பசுப் பாதுகாப்பற்ற இயற்கை விவசாயம் சாத்தியமா?

Must read

வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்

தற்போதைய தருணத்தில், இயற்கை விவசாயத்திற்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் அண்மையில் இயற்கை விவசாயத்தினை சிறு விவசாயிகள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், இயற்கை விவசாயமும் பசுப் பராமரிப்பும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைந்தவை என்பதை கட்டுரையாசிரியர் இங்கு விளக்குகிறார்.

பகவானிடமிருந்து கற்க வேண்டும்

பரம புருஷ பகவான் கிருஷ்ணர் கோ ப்ராஹ்மண ஹிதாய என்று வர்ணிக்கப்படுகிறார். அதாவது, அவர் பசுக்கள் மற்றும் பிராமணர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்கும்போது, இடையர் குலத்தில் தோன்றி, பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் எவ்வாறு பாதுகாப்பளிப்பது என்பதை தாமாகவே செய்து காட்டினார். அதைப் போலவே, உண்மையான பிராமணராகிய குசேலருக்கும் அவர் மரியாதை செலுத்தினார். பகவானின் சொந்த செயல்களிலிருந்து, பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் எவ்வாறு பாதுகாப்பளிப்பது என்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், சமயக் கொள்கைகளைப் பாதுகாத்தல், வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றல், வேத ஞானத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அடைய முடியும்; ஏனெனில், பசுப் பாதுகாப்பு, பிராமணப் பண்பாடு, வாழ்வின் நோக்கம் போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன.

ஆன்மீகக் குருடர்களான நாகரிக மனிதர்கள்

அந்தணர்களுக்கும் பசுக்களுக்கும் பரம புருஷ பகவானுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது எதுவோ அதுவே இவ்வுலகிற்கு மங்கலமும் நன்மையும் தரக்கூடியதாகும். ஆன்மீகக் குருடர்களான நாகரிக மனிதர்கள் இதனை அறியாதது மட்டுமின்றி, தங்களது வாழ்வில் இதற்கு எதிரான விஞ்ஞான முறைகளையும் கண்டுபிடிக்கின்றனர். அது மிக விரைவாக இப்பூமியை அழிக்கிறது. இன்றைய நகர்ப்புற மக்களில் பலர் அரிசியும் பாலும் கடையில் கிடைக்கும் பொருள் என்பதைத் தாண்டி, விவசாயம், பசுப் பராமரிப்பு முதலியவை எதையும் அறியாதவர்களாகவே உள்ளனர்.

விஞ்ஞான முறையும் பூமியின் அழிவும்

விஞ்ஞானபூர்வ கண்டுபிடிப்புகளான இரசாயன உரங்கள் நில வளத்தை அழிக்கிறது, குறிப்பாக விவசாயிகளின் நண்பனைப் போலச் செயல்படும் மண்புழு, நீலப்பச்சை பாசி போன்ற உயிர்களைக் கொல்கிறது. மேலும், அந்த உரங்களின் தீமை விளைவிக்கும் நச்சு, காற்றிலும் நீரிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்கிறது.

இரசாயன உரம் விவசாயிகளின் செலவினை அதிகரித்து, அவர்களைக் கடனாளியாக்குகிறது. செயற்கை உரமிட்ட தானியங்கள் சுவை, தரம் குறைந்து, நச்சுத் தன்மைகளால் நோய்களைப் பரப்பி, மனித இனத்தை அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றன. செயற்கை உரத்தால் விளைந்த பயிர்கள் உயரம் குறைவாக இருப்பதால், கால்நடைகளுக்கான தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது. அதன் விளைவாக, கால்நடைகளை (பசுக்களை) பராமரிப்பது சுமையென விவசாயிகள் கருதுகிறார்கள். உழவர்களின் குழந்தைகளைப் போல பராமரிக்கப்பட்ட மாடுகள் இன்று அடிமாடுகளாக கசாப்புக்கூடங்களுக்குப் போகும் அவலம் இதனாலேயே நடைபெறுகிறது.

இன்றும் இயற்கை விவசாயத்தின் சுவடுகள்

காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜுன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது வழக்கம். அந்தக் காலகட்டத்தில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் (கீதாரிகள்), அவற்றை மந்தை மந்தையாக ஓட்டிக் கொண்டு காவிரிப் பாசன மாவட்டங்களுக்கு வருவர். ஆங்காங்கே தங்கி பகலில் ஆடு மாடுகளை மேய்க்கும் இவர்கள், இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். இரவுப் பொழுதை அங்கே கழிக்கும், ஆடு மாடுகளின் சிறுநீரும் புழுக்கையும் சாணமும் வயலுக்கு அப்படியே கிடைக்கிறது. இதனால் பட்டி அடைக்கப்பட்ட வயலுக்கு இயற்கையான உரம் சுடச்சுட கிடைத்து விடுகிறது. ஓர் இரவுக்குப் பட்டியில் அடைத்தால், ஆடு மாடுகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப பணமும் கிடைக்கிறது.

ஆடு மாடுகளைக் கிடைபோடுவதால் வயலுக்குத் தேவையான உரம் கிடைத்து விடுகிறது. ஆட்டுப் புழுக்கை விரைவாக மக்குவதால், அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் கண்கூடாகத் தெரிகிறது. மாட்டுச் சாணம் கொஞ்சம்கொஞ்சமாக மக்குவதால், அதற்கடுத்த சாகுபடியில் பலன் தருகிறது. இதையொட்டித்தான், “ஆடு கிடை வைத்தால் அந்த ஆண்டே பலன், மாடு கிடை வைத்தால் மறு ஆண்டு பலன்” என்னும் சொலவடை காவிரிப் பாசன மாவட்டங்களில் இன்றைக்கும் வழக்கில் உள்ளது. கிடை போடுவதால் கிடைக்கும் இயற்கை உரத்துக்கு, காவிரிப் பாசன விவசாயிகளிடம் இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆடு மாடு கிடை போட்டால், வயலுக்குச் சத்தான உரம் கிடைக்கும், மண் வளமும் மேம்படும்.

உண்மை இப்படியிருக்க, இன்றைய நவீன விவசாயி கால்நடைகளை மறுத்துவிட்டு விவசாயம் பார்ப்பதால், இயற்கை உரத்திற்குக்கூட அடுத்தவரை எதிர்பார்க்கும் அவலநிலை காணப்படுகிறது.

பசுப் பராமரிப்பின் மூலமாக பல வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் மக்கள் இக்கலைகளை மறந்து விட்டனர். பசுப் பராமரிப்பின் முக்கியத்துவத்தை பகவத் கீதையில் பகவான் பின்வருமாறு வலியுறுத்துகிறார்: க்ருஷி–கோ–ரக்ஷ்ய–வாணிஜ்யம் வைஷ்ய–கர்ம ஸ்வபாவ–ஜம், விவசாயம் செய்வதும் பசுப் பராமரிப்பும் வைசியர்களின் சுபாவத்திற்கேற்ற கடமைகளாகும். வைசியர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்கிறார்களா என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசாங்கம் அல்லது சத்திரியர்களின் கடமையாகும். சத்திரியர்கள் மனிதர்களைக் காக்க கடமைப்பட்டவர்கள், வைசியர்களோ பயனுள்ள மிருகங்களை (குறிப்பாக பசுக்களை) காக்க கடமைப்பட்டவர்கள்.

பாரத பாரம்பரியத்தின்படி, ஒருவன் பெற்றுள்ள தானியங்களையும் பசுக்களையும் வைத்தே அவனது செல்வம் மதிப்பிடப்பட்டு வந்தது. தமிழகத்தில்கூட அதனாலேயே மருமகளை “மாட்டுப் பெண்” (செல்வமுடையவள்) என்று அழைத்தனர். பசுக்களையும் தானியங்களையும் பெற்றுள்ளவனால், தன் உணவு பிரச்சனையை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். மனித சமூகத்தின் பொருளாதார பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இவையே அவசியத் தேவை. இவை இரண்டையும் தவிர மற்றவை அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தேவைகளே. இந்த செயற்கைத் தேவைகளில் மனிதன் தன் மதிப்புமிக்க வாழ்வையும் நேரத்தையும் வீணாகக் கழிக்கிறான். வைசியர்கள் (விவசாயிகள்) பசுக்களையும் காளைகளையும் மேய்த்து அவற்றிற்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்பதை மனித சமுதாயத்தின் போதகரான பகவான் கிருஷ்ணர் தமது சொந்த உதாரணத்தின் மூலமாகக் காட்டினார். மனிதனுக்கு பசு தாயாகவும் காளை தந்தையாகவும் இருக்க வேண்டும் என்பது ஸ்மிருதி சாஸ்திரத்தின் சட்டமாகும். ஒரு குழந்தை தாய்ப்பாலைக் குடிப்பதுபோல, மனித சமூகம் பசுவின் பாலைக் குடிப்பதால், பசு நமக்குத் தாயாகும். மேலும், குழந்தைகளைப் பராமரிக்க தந்தை சம்பாதிப்பதுபோல, உணவு உற்பத்திக்காக காளை கடின உழைப்பில் ஈடுபடுவதால், காளை நமக்குத் தந்தையாகும். தாயாகவும் தந்தையாகவும் இருக்கக்கூடிய பசுக்களையும் காளைகளையும் கொல்வதன் மூலம், மனிதன் தன் ஜீவநாடியையே கொன்று விடுகிறான்.

பசுமைப் புரட்சியால் விவசாயம் இயந்திரமயமாதல்

இன்றைய உலகில், உழுவது முதல் அறுவடை வரை அனைத்தையும் இயந்திரமயமாக்கி, கால்நடைகளை வியாபார நோக்கத்திலான பாலுக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கின்றனர்; மேலும், அவற்றிற்கான மேய்ச்சல் நிலங்கள் இன்று களவாடப்பட்டுள்ளதால், பசுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது, அவற்றினால் கிடைத்த இயற்கை உரங்களும் இன்று நமக்குப் போதுமானதாக இல்லை. எனவே, இன்று நாம் வலியச் சென்று உரத்தை வாங்கி அதன் மூலம் நோய்களையும் விலை கொடுத்து வாங்குகிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகள், ஆட்கொல்லி மருந்துகளாவதோடு பல்வேறு நோய்களுக்கான மூல காரணமாகவும் இருக்கின்றன என்பது கண்கூடான உண்மை.

இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம்—நிலத்தை உயிரோட்டமற்றதாக மாற்றுதல், பசுக்களைக் கொல்லுதல், நிலத்தை வீணடித்தல்—ஒருபோதும் உணவு பிரச்சனையைத் தீர்க்காது. இது நாகரிகமல்ல. உணவு உற்பத்தியானது விவசாயத்தையும் பசுப் பராமரிப்பையும் சார்ந்ததாகும்; ஆனால், அதற்குரிய திறமையின்றி காட்டில் வாழும் நாகரிகமற்ற மனிதன் வேண்டுமானால் மிருகங்களைத் தின்று கொழிக்கலாம். ஆயினும், அறிவில் முன்னேறியுள்ள பக்குவமான மனித சமுதாயம், விவசாயம் மற்றும் பசுப் பராமரிப்பைக் கொண்டு முதல் தரமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் கலையைக் கற்றறிய வேண்டும்.

பசுப் பராமரிப்பு, இயற்கை உரங்கள்

பண்டைய பாரதத்தில் வாழ்ந்த விவசாயிகள் சத்திரியர்களைவிட செல்வந்தர்களாக இருந்தனர்; ஏனெனில், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்களது விளை நிலங்களும் பசுக்களுமே நிறைவு செய்தன. நவீன இந்தியாவில் வாழும் விவசாயிகள் அரசிடம் கடன் வாங்கி தங்களது விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்ய முயல்வதால், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகுகின்றது. மேலும், அரசின் தவறான கொள்கைகளான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றின் காரணமாக, கரும்பு வெட்ட ஆளில்லாமல், கரும்புத் தோட்டத்தையே கொளுத்துகின்ற விவசாயிகளை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதுபோன்ற திட்டங்கள் அனைத்தும் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுத்தப்பட்டு, இன்று விவசாயத்தை சீரழித்துவிட்ட திட்டங்களாகப் பார்க்கப்படுகின்றன.

இஸ்கான் பக்தர்களால், ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப உலகெங்கிலும் உருவாக்கப்பட்டுள்ள பண்ணை நிலங்களில், எப்போதும் இயற்கை வழி விவசாயமே நிகழ்கிறது, இத்தொண்டில் ஈடுபடும் விவசாயிகளை அனைத்து வகையிலும் செல்வந்தர்கள் என்று கூறலாம். இவர்கள் உரத்திற்காகவோ இயந்திரங்களுக்காகவோ எந்தவொரு வங்கியையோ அரசையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக, இவர்கள் தங்களது பசுக்களையும் காளைகளையும் நிலத்தையும் நம்பியுள்ளனர்; எல்லாவற்றிற்கும் மேலாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையை நம்பியுள்ளனர். எனவே, நம்முடைய சமுதாயத்தையும் வாழ்க்கை முறையையும் பண்டைய பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப மாற்றுவது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையுமே அன்றி, அரசு அளிக்கும் தற்கால நிவாரணங்கள் ஒருபோதும் உதவா. இவை உள்ளிருக்கும் நோயை குணப்படுத்தாமல், வெளியே தோன்றும் கொப்புளத்திற்கு மட்டும் களிம்பு பூசுவதைப் போன்றதாகும்.

கலி யுகத்தின் ஆட்சியாளர்களால், பண்பாடின்றி இருக்கும் தற்போதைய சமுதாயத்தில், பசுக்களும் பிராமணப் பண்பாடும் பாதுகாக்கப்

படுவதில்லை; இதனால், இன்றைய உலகம் ஓர் ஆபத்தான நிலையில் உள்ளதை நம்மால் உணர முடிகிறது. மனித சமூகம் உயர்வடைய விரும்புமானால், சமூகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பகவத் கீதையின் உபதேசங்

களைப் பின்பற்றி பசுக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். பசுப் பாதுகாப்பற்ற இயற்கை விவசாயம் ஒருபோதும் சாத்தியமளிக்காது என்பதே நிதர்சனம்.

இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இஸ்கான் பக்தர்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives