ஸ்ரீ கிருஷ்ணரை நினைவுகூர்தல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்” என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரபூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கி பேருபகாரம் செய்துள்ளார். அவரது அற்புதமான படைப்பின் ஒரு சுருக்கத்தை இங்கு பகவத் தரிசன வாசகர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவதத்தை இத்துடன் இணைத்து கவனமாகப் படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: மூன்றாம் காண்டம், இரண்டாம் அத்தியாயம்

சென்ற இதழில் உத்தவரிடம் விதுரர் கேட்ட கேள்விகளைப் பார்த்தோம். இந்த இதழில் அக்கேள்விகளுக்கு உத்தவர் அளித்த பதில்களைக் காணலாம்.

உத்தவரின் பரவசநிலை

மிகவும் பிரியமானவரான கிருஷ்ணரைப் பற்றி விதுரர் விசாரித்தபோது, உத்தவர் அன்புப் பரவசத்தில் ஆழ்ந்ததால் உடனடியாக பதிலளிக்க இயலாமல் இருந்தார். சிறுவயதிலிருந்தே உத்தவர் கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஊன், உறக்கத்தையும் மறந்து ஆழ்ந்துவிடுவது வழக்கம். அவரது தொண்டு மனப்பான்மை முதுமையிலும் சிறிதும் தளரவில்லை. பகவானைப் பற்றிய செய்தி தன்னிடம் கேட்கப்பட்ட உடனேயே, உத்தவர் கிருஷ்ணரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் உடனடியாக நினைவுகூர்ந்தார். பகவானின் தாமரை பாதங்களை சிந்திப்பதெனும் அமுத வெள்ளத்தில் ஆழ்ந்து, தேக அசைவின்றி சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். அந்நிலையில் அவர் மேன்மேலும் ஆழ்ந்து செல்வதுபோல காணப்பட்டார். பூரண பக்தி பரவசத்தால் உத்தவரின் உடலில் ஏற்பட்ட உன்னத மாற்றங்களையும் அவரது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியதையும் விதுரர் கண்டார். உத்தவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது இருந்த பக்தியின் ஆழத்தை விதுரரால் புரிந்துகொள்ள முடிந்தது.

மிகச்சிறந்த பக்தரான உத்தவர் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து, விதுரருக்கு பதிலளிக்க துவங்கினார். கிருஷ்ணரின் பிரிவு துயரில் மூழ்கியிருந்த உத்தவர், கிருஷ்ணருடனான நெருங்கிய அன்புப் பரவசத்தில் மூழ்கினார். பல வருடங்களுக்கு முன்பு, கிருஷ்ணர் உத்தவரின் மூலமாக விரஜ கோபிகளுக்கு அனுப்பிய செய்தியில், பிரிவில் உறவு கொள்வதுபற்றி விளக்கமாக கற்பித்திருந்தார். அதை தற்போது உத்தவர் பயிற்சி செய்து, கிருஷ்ணரைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் முழ்கி கிருஷ்ண தத்துவத்தைப் பற்றி விதுரரிடம் பேசலானார்.

 

பிரிவாற்றாமை

உத்தவர் கூறினார்: “அன்புள்ள விதுரரே, உலக சூரியனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்துவிட்டார். எங்கள் இல்லங்கள் காலமெனும் மலைப் பாம்பால் விழுங்கப்பட்டுவிட்டன. எங்கள் குலத்தவரின் நலத்தைப் பற்றி கூற என்ன உள்ளது?

“யது வம்சத்தினர் அனுபவமுள்ள பக்தர்களாகவும் நிபுணர்களாகவும் இருந்தனர்; மேலும், பகவானின் எல்லா வகையான பொழுதுபோக்குகளிலும் அவர்கள் எப்போதும் அவருடனேயே இருந்தனர்; எனினும், அவர்களால் அவரை முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை. பூரண சரணாகதி அடைந்துள்ள ஆத்மாக்களின் புத்தியை எந்த சூழ்நிலையிலும் வார்த்தை ஜாலத்தால் திசைதிருப்ப முடியாது. கிருஷ்ணர் தம் சுயரூபத்தில் எல்லோரின் முன்னிலையிலும் இருந்தாலும், தகுதியற்றவர்களிடமிருந்து தம்மை மறைத்துக் கொண்டார்.

“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன. யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உன்னத அழகில் மனதைப் பறிகொடுத்து பிரம்மாவை மனமார பாராட்டினர். (கிருஷ்ணர், பிரம்மதேவரின் ஒரு அற்புத படைப்பு என்று அவர்கள் எண்ணினர்.)

“விரஜ பூமியின் கோபியர்கள் ஸ்ரீ கிருஷ்ணருடன் சிரித்தும், நசைச்சுவையாக பேசியும், பார்வைகளைப் பரிமாறியும் அவருடன் லீலைகளில் ஈடுபட்டிருந்தனர். பிறகு கிருஷ்ணர் அவர்களை விட்டுப் பிரிந்து சென்றதால் மிகுந்த மனவருத்தம் அடைந்தனர். கண்களாலேயே அவரைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள், அவரைக் காணாததால் மதிமயங்கி குடும்பக் கடமைகளை நிறைவேற்ற இயலாமல் இருந்தனர்.

“ஜட, ஆன்மீக உலகங்களை ஆள்பவரும், பரம கருணாமூர்த்தியுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பற்றவர். ஆனால் தனது தூய பக்தர்களுக்கும் பத்தரல்லாதோருக்கும் பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் அவர் அவதரிக்கிறார். மஹத் தத்துவத்தை கட்டுப்படுத்தும் தம் விரிவங்கங்களால் சூழப்பட்டவாறு அவர் அவதரிக்கிறார்.”

கிருஷ்ணரின் பெருமைகள்

உத்தவர் தொடர்ந்தார்: “பிறப்பற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், சிறையில் வசுதேவரின் மகனாகப் பிறந்து, பின் விருந்தாவனத்திற்கு மாற்றப்பட்டு வளர்ந்தார். எல்லையற்ற சக்தியுடையவராக இருந்தும் அவர் மதுராபுரியிலிருந்து தப்பியோடியதும் எனக்கு வியப்பை விளைவித்து துன்பத்தை தருகின்றன. தேவகி, வசுதேவருக்கு மகனாகப் பிறந்தபோதிலும், சிறுவயதில் அவர்களுக்கு சேவை செய்ய இயலாமல் போனதற்காக மன்னிப்பும் வேண்டினார். இதுவும் என்னை துயரப்படுத்துகிறது.

“அவர் தன்னுடைய புருவ அசைவாலேயே பூமியின் பாரத்தை குறைத்தார். ஞானிகளும் யோகிகளும் அரும்பாடுபட்டு அடைய விரும்பும் முக்தியை, தம்மை எதிரியாக எண்ணிய சிசுபாலனுக்குக்கூட நல்கினார். குருக்ஷேத்திர போர் வீரர்கள், அர்ஜுனனின் அம்புகளால் தூய்மைப்படுத்தப்பட்டு கண்களுக்கு இனிமையான கிருஷ்ணரின் தாமரை முகத்தை தரிசித்தவாறு அவரது உலகை அடையும் நற்பேறு பெற்றனர்.

“மூன்று உலகங்கள், மூன்று புருஷர்கள், முக்குணங்கள், மற்றும் லோக பாலகர்களின் ஆராதனைக்கும் உரிய ஒரே பகவானாக அவர் திகழ்கிறார். அத்தகையவர், அரசர் உக்ரசேனரிடம் அடக்கமாக நின்றுகொண்டு தாழ்மையுடன் தம் கருத்துக்களை தெரிவித்த விதத்தை நினைக்கும்பொழுது பெருந் துன்பமல்லவா உண்டாகிறது!

“மார்பில் கொடிய விஷத்தைப் பூசிக் கொண்டு தன்னைக் கொல்வதற்காக வந்த அரக்கி பூதனைக்கு தன்னுடைய உலகில் தாயின் ஸ்தானத்தை அளித்த கருணை மிக்க பகவானைத் தவிர நமக்கு வேறு புகலிடம் யார்? அவரிடம் விரோதம் கொண்டு பகையுணர்வுடன் போரிட வந்த அசுரர்கள்கூட அவரின் தரிசனம் பெறும் பாக்கியத்தை பெற்றனரே!”

பகவானின் புகழுக்குரிய இத்தகைய நடத்தைகளை விவரித்தவாறு ஆச்சரியத்தால் உத்தவர் ஸ்தம்பித்துப் போனார். மேலும், பகவானுடன் தான் செல்ல இயலாமல் போனதே என்று எண்ணி மிகவும் வருந்தினார்.

பகவான் கிருஷ்ணர் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு முன், அவரை உத்தவரும் மைத்ரேயரும் சந்தித்தல்

விருந்தாவன லீலை

அதனைத் தொடர்ந்து, கிருஷ்ணரின் தனது பிறப்பிலிருந்து ஆற்றிய லீலைகளை மீண்டும் உத்தவர் வரிசைக்கிரமமாக நினைவு கூர்ந்தார்: “பூபாரத்தை குறைக்கும்படி பிரார்த்தித்த பிரம்மதேவரின் வேண்டுகோளுக்கிணங்கி பகவான் கிருஷ்ணர் போஜராஜனின் சிறைக்கூடத்தில் யது வம்சத்தில் அவதரித்தார். பரம புருஷரான அவரை தன் பாதுகாப்பிலுள்ள சொந்த மகனென்றே எண்ணிய வசுதேவர், கம்சனுக்கு அஞ்சி அவரை கோகுலத்திலிருந்த நந்த மகாராஜரின் இல்லத்திற்கு மாற்றினார்.

“அங்கு கிருஷ்ணர் தன் அண்ணன் பலராமருடன் மறைந்திருக்கும் தீயைப் போல் பதினோரு ஆண்டுகள் லீலைகள் செய்தார். தம் பெற்றோரை மகிழ்விப்பதற்காக குழந்தை பருவத்தில் அவர் ஒரு சாதாரண குழந்தைபோல் அழவும் சிரிக்கவும் செய்தார். அதே சமயம் ஒரு சிங்கக்குட்டிப் போல் அசுரர்களை கொன்று நண்பர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மேலும், அழகிய பசுக்களையும் காளைகளையும் மேய்க்கும்பொழுது புல்லாங்குழலை ஊதி, அனைவரையும் உற்சாகத்தில் மதிமயக்கம் அடையச் செய்தார். கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்களான அகன், பகன், சகடன், திருணாவர்தன், தேனுகன், அரிஷ்டன், கேசி போன்றோரை அனாயாசமாக ஒரு குழந்தை தன் விளையாட்டு பொம்மைகளை உடைப்பதுபோல் கொன்று குவித்தார். யமுனையை மாசுபடுத்திய காளிய நாகத்தின் தலைகளில் அற்புதமாக நடனமாடி அதன் செருக்கை அடக்கி துரத்தி யமுனையைத் தூய்மைப்படுத்தினார்.

“பரம புருஷரான தன் உயர்வை ஏற்றுக் கொண்டு சரணடைந்துள்ள தூய பக்தர்கள், தேவ வழிபாடு செய்ய வேண்டியதில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம், இந்திர வழிபாட்டை நிறுத்தி அப்பூஜை பொருட்களை கோபூஜை மற்றும் கோவர்தன பூஜைக்காக பயன்படுத்துவமாறு நந்த மஹாராஜரை கேட்டுக் கொண்டார். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெய்வித்த நாசகார மழையிலிருந்து விருந்தாவனவாசிகளை காப்பதற்காக கருணை உள்ளம் படைத்த பகவான், கோவர்தன கிரியை குடையாக பிடித்தார். விருந்தாவனத்தை விட்டுச் செல்லும் முன்பு, தன் இளம் தோழிகளான எண்ணற்ற உன்னத கோபியர்களை மகிழ்விக்க, ராஸ லீலையில் எண்ணற்ற உருவங்களில் தம்மை விரிவுபடுத்திக் கொண்டு அவர்களுடன் நடனமாடினார்.”

நாசகார மழையிலிருந்து விருந்தாவனவாசிகளை காப்பதற்காக, கோவர்தன மலையை கிருஷ்ணர் குடையாக பிடித்தார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives