ஜோதிட அணுகுமுறையில் மாற்றம் தேவையா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: திரு. ஜீவன கௌரஹரி தாஸ்

ஜோதிடம், வைத்தியம் தெரியாதவர்களில்லை என்பார்கள். ஜோதிட சாஸ்திரம் பொய் என்றால் கிரகணத்தை பார் என்றும், ஜோதிடரின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது என்றும் மக்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஜோதிடத்தின் தந்தை என்றழைக்கப்படும் வியாசரின் தந்தையான பராசர முனி, ஜோதிட சாஸ்திரத்தை வேதத்தின் கண்கள் என போற்றுகிறார். ஜோதிட சாஸ்திரம் மக்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு வழிகாட்டக்கூடிய வெளிச்சம் என்பதால் இதனை வேத சக்ஷு என்றும் அழைப்பதுண்டு. ஜோதிட பலன்களில் மிகுந்த ஆர்வத்தை காட்டும் மக்கள் அதை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை சற்று பார்ப்போம்.

ஜோதிட ஆர்வம்

மக்கள் பொதுவாக எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கும் துன்பமயமான குழப்ப சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் ஜோதிடர்களை நாடுவது வழக்கம். எனக்கு நேரம் எப்படி இருக்கிறது” என்று கேட்பவர்களுக்கு தினசரி பலன், வார ராசிபலன், பெயர்ச்சி பலன்கள் என தொடர்ச்சியாக ஜோதிடர்கள் தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் மேலாக கைரேகை, ஜென்ம ஜாதகம், ஓலைச்சுவடிகள், கிளி ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், குறி சொல்பவர்கள் என மக்கள் ஒவ்வொரு திசையிலும் ஜோதிடர்களை அணுகி ஆலோசிப்பதை கண்கூடாக காண்கிறோம்.

துன்பத்தை யாரும் நாடுவதில்லை என்பதால் தேன் சொட்டக்கூடிய வசந்த காலத்தை ஜோதிடர்கள் தெரிவிக்க மாட்டார்களா என்கிற ஏக்கத்திலேயே பெரும்பாலான படையெடுப்புகள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்கால ஆர்வத்தை பூர்த்தி செய்வதற்கு ஜோதிடத்தின் ஆறு அங்கங்களாக கருதப்படும் கணிதம், கோலா, ஜாதகம், பிரசன்னம், முகூர்த்தம் மற்றும் நிமித்த சாஸ்திரம் பயன்படுகிறது. முந்தைய காலத்தில் நிமித்த சாஸ்திரம் மூலம் பல தகவல்களை முன்கூட்டியே அறிந்த கொண்ட சம்பவங்களும் உண்டு.

 

நிமித்த சாஸ்திரம்

நிமித்த சாஸ்திரம் என்பது உடலில் ஏற்படுகிற அறிகுறிகளை வைத்து எதிர்காலத்தில் நிகழ இருக்கிற சம்பவங்களை அறிவதாகும். கம்சன் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்த போது தலை இல்லாத முண்டத்தை பார்த்தான். கம்சன் நடந்த போது தன் உடலின் நிழலில் ஓட்டைகள் இருப்பதை கண்டான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீதான பயத்தில் கம்சன் தன் மரணத்தை தூங்கும் போதும் விழித்திருந்த போதும் பல அறிகுறிகளால் உணர்ந்தான்.

இல்லத்தை விட்டு ஒருவர் வெளியே செல்லும்போது, தலைமுட்டிக் கொண்டாலோ தும்மல் ஏற்பட்டாலோ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவில் கொண்டு, தடங்கல் ஏற்பட்ட காரணத்தை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை, அதனை நீங்களே நிவர்த்தி செய்வீராக” என பிரார்த்தனை செய்வர். தற்போதைய காலத்தில் அம்மாதிரியான சம்பவங்கள் ஏற்பட்டால், பெரும்பாலானவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நினைவில் கொள்ளாமல், உடனடியாக அமர்ந்து தண்ணீரை பருகும் சடங்காக மாற்றிவிட்டனர். நம் நாட்டில் ஜோதிட பண்டிதர்கள் துல்லியமாக கணித்த சம்பவங்களில் சிலவற்றை பார்ப்போம்.

ஸ்ரீல பிரபுபாதர் தனது எழுபதாவது வயதில் கடல் தாண்டி பல்வேறு கோயில்களை எழுப்புவார் என்பது முன்னரே கணிக்கப்பட்டது.

துல்லியமான கணிப்புகள்

பஞ்ச பாண்டவர்களில் இளையவரான சகாதேவன் ஜோதிட புலமையால் மஹாபாரத போரின் விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார். 1486ல் மேற்கு வங்க மாநிலம், நவத்வீபத்தில் சைதன்ய மஹாபிரபு தோன்றிய போது, அவரின் பாட்டனாரும் ஜோதிட பண்டிதருமான நீலாம்பர சக்கரவர்த்தி, சைதன்ய மஹாபிரபுவின் நாமம், புகழ், மற்றும் கருணையானது உலகம் முழுவதும் பரவும் என துல்லியமாக கணித்திருந்தார்.

பதினாறாம் நூற்றாண்டில், துறவறம் மேற்கொள்வதற்கு உதவியாளருடன் பயணித்த ஸநாதன கோஸ்வாமி, ஓர் இரவில் விடுதி ஒன்றில் தங்க நேர்ந்தது. அந்த உதவியாளரிடம் எட்டு தங்க நாணயங்கள் இருப்பதை ஜோதிடரின் உதவியால் அறிந்து கொண்ட விடுதி உரிமையாளர், அந்த எட்டு தங்க நாணயங்களுக்காக ஜோதிடரின் உதவியோடு அவர்கள் இருவரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியதையும், தனது சாதூர்யத்தினால் ஸநாதனர் அதிலிருந்து மீண்டு வந்ததையும் நாம் காண்கிறோம். ஒரு திருடனால் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன் ஜோதிடரின் உதவியால் செல்வம் இருக்கக்கூடிய இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடிந்தது.

1896ல் தற்போதைய கொல்கத்தா நகரில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் தோன்றிய போது, ஜோதிட பண்டிதர்கள் இக்குழந்தை தனது எழுபதாவது வயதில் கடல் தாண்டி பல்வேறு கோயில்களை எழுப்புவார் என துல்லியமாக கணித்தனர்.

ஜோதிட பயன்பாடு

உலக கடமைகளை ஆற்றுபவர்கள், குடும்பத்தைப் பராமரிப்பவர்கள், செல்வத்தை ஈட்டுபவர்கள், வாழ்க்கையை சமநிலையுடன் செயல்படுத்த விரும்புபவர்கள், மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை ஆலோசிப்பதால் எவ்வித தீங்கும் இல்லை. திருமண பொருத்தம், திருமணத்திற்கு உகந்த காலம், வர்த்தக முதலீட்டின் தன்மை, தொழிலைத் தேர்ந்தெடுப்பது, குழந்தையின் எதிர்கால செயல் நாட்டத்தை அறிவது, சந்நியாசம் கடைப்பிடிப்பதற்கான தகுதி, மற்றும் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை அறிவதற்கும் ஜோதிடம் பலவகையில் பயன்படுகிறது.

கர்தம முனிவருக்கு பிரம்மா உபதேசித்த போது, அவர் தனது மகள்களை குணம் மற்றும் விருப்பத்திற்கு தகுந்தவாறு உரிய மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் (ஸ்ரீமத் பாகவதம் 3.24.15). அதாவது, திருமண வாழ்க்கைக்கு தம்பதிகளின் குணம் மற்றும் விருப்பமானது மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. கிருஷ்ண உணர்வில் செயல்படுபவர்களுக்கு ஏகாதசி விரதத்தை முடிக்கக்கூடிய நேரத்தை ஜோதிடத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகிறது.

ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் ஜோதிடத்தில் நிபுணராக இருந்தபோதிலும், அஃது ஒருபோதும் கிருஷ்ண உணர்விற்கு ஈடாகாது என தொடர்ந்து வலியுறுத்தினார்.

நவக்கிரகங்களின் நிலை

ஜோதிடம் என்றவுடன் உடனடியாக ஒருவரின் நினைவுக்கு வருவது நவக்கிரகங்கள். வேத கலாச்சாரத்தை பின் பற்றுபவர்கள் திருமணத்திற்கு முன் ஜாதக பரிவர்த்தனையில் ஈடுபடுவது நவக்கிரகத்திற்கு உரிய மரியாதையை பிரதிபலிக்கிறது. நவக்கிரகங்கள் விதியை நிர்ணயிப்பதில்லை, மாறாக கர்ம வினையே ஒருவரின் விதியை நிர்ணயிக்கின்றது. கர்ம வினையினால் ஏற்பட்ட விதியை அறிந்துகொள்வதற்கு நவக்கிரகங்கள் தெய்வீக பாஷையாக செயல்படுகின்றன. நவக்கிரகங்கள் ஒவ்வொருவரின் கர்மத்திற்கும் சாட்சியாக விளங்குவதால் அவர்களை குறை கூறுவது அடிமுட்டாள்தனமாகும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்துபவர், என்பதால் விஷ்ணுவின் பக்தர்களுக்கே நவக்கிரகங்கள் என்னும் பதவி வழங்கப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதியாக செயல்படும் நவக்கிரகங்கள், வைஷ்ணவர்களின் உன்னத நிலையை நன்கறிந்தவர்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட நவக்கிரகங்கள், தங்களின் கடமையை ஆற்றுவதற்கு கிருஷ்ணரிடமிருந்தே சக்தியை பெறுகின்றனர். நவக்கிரகங்கள் தங்களை விஷ்ணுவின் கடைநிலை சேவகர்களாகவே கருதுகின்றனர். உதாரணம் அங்கிர முனியின் புதல்வனான பிரஹஸ்பதி என்றழைக்கப்படுகிற குரு, இந்நாள் வரை கங்கை கரையோரத்தில் விஷ்ணுவின் புனித நாமத்தையே உச்சரித்து கொண்டிருக்கிறார்.

மனிதன் பிறக்கும் போது நவக்கிரகங்கள் அவனுடைய கர்ம வினையை பிரதிபலிக்கும் வகையில் அமைகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவருடைய அவதாரங்களும் பூமியில் தோன்றும்போது நவகிரகங்கள் அவர்களின் தெய்வீக லீலைகளுக்கு தகுந்தவாறு சுபமான இடங்களில் அமர்ந்து கொள்கின்றன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூமியில் தோன்றும்போது இயற்கையின் சட்டத்திற்கு உட்படுவதில்லை; மாறாக, இயற்கையின் சட்டங்களை அவரே கட்டுப்படுத்துகிறார்.

உண்மையில் நவக்கிரகங்களில் ஒவ்வொன்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார ரூபங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சூரியனுக்கு அதிபதியாக இராமர், ராகுவிற்கு அதிபதியாக வராஹர், குருவிற்கு அதிபதியாக வாமனர், செவ்வாய்க்கு நரசிம்மர், சுக்கிரனுக்கு பரசுராமர், புதனுக்கு ஹயக்கிரீவர், சந்திரனுக்கு கிருஷ்ணர், கேதுவிற்கு மத்ஸயர், சனிக்கு கூர்மர் என நவக்கிரகங்கள் பகவானின் பல்வேறு ரூபங்களினால் ஆளப்படுகின்றன. இதனால், சனியினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கூர்மரை வழிபட்டால் அந்த குறிப்பிட்ட கிரகம் பலம் பெறுகிறது. ஆழமாக சென்று பார்த்தால், மூல முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டால், அனைத்து நவக்கிரகங்களும் வலுப் பெறுகின்றன என்பது ஜோதிட சாஸ்திரத்தின் தீர்ப்பாகும்.

