மயங்கியுள்ள நமது உணர்வு
கிருஷ்ண பக்தி இயக்கம் என்னும் இந்த முக்கியமான இயக்கம், எல்லா உயிர்வாழிகளையும் தன்னுடைய மூல உணர்விற்கு கொண்டு வருவதற்கானதாகும். பல்வேறு மனநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை உண்மை உணர்வு நிலைக்குக் கொண்டுவர எவ்வாறு முயற்சி செய்யப்படுகின்றதோ, அதைப் போன்றே கிருஷ்ண பக்தி இயக்கமும் இந்த பைத்தியக்கார மக்களை தங்களுடைய உண்மையான உணர்விற்கு அல்லது மூல உணர்விற்குக் கொண்டுவர முயற்சி செய்கின்றது.
எவனொருவன் கிருஷ்ண உணர்வு இல்லாமல் இருக்கின்றானோ, அவனை நாம் கிட்டத்தட்ட புத்தி சுவாதீனம் இல்லாதவன் என்றே புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மிகச் சிறந்த வைஷ்ணவக் கவிஞர் ஒருவர் வங்காள மொழியில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். பேய் பிடித்த மனிதன் பேசுவதெல்லாம் அபத்தமாக இருப்பதைப் போல, இந்த பௌதிக இயற்கை என்னும் பேயின் கீழ் நடத்தப்படுபவன், பேசுவது எதுவாயினும் அபத்தமாகவே இருக்கும். ஒருவன் சிறந்த தத்துவவாதியாக அல்லது சிறந்த விஞ்ஞானியாக இருக்கலாம். ஆனால் அவன் மாயை என்னும் பேயால் பீடிக்கப்பட்டிருந்தால், அவன் எந்த தத்துவ ஆராய்ச்சி செய்தாலும் என்ன பேசினாலும் அவை எல்லாம் கிட்டத்தட்ட அபத்தமே.
இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நோக்கமானது, இதற்கு முன் விவரிக்கப்பட்ட மனிதர்களை தங்களுடைய மூல உணர்விற்கு, அதாவது கிருஷ்ண உணர்வாகிய தூய உணர்விற்குக் கொண்டு வருவதாகும். தண்ணீரானது மேகங்களில் இருந்து விழும்போது சுத்தமான, களங்கமற்ற நீராகவே இருக்கிறது. ஆனால் பூமியைத் தொட்டவுடன் அது சேற்றுடன் கலந்து ஒரு விதமான நிறத்தைப் பெற்று விடுகிறது. அதைப் போலவே, கிருஷ்ணரைச் சேர்ந்த ஒரு பகுதியான ஆன்மீக ஆத்மாவாகிய நம்முடைய மூல ஆதாரமான நிலையும் கடவுளைப் போன்று தூய்மையானதே. பகவத் கீதையில் (15.7) மமைவாம்ஸோ ஜீவ லோகே, உயிர்வாழிகளெல்லாம் கிருஷ்ணரைச் சேர்ந்த ஒரு பகுதியே என்று கூறப்பட்டுள்ளது. தங்கத்தின் ஒரு துளியும் தங்கம் என்பதைப் போல, கடவுளின் அம்சமாகிய நாமும் தன்மையில் கடவுளைப் போன்றவர்களே. ஆனால் மழை நீரானது நிலத்தில் விழுவதைப் போல, நாமும் கிருஷ்ணரின் பௌதிக இயற்கையால் பொய்யாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள இந்த பௌதிக உலகில் விழுகிறோம்.
இயற்கைக்குப் பின்னால்…
இயற்கையைப் பற்றி பேசும்பொழுது, நாம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும், “இயற்கை யாருடையது?” கடவுளின் இயற்கை. இயற்கை தானாக சுதந்திரமாக செயல்படுகிறது என்பது முட்டாள்தனம். பௌதிக இயற்கை சுதந்திரமானதல்ல என்று பகவத் கீதை திட்டவட்டமாக கூறுகிறது. இயந்திரத்தைப் பார்க்கும் மனிதன் அது தானாக இயங்குகிறது என்று நினைக்கிறான், ஆனால் அஃது அப்படியல்ல. அதனை இயக்குபவர் ஒருவர் இருக்கிறார். ஆனால் நம்முடைய குறைபாடுள்ள பார்வையால் நம்மால் அவரைப் பார்க்க முடிவதில்லை. மிக அழகாக இயங்கும் மின்னணு இயந்திரங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவை இயங்குவதற்கான விசையை அழுத்துவதற்கு ஒரு விஞ்ஞானி இருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது எளிது. இயந்திரமானது ஜடம், எனவே, அதனால் சுயமாக இயங்க முடியாது. ஆனால் ஓர் உயிர்வாழியின் இயக்குதலின் கீழ் அதனால் இயங்க முடியும். ஒரு டேப் ரிக்கார்டர் வேலை செய்கிறது என்றால், அஃது ஓர் உயிர்வாழியாகிய மனிதனின் வழிநடத்துதலின் கீழ் இயங்குகிறது. இயந்திரம் என்பது முழுமையானதே, ஆனால் அதனை ஓர் ஆன்மீக ஆத்மா இயக்காத வரையில் அஃது இயங்காது. அதைப் போலவே, இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய இயற்கையையும் ஒரு மிகப்பெரிய இயந்திரம் என்றுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால் இந்த பௌதிக இயற்கையின் பின் கடவுள் இருக்கிறார், அந்தக் கடவுள்தான் கிருஷ்ணர்.
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸுயதே ஸ சராசரம், “இந்த ஜட இயற்கை எனது மேற்பார்வையின் கீழ் இயங்குகிறது” என்று பகவத் கீதையில் (9.10) கிருஷ்ணர் கூறுகிறார். இரண்டு வகையான உயிர்வாழிகள் உள்ளன: அசைபவை (மனிதர்கள், மிருகங்கள், எறும்புகள்), அசையாதவை (மரங்கள், மலைகள் போன்றவை). இந்த இருவகையான உயிர்வாழிகளை நடத்தும் பௌதிக இயற்கையானது தனது வழிநடத்துதலின் கீழே இயங்குகிறது என்று கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, ஒரு மிகவுயர்ந்த மேற்பார்வையாளர் உள்ளார். நவீன நாகரிகத்தில் போதிய அறிவு இல்லாத காரணத்தால் இதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, எங்களது கிருஷ்ண பக்தி இயக்கம் மக்களுக்கு இந்த அறிவை வழங்க முயற்சி செய்கிறது. மக்கள் புத்தி சுவாதீனம் அற்றவர்களாக இருக்கிறார்கள்.
அறிவிற்கான கல்வி
உலகில் பல பல்கலைக்கழகங்கள் உள்ளன, அதுவும் அமெரிக்காவில் பல உள்ளன. அத்தகைய பல்கலைக்கழகங்களில் பல அறிவுத் துறைகள் உள்ளன. ஆனால் அவை ஏன் இதுவரை நாம் கூறிய விஷயங்களைப் பற்றி ஆராய்வதில்லை? அந்த அறிவிற்கான துறை எங்கே உள்ளது?
நான் 1968ஆம் ஆண்டில் போஸ்டன் நகரத்திற்குச் சென்றபொழுது, மான்சஸட்ஸ் தொழிற்கல்வி நிறுவனத்தில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டேன். அங்கே நான் கேட்ட முதல் கேள்வி, “இறந்த மனிதனுக்கும் உயிர்வாழும் மனிதனுக்கும் இடையேயான வேறுபாட்டை கண்டறிவதற்கான தொழில் நுட்பத் துறை எங்கே உள்ளது?” மனிதன் இறக்கும் பொழுது ஏதோ ஒன்று இழக்கப்படுகிறது. அதை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் எங்கே? விஞ்ஞானிகள் அதற்காக ஏன் முயற்சிப்பதில்லை? அது மிகவும் கஷ்டமான காரியம் என்று நினைத்து, பலர் அதை ஒதுக்குகிறார்கள். அவர்கள் உறங்குதல், உண்ணுதல், இனவிருத்தி செய்தல், பாதுகாத்தல் போன்ற தொழில் நுட்பத்திலேயே சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளனர். இது மிருகங்களின் தொழில்நுட்பம்–நன்றாக சாப்பிட வேண்டும், உறங்க வேண்டும், உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும், பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு மிருகங்களும் தம்மாலான முயற்சியைச் செய்கின்றன.
மனிதர்களின் அறிவிற்கும் மிருகங்களின் அறிவிற்கும் இடையிலுள்ள வேறுபாடு என்ன? இந்த உடலுக்கும்–அதாவது உயிருள்ள உடலுக்கும்–உயிரற்ற மனிதருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கு மனிதன் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த அறிவானது கிருஷ்ணரால் பகவத் கீதையின் ஆரம்பத்திலேயே கூறப்பட்டுள்ளது. இந்த உடலின் உள்ளே ஒரு முதலாளி இருப்பதாக பகவத் கீதை கூறுகிறது. நானே இந்த உடலின் முதலாளி, மற்றவர்கள் அனைவரும் அவரவர்களின் உடல்களுடைய முதலாளிகள். நான் “இந்தக் கை என்னுடையது” என்று கூறுகிறேன். “நான் இந்தக் கை” என்று கூறுவதில்லை. எனவே, நான் இந்தக் கையிலிருந்து வேறுபட்டவன். “இஃது என் புத்தகம்” என்று நான் கூறும்பொழுது, நான் இந்தப் புத்தகத்திலிருந்து வேறுபட்டவன் என்பது தெரிகிறது. அதேபோல், “என்னுடைய மேஜை,” “என்னுடைய கண்,” “என்னுடைய கால்,” என்று நான் கூறும்போது, நான் அவற்றிலிருந்து வேறுபட்டவன். அப்படியெனில், “நான் எங்கே? நான் யார்?” இந்தக் கேள்விக்கான பதிலை பௌதிக முயற்சியால் தேட முடியாது என்பதால், அனைத்து பல்கலைக்கழகங்களும் இதனை ஒதுக்கிவிடுகின்றன. இது மிகக் கடினமான விஷயமாகும்.
ஓட்டுனர் கிருஷ்ணர்
பொறியியல் வல்லுநர்கள் குதிரையில்லாத வண்டியைக் கண்டுபிடித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறார்கள். முதலில் குதிரைகள்தான் வண்டிகளை இழுத்துக் கொண்டிருந்தன, ஆனால் இப்பொழுது கார்கள் வந்துவிட்டதால் விஞ்ஞானிகள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். “நாங்கள் குதிரையில்லாத வண்டியையும் இறக்கையில்லாத பறவையையும் கண்டுபிடித்துவிட்டோம்.” ஆனால் ஆத்மா இல்லாத உடல் ஒன்றை அவர்கள் கண்டுபிடிக்கும் போதுதான், அதற்கான பாராட்டைப் பெறுவதற்கு தகுதி உடையவர்களாவர். ஆனால் அதுபோன்ற கண்டுபிடிப்பு சாத்தியமானதல்ல; ஏனெனில், ஓர் ஆத்மா இல்லாமல் எந்த இயந்திரமும் இயங்காது. கணிப்பொறியை இயக்குவதற்கும் பயிற்சி பெற்ற மனிதர் ஒருவர் தேவைப்படுகிறார்.
அதைப் போலவே, பௌதிக இயற்கை என்று அழைக்கப்படும் இந்த மிகச்சிறந்த இயந்திரமும் ஒரு மிகவுயர்ந்த சக்தியால் உருவாக்கப்பட்டதே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்தான் கிருஷ்ணர். விஞ்ஞானிகள் பௌதிக இயற்கையின் முடிவான காரணத்தையோ முடிவான இயக்குநரையோ தேடுகிறார்கள். அதைப் பற்றி அவர்கள் பலவிதமான கோட்பாடுகளையும் கூற்றுகளையும் முன்வைக்கிறார்கள். ஆனால் அந்த அறிவைப் பெறுவதற்கு எங்களுடைய வழியே மிகவும் சுலபமானதும் பூரணமானதுமாகும். ஏனென்றால், நாங்கள் அந்த அறிவை பூரண புருஷராகிய கிருஷ்ணரிடமிருந்து பெறுகிறோம். இந்த பிரபஞ்ச இயந்திரத்தின் ஒரு பகுதியான இந்த பூமி நன்றாக இயங்குவதற்கான காரணம், இதற்குப் பின்னால் ஓட்டுனராகத் திகழும் கிருஷ்ணரே என்பதை நாங்கள் எளிதில் உடனடியாக அறிந்துகொள்கிறோம். எவ்வாறு ஒவ்வோர் இயந்திரத்தின் பின்னும் ஓர் ஓட்டுனர் இருக்கிறாரோ, அதைப் போலவே பௌதிக இயற்கையாகிய இந்த பெரிய இயந்திரத்தின் பின் கிருஷ்ணர் இருக்கிறார்.
கிருஷ்ணரே பரம புருஷர்
அறிவைப் பெறுவதற்கான எங்களின் முறையானது மிக சுலபமானதாகும். கிருஷ்ணரின் நூலாகிய பகவத் கீதையே பூரண புருஷரால் கொடுக்கப்பட்ட அறிவின் நூலாகும். நாங்கள் அவரை பூரண புருஷர் என்று ஏற்றுக் கொண்டுவிட்டபோதிலும், மற்றவர்கள் அவரை ஏற்கவில்லையே என்று சிலர் விவாதிக்கலாம்; ஆனால் வேத வல்லுநர்களின் சாட்சியப்படி அவர் முழுமுதற் கடவுளே. எங்களுடைய திடீர் விருப்பத்தால் நாங்கள் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவுப் புதையலைக் கொண்ட வேத இலக்கியத்தின் ஆசிரியராகிய வியாஸரைப் போன்ற பலர் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கின்றனர். வியாஸதேவரின் குருவாகிய நாரதரும் கிருஷ்ணரை முழுமுதற் கடவுளாக ஏற்கிறார். அவருடைய குருவாகிய பிரம்மதேவர் கிருஷ்ணரை மிகவுயர்ந்த புருஷராக ஏற்கிறார். பிரம்மா கூறுகிறார், ஈஸ்வர: பரம: கிருஷ்ண:, “கிருஷ்ணரே மிகவுயர்ந்த இயக்குநர்.”
பிரம்மாவை இயக்குபவர் யாருமில்லை என்று யாராலும் கூற முடியாது. அது சாத்தியமானதல்ல. அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அவருக்கு மேலும் ஓர் இயக்குநர் இருக்கிறார். ஆனால் கிருஷ்ணருக்கென்று எந்த இயக்குநரும் இல்லை; எனவேதான் அவர் கடவுளாகிறார். அவர் ஒவ்வொருவரின் இயக்குநர், ஆனால் அவருக்கு எந்த இயக்குநரும் இல்லை. இந்த காலத்தில் பலவிதமான கடவுள்கள் உருவாக்கப்படுகின்றனர், கடவுள்கள் மிகவும் மலிவாகிவிட்டார்கள். இந்தியாவில் அநேகமாக தினமும் ஒரு கடவுள் உருவாக்கப்படுகிறார். சில நாட்களுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு ஒரு கடவுள் வந்ததாகவும் அவரை வரவேற்க மக்கள் அனைவரும் வேண்டப்பட்டதாகவும் என் சீடர்களில் ஒருவர் கூறினார். கிருஷ்ணர் அது மாதிரியான கடவுள் அல்ல. நான் “கிருஷ்ணர்” புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல, கிருஷ்ணர் என்பவர் மாயமான ஒரு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடவுள் அல்ல. அவர் கடவுளாக ஆக்கப்பட்டவர் அல்ல, மாறாக அவர் சாக்ஷாத் கடவுளே.
ஜட இயற்கை கிருஷ்ணரின் மேற்பார்வையில் இயங்குகிறது.
அறிவைப் பெறும் வழி
நாம் கல்வி கற்பதற்காக ஓர் ஆசிரியர், பள்ளி, அல்லது பெற்றோர்களை அணுகுகிறோம். அவர்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமானவர்கள். அவர்களிடமிருந்து அறிந்துகொள்வதே நமது இயற்கை. நாம் நம்முடைய குழந்தைப் பருவத்தில் தந்தையைப் பார்த்துக் கேட்போம், “தந்தையே, இஃது என்ன?” உடனே அவரும், “இஃது எழுதுகோல்”, “இது மூக்குக் கண்ணாடி” அல்லது “இது நாற்காலி” என பதில் கூறுவார். எனவே, குழந்தையானது தனது பெற்றோர்களிடமிருந்து,”இது நாற்காலி, இது மூக்குக் கண்ணாடி, இஃது எழுதுகோல், இவள் என்னுடைய சகோதரி, இவர் என்னுடைய சகோதரர்” என பலவற்றைக் கற்றுக்கொள்கிறது. அதிகாரப்பூர்வமான வரிடமிருந்து தகவலைப் பெறும்போது, அவர் ஏமாற்றுபவராக இருக்கக் கூடாது, அப்போதுதான் நாம் பெறக்கூடிய அறிவு பூரணமானதாக இருக்கும். மகன் விசாரிக்கும்போது, பெற்றோர்கள் துல்லியமான மற்றும் சரியான பதில்களையே கூறுவர், அவனை ஏமாற்ற மாட்டார்கள். சரியான தகவலை சரியான நபரிடமிருந்து பெறுவதே பூரண அறிவாகும். ஆனால் அதை விட்டுவிட்டு கற்பனையின் மூலமாக அறிவை அடைய நினைத்தால், அது பூரணமற்றதாகும்.
நாங்கள் பூரண புருஷராகிய கிருஷ்ணரிடமிருந்து தகவல்களைப் பெறுவதால், நாங்கள் பேசுபவை எல்லாம் பூரணமாகவே இருக்கும், கிருஷ்ணர் அல்லது கிருஷ்ணரை ஏற்றுக் கொண்ட வல்லுநர்கள் பேசாத எந்தவொரு விஷயத்தையும் நாங்கள் கூறுவதில்லை. இதுவே சீடப் பரம்பரை எனப்படுகிறது. அறிவைப் பெறுவதற்கான இந்த வழியையே பகவத் கீதையில் (4.2) கிருஷ்ணர் பரிந்துரை செய்கிறார், ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:, “இந்த ஞானம் ராஜரிஷிகளால் பரம்பரையின் மூலமாக பெறப்பட்டு வந்தது.” முன்பெல்லாம் அறிவானது அதிகாரப்பூர்வமான தூய அரசர்களால் பரம்பரைபரம்பரையாக எடுத்துச் சொல்லப்பட்டது. தற்கால அரசாங்கமோ ஜனாதிபதியோதான் அதிகாரப்பூர்வமாக உள்ளனர். ரிஷிகளே முன்பெல்லாம் அரசர்களாக அல்லது அதிகாரப்பூர்வமானவர்களாக இருந்தனர். அவர்கள் சாதாரணமான மனிதர்களாக அல்லாமல், மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதர்களாக, பக்தர்களாக இருந்தனர். இந்த முறையான அரசாங்கம் மிக நன்றாக இருந்தது. ஒரு திறமை வாய்ந்த நல்ல பயிற்சி பெற்ற அரசாங்கத் தலைவனால் அரசின் செயல்களை மிக அமைதியான முறையில் நிறைவேற்ற முடியும்.
ஆறு மாதத்தில் கடவுளைக் கண்டவர்
அத்தகைய அரசர்கள் பூரணத்துவம் அடைந்ததைப் பற்றிய பல சம்பவங்கள் வேத இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளன. அதற்கு துருவ மஹாராஜர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அவர் கடவுளைக் காண்பதற்காக காட்டிற்குச் சென்றார். அங்கே கடுமையான தவத்தாலும் சடங்குகளாலும் ஆறு மாதத்திற்குள் கடவுளைக் கண்டார். எப்படி? ஐந்து வயதே நிரம்பிய அவர், தன்னுடைய ஆன்மீக குருவாகிய நாரதரின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தனியாகக் காட்டிற்குச் சென்றார். காட்டில் அவர், முதல் மாதத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சில காய்கறிகளையும் பழங்களையும் உண்டு கொண்டிருந்தார். அடுத்த மூன்று மாதங்களில் ஆறு நாள்களுக்கு ஒருமுறை சிறிதளவு தண்ணீர் மட்டுமே அருந்திக் கொண்டிருந்தார். பிறகு அந்த மாதத்தைத் தொடர்ந்து வந்த அடுத்த மாதத்தில் அவர் பன்னிரண்டு நாள்களுக்கு ஒருமுறை சிறிதளவு காற்றை சுவாசித்து வந்தார். இவ்வாறாக ஒற்றைக் காலில் நின்றபடி கடுமையான இந்த அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வந்தார். இறுதியாக அந்த ஆறு மாதங்களின் முடிவில் அவருக்கு எதிரில் கடவுள் நேருக்கு நேராக தோன்றினார். இதுபோன்ற கடுமையான நெறிமுறைகளைக் கடைபிடித்தால், நம்மாலும் கடவுளை நேருக்கு நேராக பார்க்க முடியும். இதுவே வாழ்க்கையின் பூரணத்துவமாகும்.
தனது கடும் தவத்தினால் ஆறே மாதத்தில் கடவுளைக் கண்ட துருவ மஹாராஜர் பகவானை நமஸ்கரித்தல்.
எளிமையான கிருஷ்ண உணர்வு
கிருஷ்ண உணர்வு இயக்கமும் அனுஷ்டானங்களைத் தழுவியதே. ஆனால் எங்களுடைய முறைகள் முன்பு கூறப்பட்டதுபோல கடினமானதல்ல. நாங்கள் எங்களுடைய சீடர்களை முறையற்ற உடலுறவு கூடாது என்று அறிவுறுத்துகிறோம், நாங்கள் உடலுறவை நிறுத்துவதில்லை, நெறிப்படுத்துகிறோம். அதே போல நாங்கள் உண்பதையும் நிறுத்தவில்லை, ஆனால் அதை நெறிப்படுத்துகிறோம்; கிருஷ்ண பிரசாதத்தை மட்டுமே உண்கிறோம். அதாவது முதலில் கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவை உண்கிறோம்.”சாப்பிடாதே” என்று நாங்கள் கூறுவதில்லை, ஆனால்”மாமிச உணவை சாப்பிடாதே” என்று கூறுகிறோம். இதில் என்ன சிரமம்?
தற்காலத்தில் துருவ மஹாராஜரைப் போன்ற அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பது கடினமே. ஆனால் நாங்கள் சொல்லும் வழிமுறையோ கடைப்பிடிக்க எளிதானது. ஒருவர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், ஆன்மீக உணர்வாகிய கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் கண்டு அறிவில் பூரணத்துவத்தை அடைய முடியும். தன்னுடைய அடுத்த வாழ்க்கை என்ன என்பதைக் கூறவியலாத விஞ்ஞானி அல்லது தத்துவவாதியாக ஆவதால் என்ன பயன்? கிருஷ்ண உணர்வில் உள்ள எங்களின் பக்தர்களால் தங்களுடைய அடுத்த வாழ்க்கை என்ன என்பதையும், கடவுள் என்றால் என்ன என்பதையும், நாம் யார், நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன என்பதையும் மிக எளிதாகக் கூற முடியும். அவர்களுடைய அறிவானது பூரணத்துவம் அடைந்ததாகும்; ஏனென்றால், அவர்கள் அறிவு நிறைந்த பூரணத்துவம் பெற்ற புத்தகங்களாகிய பகவத் கீதையையும் பாகவதத்தையும் படிக்கிறார்கள்.
இதுவே எங்களுடைய வழிமுறையாகும். இது மிக சுலபமானது என்பதால், யார் வேண்டுமானாலும் இதைப் பின்பற்றி தங்களுடைய வாழ்க்கையை பூரணமாக்கிக்கொள்ளலாம். சிலர் கூறலாம், “நான் கல்வியறிவு அற்றவன்; என்னால் புத்தகங்களைப் படிக்க இயலாது.” அவர்கூட தன்னுடைய வாழ்க்கையை பூரணமாக்கிக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் எளிமையான முறையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தைச் சொல்லலாம். கிருஷ்ணர் நமக்கு ஒரு நாவையும் இரண்டு காதுகளையும் கொடுத்துள்ளார். பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற நூல்களைக் கேட்பதாலும் கிருஷ்ணருடைய நாமங்களை “ஹரே கிருஷ்ண” என்று உச்சரிப்பதாலும், அவருடைய மகிமைகளை உணர்ந்து நாம் நம்முடைய வாழ்க்கையில் விரைவில் பூரணத்துவத்தை எய்தலாம்.