அனைவரும் கடவுளா?

Must read

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

கடவுள் இல்லை என்னும் நாத்திகர்களுக்கு பதில் சொல்வது ஒருபுறம், யார் அந்தக் கடவுள் என்பதை ஆத்திகர்களுக்கு எடுத்துரைப்பது மறுபுறம்; இதனிடையே, “நான் கடவுள், நீயும் கடவுள், அனைவரும் கடவுள்,” என்று கூறுவோருக்கு விளக்கமளிக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. ஆன்மீகத்தை அறிவதாக நினைத்துக் கொண்டு வெவ்வேறு சுவாமிகளின் நூல்களைப் படிப்போருக்கு இதுபோன்ற எண்ணம் வருகிறது. உண்மையிலேயே நாம் அனைவரும் கடவுளா என்பதை தத்துவபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் சற்று அணுகலாமே

அனைவரும் கடவுள்

“அனைவரும் கடவுள்” என்னும் கருத்து வேதாந்தத்தைப் பின்பற்றுவோரில் ஒரு பிரிவினரால் நம்பப்படுகிறது. இவர்களின் பிரச்சாரத்தினால் (அல்லது தாக்கத்தினால்) வேதாந்தம் படிக்காதோரிடமும் இக்கருத்து பரவியுள்ளது. வேத சாஸ்திரங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் எல்லாம் வல்ல பரம்பொருளுடன் ஆத்மாவை ஒப்பிட்டு அல்லது சமப்படுத்தி சில கூற்றுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இறைவனை பிரம்மன் என்று கூறும் சாஸ்திரங்கள் ஆத்மாவையும் பிரம்மன் என்று கூறுவதால், “ஆத்மாவும் இறைவனும் ஒன்றே,” “ஆத்மாதான் இறைவன், இறைவன்தான் ஆத்மா,” “நான் கடவுள், நீ கடவுள், எல்லாம் கடவுளே,” என்னும் முடிவிற்கு சிலர் வருகின்றனர்.

இறைவன் என்று யாரேனும் ஒருவரை ஏற்றால், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும், “நானே இறைவன்” என்பது உண்மையாக இருந்தால், யாருக்கும் அடிபணிய வேண்டாமே! ஆகையால், இக்கொள்கையினால் சிலர் கவரப்படுகின்றனர். ஆயினும், “நானே ராஜா, நானே மந்திரி; நானே ஆத்மா, நானே பரமாத்மா,” என்று கூச்சலிடுவதற்கு முன்பாக, சற்று சமயோஜிதமாக சிந்தித்தால், இதில் பல சிக்கல்கள் இருப்பதை உணர முடியும். சிந்தனையையும் அறிவையும் அடகு வைத்து பூட்டி வைக்காமல் யோசித்துப் பாருங்கள்: அனைவரும் கடவுள் என்றால், (1) கடவுளாகிய நான் ஏன் இவ்வுலகில் துன்பப்படுகிறேன்? (2) நான் ஏன் மாயையில் மயங்குகிறேன், கடவுளைவிட மாயை உயர்ந்ததா? (3) கடவுள் ஏன் கோடிக்கணக்கான உருவில் பிளவுபட்டு நிற்க வேண்டும்?

கடவுள் ஏன் துன்பப்பட வேண்டும்?

இவ்வுலகிலுள்ள எல்லா உயிர்களும் துன்பப்படுகின்றனர். துன்பம் தற்காலிகமானதாக இருக்கலாம், அவ்வப்போது வருவதாக இருக்கலாம், சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் இருக்கலாம்; ஆனால் எல்லாரும் துன்பப்படுகின்றனர். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

கடவுள் என்பவர் எல்லாவற்றையும் படைத்தவராக, பராமரிப்பவராக, கட்டுப்படுத்துபவராக, தன்விருப்பப்படி அனுபவிப்பவராக இருக்க வேண்டும். நாமோ பல்வேறு துன்பங்களில் பலவந்தமாக வைக்கப்படுகிறோம். அவ்வாறு துன்பப்படும் நாம், எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?

கடவுளைவிட மாயை உயர்ந்ததா?

மேலே எழுப்பிய வினாவிற்கு விடையாக, “துன்பம் என்பது மாயை, துன்பம் என்பது கற்பனை, துன்பம் என்பது லீலை,” என்று அவர்கள் வாதிடுவர்.
பிரதிவாதம்: நீங்களும் நானும் எல்லாம் வல்ல இறைவனாக இருந்தால், மாயை ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? கற்பனை என்பதை ஏற்றால், நீங்கள் என்னைக் கடவுள் என்று கூறுவதும் கற்பனைதானே? நான் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது எல்லாம் கற்பனை என்றால், நீங்கள் பேசுவதும் கற்பனை தானே? உங்களின் (அந்த கற்பனை) பேச்சை நான் ஏன் கேட்க வேண்டும்?

இறைவனையே மாயை மயக்குகிறது என்று கூறினால், இறைவனைவிட மாயைக்கு சக்தி அதிகம் என்றுதானே பொருள். அப்படியெனில், மாயைதான் இறைவனா? ஆகவே, விஷ்ணுவை எல்லாம்வல்ல பரம்பொருளாக ஏற்கும் நாங்கள் எவ்வாறு “வைஷ்ணவர்கள்” என்று அறியப்படுகிறோமோ, அவ்வாறே மாயையை எல்லாமாக ஏற்கும் நீங்கள் “மாயாவாதிகள்” என்று அறியப்படுகிறீர்.

மாயை என்பது பொய்யானதா?

கடவுளைவிட மாயை உயர்ந்ததா என்பதற்கு பதிலளிக்க முடியாமல், வேறு வாதத்தை முன்வைப்பர்: “மாயை முற்றிலும் பொய்யானது. மாயை என்று ஒன்று இல்லவே இல்லை, இந்த உலகமே பொய், பிரம்மன் மட்டுமே உண்மை.”

பிரதிவாதம்: “உலகமே பொய், உலக வஸ்துக்கள் அனைத்தும் பொய், பஞ்ச பூதங்கள் அனைத்தும் பொய்” என்றால், நீங்கள் பேசுவதும் பொய்தானே? நான் கேட்பதும் பொய்தானே? பஞ்ச பூதங்கள் இல்லாமல் கேட்க முடியாது, பேச முடியாது. பொய்யான உலகில் நீங்கள் ஏன் உங்களை பிராமணன் என்கிறீர்? எல்லாமே பொய் என்றால், உங்களுடைய சந்நியாசமும் பொய்யானதா, போலியானதா? உங்களுடைய ஆஷ்ரமங்களை இடித்துவிடலாமே! நீங்கள் எழுதிய நூல்களைக் குப்பையில் போட்டு எரித்து விடலாமே!

கடவுள் பிளவுபட்டவரா?

மாயை போலியானது என்னும் திரை கிழிக்கப்படும்போது, அவர்களின் வாதம்: “நீங்கள் பந்தப்பட்டிருப்பதால் மாயை உண்மையானதாகத் தெரிகிறது. பந்தத்திலிருந்து முக்தி பெற்றால், அனைத்தும் கனவைப் போலக் கலைந்துவிடும். கனவில் உங்களுக்கு வீடு இருக்கலாம், உறவினர்கள் இருக்கலாம், செல்வம் இருக்கலாம், எல்லாம் இருக்கலாம். ஆனால் கனவு கலைந்தவுடன் எல்லாம் அகன்றுவிடும். அதுபோல, முக்தி பெற்றவுடன் எல்லாம் அழிந்துவிடும்.”

பிரதிவாதம்: நீங்கள், நான், இந்த உலகம், உறவினர் என எல்லாமே பிரம்மனுடைய கனவு என்பது உண்மையாக இருந்தால், முக்தி பெற்றவுடன் கனவு கலைந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால், உங்களது ஆச்சாரியர் முக்திபெற்ற பின்னரும் நீங்கள் ஏன் இன்னும் கலையாமல் உலாவிக் கொண்டுள்ளீர்? நீங்களும் அழிந்திருக்க (கலைந்திருக்க) வேண்டுமல்லவா? எல்லாரும் முக்தி பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஒரு பிரம்மனின் கனவில் பல தோற்றங்கள் இருக்கின்றன என்றால், அந்த ஒரு பிரம்மன் விடுதலை (முக்தி) பெறும்போது, எல்லா இதர தோற்றங்களும் அழிந்துவிட வேண்டுமே!

வாதம்: அவரின் கனவு முடிந்துவிட்டது, உங்களின் கனவு இன்னும் முடியவில்லை.

பிரதிவாதம்: அப்படியெனில், பிரம்மன் (அல்லது இறைவன்) பிளவுபட்டவன் என்று கூறுகிறீர்களா? சாஸ்திரங்கள் பிரம்மன் பிளக்கப்பட முடியாதவன் என்று கூறுகிறதே, பிரம்மன் ஒன்றுதான் என்று கூறுகிறதே. கனவுகள் பல இருக்க முடியாது, ஒன்றுதானே இருக்க முடியும்! அது கலைந்தால், எல்லாம் கலைந்துவிட வேண்டுமே! ஆக, உங்களின் கூற்று முற்றிலும் அபத்தமானது.

வாதம்: பிரம்மன் பிளவுபடாதது எனில் ஜீவன்கள் பலர் என்பதை எவ்வாறு ஏற்க முடியும்?

பிரதிவாதம்: சூரியனும் சூரியக் கதிர்களும் எவ்வாறு பிரிக்க முடியாத ஒரே வஸ்துவாக, அதே நேரத்தில் வேறுபாட்டுடன் இருக்கின்றனவோ, அதுபோல பரமாத்மாவும் ஆத்மாவும் பிரிக்க முடியாத ஒரே வஸ்துவாக இருக்கின்றனர். சூரியன் ஒன்றுதான், சூரியக் கதிர்களோ பல, அந்தக் கதிர்கள் சூரியனைச் சார்ந்தவர்கள். ஆகவே, ஜீவன்கள் பலர் என்பதிலும் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள் என்பதிலும் எந்தச் சிக்கலும் இல்லை.

நடைமுறைச் சிக்கல்கள்

அனைவரும் கடவுள் என்னும் இந்த முட்டாள்தனமான எண்ணத்தில், பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. அஹம் ப்ரஹ்மாஸ்மி (நான் பிரம்மன்) என்று கூறி, “நானே சிவன், நானே விஷ்ணு, என்னை எல்லாரும் சிவனாக, விஷ்ணுவாக பூஜை செய்யுங்கள்,” என்று கூறும் உங்களால், “நானே பிரதமர், நானே முதல்வர், எல்லா கையெழுத்தையும் என்னிடமிருந்து வாங்குங்கள்,” என்று சொல்ல முடியுமா? அது நடைமுறையில் ஏற்கப்படுமா? பிரதமருடன் உங்களை சமப்படுத்தினால் ஏற்பதற்கு ஆளில்லை, சிறையில் அடைத்துவிடுவார்கள். அவ்வாறு இருக்கையில், எந்த தைரியத்தில், கடவுளுடன் உங்களை சமப்படுத்துகிறீர்? [உங்களுக்கு இப்போது புரியாவிட்டாலும்] நீங்கள் நிச்சயம் எமராஜரின் சிறையில் அடைக்கப்படுவீர்.
சிவனோடும் விஷ்ணுவோடும் உங்களை சமப்படுத்துகிறீர். ஏன் மடத்தின் பெரியவருடன் சமப்படுத்துவதில்லை? “நானும் சங்கரரும் ஒன்று, நானும் மடத்தின் பெரியவரும் ஒன்று,” என்று கூறுங்களேன். “நானும் பன்றியும் ஒன்று,” “எனது உணவும் பன்றியின் உணவும் ஒன்று,” என்று கூற முடியுமா? முடியாது, நடைமுறைக்கு ஒத்துவராது; ஏனெனில், உங்களின் கொள்கை முற்றிலும் தவறானது.
இறைவன் ஆறு செல்வங்களை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். (1) இறைவன் பூரண அழகுடையவராக இருக்க வேண்டும். அழகின்றி, அசிங்கமாக, உடல் குறைபாடுடன் இருப்பவர்களை எவ்வாறு “கடவுள்” என்று கூற முடியும்? (2) இறைவன் பூரண செல்வமுடையவராக இருக்க வேண்டும். ஒருவேளை சோற்றுக்குக்கூட கஷ்டப்படும் மக்கள் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்? (3) இறைவன் பூரண அறிவுடையவராக இருக்க வேண்டும். சாதாரண கணக்குப் போடக்கூட கால்குலேட்டர் தேடும் மனிதர்கள் எவ்வாறு கடவுளாக முடியும்? (4) இறைவன் பூரண பலமுடையவராக இருக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்படுபவனும் 100 கிலோ மூட்டையைக்கூட தூக்க முடியாதவனும் கடவுளாக முடியுமா? (5) இறைவன் நீங்கா புகழுடன் இருக்க வேண்டும். மூன்று தலைமுறைக்கு முந்தைய தாத்தாவின் பெயரைக் கேட்டால் உங்களுக்கே தெரியாது. உங்களின் பெயர் இன்னும் மூன்று தலைமுறை கடந்தால் யாருக்கும் தெரியாது. நீங்கள் எவ்வாறு நீங்கா புகழுடையவராக இருக்க முடியும்? (6) இறைவனிடம் முழுமையான துறவு இருக்க வேண்டும். “நான் கடவுள்” என்று நம்புவோர் எல்லாரும் தங்களது சொத்துக்கள் அனைத்தையும் அடியேனுக்கு எழுதி வைப்பார்களா? எல்லா சொத்தும் மாயை (போலி, பொய்) தானே, என்னிடம் கொடுத்துவிடலாமே! நான் தயார், அவர்கள் தயாரா?
ஆக, வெத்துப் பேச்சுக்கு வேண்டுமானால் உங்களின் கொள்கை உதவலாம்; ஆனால் அந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

சரியான புரிந்துணர்வு என்ன?

சாஸ்திரங்கள் ஜீவன்களை பிரம்மன் என்று கூறுவதும், இறைவனையும் பிரம்மன் என்று கூறுவதும் உண்மையே. ஆயினும், இறைவன் பரபிரம்மன் (உயர்ந்த பிரம்மன்) எனப்படுகிறார். அவர் நித்தியமானவர்களில் நித்தியமானவர் என்றும், உணர்வுடையவர்களில் உணர்வுடையவர் என்றும், அந்த ஓர் எஜமானர் மற்றெல்லா உயிர்களின் ஆசைகளை பூர்த்தி செய்கிறார் என்றும் கட உபநிஷத் (2.2.13) பரபிரம்மனை மற்றவர்களிடமிருந்து தனித்துக் குறிப்பிடுகின்றது. கீதையிலும் (10.12, 14.27) கிருஷ்ணர் பரபிரம்மனாகவும் பிரம்மனுக்கு ஆதாரமாகவும் குறிப்பிடப்படுகிறார்.
மேலும், கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதும் ஜீவன்கள் அனைவரும் அவரது நித்திய அம்சங்கள் என்பதும் கீதையின் பல்வேறு இடங்களில் [எ.கா. 7.7, 10.8, 10.13, 14.4, 15.7, 15.19] தெள்ளத்தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆகவே, கீதையை உண்மையாகப் படிப்பவர்கள் எவரும் “நான் கடவுள், எல்லாரும் கடவுள்” என்னும் முட்டாள்தனமான முடிவிற்கு ஒருபோதும் வரமாட்டார்கள்.
மாறாக, ஒட்டுமொத்த கடலும் அதன் ஒரு துளியும்போல, சூரியனும் சூரியக் கதிர்களும்போல, இறைவனும் ஜீவன்களும் தன்மையில் ஒன்றுபட்டு அளவில் வேறுபடுகின்றனர் என்பதை அவர்கள் உணருவர். சூரியனில் வெப்பம் உள்ளது, ஒளி உள்ளது; சூரியக் கதிர்களிடம் வெப்பமும் ஒளியும் உள்ளன; அதனால் இரண்டையும் சமம் என்று கூறிவிட இயலுமா? நிச்சயமாக முடியாது. தன்மையில் ஒன்றுதான், ஆனால் அளவில் வேறு. அதுபோலவே, எல்லாருக்கும் ஆதி புருஷராகத் திகழும் கிருஷ்ணரிடம் இருக்கும் தன்மைகள் மிகவும் குறைந்த அளவில் அவரது சக்தியான ஜீவன்களிடமும் இருக்கின்றன. இவர்கள் இருவரையும் எல்லா விதத்திலும் சமப்படுத்த இயலாது.
கிருஷ்ணரது மற்றொரு சக்தியே மாயை. இது, கிருஷ்ணருக்குத் தொண்டாற்ற மறுக்கும் ஜீவன்கள் அவரிடமிருந்து தனியே அனுபவிப்பதற்காக, அவரால் செய்யப்பட்டுள்ள ஏற்பாடாகும். மாயையின் படைப்புகள் (இந்த உடல், இந்த உலகம், பஞ்ச பூதங்கள் என அனைத்தும்) தற்காலிகமானவை, ஆனால் அவை பொய்யானவை அல்ல.
ஒவ்வொரு ஜீவனும் தனித்துவம் கொண்டவன் என்பதால், மாயையிலிருந்து விடுபடுவதற்கான பயிற்சி (பக்தி) ஒவ்வொரு ஜீவனின் தனிப்பட்ட முயற்சியாகும். பகவானின் கருணையினால், பக்தியில் ஈடுபடும் ஜீவன்கள் (பக்தர்கள்) முக்திபெற்று ஆன்மீக உலகிற்கு (வைகுண்டத்திற்கு) சென்று அங்கேயும் இறைவனுக்குத் தொண்டாற்றுவர்.

அபத்தத்தினால் விளையும் அபத்தங்கள்

எதார்த்தத்திற்கு ஒத்துவராத அபத்தமான கருத்துகள் எப்படியோ மனித சமுதாயத்தில் பரவிவிட்டன. இதன் விளைவாக, வந்தவன், போனவன் எல்லாம் தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு ஊரில் உலாவி, மேலும் பல அபத்தங்களை உருவாக்குகின்றனர். எண்ணற்ற அயோக்கியர்கள் உருவாவதற்கும், மக்கள் அவர்களை நோக்கி தவறாக திசை திருப்பப்படுவதற்கும் இந்தக் கொள்கை காரணமாகி விட்டது என்றால், அது மிகையன்று.
இந்த அபத்தமான கொள்கையினைக் கேட்பவர்களும் படிப்பவர்களும் இறைவனை அணுகுவதற்குத் தேவையான பணிவு மனப்பான்மையிலிருந்து விலகுகின்றனர். கிருஷ்ணருடனான அவர்களது உறவு பாதிக்கப்படுகிறது. அதனால், ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டால்கூட, அவர்களுக்கு உண்மையான சுவை கிடைப்பதில்லை. அந்த சுவை இல்லாததால், அதிலிருந்து வீழ்ச்சியுற்று, உடல் சார்ந்த செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்; உலகையே மாயை என்று கூறிவிட்டு, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் முதலியவற்றின் மூலமாக, உலகத் தொண்டில் (மாயையின் தொண்டில்) ஈடுபடுகின்றனர்.
இதில் கொடுமை என்னவெனில், இவர்கள் தங்களை நாராயணர்களாக நினைத்துக் கொண்டு, ஏழையாக இருப்பவர்களை “தரித்ர நாராயணன்” (ஏழை நாராயணன்) என்று கூறுகின்றனர். என்னே விந்தை! எம்பெருமான் நாராயணரை எப்படி தரித்திரர்களுடன் ஒப்பிட முடியும்? அந்த தரித்திரர்கள் உண்மையிலேயே நாராயணர்கள் என்றால், அவர்கள் ஏன் அப்படி துன்பப்பட வேண்டும்? மக்கள் சற்றும் யோசிப்பதில்லை.

சேவகர்களாய் வாழ்வோம்

நம்மை பௌதிக உலகில் பந்தப்படுத்தி வைப்பதற்கு மாயை பல்வேறு வழிகளைக் கையாள்கிறாள். அவற்றைக் கடந்து வெளியே வர தீவிரமாக முனையும்போது, மாயையினால் வீசப்படும் இறுதி வலையே “நான் கடவுள்” என்னும் எண்ணமாகும். இந்த வலையில் சிக்கியவன் இதிலிருந்து வெளியேற முடியாமல், மீண்டும் மாயையிடம் அகப்பட்டுக்கொள்கிறான்.
ஆகவே, நாம் அனைவரும் கடவுள்கள் அல்லர் என்பதையும், மாறாக, கடவுளின் நித்திய சேவகர்கள் என்பதையும் தெளிவாக உணர்ந்து, அபத்தங்களைக் கைவிட்டு, அவரிடம் சரணடைந்து, அவருக்கு அன்புத் தொண்டாற்ற வேண்டும். அவ்வாறு தொண்டாற்றும் பக்தனை கிருஷ்ணர் தம்மைவிட உயர்ந்தவனாகக் கருதுகிறார்.
ஹனுமானைப் பாருங்கள், கிருஷ்ணருடைய நண்பர்களைப் பாருங்கள், யசோதையைப் பாருங்கள், கோபியர்களைப் பாருங்கள், ராதையைப் பாருங்கள்—கிருஷ்ணரிடம் நம்மை ஒப்படைத்தால், கிருஷ்ணரும் தம்மை ஒப்படைப்பார். அந்த நெருக்கமான உறவில் அடையப்படும் இன்பத்திற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. எனவே, அந்த உறவை வளர்ப்பதற்கான செயலில் (பல்வேறு வகையான பக்தித் தொண்டில்) ஈடுபட்டு, சேவகர்களாய் வாழ்வோம், செம்மையாக வாழ்வோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives