நந்த மஹாராஜர் வசித்த அற்புத கிராமம்
வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
விருந்தாவனத்தின் வடமேற்கு திசையில் சுமார் 50 கி.மீ. தொலைவில் நந்த கிராமம் உள்ளது. இங்கு சிவபெருமான் ஒரு மலையாக எழுந்தருளியுள்ளார். இம்மலை நந்தீஸ்வர மலை என்றும் போற்றப்படுகிறது. கிருஷ்ணரின் தந்தை நந்த மஹாராஜர் இங்கு வசித்தமையால் அவரது பெயராலேயே இது நந்த கிராமம் என அழைக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாகத் திகழும் நந்த கிராமத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
அசுரர்களின் படையெடுப்பு
கிருஷ்ணர் நந்த மஹாராஜருடனும் அன்னை யசோதையுடனும் கோகுலத்தில் வளர்ந்து வந்த சமயத்தில், கம்சன் அவரைக் கொல்வதற்காக பூதனை, சகடாசூரன், திருணாவர்தன் முதலிய பல அசுரர்களை அனுப்பினான். கிருஷ்ணர் அவர்கள் அனைவரையும் வதம் செய்தபோதிலும், பிள்ளைப் பாசத்தில் மூழ்கியிருந்த நந்த மஹாராஜர் அசுரர்களின் தொடர் தொல்லைகளால் கலக்கமுற்று, கிருஷ்ணரின் பாதுகாப்பைக் கருதி கோகுலத்திலிருந்து இடம்பெயர்ந்து, சாட்டிகரா, திக், காம்யவனம் ஆகிய இடங்களில் சில காலம் வசித்தார். காம்யவனத்திலும் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே நந்த மஹாராஜர் தமது பரிவாரங்களுடன் நந்த கிராமத்திற்குக் குடிபெயர்ந்தார்.
நந்த மஹாராஜரும் இதர ஆயர் குலத்தவரும் நந்த கிராமத்தில் குடியேறியபோது பௌதிகக் கணக்கின்படி கிருஷ்ணரின் வயது, ஆறு ஆண்டு எட்டு மாதங்களாகும். கிருஷ்ணர் நந்த கிராமத்தில் பத்து வயது ஏழு மாதம் வரை தமது திவ்ய லீலைகளைப் புரிந்தார். பின்னர் மதுராவிற்கு பயணமானார். அதாவது, கிருஷ்ணர் நந்த கிராமத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடம் லீலைகளைப் புரிந்தார்.
நந்த மஹாராஜரின் வம்சம்
யது குல மன்னர் தேவமிதருக்கும் அவரது சத்திரிய மனைவிக்கும் பிறந்தவர் சூரசேனர். சூரசேனரின் மகனான வசுதேவர் கிருஷ்ணரின் தந்தையாவார். தேவமிதரின் வைசிய மனைவிக்கு பிறந்தவர் பர்ஜன்யர். பர்ஜன்யருக்கு உபனந்தர், அபினந்தர், நந்தர், சுனந்தர், நந்தனர் என ஐந்து மகன்களும் சனந்த தேவி, நந்தினி தேவி என இரண்டு மகள்களும் பிறந்தனர். இவ்வாறு கிருஷ்ணரின் வளர்ப்பு தந்தையான நந்த மஹாராஜர் பர்ஜன்யரின் மூன்றாவது மகனாகிறார். இதனால், வசுதேவரும் நந்த மஹாராஜரும் ஒன்றுவிட்ட சகோதரர்களாவர். அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.
சத்திரிய மனைவிக்குப் பிறந்த சூரசேனர் மதுராவையும், வைசிய மனைவிக்குப் பிறந்த பர்ஜன்யர் விரஜ பூமியையும் ஆண்டு வந்தனர். நந்த மஹாராஜரின் தெய்வீக குணங்களையும் ஆயர்களின் மத்தியிலான அவரது ஆதிக்கத்தையும் கண்டு அவரது மூத்த சகோதரர்கள் நந்த மஹாராஜரையே விரஜ பூமியின் மன்னராக நியமித்தனர். ஆகவே, நந்த மஹாராஜர் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு குடிபெயர வேண்டும் என சபையில் முடிவெடுத்தால், உடனடியாக அனைவரும் தங்களது குடும்பம், படை, பரிவாரங்களுடன் தயார் நிலையில் இருப்பர்.
நந்த மஹாராஜர் நந்த கிராமத்தின் மலை உச்சியில் அரண்மனை அமைத்துக் கொண்டபோது, அவரைப் பின்தொடர்ந்த விரஜவாசிகள் அம்மலையைச் சுற்றி தங்களது இல்லங்களை அமைத்துக் கொண்டனர். நந்த மஹாராஜர் வசித்த இல்லமே தற்போது நந்த பவனம் என அழைக்கப்படுகிறது.
நந்த பவனம்
நந்த மஹாராஜர் வசித்த அரண்மனை காலப்போக்கில் முற்றிலும் சிதிலமடைந்திருந்தது. சைதன்ய மஹாபிரபு 1515 ஆம் ஆண்டு விரஜ மண்டலத்திற்கு யாத்திரை புரிந்தபோது இவ்விடத்திற்கும் வருகை புரிந்தார். அவர் முதலில் பாவன சரோவரில் நீராடி, பிறகு நந்தீஸ்வர மலையில் ஏற ஆரம்பித்தார். சைதன்ய மஹாபிரபு தமது உதவியாளரான பலபத்ர பட்டாச்சாரியர் மற்றும் அப்பகுதி மக்கள் சிலரின் உதவியுடன் மண்ணுக்கடியில் புதைந்திருந்த நந்த மஹாராஜர், யசோதை மற்றும் கிருஷ்ணரின் விக்ரஹங்களைக் கண்டெடுத்தார். சைதன்ய மஹாபிரபு அந்நாள் முழுவதும் பரவச நிலையில் நாம ஸங்கீர்த்தனம் செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தார். பிற்காலத்தில், அவ்விடத்தில் ஸநாதன கோஸ்வாமி மிக அற்புதமான கோயிலை எழுப்பினார்.
நந்த பவனில் தற்போது காணப்படும் இவ்விக்ரஹங்கள் சைதன்ய மஹாபிரபுவினால் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளடைவில் சில கூடுதலான விக்ரஹங்களை கோயில் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டனர். இந்தக் கோயிலில் தற்போது யசோதை மற்றும் நந்த மஹாராஜருக்கு இடையில் கிருஷ்ணரும் பலராமரும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். நந்தரின் வலது பக்கத்தில் கிருஷ்ணரின் நண்பர்களான ஸ்ரீதாமரும், மதுமங்களரும் இருக்கின்றனர். யசோதையின் இடது பக்கத்தில் ராதாராணி, ரோகிணி மற்றும் ரேவதி (பலராமரின் துணைவி) வீற்றுள்ளனர். கிருஷ்ணரும் பலராமரும் வசித்த இவ்விடத்தை தற்போது பிரம்மாண்டமான கிருஷ்ண-பலராமரின் கோயிலாக மாற்றியுள்ளனர்.
நாங்கள் நாம ஸங்கீர்த்தனம் செய்தபடி நந்த கிராமத்தின் அடிவாரத்திலிருந்து மேலே ஏற ஆரம்பித்தோம். சைதன்ய மஹாபிரபுவின் நந்த பவன வருகையை ஸ்மரணம் செய்தவாறு, கிருஷ்ண-பலராமரின் ஆலயத்திற்குள் நுழைந்தபோது, நாங்கள் அனைவரும் மெய்சிலிர்ப்பை உணர்ந்தோம். கோயிலின் முற்றத்தில் சிவபெருமான் நந்தீஸ்வர மூர்த்தியாக காட்சி தருகிறார். சிவபெருமான் கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக நந்த கிராமத்திற்கு வந்தபோது நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் அடிப்படையில், அவர் அங்கு வீற்றுள்ளார்.
நந்தீஸ்வர மலை
சிவபெருமான் இங்கே நந்தீஸ்வர மலையாக இருந்து கிருஷ்ணர் மற்றும் அவரது சகாக்களின் திருப்பாதங்களை எப்போதும் தாங்கி வருகிறார். சிவபெருமானின் மீதான அச்சத்தினால் கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்கள் நந்த கிராமத்தினுள் நுழையவில்லை. நந்த கிராமத்திற்கு வரும் அசுரர்களை சிவபெருமான் எப்போதும் விரட்டி விடுவார். நந்த கிராமத்தில் அசுரர்களின் தாக்குதல்கள் இல்லாத காரணத்தினால், நந்த மஹாராஜர் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்கு முடிவெடுத்தார். அதே சமயம் கிருஷ்ணர் தமது சகாக்களுடன் மாடு மேய்க்க நந்த கிராமத்தை விட்டு வெகுதூரம் செல்லும் சமயங்களில் அசுரர்கள் அவரைத் தாக்குவதுண்டு.
கிருஷ்ணரின் விளையாட்டு லீலை
கிருஷ்ணர் தமது நண்பர்களுடன் வனத்தில் விளையாடும்போது தம்மைத் தாக்க வரும் அசுரர்களை விளையாட்டு பொம்மைகளை உடைப்பது போன்று சுலபமாக வதம் செய்வார். உதாரணமாக, கழுதை வடிவில் இருந்த தேனுகாசுரனையும் அவனது இதர கழுதை அசுரர்களையும் கிருஷ்ணரும் பலராமரும் லாவகமாக சுழற்றி பனை மரங்களின் மீது எறிந்து வதம் செய்தனர். கிருஷ்ணரின் நண்பர்களுக்கு இவையெல்லாம் காண்பதற்கு மிக வேடிக்கையாக இருக்கும். கிருஷ்ணரின் அசாதாரணமான செயல்களை தினந்தோறும் பார்த்த அவரது நண்பர்கள், கிருஷ்ணரின் மீதான அன்பையும் பற்றுதலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தனர்.
கிருஷ்ணர் நிகழ்த்தும் அற்புத லீலைகளை இடையர்குல சிறுவர்கள் ஒன்றுவிடாமல் தங்கள் பெற்றோரிடத்திலும் தெரிவிப்பர். அதனால் பெரியோர்களிடத்திலும் கிருஷ்ணர் மீதான அன்பு தினந்தோறும் அதிகரித்தவண்ணம் இருந்தது. கிருஷ்ணர் நந்த கிராமத்தில் வசித்தபோது இந்திரனின் கர்வத்தை அடக்குவதற்காக கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்து அனைத்து விரஜவாசிகளையும் காப்பாற்றினார். இச்சம்பவத்தை கிருஷ்ணர் தமது ஏழாவது வயதில் நிகழ்த்தினார்.
அற்புதக் குழந்தை
ஒருநாள் நந்த மஹாராஜர் ஏகாதசி விரதத்தை முடிக்கும் பொருட்டு இரவு அகால நேரத்தில் யமுனையில் நீராடியபோது வருண தேவரின் சேவகர்கள் அவரைக் கைது செய்தனர். கிருஷ்ணரும் பலராமரும் தங்களது தந்தையைக் காப்பாற்றுவதற்கு வருண லோகத்தை அடைந்தபோது, வருண தேவர் அவர்கள் இருவரையும் இருகரம் கூப்பி வணங்கி உபசரித்து, தமது சேவகர்களின் குற்றத்திற்கு மன்னிப்புக் கேட்டு நந்த மஹாராஜரை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.
வருண லோகத்தில் தமது மகனுக்குக் கிடைத்த பிரமாதமான வரவேற்பைக் கண்கூடாகக் கண்டும் நந்த மஹாராஜர் கிருஷ்ணரைத் தமது குழந்தையாகவே கருதினார். கிருஷ்ணர் பரம புருஷ பகவான் இல்லை என்பதை நந்த மஹாராஜர் திடமாக நம்பினார். விரஜவாசிகள் கிருஷ்ணர் கடவுள் என்பதை மறந்து ஏதாவது ஒரு உறவுமுறையில் அவருடன் வாழ்ந்தனர், கிருஷ்ணரின் மகிழ்ச்சியையே தங்களது மகிழ்ச்சியாகக் கருதினர். விரஜவாசிகள் கிருஷ்ணரின் ரூபம், குணங்கள், அன்பு, செயல்கள் ஆகியவற்றை தங்களது வாழ்வின் மையமாக வைத்துக் கொண்டனர். இதுவே எளிமையான விரஜ வாழ்க்கையாகும்.
நந்த பைடக்
நந்த மஹாராஜர் ஆயர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்காக அமரக்கூடிய இடமே நந்த பைடக். இவ்விடம் நந்த பவனிற்கு அருகில் உள்ளது. இங்கு நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான லீலையைக் காண்போம்.
ஒருநாள் நந்த மஹாராஜரின் சகோதரரான உபனந்தர், கிருஷ்ணர் சாதாரண சிறுவன் அல்லர். அவர் பெரிய யோகியாகவோ பகவானின் அவதாரமாகவோ தேவராகவோ இருக்கக் கூடும். இருப்பினும், உங்களது மனைவி யசோதை சில சமயங்களில் கிருஷ்ணரிடம் கொம்பைக் காட்டி மிரட்டுகிறாள்,” என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அதைக் கேட்டு நந்த மஹாராஜர் கூறினார், பொதுவாக மஹா புருஷர்களுக்கு புலனடக்கம், நேர்மை, பயமின்மை ஆகியவை இருக்க வேண்டும். எனது மகனிடத்தில் இம்மூன்றும் இல்லை. எனது மகன் புலன்களை அடக்கத் தெரியாமல் எப்போதும் இனிப்புப் பண்டங்களை உண்கிறான். வெண்ணெய் திருடுபவனிடம் நேர்மை எவ்வாறு இருக்கும்? இடி இடித்தால் பயத்தினால் அன்னை யசோதையை இறுகப் பற்றிக்கொள்கிறான். எனவே, கிருஷ்ணர் எனது மகன், அவ்வளவுதான். எனது மகனை கடவுள் என சொல்கிறீர்களே!” இதைக் கூறி, நந்த மஹாராஜர் விழுந்து விழுந்து சிரித்தார். அதைக் கேட்ட அனைவரும் கிருஷ்ணர் மீதான பிரேமையில் மண்ணில் உருண்டு புரண்டு சிரித்தனர்.
பாவன சரோவர்
ஒருமுறை நந்த மஹாராஜர் பிரயாகை செல்ல ஆயத்தமானார். கிருஷ்ணரோ தமது தந்தையை அக்ஷய திரிதியை அன்று பாவன சரோவரில் நீராடுமாறு கேட்டுக் கொண்டார். நந்த மஹாராஜர் பாவன சரோவரில் நீராடியபோது, கருமை நிறம் கொண்ட விசித்திரமான நபர் தென்பட்டார். அவர் தம்மை பிரயாகையின் அரசன் என நந்த மஹாராஜாவிடம் அறிமுகப்படுத்தி கொண்டார்.
அப்போது அவர் கூறினார், பொதுமக்கள் எனது தீர்த்தமான பிரயாகையில் நீராடி பாவத்தைக் கழிக்கின்றனர். யாத்ரிகர்கள் விட்டுச் சென்ற பாவத்தை நான் பாவன சரோவரில் நீராடிக் கழிக்கிறேன்.” அவரைத் தொடர்ந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, காவேரி, கோதாவரி, கோமதி, தாமிரபரணி, சிந்து ஆகிய நதிகளின் தேவதைகளும் பாவன சரோவரில் நீராடுவதைக் கண்ட நந்த மஹாராஜர், மிகவும் வியப்புற்று தமது பிரயாகை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். சைதன்ய மஹாபிரபுவும் பாவன சரோவரில் நீராடிய பிறகே நந்தீஸ்வர மலையை ஏறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நந்த கிராம பரிக்ரமா
நந்த கிராம மலையைச் சுற்றி ஆறு கி.மீ. கிரிவலப் (பரிக்ரமா) பாதை உள்ளது. இவ்விடத்திற்கு அருகிலும் சற்று தொலைவிலும் பல குண்டங்கள், பகவானின் லீலா ஸ்தலங்கள், பஜனை குடில்கள் அமைந்துள்ளன. அன்னை யசோதை தயிர் கடைந்த இடம் ததி மந்தானா” எனப்படுகிறது, கிருஷ்ணரின் திருப்பாதம் கல்லில் பதிந்துள்ள இடம் சரண் பஹாரி” எனப்படுகிறது. மேலும், நந்த மஹாராஜர் வழிபட்ட வராஹர் மற்றும் நாராயணரின் கோயில், ஸநாதன கோஸ்வாமி மற்றும் ரூப கோஸ்வாமியின் பஜனைக் குடில் ஆகியவையும் நந்த கிராமத்தில் அமைந்துள்ளன. ஸநாதன கோஸ்வாமி ராதா மதனமோஹனரின் கோயிலை எழுப்பிய பிறகு சிறிது காலம் நந்த கிராமத்தில் வசித்தார், பிறகு கோவர்தனத்திற்குக் குடிபெயர்ந்தார்.
கிருஷ்ணரின் தூதுவரான உத்தவர் கோபியர்களைச் சந்தித்த இடமான உத்தவ கியாரி, விருந்தா தேவியின் வசிப்பிடமான விருந்த குண்டம், நந்த மஹாராஜாவின் கோசாலை, அன்னை ரோகிணி நீராடிய ரோகிணி குண்டம், யசோதை நீராடிய யசோதா குண்டம், லலிதா குண்டம், விஸாகா குண்டம், சூரிய குண்டம் என பல திவ்ய குண்டங்கள் (குளங்கள்) நந்த கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ளன.
அற்புத கிராமம்
கிருஷ்ணரும் பலராமரும் இடையர்குலச் சிறுவர்களுடனும் கோபியர்களுடனும் எண்ணற்ற லீலைகளை நந்த கிராமத்தில் நிகழ்த்தியுள்ளனர். கிருஷ்ணரும் பலராமரும் தங்களது நண்பர்களுடன் மாடு மேய்த்து மாலை நேரத்தில் விருந்தாவனம் திரும்புவர் என ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது நந்த கிராமத்தையே குறிப்பதாகும். நந்த கிராமத்தை தரிசிப்பவர்கள் இஃது ஓர் அற்புதமான கிருஷ்ண உணர்வு கிராமம் என்பதைச் சுலபமாக உணர முடியும்.
கிருஷ்ணர் தமது பக்தர்களை என்றும் பிரிந்திருப்பதில்லை என்பதற்கு நந்த கிராமம் ஓர் உதாரண பூமியாகத் திகழ்கிறது.