அர்ஜுனன் கொள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டது ஏன்?

Must read

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவரது 16,108 இராணியர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். அச்சமயத்தில், அவனைத் தாக்கிய கொள்ளையர்கள் அவனது பாதுகாப்பிலிருந்த கிருஷ்ணரின் மனைவியர்களைக் கடத்திச் சென்று விட்டனர். இது தெரிந்த கதை. அந்தக் கொள்ளையர்கள் யார், அர்ஜுனன் அவ்வாறு தோல்வியடைய என்ன காரணம் என்பதே தெரியாத துணுக்கு.

கிருஷ்ணருக்கு மனைவியாக இருந்தவர்கள் அனைவரும் அவரது நித்தியமான மனைவிகள். அவர்கள் அனைவரும் பகவானின் அந்தரங்க சக்தியின் தோற்றங்களே. இதனால், பகவான் எவ்வாறு சக்தியுடையவராக உள்ளாரோ, அதுபோல அவர்களும் பெரும் சக்தி கொண்டவர்களே. அவர்களைப் பாதுகாப்பதற்கு அர்ஜுனன் அவசியமே இல்லை, அவர்களால் தங்களை சுயமாகப் பாதுகாத்துக்கொள்ள இயலும். மேலும், கிருஷ்ணரைத் தவிர வேறு எவரையும் அவர்களால் ஏற்க முடியாது, எவராலும் அவர்களைத் தொடக்கூட முடியாது. அப்படியிருக்க கொள்ளையர்களால் எவ்வாறு அவர்களை அபகரிக்க முடிந்தது? குருக்ஷேத்திரப் போரில் எண்ணற்ற மாவீரர்களைத் தோற்கடித்த அர்ஜுனனை அற்பமான கொள்ளையர்களால் எவ்வாறு தோற்கடிக்க முடிந்தது? விடை மிகவும் எளிதானது. கொள்ளையர்களின் வடிவில் வந்தது கிருஷ்ணரே. தம்முடைய நித்திய துணைவியரை தம்முடனே ஆன்மீக உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்பிய கிருஷ்ணர் அதுபோன்று கொள்ளையர்களின் வடிவில் வந்து அவர்களை அபகரித்துச் சென்றார்.

அச்செயலை கிருஷ்ணர் நேரடியாகச் செய்திருக்கலாமே? கொள்ளையர்களாக வந்ததன் மூலம் கிருஷ்ணர் நான்கு நோக்கங்களை நிறைவேற்றினார்.

(1) கிருஷ்ணருடைய இராணியர்களில் சிலர், முன்னொரு காலத்தில் அஷ்டவக்ர முனிவரை திருப்தி செய்து, பகவானைக் கணவராகப் பெறுவதற்கு வரம் வாங்கினர். எட்டு இடங்களில் வளைந்திருந்த முனிவரின் உடலைக் கண்டு ஒருமுறை அவர்கள் எள்ளி நகையாடியபோது, கோபமுற்ற முனிவர், நீங்கள் பகவானைக் கணவராகப் பெற்றாலும் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்படுவீர்,” என்று சாபமிட்டார். தவறை உணர்ந்த பெண்கள் மன்னிப்பை வேண்டியபோது, மனம் குளிர்ந்த முனிவர், பகவானே கொள்ளையரின் வடிவில் வந்து உங்களைக் கடத்திச் செல்வார்,” என்று சாபத்தில் ஓர் ஆசியையும் சேர்த்து வழங்கினார். முனிவரின் வாக்கினைக் காப்பாற்ற விரும்பியது கிருஷ்ணரின் ஒரு நோக்கம்.

(2) கொள்ளையர்களிடம் தோல்வியுற்ற அர்ஜுனன், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தன்னிடம் இருந்த வசதிகள் (காண்டீபம், ரதம், குதிரைகள் முதலியவை) அனைத்தும் இருந்தும்கூட, தன்னால் அற்பமான கொள்ளையர்களைகூட வெல்ல முடியவில்லையே என்று நினைத்தான். கிருஷ்ணர் தன்னுடன் இல்லாததே தோல்விக்கான காரணம் என்று நினைத்து, அதன் விளைவாக பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் துறவை மேற்கொண்டனர். இவ்வாறு அர்ஜுனனுக்கு அறிவுறுத்துவதே கிருஷ்ணரின் நோக்கம்.

(3) பலவான்களின் பலமாகவும் திறமைசாலிகளின் திறனாகவும் இருப்பவர் கிருஷ்ணரே. இவ்வுலக மக்கள் தங்களை எவ்வளவு பலசாலியாக நினைத்தாலும், கிருஷ்ணர் விரும்பினால் அவர்களது சக்திகளை அனைத்தும் சாம்பலில் ஊற்றிய நெய் போலவும், மந்திர ஜாலத்தால் கிடைத்த பொருள் போலவும், வறண்ட நிலத்தில் விதைத்த விதை போலவும், ஒரு நொடியில் பயனற்றதாகிவிடும். இந்த உண்மையை எல்லா பக்தர்களுக்கும் மக்களுக்கும் அறிவுறுத்துவதே கிருஷ்ணரின் நோக்கம்.

(4) கொள்ளையர்களாக வந்தது கிருஷ்ணரே என்பதை அறியாத நாஸ்திகர்களும் பண்பற்ற மக்களும் கிருஷ்ணரது மனைவியர்களே கடத்தப்பட்டு விட்டனர் என்று நினைத்து ஏமாறுவதற்கு கிருஷ்ணர் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளார். கிருஷ்ண பக்தி என்னும் பொக்கிஷத்தை கிருஷ்ணர் எப்போதும் சற்று மறைத்தே வைப்பது வழக்கம். அதன்படி, நாஸ்திகர்களுக்குத் தவறான தகவலை வழங்குவதே கிருஷ்ணரின் நோக்கம்.

ஆதாரம்: ஸ்ரீமத் பாகவதம், முதல் ஸ்கந்தம், அத்தியாயம் பதினைந்து; விஷ்ணு புராணம் மற்றும் பிரம்ம புராணத்தின் அடிப்படையிலான ஸ்ரீல விஸ்வ நாத சக்ரவர்த்தியின் பாகவத உரை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives