யசோதைக்குப் பிறந்த கிருஷ்ணர்

Must read

கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்குப் பிறந்து, பின்னர் கோகுலத்தில் யசோதையின் மகனாக வளர்ந்தார் என்பது தெரிந்த கதை. ஆனால் கிருஷ்ணர் தேவகிக்குப் பிறந்த அதே சமயத்தில் யசோதைக்கும் பிறந்தார் என்பது தெரியாத துணுக்கு.

கிருஷ்ணரை தேவகியின் உண்மையான மகன் என்றும், யசோதையின் வளர்ப்பு மகன் என்றும் பெரும்பாலான மக்கள் அறிந்துள்ளனர். சாஸ்திரங்கள் பல்வேறு இடங்களில் இதனைத் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் நமக்குத் தெரிவிப்பது யாதெனில், கிருஷ்ணர் ஒரே சமயத்தில் தேவகிக்கு மதுராவிலும் யசோதைக்கு கோகுலத்திலும் பிறந்தார் என்பதே. இது ஹரிவம்ஸ புராணத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரியும்போது, அவர் விருந்தாவன கிருஷ்ணராகத் திகழ்கிறார். மதுராவிலும் துவாரகையிலும் அவர் வாசுதேவ கிருஷ்ணராகத் திகழ்கிறார். இஃது என்ன இரண்டு கிருஷ்ணர்? இரண்டு கிருஷ்ணர் இல்லை, ஒரே கிருஷ்ணர்தான், ஆனால் பா4வம் வேறு. கிருஷ்ணர் விருந்தாவனத்தில் வெளிப்படுத்தும் பா4வமும் இதர இடங்களில் வெளிப்படுத்தும் பா4வமும் வேறுபட்டவை. கிருஷ்ண லீலையை அறிந்தவர் எவரும் இதனை எளிதில் உணரலாம். விருந்தாவன கிருஷ்ணர் ஸ்வயம்-பகவான் கிருஷ்ணர்” என்றும், மதுராவிலும் துவாரகையிலும் இருக்கும் கிருஷ்ணர் வாசுதேவ கிருஷ்ணர்” என்றும் அறியப்படுகின்றனர்.

அதன்படி, அந்த வாசுதேவ கிருஷ்ணர் தேவகியின் மகனாகவும், விருந்தாவன கிருஷ்ணர் யசோதையின் மகனாகவும் ஒரே சமயத்தில் தோன்றினர் என்று உயர்ந்த பக்தர்கள் கருத்துரைக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, வசுதேவர் சிறையிலிருந்து வெளியேறிய தருணத்தில், யசோதை பெண் குழந்தையை இரண்டாவதாகப் பெற்றாள். இவ்வாறு, கிருஷ்ணரும் யோக மாயையும் விருந்தாவனத்தில் யசோதைக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர். மதுராவிலிருந்து கோகுலத்திற்கு வந்த வசுதேவர் அங்கிருந்த யசோதையின் பெண் குழந்தையை மட்டுமே பார்த்தார், அவரிடம் இருந்த ஒருவித பதட்டத்தினால், அருகிலிருந்த மற்றோர் ஆண் குழந்தையை அவர் பார்க்கவில்லை. வசுதேவர் கிருஷ்ணரை வைத்துவிட்டு யோகமாயையைத் தம்முடன் எடுத்துக் கொண்டு உடனடியாகப் புறப்பட்டார். அதன் பின்னர், வசுதேவரால் கொண்டு வரப்பட்ட கிருஷ்ணரும் யசோதையின் மகனாகத் தோன்றிய கிருஷ்ணரும் ஒரே உருவில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறாக, கிருஷ்ணர் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களிலும் அவதரித்தார்.

இந்த லீலை மிகவும் அந்தரங்கமான இரகசிய லீலை என்பதால், இது ஸ்ரீமத் பாகவதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும், சுகதேவ கோஸ்வாமியும் இதர மிகச்சிறந்த பக்தர்களும் தங்களது படைப்புகளில் இதனை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆதாரம்: ஹரிவம்ஸ புராணம் (2.4.11), ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் லகு-பாகவதாம்ருதம் (1.5.452-456), ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கோபால-சம்பூ (மூன்றாவது அத்தியாயம்), ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியின் கிருஷ்ண-ஸந்தர்ப, ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூரின் ஸ்ரீமத் பாகவதம், பத்தாவது ஸ்கந்த விளக்கவுரை (அத்தியாயம் மூன்று, ஸ்லோகங்கள் 47-55), ஸ்ரீல பிரபுபாதரின் ஸ்ரீமத் பாகவத விளக்கவுரை (10.3.47).

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives