— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
சமீபத்தில் இந்துத்துவ சிந்தனையில் ஆர்வமுடைய அறிஞர் ஒருவர், “என்னுடைய வழிபாடே உயர்ந்தது என்று கூறுதல் அசுரத்தனம்,” என்று கருத்துரைத்தார். அவரைப் போலவே, “பல்வேறு வழிபாட்டு முறைகளில் பேதம் பார்க்கக் கூடாது,” என்றும், “நான் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு செல்வேன், வெள்ளிக்கிழமை மசூதிக்கு செல்வேன், சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு செல்வேன்,” என்றும் சிலர் கூறுகின்றனர். அல்லது, “செல்லும் வழியில் பிள்ளையார் கோயில், வெள்ளிக்கிழமை அம்மன் கோயில், சனிக்கிழமை பெருமாள் கோயில், பிரதோஷத்திற்கு சிவன் கோயில்,” என்று வேறு சிலர் கூறுவர்.
இவர்கள், பல்வேறு வழிபாட்டினை ஏற்காத நபர்களை, “அசுரர்கள்,” “பழமைவாதிகள்,” “மதம் என்னும் பேய் பிடித்தவர்கள்” என்றெல்லாம் பல்வேறு விதங்களில் கண்டிக்கின்றனர். இதுகுறித்து சற்று ஆராய்வோம்.
பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கான தேவை
உலகெங்கிலும் வசிக்கக்கூடிய மக்கள் பல்வேறு தன்மைகளுடன் இருப்பதால், பல தரப்பட்ட வழிபாட்டு முறைகள் அவசியமாகின்றன. சிறு குழந்தைக்கு ஒரு வகையான கல்வி வழங்கப்படுகிறது, பட்டம் படிப்பவர்களுக்கு வேறு வகையான கல்வி வழங்கப்படுகிறது. ஆன்மீகமும் ஒரு கல்வியே. இதில் குழந்தைகளாக இருப்பவர்களுக்கு மிகவுயர்ந்த கல்வியை வழங்குதல் சாத்தியமல்ல என்பதால், உலகெங்கிலும் பல்வேறு மதங்களும் வழிபாட்டு முறைகளும் வழக்கத்தில் உள்ளன.
இந்த வழிபாட்டு முறைகளை பகவத் கீதையில் (17.4) கிருஷ்ணர் முக்குணங்களின் அடிப்படையில் வேறுபடுத்துகிறார். ஸத்வ குணத்தில் இருப்பவர்கள் தேவர்களையும் ரஜோ குணத்தில் இருப்பவர்கள் அசுரர்களையும் தமோ குணத்தில் இருப்பவர்கள் பேய் மற்றும் பூத கணங்களையும் வழிபடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. ஸத்வ, ரஜோ, தமோ குண வழிபாட்டிற்கு மத்தியில் நிச்சயம் வேற்றுமை உண்டு, உயர்வு தாழ்வு உண்டு. இவை அனைத்தையும் சமமென்று கருதுதல் சரியல்ல.
இவற்றிற்கு அடிப்படை என்ன?
நாம் ஒரு கருத்தை முன்வைக்கும்போது, அது சாஸ்திரபூர்வமாக இருக்க வேண்டும், வேதங்களை அடிப்படையாக வைத்து பேச வேண்டும். வேதம் என்றால் அறிவு என்று பொருள். ஆன்மீக அறிவை வழங்கும் நூல்கள் வேதங்கள் என்று அறியப்படுகின்றன. ஆனால், நவீன கால மனிதனோ எதையும் அறிவுபூர்வமாக அணுகுவதில்லை, அதிலும் குறிப்பாக, ஆன்மீகம் என்று வந்துவிட்டால் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே அணுகுகிறான்; இதனால்தான், பெரியபெரிய பட்டம் பெற்றவன்கூட பல்வேறு போலி நபர்களை நம்பி ஏமாறுகிறான்.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே உண்மையான விஷயத்தைக் காண முடியும். இல்லையேல், “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்,” என்று ஒவ்வொருவரும் வாதிட்டுக் கொண்டே போகலாம்.
உதாரணமாக, நாம் யார் என்பதை மிகவும் அழகாக விஞ்ஞானபூர்வமாக அறிவுபூர்வமாக வழங்கும் பகவத் கீதையினை யாரேனும் ஒருவன் வெறும் இந்து சமய நூலாக நினைத்து ஒதுக்கினால், அஃது அறிவுபூர்வமானதல்ல. நாம் பேசுபவை அனைத்தும் சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும்.
தற்பெருமையில் மயங்கியோர் அசுரர்கள்
வழிபாட்டு முறைகளை அறிவுபூர்வமாக அணுகாமல் உணர்ச்சிபூர்வமாக அணுகுவோர், சில சமயங்களில், “என்னுடைய வழிபாட்டு முறையே சிறந்தது,” என்று கூறலாம். மற்றவர்களிடம் இருக்கக்கூடிய உயர் விஷயங்களைக் காண தவறலாம், மறுக்கலாம். அவ்வாறு தற்பெருமையுடன் வாழ்பவர்களை “அசுரர்கள்” என்று கூறுதல் முற்றிலும் சரியே. அசுரர்கள் செல்வத்தாலும் பொய் கௌரவத்தாலும் மயக்கப்பட்டு திமிருடன் இருப்பர் என்றும், அஹங்காரம், பலம், தற்பெருமை, காமம் மற்றும் கோபத்தில் மயங்கி, பரம புருஷ பகவானிடம் பொறாமை கொண்டு உண்மை மதத்தினை நிந்திப்பர் என்றும் பகவத் கீதையில் (16.17–18) கிருஷ்ணர் கூறுகிறார்.
ஆகவே, அறிவுபூர்வமான ஆய்வுகளை நிகழ்த்தாது, தற்பெருமையினால் தன்னுடைய வழிபாடே பெரியது என்று நினைப்பதை அசுரத்தனம் என்று கூறலாம். அதை விடுத்து, அறிவுபூர்வமான முறையில் உயர்ந்த வழிபாட்டில் ஈடுபடுவதை குறை கூறினால், அஃது ஏற்கத்தக்கதல்ல; எல்லா வழிபாடும் சமம், வழிபாடுகளுக்கு இடையில் வேறுபாடே இல்லை என்று கூறினால், அஃது அறிவற்ற நிலையாகும்.
தத்துவ ஆய்வு அவசியம்
தத்துவ உரையாடல்கள் சில நேரங்களில் முரண்பாடுடையதாகத் தோன்றலாம், ஆனால் அதற்காக அவற்றைப் புறந்தள்ளி விடக் கூடாது; உண்மையான ஆர்வமுடையோர் இதனை உணர்வதில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று சைதன்ய சரிதாம்ருதம் (ஆதி லீலை 2.117) கூறுகிறது.
சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து தத்துவ ஆய்வினை மேற்கொண்டால், முன்னரே கூறியபடி, குணத்திற்கேற்ப வெவ்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன என்பதை அறியலாம். மேலும், அவற்றில் ஸத்வ குண வழிபாடே சிறந்தது என்பதையும், அதிலும் பகவான் விஷ்ணுவை வழிபடுவதே சாலச் சிறந்தது என்பதையும் தெளிவாக உணரலாம். [இதுகுறித்த ஆய்வுகளை பகவத் தரிசனத்தில் பலமுறை பிரசுரித்துள்ளோம். சமீபத்தில் ஜுன் மாதம் வெளியிட்ட வைஷ்ணவர்கள் ஏன் இதர தெய்வங்களை வழிபடுவதில்லை? என்னும் கட்டுரையிலும் இதனை விளக்கியிருந்தோம்.]
பத்ம புராணத்தில், எல்லா வழிபாட்டு முறைகளிலும் சிறந்தது என்ன என்னும் கேள்வியினை பார்வதி தேவி சிவபெருமானிடம் எழுப்பியபோது, ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணுர் ஆராதனம் பரம், “எல்லா வழிபாட்டு முறைகளிலும் விஷ்ணுவை வழிபடுவதே சாலச் சிறந்தது,” என்று சிவன் பதிலளித்துள்ளார். சிவன் கூறிய கருத்தினை தவறு என்று கூறலாமா? இந்தக் கருத்தினை பகவத் கீதை உட்பட பல்வேறு இடங்களிலும் காண்கிறோம். அவற்றை தவறு என்று கூறி ஒதுக்க முடியுமா? எந்த வழிபாடு சிறந்தது என்பதை தத்துவபூர்வமாக அறிந்து பின்பற்றுவதை எவ்வாறு குறை கூற முடியும்?
ஆய்வை மேற்கொண்ட ஆச்சாரியர்கள்
தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாக ஆச்சாரியர்கள் அறிவுபூர்வமான முறையில் உயர்ந்த, தாழ்ந்த வழிபாட்டினைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நாமும் அதையே பின்பற்ற வேண்டும். வெற்று கர்வத்தினால் தன்னை உயர்வாக நினைப்பவன் அந்த நினைப்பினால் தாழ்ந்து விடுவான். அதே சமயத்தில், போலியான பணிவினால் எல்லா வழிபாட்டையும் சமமாகக் கருதுபவனும் அந்த நினைப்பினால் வீழ்வான்.
விஷ்ணுவின் வழிபாடே சாலச் சிறந்தது என்பதை உணர்ந்துள்ள வைஷ்ணவன் அந்த உணர்வுடன் அவருக்குத் தொண்டாற்றுகிறான். அவன் ஒருபோதும் விஷ்ணுவின் வழிபாட்டை மற்ற வழிபாடுகளுடன் சமப்படுத்த மாட்டான். தன்னுடைய வழிபாட்டின் உயர்நிலையினை அவன் தெளிவாக அறிந்துள்ளான். அதே சமயத்தில், அதை நினைத்து அவன் கர்வமடைவதில்லை; மாறாக, பகவானின் கருணையாலும் குருவின் கருணையாலும் இந்த உயரிய வழிபாட்டை அணுகுவதற்கான அனுமதி தனக்கு வழங்கப்பட்டுள்ளதே என்பதை நினைத்து பணிவுடையவனாகிறான். இதுவே உண்மையான பணிவு. “நான் தாழ்ந்தவனாக இருந்தாலும், உயர்ந்த வழிமுறையினை ஆச்சாரியர் கருணையுடன் எனக்கு வழங்கியுள்ளார்,” என்று அவன் நினைக்கின்றான்.
நம்முடைய வேத பாரம்பரியத்தில் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியவர்கள் சாஸ்திர அடிப்படையிலான விவாதங்கள் பலவற்றை நிகழ்த்தி, விஷ்ணுவே பரம்பொருள் என்பதையும் அவருக்குத் தொண்டாற்றுவதே மிகவுயர்ந்த வழிபாடு என்பதையும் நிலைநாட்டியுள்ளனர். பாண்டிய மன்னன் வல்லப தேவனின் சபையில் பெரியாழ்வார் இக்கூற்றை தத்துவபூர்வமாக நிலைநாட்டினார் என்பதை இங்கு நினைவுகூர்தல் மிகவும் அவசியம். பல்வேறு இதர ஆச்சாரியர்களும் இதே போன்று தத்துவத்தை நிலைநாட்டியுள்ளனர். அவர்களை அசுரர்கள் என்று கூறலாமா? எவ்வளவு பெரிய அபத்தம்!
அசுரத்தனமான சமய வெறி
இவை ஒருபுறமிருக்க, வழிபாட்டு முறைகளை தத்துவபூர்வமாக அணுக மறுத்து, வாளை உயர்த்தியோர் எண்ணற்றோர். இன்றும்கூட வாளுக்கு பதிலாக துப்பாக்கியைத் தூக்கி தங்களை நிலைநாட்ட பலரும் முயல்கின்றனர். வைஷ்ணவர்களை விவாதத்தில் சந்திக்க துணிவில்லாத கிருமி கண்ட சோழன் வாளை உயர்த்த, அதனால் பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்தார் என்பதும் கூரத்தாழ்வார் கண்களை இழந்தார் என்பதும் இராமானுஜர் மேல்கோட்டையில் தஞ்சமடைந்தார் என்பதும் வரலாறு.
அதுமட்டுமின்றி, வாளை உயர்த்திய இஸ்லாமியர்களால் பல்வேறு கோயில்கள் தரைமட்டமாயின, எண்ணற்ற பக்தர்கள் உயிர் தியாகம் புரிந்தனர். ஸ்ரீரங்கத்தில் மாலிக் கபுர் நிகழ்த்திய படுகொலை இங்கே நினைவிற்கு வரலாம். வட இந்தியாவில் இத்தகு அசுரத்தனமான சமய வெறியினால் எண்ணற்ற கோயில்கள் காணாமல் போய்விட்டன. மேற்கத்திய உலகில் இதுபோன்ற அசுரத்தனமான சமய வெறி பல மடங்கு அதிகமாக நிகழ்ந்துள்ளது. யூத, கிறிஸ்துவ சமயங்களுக்கு மத்தியிலும், வெவ்வேறு கிறிஸ்துவ குழுக்களுக்கு மத்தியிலும், இஸ்லாமிய வரலாற்றிலும் நிகழ்ந்துள்ள படுகொலைகள் ஏராளம். நிச்சயம் இத்தகு செயல்கள் கண்டிக்கத்தக்கவை.
உண்மையை உணர்ந்து அதன்படி நடப்போம்
வழிபாட்டினை அறிவுபூர்வமாக அணுகுவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், அப்போதுதான் சமய வெறியில் மாற்றம் நிகழும். அதை விடுத்து, எல்லாவற்றையும் சமம் என்று கூறி உண்மையை மறைத்தால், அதனால் எந்தப் பயனும் யாருக்கும் விளையப் போவதில்லை.
முடிவாகக் கூறினால், “என்னுடைய வழிபாடே சிறந்தது” என்று கர்வத்தில் கூறுபவர்கள் இருக்கட்டும், “எல்லா வழிபாடும் சமமே” என்று அறியாமையில் கூறுபவர்கள் இருக்கட்டும், இருவருமே தவறானவர்கள். சாஸ்திரங்களை அடிப்படையாக வைத்து, உயர்ந்த ஆச்சாரியர்களை முன்னுதாரணமாகக் கருதி, பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடுவதே உயர்ந்தது என்பதை பணிவுடன் ஏற்பதே சரியான நிலையாகும்.