சிலர் இப்படியும் நினைக்கின்றனர். இராமர் வனவாசம் செய்ய அனுப்பப்பட்டபோது, தம் தாயிடம் சுவையான மாமிச உணவுகளை தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறியதாக அவர்கள் அயோத்தியா காண்டத்தின் 20, 26 மற்றும் 94ஆம் அத்தியாயங்களை மேற்கோள் காட்டுகின்றனர். சுவையான மாமிச உணவை இராமர் தியாகம் செய்ய வேண்டியிருந்ததால் இராமர் மாமிசம் சாப்பிட்டதாகவே பொருள்படும் என்றும், அவர் மாமிசம் சாப்பிட்டிருந்தால் இந்துக்கள் ஏன் சாப்பிடக் கூடாது? என்றும் வினவுகின்றனர். மேலும், மானைக் கொல்லும்படி இராமரிடம் சீதை கேட்டாள்–இறந்த மானை வைத்து சீதை என்ன செய்வாள்? அவள் அந்த மானின் மாமிசத்தை உண்ண விரும்பினாள் என்பதே அதற்கு உகந்த பதில் என்றும், இராமரும் சீதையும் மாமிசம் ஏற்றபட்சத்தில், ஏன் மற்ற இந்துக்களும் மாமிசம் சாப்பிடக்கூடாது? இக்குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என ஆராய்ந்து பார்ப்போம்.
உண்மை
இராமாயணத்தின் ஆதிமூலமான வால்மீகி இராமாயணம், 24,000 ஸ்லோகங்களுடன் 537 அத்தியாயங்களைக் கொண்டதாகும். அவை 6 காண்டங்களாக சீரமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் மாமிசம் குறித்து இரண்டு குறிப்புகளும் சைவ உணவு குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட குறிப்புகளும் காணப்படுகின்றன. 119 அத்தியாயங்களைக் கொண்ட அயோத்தியா காண்டத்தின் இருபதாம் அத்தியாயம், இராமர் வனவாசம் செல்ல இருப்பதைக் கேட்ட தாய் கௌசல்யையின் கதறலைப் பற்றி விவரிக்கிறது. அதன் இருபத்தி ஒன்பதாம் ஸ்லோகத்தில் இராமர் தனது தாயிடம் கூறுவது யாதெனில், “மாமிசத்தைத் தவிர்த்து, கிழங்குகள், பழங்கள், தேன் முதலியவற்றை ஏற்று, காட்டில் முனிவரைப் போல் பதினான்கு ஆண்டுகள் வசிப்பேன்.” இந்த ஸ்லோகத்தின் அடிப்படையில், பகவான் இராமர் அயோத்தியாவில் வசித்தபோது மாமிசம் சாப்பிட்டு வந்தார் என்றும், காட்டில் வசிக்கும்போது அவற்றைத் தவிர்க்க சத்தியம் செய்கிறார் என்றும் ஊகிக்கின்றனர்.
வேதப் பண்பாட்டின்படி, ஒரு மகன் வீட்டை விட்டுத் தொலைதூரம் செல்லும்போது, தமது பெற்றோரிடம் நெறிமுறைகளை வழுவாமல் கடைப்பிடிப்பதாகவும் மதக்கோட்பாடுகளிலிருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்றும் உறுதி கூறுவது வழக்கம். விடுதியில் தங்கிப் படிக்கச் செல்லும் மாணவன் தனது பெற்றோரிடம், “விடுதியிலிருக்கும்போது மது அருந்தமாட்டேன்” என்று உறுதி கூறுவதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவனது உறுதியின் பொருள், வீட்டிலிருந்தபோது அவன் மது அருந்தி வந்தான் என்பதா? நிச்சயம் இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. இதே போன்ற மனநிலையில்தான் பகவான் இராமர், தாம் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று தமது தாயிடம் உறுதி கூறுகிறார்.
இருபத்தி ஆறாவது அத்தியாயத்தில் சீதையிடம் இராமர் தாம் வனவாசம் செல்ல முடிவு செய்திருப்பதாகக் கூறி, அவளை அயோத்தியாவிலேயே தங்கும்படி அறிவுறுத்துகிறார். இந்த அத்தியாயத்தில் மாமிசம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. 94ஆம் அத்தியாயத்தின் பெரும்பாலான ஸ்லோகங்களில் சித்திரக்கூட வனத்திலுள்ள பலவகையான பழங்களையும் மரங்களையும் மலர்களையும் பகவான் இராமர் புகழ்ந்துரைக்கிறார். மாமிசம் சாப்பிடுவதுபோன்ற எந்தவொரு குறிப்பும் இவற்றில் காணப்படவில்லை.
மானைக் கொல்லும்படி பகவான் இராமரிடம் சீதை கேட்டாளா?
ஆரண்ய காண்டம் என்னும் மூன்றாவது காண்டத்தின் நாற்பத்தி மூன்றாம் அத்தியாயத்தில், சீதை பொன்னிற மானைக் கண்டு அதைக் கொண்டுவரும்படி பகவான் இராமரிடம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. “உயர்குடியில் பிறந்தவரின் மகனே, அந்த அழகிய மான் என் இதயத்தைக் கவர்கிறது. அறிவார்ந்தவரே அதை இங்கு கொண்டு வாருங்கள், நாம் அதனுடன் விளையாடலாம்.” (3.43.10). அந்த மானை அயோத்தியாவிற்கு எடுத்துச் சென்றால், அங்குள்ள அரண்மனைவாசிகளை அது மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதை எண்ணி, அவள் உவகையுறுவது பற்றி அடுத்த எட்டு ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ளது.
அந்த மான் கொல்லப்பட வேண்டுமெனில் (அஃது ஓர் அசுரன் என்பதை இலட்சுமணன் முன்கூட்டியே எச்சரித்ததை வைத்து), அதன் தோலை ஆசனமாகப் பயன்படுத்தலாம் என்று சீதை தெளிவுப்படுத்துகிறாள். (3.43.19-20) மலர்களும் மிருகங்களும் நிறைந்து காணப்பட்ட வனத்தில் வசித்த முனிவர்கள் தர்பைப் புல் அல்லது மான் தோலை ஆசனமாகப் பயன்படுத்தினார்கள். இங்கும்கூட பகவான் இராமரோ சீதையோ பொன்னிற மானின் மாமிசத்தைச் சாப்பிட விரும்பியதாக எந்தக் குறிப்பும் காணப்படவில்லை.
சுந்தர காண்டத்தின் முப்பத்தி ஆறாவது அத்தியாயத்தில், பகவான் இராமர் கடலைக் கடந்து இராவணனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்று சீதையிடம் ஹனுமான் உறுதியளிக்கின்றார். அப்போது இராமர் சீதையைப் பிரிந்து பெரும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியபோதிலும், மதுவிற்கோ மாமிசத்திற்கோ அடிமையானதில்லை என்று சீதைக்கு ஹனுமான் (ஸ்லோகம் 41) வெளிப்படுத்துகிறார்