சிவபெருமான் விஷத்தைப் பருகுதல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்குத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்துப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: எட்டாம் ஸ்கந்தம், அத்தியாயம் 7

சென்ற இதழில், பாற்கடலைக் கடைவதற்காக தேவர்களும் அசுரர்களும் உடன்படிக்கை செய்துகொண்டதையும், பரம புருஷர் அவர்களுக்குச் செய்த உதவிகளையும் அறிந்து பரவசமடைந்தோம். இந்த இதழில், பகவானின் ஏற்பாட்டின்படி, பாற்கடலைக் கடையும்போது உருவான ஆலகால விஷத்தைப் பருகிய சிவபெருமானின் தயாள குணத்தைக் காணலாம்.

மந்தார மலையின் தடுமாற்றம்

பாற்கடலைக் கடையும்போது கிடைக்கும் அமிர்தத்தில் ஒரு பாகத்தை வாசுகிக்கு கொடுப்பதாக தேவர்களும் அசுரர்களும் வாக்குறுதி அளித்தனர். அவர்கள் மந்தார மலையின்மீது வாசுகியைக் கயிறுபோல் சுற்றி, பெரும் மகிழ்ச்சியுடன் பாற்கடலைக் கடையத் தொடங்கினர். முதலில் முழுமுதற் கடவுளாகிய அஜிதர் பாம்பின் தலைப் பகுதியைப் பற்றிக்கொள்ள, தேவர்களும் அவரைப் பின்பற்றினர்.

தேவர்களுக்கு எதிரானதை செய்ய விரும்புவதே அசுரர்களின் பிறவி குணம். அதன்படி, “பாம்பின் தலைப் பகுதியே மங்கலகரமானது, பெருமைக்குரியது, நாம் அமங்கலமான வால் பகுதியைப் பிடிப்பது விவேகமல்ல,” என்று எண்ணிய அசுரர்கள், “நாங்கள் வேதக் கல்வியில் மிகவும் முன்னேறியவர்கள், பிறப்பினாலும் செயலாலும் புகழ்பெற்றவர்கள்,” என்று வாதிட்டு, “பாம்பின் தலைப் பகுதியை நாங்கள்தான் பற்ற வேண்டும்,” என்று கூறினர்.
பாம்பின் முன்பாகத்தை அசுரர்கள்தான் பிடிக்க வேண்டும் என்பதே பகவானின் திட்டம். ஆகவே, அவர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் புன்னகைத்தபடி அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி, தேவர்கள் பாம்பின் வாலையும் அசுரர்கள் முன்பாகத்தையும் பிடித்துக் கொண்டு, அமிர்தம் பெறும் ஆவலுடன் பாற்கடலைக் கடையும் பணியில் முனைந்து செயல்பட்டனர். எனினும், மந்தார மலை மத்தாகப் பயன்படுத்திப் பாற்கடலைக் கடைந்தபோது, மலையைத் தாங்குவதற்கான அச்சு ஏதும் அடியில் இல்லாததால், மலை கடலில் மூழ்கிவிட்டது. இதைக் கண்ட அசுரர்கள் மற்றும் தேவர்களின் முகம் ஏமாற்றத்தால் வாடியது.

கூர்ம அவதாரம்

அப்போது, திடமான உறுதியும் எல்லையற்ற சக்தியும் கொண்ட பகவான், ஓர் அற்புதமான ஆமையின் வடிவத்தை (கூர்ம அவதாரத்தை) ஏற்று நீருக்குள் புகுந்து, பிரம்மாண்டமான அந்த மந்தார மலையினை மீண்டும் பாற்கடலின் மேல்பகுதிக்கு உயர்த்தினார். இதனால் உற்சாகமடைந்த தேவர்களும் அசுரர்களும் மீண்டும் ஆர்வத்துடன் பாற்கடலைக் கடையத் தொடர்ந்தனர். பெரியதொரு தீவைப் போல எட்டு இலட்சம் மைல் பரந்து விரிந்திருந்த மந்தார மலையை தெய்வீக ஆமையின் முதுகு தாங்கியது. அந்த மலை கடையப்பட்டு அதனால் ஏற்பட்ட சுழற்சியும் அழுத்தமும் கூர்ம தேவருக்கு, முதுகில் ஏற்படும் அரிப்பினை யாரோ வருடிவிடுவதைப் போல, இதமாக இருந்தது.

தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைவதற்காக, கூர்மரை அச்சாகவும் மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர்.

பகவானின் பரிவு

பகவான் விஷ்ணு இவ்வாறு மந்தார மலையின் அச்சாக மாறியது மட்டுமின்றி, அனைவரையும் உற்சாகப்படுத்தி அவரவரது பலத்தையும் திறமை
யையும் அதிகரிக்கும்பொருட்டு, தேவர்களுக்குள் ஸத்வ குணமாகவும், அசுரர்களுக்குள் ரஜோ குணமாகவும், வாசுகிக்குள் தமோ குணமாகவும் புகுந்தார்.
மேலும், இருபுறங்களிலும் இழுக்கப்பட்ட மந்தார மலையினை சமநிலைப்படுத்த விரும்பிய பகவான், தாமே அதன் உச்சியில் ஆயிரக்கணக்கான கரங்களுடன் மற்றொரு பெரிய மலையைப் போன்று தோன்றி, ஒரு கையினால் அந்த மலையைப் பிடித்துக் கொண்டார். பிரம்மதேவர், சிவபெருமான், இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் பகவானைப் போற்றி மலர்மாரி பொழிந்தனர்.
தேவர்களும் அசுரர்களும் கடுமையாக உழைக்க, கடலைக் கடையும் பணி மிகவும் சக்திவாய்ந்த முறையில் நடைபெற்றது. வாசுகிக்கு ஆயிரக்கணக்கான கண்களும் வாய்களும் இருந்தன. அவர் சுவாசித்தபோது அவரது வாய்களிலிருந்து புகையும் தீச்சுடர்களும் வெளிப்பட்டதால், காட்டுத் தீயால் எரிக்கப்பட்ட மரங்களைப் போல, அசுரர்கள் படிப்படியாக சக்தியை இழக்கத் தொடங்கினர்.
வாசுகியின் அனல் கக்கும் சுவாசத்தால் பாதிக்கப்பட்டு, தேவர்களின் உடலிலும் பொலிவு மங்கியது. அவர்களது ஆடை, மாலை, ஆயுதங்கள், முகம் ஆகியவை புகையால் கருத்தன. தேவர்களின் வருத்தத்தை அகற்ற நினைத்த பகவான், நீர்த்துளிகளை ஏந்திய இளங்காற்றை வீசச் செய்து, இதமான மழையையும் பொழியச் செய்தார்.
இவ்வளவு முயற்சிக்குப் பின்னரும் அமிர்தம் வராததால், பரம புருஷ பகவானாகிய அஜிதர் தாமாகவே கடலைக் கடையத் தொடங்கினார். அழகிய கருமேகம்போன்ற தோற்றத்தை உடைய பகவான், மஞ்சள் நிற ஆடையணிந்து, பிரகாசமான குண்டலங்கள் மின்னல்போன்று ஜொலிக்க, மலர்மாலை அணிந்து, சிவந்த கண்களுடன் பிரகாசமாகத் தோன்றினார். பிரபஞ்சம் முழுவதற்கும் அபயம் தரும் அவரது திருக்கரங்கள் மந்தார மலையைப் பற்றிக் கொண்டு கடலைக் கடையத் தொடங்க, அவர் இந்திரநீல மலையைப் போல அழகாக ஜொலித்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

விஷம் பரவுதல்

அதியற்புத சக்தியுடன் கடையப்பட்ட பாற்கடல் கொந்தளித்து, முதலில் ஆலகால [சமஸ்கிருதம்: ஹாலஹல] எனப்படும் ஒருவித கொடுமையான விஷம் வெளிப்பட்டது. அவ்விஷம் மேலும் கீழுமாக எல்லா திசைகளிலும் பெரும் ஆற்றலுடன் கட்டுக்கடங்காமல் பரவ, என்ன செய்வதென்று அறியாத தேவர்கள் அனைவரும் பகவான் விஷ்ணுவினுடைய அறிவுரையின்படி சிவபெரு
மானை அணுகினர்.
இங்கு பகவான் விஷ்ணு தாமே நிலைமையைச் சரிசெய்ய முன்வராமல், ஏன் சிவபெருமானை அணுகுமாறு அறிவுறுத்தினார் என்ற கேள்வி எழலாம். வைஷ்ணவர்களில் தலைசிறந்தவரான சிவபெரு
மானின் பெரும் கருணையை உலகறிய செய்ய வேண்டும் என்பதும் அவருக்கு நன்மதிப்பு தரப்பட வேண்டும் என்பதே பகவானின் விருப்பமாகும்.
கைலாய மலையின் உச்சியில், சிவபெருமான் தமது மனைவி பவானியுடன் அமர்ந்திருக்க, தேவர்கள் பெரும் மரியாதையுடன் தங்கள் வணக்கங்களையும் பிரார்த்தனைகளையும் அவருக்கு சமர்ப்பித்தனர்.

தேவர்களின் பிரார்த்தனை

பிரஜாபதிகள் கூறினர், “தேவர்களில் சிறந்தவரே, மஹாதேவரே! மூவுலகங்களிலும் பரவிக் கொண்டிருக்கும் இக்கொடிய விஷத்திலிருந்து அருள்கூர்ந்து எங்களைக் காப்பீராக. நீர் பிரபஞ்சத்தின் ஆளுநரும் சுயபிரகாசம் உடையவரும் ஆவீர். அகில லோகத்தின் தந்தையே, நெருப்பு உமது வாய், பூமியின் மேல்பாகம் உமது தாமரை பாதங்கள், நித்திய காலம் உமது அசைவு, திசைகள் உமது செவிகள் மற்றும் வருணன் உமது நாக்கு என்று கற்றறிந்த பண்டிதர்கள் அறிவர்.

“பெருமானே, நீர் மூவேத வடிவம், ஏழு கடல்கள் உமது வயிறு, மலைகள் உமது எலும்புகள், மூலிகைகளும் கொடிகளும் உமது ரோமங்கள், காயத்ரி போன்ற வேத மந்திரங்கள் உமது உடலின் ஏழு அடுக்குகள், மற்றும் வேதத்தைத் தழுவிய சமயமுறை உமது இதயத்தின் மையமாகும்.”

“உமது ஐந்து முகங்கள் ஐந்து முக்கிய வேத மந்திரங்களை பிரதிநிதிக்கின்றன. இவற்றிலிருந்தே 38 புகழ்பெற்ற மந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உமது கண்களிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்களாலும் தீப்பொறிகளாலும் அழிவு காலத்தில் படைப்பு முழுவதும் எரித்து சாம்பலாக்கப்படுகிறது. உமது தவத்தை அறியாதவர்கள், நீர் உமாவுடன் உலாவுவதைக் கண்டு, ‘காம ஆசை கொண்டவர்’ என்று உம்மைத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர். பிரம்மதேவரின் சிருஷ்டிகளான நாங்கள், உமது செயல்களின் மதிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவர்கள். எனவே, எங்களால் தகுந்த பிரார்த்தனைகளைச் செய்ய இயலவில்லை என்றாலும், தயைகூர்ந்து எங்களின் மீது கருணை கொள்வீராக.”

சிவபெருமான் 38 விசேஷ மந்திரங்களைப் பாடியுள்ளதாலும் பகவான் விஷ்ணுவின் நேரடியான பிரதிநிதியாகவும் பகவானைப் போன்ற சுயபிரகாசம் கொண்டவராகவும் இருப்பதால், அவர் “சிவன்” என்று அழைக்கப்படுகிறார். சிவ: என்றால் “ஸர்வ மங்கலம் பொருந்தியவர்” என்று பொருள்.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்துதல்

விஷம் அருந்துதல்

தேவர்களால் இவ்வாறு பிரார்த்திக்கப்பட்ட சிவபெருமான், அனைத்து ஜீவராசிகளிடமும் உதார குணத்துடன் இருப்பதால், தம் நித்திய மனைவியான ஸதி தேவியிடம் பின்வருமாறு பேசினார்:
“அன்பிற்குரிய பவானி, பாற்கடலைக் கடைந்ததால் வெளிப்பட்டுள்ள விஷத்தால் ஜீவன்கள் அனைவரும் எத்தகைய ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் பார். வாழ்விற்காகப் போராடிக் கொண்டிருக்கும் எல்லா ஜீவன்களுக்கும் ஆதரவையும் பாதுகாப்பையும் அளிப்பது எனது கடமையாகும். தனது ஆதரவின் கீழ் இருப்பவன் துன்புறும்போது, அவனைக் காப்பாற்றுவது எஜமானரின் கடமையாகும்.
“பொதுமக்கள் பகவானின் மாயையில் மயங்கி ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுகின்றனர். பக்தர்களோ தங்களது நிலையற்ற சொந்த வாழ்வையே பணயம் வைத்து பிறரைக் காக்க முயல்கின்றனர். பிறரின் நன்மைக்காக ஒருவர் தர்ம செயல்களைச் செய்யும்போது பரம புருஷ பகவானான ஹரி மிகவும் திருப்தியடைகிறார். என்னால் அனைத்து ஜீவன்களும் நன்மையடையப் போகின்றனர் என்பதால், இவ்விஷத்தை நான் பருகப் போகிறேன்.”

சிவபெருமானின் உன்னதமான தகுதிகளை நன்கு அறிந்துள்ள பவானியும் அவர் விஷம் பருக அனுமதியளித்தாள். ஜீவன்களின் நன்மைக்காக சிவபெருமான் அந்த விஷம் முழுவதையும் தமது உள்ளங்கையால் ஏந்தி பருகினார்.
சிவபெருமானைப் போல (நகல்) செயல்படுகிறோம் என்ற பெயரில் போதை வஸ்துகளை சிலர் பயன்படுத்துகின்றனர்; அவர்களால், விஷம் பருகிய சிவபெருமானின் இந்தச் செயலை நகல் செய்ய முடியுமா?
அந்த ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்தில் நீல நிற கோடு ஒன்றை ஏற்படுத்தியது. அந்தக் கோடு அவருக்கு ஓர் ஆபரணமாகி “நீலகண்டர்” என்னும் சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியது. சிறந்த புண்ணிய புருஷர்கள் எப்பொழுதும் தன்னிச்சையாக துன்பத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இஃது அனைவரின் இதயத்திலும் இருக்கும் முழுமுதற் கடவுளை வழிபடும் மிகவுயர்ந்த வழிமுறையாகும்.
சிவபெருமானின் இந்த தன்னலமற்ற செயலை அனைவரும் மிகவும் உயர்வாகப் போற்றினர். தக்க சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் விஷம் அருந்தும்போது அவரது உள்ளங்கையிலிருந்து கீழே விழுந்து சிதறிய சில துளி விஷத்தை தேள்கள், பாம்புகள், விஷச் செடிகள், மற்றும் விஷப் பற்களைக் கொண்ட பிற மிருகங்கள் குடித்துவிட்டன.

பாற்கடல் கடையப்படும்போது வெளிப்பட்ட இதர பொருட்கள் யாவை, அவற்றை ஏற்றுக் கொண்டவர் யாவர் முதலிய சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்த இதழில் காணலாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமூட்டும் ஆன்மீக கட்டுரைகளை படிக்க சந்தாதாரராவீர்…

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives