்ளது. விக்ரஹத்தை நினைப்பது மிக கடினமா? கோயிலுக்கு வருகை தந்து, பக்தர்கள் செய்வது போன்று, உங்கள் வணக்கங்களை விக்ரஹத்திற்கு அர்ப்பணியுங்கள். முடிந்தவரை விக்ரஹத்தை வழிபடுங்கள்.

கிருஷ்ணரை எளிமையாக அடையலாம்

கிருஷ்ணருக்கு உங்கள் சொத்துகள் வேண்டாம். கிருஷ்ணர் ஏழைகளாலும் வழிபடப்படும் அளவிற்கு வெளிப்படையாக உள்ளார். அவர் என்ன கேட்கிறார்? பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி, “பக்தியுடன் ஒருவன் எனக்கு ஓர் இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்” என்று கூறுகிறார். [பகவத் கீதை 9.26] கிருஷ்ணர் பசியுடன் இல்லை. அவர் உங்களை பக்தராக மாற்ற விரும்புகிறார். இஃது ஒரு முக்கிய கருத்து. யோ மே பக்த்யா ப்ரயச்சதி, “எதையும் பக்தியுடன் எனக்கு அர்ப்பணியுங்கள்.” இதுதான் முக்கிய கொள்கை. எதை வேண்டுமானாலும் அர்ப்பணிக்கலாம், சிறிய அளவிலும் அர்ப்பணிக்கலாம். கிருஷ்ணர் பசியுடன் இல்லை; கிருஷ்ணரே அனைவருக்கும் உணவினை அளிக்கின்றார். ஆனால், கிருஷ்ணருக்கு உங்கள் அன்பு, உங்கள் பக்தி வேண்டும். எனவேதான் அவர் சிறிதளவு தண்ணீரோ பழமோ பூவோ யாசிக்கின்றார். மன்-மனா பவ மத்-பக்த, இந்த வகையில், கிருஷ்ணரை நினைத்து அவரது பக்தராக மாறலாம்.

கிருஷ்ணருடைய சொத்திற்கான உரிமை

கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதோ கிருஷ்ண உணர்வினை ஏற்றுக்கொள்வதோ கடினமல்ல. ஆனால், நாம் அதனை ஏற்பதில்லை, அதுவே நமது நோய். இல்லையென்றால், இஃது ஒன்றும் கடினமல்ல. கிருஷ்ணரைப் புரிந்துகொண்ட உடனேயே, நாம் இந்த முழு பிரபஞ்சத்தின் நிலையைப் புரிந்துகொள்ளலாம். நமது இந்த பாகவத தத்துவம் (கடவுள் உணர்வு தத்துவம்), ஒரு வகையில் ஆன்மீகப் பொதுவுடைமைக் கொள்கையே (கம்யூனிசம்); ஏனெனில், நாம் கிருஷ்ணரை பரம தந்தையாகவும் மற்ற அனைத்து உயிர்வாழிகளையும் அவரது பிள்ளைகளாகவும் கருதுகின்றோம். கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-லோக மஹேஷ்வரம், அவரே அனைத்து லோகங்களின் உரிமையாளர். எனவே, ஆகாயத்தில், நீரில், நிலத்தில் என்னவெல்லாம் உள்ளதோ அத்தனையும் கிருஷ்ணரின் உடைமைகளே.

நாம் கிருஷ்ணரின் பிள்ளைகளாதலால், அவரது சொத்துக்களைப் பயன்படுத்த நம் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், மற்றவர்களுடையதை ஆக்கிரமிக்கக் கூடாது. இதுதான் அமைதியின் சூத்திரம். ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்…மா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம், “அனைத்தும் கடவுளுடையது, நீங்கள் அவரது பிள்ளைகளாதலால் தந்தையின் சொத்துக்களைப் பயன்படுத்த உங்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், தேவைக்கு அதிகமாக எடுக்கக் கூடாது. அது தண்டனைக்குரியதாகும்.” [ஈஷோபநிஷத் 1] தனது தேவைக்கு மேல் எவர் எடுக்கின்றாரோ அவர் ஒரு திருடன். யஜ்ஞார்தாத் கர்மணோ ’ன்யத்ர லோகோ ’யம் கர்ம-பந்தன:, நாம் எதைச் செய்தாலும் அதை கிருஷ்ணரின் திருப்திக்காகச் செய்ய வேண்டும். நாம் கிருஷ்ணருக்காகச் செயல்பட வேண்டும்; கிருஷ்ணருக்காக அனைத்தையும் செய்ய வேண்டும்.

எல்லா பிரச்சனைகளுக்கும் கிருஷ்ணரே தீர்வு

எப்பொழுது நாம், “கிருஷ்ணரே பரம தந்தை, கிருஷ்ணரே பரம உரிமையாளர், கிருஷ்ணரே பரம அனுபவிப்பாளர், கிருஷ்ணரே அனைவருக்கும் பரம நண்பர்,” என்பதை மறக்கின்றோமோ, அப்போது இந்த ஜடவுலகத்திற்குள் வாழ்வதற்குப் போராடுகின்றோம், ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதுதான் பெளதிக வாழ்க்கை.

அரசியல்வாதிகள், தூதர்கள், தத்துவவாதிகள் என யார் மூலமாகவும் நிம்மதியை அடைய இயலாது. அவர்கள் அதிகமாக முயற்சித்து விட்டார்கள். ஆனால், அவர்கள் முயற்சித்தது எதுவும் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இஃது ஆரம்பிக்கப்பட்டது, “நாம் இப்போது அனைத்தையும் சுமூகமாக்கி விடலாம்,” என்று அவர்கள் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும், அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும், அல்லது ஏதோ இரண்டு நாடுகளுக்கிடையே போர் தொடர்ந்து நடைபெறுகிறது. பெளதிக அரசியல் முறைகள், ராஜதந்திரம், தத்துவக் கொள்கைகள் முதலியவற்றைக் கொண்டு தீர்வைக் கொடுக்க முடியாது. கிருஷ்ண உணர்வே தீர்விற்கான வழிமுறை. நாம் உரிமையாளர்கள் கிடையாது என்பதை அனைவரும் உணர வேண்டும். உண்மையான உரிமையாளர் கிருஷ்ணரே. செயற்கையாக நாம் “இஃது எனது சொத்து” என்று உரிமை கொண்டாடுகின்றோம். இதுவே மாயை, அறியாமையாகும். எனவே, நமக்கு கற்றுக்கொடுப்பதற்காக கிருஷ்ணர் தோன்றுகிறார். யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத, “எனதன்பு அர்ஜுனா, எப்பொழுதெல்லாம் தர்ம வாழ்வில் முரண்பாடுகள் ஏற்படுகின்றதோ, அப்போது நான் வருகிறேன்.” [பகவத் கீதை 4.7]

உண்மையான தர்மம் எது?

எது உண்மையான தர்மம்? தர்மம் து ஸாக்ஷாத் பகவத் ப்ரணீதம், “பகவானிடமிருந்து நேரடியாகத் தோன்றியதே தர்மம்” இதுதான் தர்மத்திற்கான எளிய விளக்கம். உதாரணமாக, “குடிமையியல் சட்டம்” (Civil law) என்றால் என்ன? இஃது அரசாங்கத்தால் வழங்கப்படும் சட்டம். உங்களது வீட்டிலிருந்து குடிமையியல் சட்டத்தை உருவாக்க முடியாது, அது சாத்தியமன்று. அரசாங்கம் உங்களிடம், “நீங்கள் இவ்வாறு செயல்பட வேண்டும்” என்று கூறினால், அதுதான் சட்டம். அதுபோலவே, பகவானிடமிருந்து வரும் வழிகாட்டலே தர்மம் (சமய வாழ்வு) எனப்படுகிறது. அதுவே தர்மம். நீங்களோ நானோ அல்லது வேறு யாரேனும் உருவாக்கினால், அது தர்மமே அல்ல.

எனவே, கிருஷ்ணர் பகவத் கீதையை இவ்வாறு கூறி நிறைவு செய்கின்றார். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, “தர்மத்தைப் பற்றிய உங்களது அனைத்து இட்டுக்கட்டிய சிந்தனைகளையும் கைவிட்டு, என்னிடம் சரணடையுங்கள்.” கிருஷ்ணரிடம் சரணடைதலே தர்மம். மற்றெல்லா “தர்மங்களும்” தர்மங்கள் அல்ல. அவை தர்மங்களாக இருக்குமெனில், கிருஷ்ணர் ஏன் ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய, “அவை அனைத்தையும் கைவிடுங்கள்” என்று சொல்கின்றார்? அவர் ஏற்கனவே கூறியுள்ளார், “தர்மத்தின் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக நான் யுகந்தோறும் அவதரிக்கின்றேன்.” இறுதியில், நாம் உருவாக்கிய அத்தனை தர்மங்களையும் கைவிடும்படி அவர் கூறுகிறார். மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் எல்லாம் உண்மையில் தர்மத்தின் கொள்கைகள் அல்ல. கடவுளால் வழங்கப்பட்டதே உண்மையான தர்மம், உண்மையான சமய வாழ்வு. ஆனால், கடவுள் யார், அவரது வார்த்தைகள் என்ன என்பனவற்றைப் பற்றிய எந்தப் புரிதலும் நம்மிடம் இல்லை. இதுவே நவீன சமுதாயத்தின் குறையாகும்.

கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம்

ஒவ்வொருவரின் இதயத்திலும் உறங்கிய நிலையில் இருக்கக்கூடிய கிருஷ்ண உணர்வினை எழுப்புவதற்கே இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயலுகின்றது. இதைக் கவனியுங்கள்: நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் கிருஷ்ணரைப் பற்றி எதுவும் கேட்டதில்லை, ஆனால் அவர்கள் இப்பொழுது கிருஷ்ண உணர்வினை தீவிரமாக ஏற்றுக் கொண்டுள்ளனர், எப்படி? கிருஷ்ண உணர்வு ஒவ்வொருவரின் இதயத்திலும் ஏற்கனவே இருக்கின்றது, அதனை எழுப்பினால்போதும். கிருஷ்ண உணர்வை எழுப்புவதற்கான வழிமுறை சைதன்ய சரிதாம்ருதத்தில் விளக்கப்பட்டுள்ளது [சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 22.107]:

நித்ய ஸித்த க்ரிஷ்ண-ப்ரேம ‘ஸாத்ய’ கபு நய

ஷ்ரவணாதி-ஷுத்த-சித்தே கரயே உதய

ஒவ்வொருவரின் இதயத்திலும், கிருஷ்ணரின் மீதான காதல், கிருஷ்ணரின் மீதான பக்தி உள்ளது, ஆனால் நாம் அதை மறந்துவிட்டோம். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதன் மூலம் அதனை எழுப்பும் வாய்ப்பினை அனைவருக்கும் அளித்திடுவதே இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கமாகும். இதுதான் முறை.

உதாரணமாக, நீங்கள் உறங்கும்போது, நான் உங்களை உரத்த குரலில் கூப்பிட வேண்டும். “திருவாளர் அவர்களே! எழுந்திருங்கள்! உங்களின் இந்த வேலையினைக் கவனியுங்கள்.” நீங்கள் உறங்கும்போது வேறு எந்தப் புலனும் விழிப்பு நிலையில் இருக்காது. எனவே, இந்த யுகத்தில், மக்கள் மிகவும் வீழ்ச்சியுற்று இருக்கையில், வேறு எதனையும் கேட்க மாட்டார்கள். இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரித்தால் மட்டுமே, அவர்கள் கிருஷ்ண உணர்வில் விழிப்பார்கள். இது நிதர்சனமும்கூட. எனவே, சமுதாயத்தில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் என்று நாம் உண்மையில் விரும்பினால், நாம் கிருஷ்ணரைப் பற்றிப் புரிந்துகொள்வதில் தீவிரமாக இருக்க வேண்டும். இதுவே எனது வேண்டுகோள்.

வாழ்வின் அனைத்து பிரச்சனைகளையும் உலகின் அனைத்து பிரச்சனைகளையும் இந்த இயக்கம் தீர்த்துவிடும். சமுதாயம், அரசியல், தத்துவம், மதம், பொருளாதாரம் என அனைத்தையும் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினால் தீர்க்க முடியும். எனவே, இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினைப் புரிந்துகொள்ளும்படி, இங்குள்ள மேதகு ஆணையாளரைப் போன்ற உலகின் அனைத்து தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். இஃது ஒன்றும் மனக்கிளர்ச்சியோ உணர்ச்சிபூர்வமான இயக்கமோ இல்லை. இது முழுக்கமுழுக்க விஞ்ஞானபூர்வமான இயக்கம். எனவே, உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் இதனைப் புரிந்துகொள்ளும்படி அழைக்கின்றோம். நீங்கள் அறிவாளியாகவும் உண்மையில் நியாயத்தன்மை உடையவராகவும் இருந்தால், மனித குலத்திற்கு நன்மை செய்வதில் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் உயர்ந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.

இந்த இலக்கியங்கள் இந்தியர்களுக்கோ இந்துக்களுக்கோ பிராமணர்களுக்கோ மட்டுமான
தல்ல. இவை அனைவருக்கும் பொதுவானவை; ஏனெனில், அஹம் பீஜ ப்ரத: பிதா, “நானே அனைவரின் தந்தை” என்று கிருஷ்ணர் உரிமை கோருகிறார். எனவே, நம்மை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற அவர் மிகுந்த ஆவலுடன் உள்ளார். எவ்வாறு ஒரு சாதாரண தந்தை தனது மகன் நல்ல முறையில் ஆனந்தமாக வாழ எண்ணுவாரோ, அதுபோன்று நாம் நல்ல முறையில் ஆனந்தமாக இருந்திட கிருஷ்ணரும் விரும்புகிறார். எனவே, அவர் சில நேரங்களில் வருகின்றார். இதுவே கிருஷ்ணரது அவதார நோக்கம். மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives