வழங்கியவர்: ஜெய கிருஷ்ண தாஸ்
அன்புள்ள இறைவனை உண்மையாகத் தேடும் ஆன்மீக அன்பர்களுக்கு, இன்றைய காலக் கட்டத்தில் மட்டுமின்றி நம் முன்னோர்கள் காலம் தொட்டும், இனி வரும் காலங்களிலும் நாம் அனைவரும் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை: போலிகள். உலகப் பொருள்களில்தான் போலிகள் என்றால், ஆன்மீக வாழ்விலும் போலிகள் உள்ளனர். மக்களிடம் உள்ள நம்பிக்கையினைத் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அதன் மூலம் சராசரி மனிதனைக் காட்டிலும் சுகபோகமாக வாழும் இத்தகு போலிகள், எதன் அடிப்படையில் தோன்றுகின்றனர், அவர்களால் மக்கள் அனைவரையும் எவ்வாறு ஏமாற்ற முடிகின்றது என்பதை இங்கு சற்று விவரமாகப் பார்ப்போம்.
அடிப்படை காரணம்
ஆன்மீகம் என்றால், தங்களது குடும்ப கஷ்டங்களையும் பணப் பிரச்சனைகளையும் நோய்களையும் தீர்க்கின்ற ஓர் உபகரணம்; அல்லது காலம் போன பின்னே காடு வா வா என்று சொல்லும் போது செல்ல வேண்டிய இடம் என்று மக்கள் எண்ணுகின்றனர். பணம் கொடுத்தால் ஆசிர்வாதம் கிடைக்கும்; அதுவே ஆன்மீகம் என்று நினைப்பவர் ஏராளம். 30ரூ வட்டி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கான மக்களை ஏமாற்றிய சிட்ஃபண்ட்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் கொடுங்கள் ஆசி கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக நிறுவனங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இளவயது என்றாலே பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணமும், வாழ்வினை இன்பமாய் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமுமே இன்று மேலோங்கியுள்ளது. இதன் காரணத்தினால், இறைவன் சம்மந்தப்பட்ட பேச்சுகளை எவரும் கேட்பதில்லை, அவரைப் பற்றிப் படிப்பதுமில்லை. அதனால் எழக்கூடிய அறியாமைதான் போலிகள் உருவாகுவதற்கான அடிப்படை காரணம். கடவுளைப் பற்றி எதுவும் தெரியாமல், காலத்தின் நிர்பந்தத்தினால் கடவுளை வணங்க முற்படுவோர், அவரை எவ்வாறு வழிபடுவது, எந்த அடிப்படையில் யாரை நம்புவது போன்றவற்றை அறியாதவர்களாக உள்ளனர். இத்தகு அறியாமையை களைய, முதலில் ஆன்மீகம் என்றால் என்ன என்பதன் அடிப்படை அறிவினை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பகவத் கீதை போன்ற நூல்கள் அதற்கு உதவும். பகவத் கீதையினை முறையான குரு சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியரின் மூலம் தெளிவுறப் படிப்பவன் போலிகளிடமிருந்து தப்பிக்கலாம்.
கேள்விகள் கேட்க வேண்டும்
வெறும் மாய மந்திரங்களை எதிர் பார்க்காது, கேள்வி பதில் மூலமாக ஆன்மீக ஞானத்தினைப் பெற முயற்சிக்க வேண்டும். அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸ, கடவுளைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்று வேதாந்த சூத்திரம் (1.1.1) கூறுகின்றது. குருக்ஷேத்திர போர்க்களத்தில்கூட அர்ஜுனன் தனது கேள்விகளைக் கொண்டுதான் அறியாமையைப் போக்கிக் கொண்டான். ’அற்புதங்கள் நடக்கின்றன என்னும் வெறும் வாய் வார்த்தை விளம்பரத்தின் மூலம் அணுகுவது அல்ல ஆன்மீகமென்பது. நான் யார்? அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் (முழுமுதற் கடவுளின்) தன்மைகள் யாவை? நமக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன? அவரை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? இங்கு நாம் என்ன செய்து கொண்டுள்ளோம்? போன்ற வினாக்களுக்கான பதிலை வெறும் உணர்ச்சிபூர்வமாக அணுகாது அறிவுபூர்வமாக அணுக வேண்டும். பகவத் கீதையிலேயே இதுபோன்ற வினாக்களுக்கான விடைகள் உள்ளன.
ஆன்மீக அறிவு
பகவத் கீதையில் (2.13) கிருஷ்ணர் தெளிவாக உரைக்கின்றார்: “ஒருவனின் உடல் சிறு வயதிலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவதுபோலவே, அவன் (ஆத்மா) மரணத்திற்கு பின் வேறோர் உடலை அடைகின்றான்.” நாம் இந்த உடலல்ல, ஆத்மா என்பது இதிலிருந்து தெளிவாகப் புரிகின்றது. இறைவன் என்பவர் யார்? பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் பல்வேறு இடங்களில் தானே அனைத்திற்கும் காரணம் என்றும், தானே முழுமுதற் கடவுள் என்றும் தெளிவாகக் கூறியுள்ளார். அவர் அவ்வாறு வெறுமனே கூறியதுமட்டுமல்லாது, அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தையும் காட்டினார். அவருக்கு சேவை செய்ய வேண்டிய நாம் அவரை மறந்திருப்பதன் காரணத்தினால் இவ்வுலகில் வசித்து வருகின்றோம். இதுவே நமது துன்பத்திற்கான காரணம், இதிலிருந்து வெளிவர நமக்கு ஓர் ஆன்மீக குரு அவசியம்.
போலி குருவின் இதர அடையாளங்கள்
ஆன்மீக குருவை எவ்வாறு அடையாளம் காண்பது? இங்கு தான் பிரச்சனையே. யார் உண்மையானவர், யார் போலி? தன்னிடம் வந்தால் உங்களுக்கு இந்த பலன் கிட்டும், அந்த பலன் கிட்டும் என்று கூறுபவன் நிச்சயம் ஓர் ஏமாற்றுப் பேர்வழியாகவே இருப்பான். குருவின் அருளாசியினால் தனது வியாபாரம் நன்றாக நடக்கிறது என்று ஒருவன் கூறினால், அவன் குருவைப் பற்றியோ ஆன்மீகத்தைப் பற்றியோ எதுவுமே அறியாதவனாகத்தான் இருக்க வேண்டும். மேலும், இந்த உலகம் துன்பமயமானது என்று கிருஷ்ணர் கூறிய பின்னும் (பகவத் கீதை 8.15), இவ்வுலகில் வளமுடன் இனிமையாக வாழலாம் என்று யாரேனும் கூறினால், அவர் ஒரு போலி குரு என்பதை நாம் உடனடியாக உணர்ந்து கொள்ளலாம். கிருஷ்ணரின் லீலைகளை, குறிப்பாக கோபியர்களுடனான லீலைகளை நகல் செய்கின்ற ஒரு பெண் பித்தன் என்றுமே குருவாக இயலாது. இறைவனின் போதனைகளை நாம் பின்பற்ற வேண்டுமேயொழிய நாம் இறைவனாவோம் என்று போதிக்கின்ற அயோக்கியர்கள் என்றுமே குருவாக முடியாது. சந்நியாசிகள் எல்லோரும் காவியுடை அணிவர் என்பது உண்மை; இருப்பினும் காவியுடை அணிந்தவர் அனைவரும் துறவிகள் அல்ல என்னும் யதார்த்தத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும்.
குருவின் அவசியம்
இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்தும் “குரு” தேவையே இல்லை என நினைக்கலாம்; அது முற்றிலும் தவறான எண்ணம். எந்த ஒரு துறைக்கும் குரு (ஆசிரியர்) என்பவர் இல்லாமல், உள்ளதை உள்ளவாறு நம்மால் புரிந்துகொள்ள இயலாது. ஆன்மீகத் துறையினைப் பொறுத்தமட்டில், அத்தகு ஆசிரியர் மிகவும் அவசியம்; ஏனெனில், நம்மிடம் ஆன்மீக ஞானம் துளியும் இல்லையே! உண்மையினை உணர்ந்த ஒருவரை அணுகி, அவரிடமிருந்து இறை ஞானத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பகவத் கீதையில் (4.34) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பரிந்துரைத்துள்ளார்.
அறியாமையின் இருளில் பிறந்து, ஜடத்தில் கட்டுண்டு இருப்பவர்களான நாம் நம்மை எவ்வாறு விடுவித்துக் கொள்ள இயலும்? ஒரு கட்டுண்டவன் மற்றொரு கட்டுண்டவனை விடுவிக்க இயலாது. தன்னையுணர்ந்த ஓர் ஆன்மீக குரு மிகவும் அவசியம். போலிகளை காரணம் காட்டி உண்மையான சாதுக்களின் கருணையைத் தவறவிடக் கூடாது.
உண்மையான ஆன்மீக குருவின் தகுதிகள்
உண்மையான ஆன்மீக குரு, கட்டுண்டு மயக்கத்தில் இருக்கும் ஜீவன்களுக்கு ஞானத்தினைப் போதித்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டியவர். அவர் சாஸ்திர ஞானத்துடன் விளங்க வேண்டும் என்பது மட்டுமின்றி, வாய், வயிறு, பாலுறுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தியவராகவும் இருக்க வேண்டும் என்று உபதேஷாம்ருதத்தில் ஸ்ரீ ரூப கோஸ்வாமி கூறியுள்ளார். தனது சீடர்களை கிருஷ்ண பக்தியில் ஈடுபடுத்துவதைத் தவிர வேறு எந்த செயலிலும் ஈடுபடுத்தாமல், கிருஷ்ணரைத் தவிர வேறு எவரையும் பரம புருஷ பகவானாக ஏற்காமல், கட்டுண்ட மக்களுக்காக தன் போதனைகளை வளைத்துக் கொள்ளாமல், மக்களை கிருஷ்ணரின்பால் வளைக்கத் தெரிந்தவர்தான் உண்மையான குரு. அவர் முறையான குரு சீடப் பரம்பரையில் வந்தவராகவும், ஆன்மீக விஷயங்களைத் தனது சொந்தக் கருத்தின் அடிப்படையில் உரைக்காமல், பரம்பரை வழியாக தான் பெற்ற கருத்தினைத் துளியும் மாற்றமின்றி வழங்கக்கூடியவராகவும் இருக்க வேண்டும். அவர் மற்றவர்களுக்கு என்ன விஷயங்களை பிரச்சாரம் செய்கின்றாரோ, அதனை அவரும் பின்பற்றக்கூடியவராக இருத்தல் மிகவும் அவசியம்.
குருவின் கருணை இருந்தால் போதுமா?
இறை வழிபாடு என்பது எளிதான விஷயம் அல்ல. உண்மையான குருவின் கருணையைப் பெற்றால், நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற முடியும். இருப்பினும், நாமும் ஆன்மீகப் பயிற்சியினை மேற்கொள்ளுதல் அவசியம். வெறும் மந்திரத்தினால் மாங்காய் விழாது என்பதுபோல, அடுத்தவரின் முயற்சியில் நாம் இன்புற முடியாது, இன்புறவும் கூடாது. குருவின் உதவியைக் கொண்டு நாம் பக்தித் தொண்டில் சிறப்பாக செயல்பட வேண்டும். எல்லாவற்றையும் குரு பார்த்துக் கொள்வார் என்று எதையும் செய்யாமல் இருக்கக் கூடாது. “நோகாமல் நோன்பு கும்பிடுவது” என்று பொதுவாகக் கூறுவர். இதன் பொருள், எந்தவித ஆன்மீகச் செயல்களிலும் ஈடுபடாமல், கிருஷ்ணரிடம் சரணடையாமல், பலனை மட்டும் அனுபவிக்கலாம் என்று நினைப்பதுவே. அத்தகு எண்ணத்தினை அறவே ஒழித்துவிட வேண்டும்.
நாம் செய்ய வேண்டிய செயல்
நாம் அனைவரும் கிருஷ்ணரின் சேவகர்கள் என்பதால், கிருஷ்ணரைத் திருப்திபடுத்துவதே நமது கடமை. கிருஷ்ணரைப் பயன்படுத்தி நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்று எண்ணக் கூடாது. வயிறு திருப்தியடையும் போது மற்ற புலன்கள் அனைத்தும் திருப்தியடைவதுபோன்று, கிருஷ்ணர் திருப்தியுறும் போது, நாம் அனைவரும் திருப்தியடைய முடியும். மற்றெல்லா பக்தி முறைகளைக் காட்டிலும் இந்த கலி யுகத்தில் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ளவும் அவர் மீதான அன்பினை வளர்த்துக் கொள்ளவும், அவரது திருநாமத்தினை உச்சாடனம் செய்வதே சிறந்த முறையாகும்.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தினை உச்சாடனம் செய்து உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை அடைவோம், வாரீர்!
எனவே, உண்மையான ஈடுபாட்டுடன், போலித் தன்மை ஏதுமின்றி, பக்திபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இறைவனை அணுகுவோம், வாரீர்!
முடிவாக, ஆன்மீகத் தேடுதலை நிறுத்தாதீர்; அற்ப சுகங்களுக்கு இரையாகாதீர்; கிருஷ்ணரின் பாதங்களை, அவர் தம் அடியார்களது துணையுடன் அடைய முயற்சியுங்கள். ஹரே கிருஷ்ண!