ஜோதிடத்தின் எல்லை

 

ஜோதிடம் அநித்யமான கர்மாவை மையமாக வைத்து செயல்படுவதால், அது பௌதிக இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்றது. கர்மச் செயல்கள் முக்குணங்களான ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குணத்தின் ஆதிக்கத்தில் செயல்படுவதால் ஜோதிடம் முக்குணங்களுக்கு உட்பட்டது எனலாம். மனிதனுக்கு ஸ்தூல உடல் இருக்கும் வரை பயன்படும் ஜோதிடம், மரணத்தின்போது ஒருவரை காப்பாற்றுவதில்லை, தற்போதைய உடலை நீத்த பின்பும் அது சற்றும் உபயோகப்படுவதில்லை.

கிருஷ்ண உணர்வில் முயற்சியை மேற்கொள்வதற்கு சிலசமயம் ஜோதிடம் வழிகாட்டியாக செயல்பட்டாலும், பக்தர்களின் இலக்கான கிருஷ்ண பிரேமையினை (பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீதான உன்னத அன்பினை) ஜோதிடம் கொடுப்பதில்லை. கிருஷ்ணர் மீதான தூய அன்பை அடைவது என்பது, ஒருவரின் முயற்சியையும், குரு கிருஷ்ணரின் கருணையையுமே சார்ந்திருக்கிறது. ஜோதிடம் திவ்யமான ஆத்ம தத்துவத்தை எடுத்துரைப்பதில்லை என்பதால் ஆச்சாரியர்கள் அதனை சூட்சுமமான பௌதிக விஞ்ஞானம் என்று அழைக்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வதில்லையோ, அதுபோல் ஜோதிட சாஸ்திரத்திலும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல விஷயங்களை மறைக்கிறார்.

முந்தைய காலத்திலும் முனிவர்கள் இடையே ஜோதிட கூற்றில் பல முரண்பாடான கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பதால் இப்போதும் கைதேர்ந்த ஜோதிடர்கள் பல ஆய்வுகளை தொடர்ந்து மேற்கோண்டு தான் வருகின்றனர். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், சூரிய சித்தாந்தம் என்னும் மிக உயர்ந்த ஜோதிட பட்டத்தை பெற்று துல்லியமாக கணிக்கக்கூடிய ஜோதிடராக திகழ்ந்தார். இருப்பினும், ஜோதிட சாஸ்திரம் என்றைக்கும் ஜீவனின் இயற்கை நிலையான கிருஷ்ண உணர்விற்கு ஈடாகாது என ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

கலியுக ஜோதிடர்கள்

ஜோதிடரின் வாக்கு வாழ்க்கை முழுவதும் பாதிக்கக்கூடியது என்பதால் தகுதி வாய்ந்த ஜோதிடரை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியமானதாகும். ஜோதிடர்களுக்கு புத்தி கூர்மை, ஒழுக்க நெறிமுறை, தன்னடக்கம், அனுபவம், முறைப்படி குருவிடம் பயிற்சி இவையெல்லாம் முக்கிய தகுதியாக கருதப்படுகிறது. வைஷ்ணவ சித்தாந்தத்தின் சாரத்தை புரிந்து கொண்டவர்கள் சிறப்பான ஜோதிடர்களாக செயல்பட முடியும். கலி யுகத்தில் தர்மம் படிப்படியாக குறைந்து வருவதால், ஜோதிட துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. அதே சமயம் ஜோதிடத்தை தவறாக பயன்படுத்துவதால், ஜோதிட சாஸ்திரத்தின் புனிதமும் கெடுவதில்லை.

ஜோதிட விதிமுறை கோட்பாடுகளை பின்பற்றி ஜோதிடத்தை பல கோணங்களில் பார்ப்பதற்கு விசேஷ பார்வை பெற்ற ஜோதிடர்களை கலி யுகத்தில் காண்பது மிக அரிது. கர்ம வினைகள் அனைத்திலிருந்தும் விடுபட்டு, திவ்யமான நிலையை அடைவதற்கு பக்தித் தொண்டின் பயிறிசியில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். ஜோதிடர்கள் இந்த மூல கொள்கையினை உணர்ந்து அறிவுரை வழங்க வேண்டும். ஆனால் இத்தகைய பார்வை இன்றைய ஜோதிடர்களில் பெரும்பாலானோருக்கு கிட்டுவதில்லை.

உண்மையான பிரகாசம் கொண்ட எதிர்காலம் என்பது கிருஷ்ண உணர்வையே குறிப்பதாகும் என கூறிய ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ண பக்தர்கள் ஜோதிடத்தை பற்றி அதிகமாக கவலைகொள்ள தேவையில்லை என தன் சீடர்களுக்கு அறிவுறுத்தினார். மழை பெய்யும் என்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் குடை எடுத்து செல்வது நலம் என கூறிய ஸ்ரீல பிரபுபாதர், ஜோதிட சாஸ்திரத்தை ஒருவர் ஆலோசிக்கும்போது, மனித உடலின் முக்கியத்துவத்தை வெளிபடுத்தும் கருவியாகவே அது செயல்பட வேண்டும் என விரும்பினார்.

வேதத்தின் மூலம் இறுதியாக அறியப்படுபவன் தானே என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (15.15) கூறுகிறார். கலி யுக ஜோதிடர்கள் பெரும்பாலும் மக்களை நவக்கிரக பரிகார பூஜையில் ஈடுபடுத்துவதால், அவர்கள் அறிவில் குறைந்தவர்களாகவே கருதப்பட வேண்டும். பரிகாரம் என்கிற பெயரில் மிருகத்தை பலி கொடுப்பவர்கள் மஹா பாவகரமான வினைகளையே அள்ளிக்கொள்கின்றனர். பரிகாரம் என்கிற பெயரில் தேவர்களையும் நவகிரகங்களையும் திருப்தி செய்வதால், நேரமும் பணமும் விரயமாவதோடு, மீண்டும் கர்ம பந்தத்தில் சிக்கிக் கொள்கின்ற அபாயமும் ஏற்படுகிறன்றது. பரிகார பூஜை என்பது தலையில் இருக்கும் சுமையை தோளுக்கு மாற்றுவதேயாகும்.

ஜாதகத்தை கையில் சுமந்து கொண்டு வெவ்வேறு ஜோதிடர்களின் பின் அலைபவர்களை நாம் அவ்வப்போது காண்கிறோம். ஜோதிடர்களின் கூற்றுகள் தங்களது எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை என்று அறிந்து, மனக் குழப்பத்தினால் அவதியுறுகின்றனர். கலி யுகத்தில் சில ஜோதிடர்கள் எடுத்த எடுப்பிலேயே பயத்தை ஏற்படுத்தி,  பிரச்சனைகளுக்கு தீர்வாக சில கற்களை வாங்கி கையில் அணியும்படி வற்புறுத்துகின்றனர். இவர்களைத் தவிர்ப்பது நல்லது. கிருஷ்ணர் சிறிதளவு நினைத்தால் போதும், இந்த கிரகங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் மாறிவிடும் என்று கூறிய ஸ்ரீல பிரபுபாதர், தலையெழுத்தை மாற்றக்கூடியவர் கிருஷ்ணரே என்பதை ஒருவர் உணர்ந்தால், மனக் குழப்பத்தினால் அவர் அவதியுறுவதில்லை என்று கூறியுள்ளார்.

உண்மையான ஜோதிடர்கள் அரிது என்றபோதிலும், சிறப்பு வாய்ந்த ஜோதிடக் கலையினால்கூட, ஒருவரது கர்மாவினை சிறிதளவு மாற்றியமைக்க இயலுமே தவிர, அவற்றினை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது. கர்ம வினையினை முற்றிலுமாக மாற்றுவதற்கு பக்தித் தொண்டு மட்டுமே வழியாகும். 84 இலட்சம் உயிர்வாழ் உடல்களில் மனிதனால் மட்டுமே கர்மத்தை மாற்றிக் கொள்ள இயலும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மனித உடலில் இருக்கும் ஜீவன்களிடம் பார்ப்பது, இவர் கர்மத்தை முற்றிலுமாக மாற்ற முடிவு செய்துவிட்டாரா, அல்லது விதியே நம் தலையெழுத்து என பின்பற்றுகிறாரா”.

விதியை மாற்ற முடியுமா?

சாணக்கிய பண்டிதர் கூற்றின் படி, ஆயுள், வேலை, செல்வம், படிப்பு, மரண நேரம் ஆகியவை ஐந்தும் ஒருவர் கருவினுள் இருக்கும்போதே நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, ஒருவரின் விதியை மாற்றுவது கடினம். ஒருவரின் கர்மத்திற்கும் விருப்பத்திற்கும் தகுந்தவாறு, அவர்களின் மறுபிறவியை அவரவர்களின் இதயத்தினுள் அமர்ந்துள்ள பரமாத்மா நிர்ணயிக்கின்றார்; அதனைச் செயல்படுத்தும் கருவியாக எமராஜர் திகழ்கிறார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தர்களின் சரணாகதியைப் பொறுத்து, அவர்களின் விதியை மாற்றியமைக்கிறார். முற்றிலுமாக சரணடைந்த ஆத்மாக்களின் எல்லா பாவங்களையும் போக்குவதாக அவர் பகவத் கீதையில் (18.66) உறுதியளிக்கின்றார். கிருஷ்ணர் ஒருவரை காப்பாற்ற முடிவு செய்து விட்டால், அவரை யாராலும் கொல்ல முடியாது. கிருஷ்ணர் ஒருவரை கொல்ல முடிவு செய்துவிட்டால், அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. எனவே, விதியை நிர்ணயிப்பதும் அதனை மாற்றக்கூடிய அதிகாரமும் பகவான் கிருஷ்ணரின் கையில் இருக்கிறது. தன்னிடம் சரணடையும் அனைத்து ஜீவன்களுக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பாதுகாப்பு கொடுக்கிறார். ஒரு நாய் தனது எஜமானர்மீது வைத்திருக்கும் விசுவாசத்தை போல, நாமும் நமது விசுவாத்தை எஜமானரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்மீது திசை திருப்பினால், நமது வாழ்க்கை நிச்சயம் வெற்றியடையும்.

ஜோதிட அணுகுமுறை

ஜோதிடத்தை அதிர்ஷ்டம் கூறும் இயந்திரமாக கருதாமல், நம்முடைய ஒவ்வொரு செயலும் உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது என்பதை அதிலிருந்து உணர வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்போது நமக்கு எதை கொடுத்து இருக்கிறாரோ, அதுவே நமக்கு சிறந்தது என உணர்ந்து நிகழ்காலத்தில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கிருஷ்ணர் மட்டுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சியை வழங்க முடியும் என்பதில் திடமாக நம்பிக்கை கொள்ள வேண்டும். கிரக அமைப்புகளை எப்படியிருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் ஆன்மீக செயல்களில் ஈடுபட வேண்டும்; கிரகங்களை குறை கூறி ஆன்மீக வாழ்க்கையை உதாசீனப்படுத்தினால், அஃது அபாயத்தில் முடிந்து விடும்.

என்ன நடந்தாலும் அதனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விசேஷ கருணையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நமது இன்ப துன்பத்திற்கு மக்கள், தேவர்கள், கிரகங்கள், கர்மம், அல்லது காலத்தினைக் காரணமாகக் கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்ளக் கூடாது; கிருஷ்ணரிடம் சரணடையாத நமது மனமே இன்ப துன்பங்களுக்கான அடிப்படை காரணம் என்பதை உணர்ந்து மனதை அவர்பால் செலுத்த வேண்டும். (ஸ்ரீமத் பாகவதம் 11.23.42) மனதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நிலைநிறுத்த சைதன்ய மஹாபிரபு எளிமையான மார்க்கத்தினை உபதேசித்துள்ளார்: ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே எனும் மஹாமந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து, பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களை தினமும் படித்தால், இப்பிறவியில் அமைதியும் மறுமையில் ஆனந்தமும் கிட்டுகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives