—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
சிற்றஞ் சிறுகாலை (விடியற்காலை அல்லது பிரம்ம முகூர்த்தம் என்பது) ஆன்மீகச் செயல்களுக்கு மிகவும் உகந்தது. சிற்றஞ் சிறுகாலையில் பகவானை சேவித்து, அவரது தாமரைத் திருவடிகளைப் போற்றிப் புகழுதல் எவ்வளவு அவசியம் என்பதை ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை (29) நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.
காலைப் பொழுதில் ஸத்வ குணமும், பகல் பொழுதில் ரஜோ குணமும், இரவில் தமோ குணமும் மேலோங்குகின்றன. இரவின் இறுதி நேரத்திற்கும் கதிரவன் கதிர்களை வீசத் தொடங்குவதற்கும் இடைப்பட்ட சுமார் ஒன்றரை மணி நேரமே “சிற்றஞ் சிறுகாலை” எனப்படுகிறது; இது முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தூய ஸத்வ குணத்தை வளர்ப்பதற்கு உதவும்.
தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களுக்கு பகலாகும். ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவாகும். அதாவது, மார்கழி மாதம் தேவர்களுக்கான சிற்றஞ் சிறுகாலையாகும். விண்ணவர்களும் வைகுண்ட நாதரை வணங்கும் இந்தச் சிறப்பான மாதத்தில், மண்ணவர்கள் பிற வேலைகளைக் குறைத்துக் கொண்டு ஆன்மீகச் செயல்களில் அதிகமாக ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆயினும், நவீன கால மக்களில் பெரும்பாலானோர் சிற்றஞ் சிறுகாலையில் நன்றாக உறங்குவதை தங்களது வழக்கமாக மாற்றியுள்ளனர். நள்ளிரவு வரை விழித்திருப்பதும் நண்பகல் வரைகூட உறங்குவதும் சகஜமான நிகழ்வுகளாக உள்ளன. இதன் விளைவாக, அறியாமை எனப்படும் தமோ குணம் மக்களிடம் மேன்மேலும் வளர்ந்து வருகிறது. ஊரோடு ஒத்து வாழ்வதாக எண்ணி, ஆன்மீக அன்பர்களும் சூரிய உதயத்திற்குப் பின்னரே விழிக்கின்றனர், இது மிகவும் தவறு. வாழ்வின் நோக்கத்தை அறிவதிலும் அடைவதிலும் ஆர்வமாக இருப்பவர்கள், இந்நிலையினை மாற்றிக் கொண்டு, ஊருக்கு உதாரணமாக வாழ வேண்டும்.
ஆகவே, நம்முடைய ஸ்ரீல பிரபுபாதர் எல்லா இஸ்கான் கோயில்களிலும் (மார்கழியில் மட்டுமின்றி, தினமும் சிற்றஞ் சிறுகாலையில் நிகழக்கூடிய) மங்கல ஆரத்தியில் அனைத்து பக்தர்களும் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என்ற நிலையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த நல்வேளையில் பகவானின் திருவடிகளைப் போற்றிப் புகழ வேண்டும்; மேலும், இந்தப் பிறவியில் மட்டுமின்றி ஏழேழு பிறவியிலும் கிருஷ்ணருக்கே பணி செய்ய வேண்டும் என்றும், மற்ற கர்மங்கள் யாதும் நம்மை அண்டிவிடக் கூடாது என்றும் பிரார்த்திப்பதற்கு இதுவே மிகவும் உகந்த நேரம். வாய்ப்பை நழுவ விடாதீர்!