நேர்மறை மாற்றம்
ஜனவரி மாதத்தில் இடம் பெற்றிருந்த நேர்மறை மாற்றம் தேடுவோம் என்ற கட்டுரை மிக அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ஆன்மீக உலகமே மாற்றமில்லாதது என்பதையும் நிலையான இன்பத்தைக் கொடுக்கும் என்பதையும் இக்கட்டுரை விளக்கியுள்ளது. நேர்மறை மாற்றம் பெற ஹரி நாமம் சொல்லி, கிருஷ்ணரின் அருளைப் பெறுவோமாக.
—சரவணன், சிவகாசி
நல்ல கருத்துகளை அறிகின்றோம்
டிசம்பர் இதழில் வெளிவந்த கிருஷ்ணருக்குத் தொண்டாற்றுவதே மகிழ்ச்சிக்கான வழி என்ற ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது. நிறைய நல்ல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இன்னும் இதுபோன்ற நல்ல கருத்துகளை அறிய விரும்புகிறோம். ஹரே கிருஷ்ண!
—சு.வனஜா கண்ணன், நத்தம்
தவறான பாதைக்கு அழைத்துச் செல்வோரின் கதி?
பகவத் தரிசனத்தின் ஜனவரி 2023 இதழில் வெளிவந்த தலைப்புக் கட்டுரை என்னுடைய மனதை மிகவும் ஈர்த்தது. தாங்கள் கூறிய கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் தெளிவான பக்தி விளக்கம் மனதை பகவானிடம் பாதுகாப்பாகக் கரையேற்றியது. பகவத் தரிசனம் இதழ் வழங்கிய 2023 காலண்டரில் பகவானின் அருள் பிரசாத காட்சி வெகுநேர்த்தி. வாழ்வில் நேர்மறையான மாற்றத்திற்கான அவசியத்தை உணர்த்திய ஜெய கிருஷ்ண தாஸ் அவர்களின் சிறப்புக் கட்டுரை அருமை.
கேள்வி: ஆன்மீகத் தொண்டு என்ற பெயரில், மக்களை பக்தி நெறியிலிருந்து விலக்கி தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மனக்கட்டுபாடற்ற சுயநல போகிகளை பகவான் தண்டிப்பாரா மன்னிப்பாரா? அவர்களின் வழியைப் பின்பற்றி வாழ்வோர் அடைவது ஆத்ம சந்தோஷமா?
—எஸ்.சுந்தரம், திருநெல்வேலி
எமது பதில்: மக்களை ஏமாற்றும் சுயநலவாதிகள் நிச்சயமாக பகவானால் தண்டிக்கப்படுவர். இதில் ஐயமில்லை. பொதுவான ஏமாற்றுச் செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும், ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாற்றுவோருக்கு தண்டனை அதிகம். போகத்தில் ஈடுபட்டதன் காரணத்தினால், மறுபிறவியில் துன்புற்ற குருமார்களின் வரலாற்றினைப் பல இடங்களில் காண்கிறோம்.
போலி குருவினைப் பின்பற்றுவோரால் நிச்சயமாக நற்கதியை அடைய முடியாது, ஆத்ம சந்தோஷத்திற்கு வாய்ப்பே இல்லை. மனதில் ஏற்படும் சில எழுச்சிகள் அல்லது கிளர்ச்சிகளை அவர்கள் ஆத்ம சந்தோஷம் என்று நினைத்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. உண்மையான ஆத்ம சந்தோஷம் கிருஷ்ண பக்தியில் மட்டுமே கிடைக்கும், அதற்கு உண்மையான குருவின் துணை அவசியம்.
கிருஷ்ணரா விஷ்ணுவா?
எனக்கு ஒரு சந்தேகம். விஷ்ணுவின் வியாபகம் கிருஷ்ணராக அவதரித்தார். ஆனால், ஒரு சிலர், இஸ்கானில் உள்ளவர்கள், “கிருஷ்ணரின் வியாபகம் விஷ்ணு” என்று சொல்கிறார்கள். இதில் எது சரியானது? கிருஷ்ணரின் வியாபகம் விஷ்ணு என்று சொன்னால், பகவான் கிருஷ்ணர் பிறக்கும்போது அவர் பெற்றோருக்கு நாராயணராக எப்படி காட்சி தந்தார்? தாங்கள் விரிவான விளக்கம் கூறவும்.
—பிரசன்னா, இமெயில் மூலமாக
எமது பதில்: இங்கே நாம் அறிய வேண்டிய முக்கியமான தகவல் என்னவெனில், கிருஷ்ணர்தான் விஷ்ணு, விஷ்ணுதான் கிருஷ்ணர். கிருஷ்ணருக்கும் விஷ்ணுவிற்கும் வேறுபாடு இல்லை. பக்தர்கள் அவர்களை அணுகும் மனோபாவத்தில்தான் வேறுபாடு உள்ளது. அலுவலகத்திலுள்ள தந்தைக்கும் வீட்டிலுள்ள தந்தைக்கும் எவ்வாறு உணர்வு வேற்றுமை உள்ளதோ, அதுபோலவே, விஷ்ணுவும் கிருஷ்ணரும் வேறுபடுகின்றனர். அலுவலகத்திலுள்ள தந்தையை அணுகும்போது அங்கு மதிப்பு மரியாதை மேலோங்கும், வீட்டில் நெருக்கம் மேலோங்கும். அதுபோலவே, விஷ்ணு ரூபத்திலுள்ள பகவானைக் காட்டிலும் கிருஷ்ண ரூபத்திலுள்ள பகவானிடம் அவரது பக்தர்கள் நெருக்கமான உறவினைப் பகிர்ந்துகொள்கின்றனர். கிருஷ்ணர் தமது பக்தர்களுடன் ஒரு நண்பனாக, குழந்தையாக, அல்லது காதலனாக உறவாடுகிறார். கிருஷ்ணரின் முதுகில் ஏறி நண்பர்கள் விளையாடுகின்றனர், அன்னையோ குச்சியைக் காட்டி கிருஷ்ணரையே மிரட்டுகிறாள், கோபியர்களோ கிருஷ்ணரைப் பல வழிகளில் கடிந்துகொள்கின்றனர். இத்தகு நெருக்கமான உறவுகளை பகவானுடைய விஷ்ணு ரூபத்தில் காண முடியாது.
இந்த நெருக்கமான உறவின் காரணத்தினால், கிருஷ்ணரே ஸ்வயம் பகவான் (மூல முழுமுதற் கடவுள்) என்று கூறி, விஷ்ணுவை கிருஷ்ணரின் விரிவாகக் குறிப்பிடுகிறோம். தமிழகத்தில் பிரதானமாக இருக்கக்கூடிய ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிருஷ்ணரை விஷ்ணுவின் விரிவாகக் கூறினாலும், கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் (மேலும் இரண்டு ஸம்பிரதாயங்களிலும்) கிருஷ்ணரே ஆதி மூலமாக ஏற்கப்படுகிறார்.
கிருஷ்ணர் இவ்வுலகில் தோன்றியபோது, முதலில் விஷ்ணு ரூபத்தைக் காட்டினார் என்பதை வைத்து, நாராயணரே ஆதி மூலம் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், அத்தகு கூற்றினை நாம் ஏற்றால், பிற்காலத்தில் கிருஷ்ணர் நாராயண ரூபத்தை கோபியர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பதை எவ்வாறு விளக்குவது? மேலும், பகவத் கீதை, பாகவதம் முதலிய பல சாஸ்திரங்களில், கிருஷ்ணரே எல்லா விஷ்ணு ரூபங்களுக்கும் ஆதி மூலம் என்பதை விளக்கக்கூடிய தகவல்கள் பலவற்றை நாம் காண்கிறோம். இருப்பினும், இஃது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமே அன்று.
ஏனெனில், எல்லா வைஷ்ணவ ஸம்பிரதாயங்களும் கிருஷ்ணரும் விஷ்ணுவும் ஒருவரே என்பதையும் அந்த ஒருவரே பரம புருஷ பகவான் என்பதையும் தெள்ளத்தெளிவாக ஏற்கின்றனர்; கிருஷ்ண பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், இராம பக்தர்கள் என்று அல்லாமல், அனைத்து பக்தர்களுமே “வைஷ்ணவர்கள்” என்று அறியப்படுகின்றனர். ஆகவே, இதில் பெரிய சிக்கல் ஏதும் கிடையாது. பகவத் பக்தியில் ஒவ்வொரு பக்தருக்கும் வெவ்வேறு வித உணர்ச்சிகள் உண்டு, அதற்கேற்ப அவர்கள் கிருஷ்ணர், விஷ்ணு, இராமர், நரசிம்மர் என்று பகவானுடைய ஏதேனும் ஓர் உருவத்தில் மனதைப் பதிய வைக்கின்றனர். ஆயினும், பகவானிடத்தில் பேதம் கிடையாது.
இவ்வுலகில் தோன்றும் அவதாரங்கள் அனைவருக்கும் ஆன்மீக உலகில் பிரத்யேகமான லோகம் (இருப்பிடம்) உள்ளது. அவையாவும் நித்தியமானவை, அந்த பகவானும் நித்தியமானவர். ஆகவே, பகவத் அவதாரங்களுக்கு இடையில் “இந்த தேதியில் இவர் தோன்றினார்” என்பதோ “அதற்கு முன்பாக அந்த அவதாரம் கிடையாது” என்பதோ இல்லை. அவதாரம் என்றால் “இறங்கி வருபவர்” என்று பொருள்; நித்தியமான உலகிலுள்ள தமது இருப்பிடத்திலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவதால், கிருஷ்ணர், இராமர் முதலியோர் “அவதாரம்” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். ஆயினும், இவ்வெல்லா தோற்றங்களும் நித்தியமானவை.