தெரிந்த கதை தெரியாத துணுக்கு
மாபெரும் அசுரனாக இருந்த ஹிரண்யகசிபுவிற்கு மிகவுயர்ந்த பக்தரான பிரகலாதர் மகனாகப் பிறந்தது எவ்வாறு?
இதற்கான விளக்கம் நரசிம்ம புராணம், நாற்பத்தொன்றாம் அத்தியாயத்தில் மாமுனிவரான மார்கண்டேய ரிஷிக்கும் மன்னர் ஸஹஸ்ரநிகருக்கும் நிகழ்ந்த உரையாடலில் காணலாம்.
ஒரு சமயம் அசுரத்தனமான வரங்களைப் பெறும் நோக்கத்துடன் ஹிரண்யகசிபு கைலாய மலைக்குப் புறப்பட்டான், மலையின் சிகரத்தில் உள்ள ஒரு வனத்தில் கடுந்தவம் புரியத் தொடங்கினான்.
ஹிரண்யகசிபுவினால் மேற்கொள்ளப்பட்ட தவத்தைக் கண்டு அச்சமுற்ற பிரம்மதேவர் அதைத் தடுப்பதுகுறித்து எண்ணலானார். அச்சமயத்தில் அங்கு தோன்றிய நாரத முனிவர் தமது தந்தையின் வருத்தத்தைப் போக்குவதாக வாக்களித்து தமது நண்பர் பர்வத முனிவருடன் சிட்டுக் குருவியின் வடிவத்தை ஏற்று ஹிரண்யகசிபு தவம் புரிந்து கொண்டிருந்த கைலாய மலைக்குச் சென்றார். சிட்டுக்குருவியின் வடிவிலிருந்த நாரதர் ஒரு மரக்கிளையில் அமர்ந்தவாறு நமோ நாராயணாய என்று பகவான் நாராயணரின் திருநாமத்தை ஹிரண்யகசிபுவின் செவியில் கேட்குமாறு மூன்றுமுறை உச்சரித்து விட்டு அமைதியாக இருந்தார். குருவியினால் மிகுந்த பக்தியுடன் பாடப்பட்ட நாராயணரின் திருநாமத்தைக் கேட்ட ஹிரண்யகசிபு தமது வில்லை எடுத்து அம்பு எய்ய குறி பார்த்தான். அச்சமயம் அவர்கள் இருவரும் பறந்து விட்டனர். பறவைகளைத் தாக்க முடியாத தனது தோல்வியினால் வருத்தமுற்ற ஹிரண்யகசிபு தவத்தைக் கைவிட்டு தனது தலைநகரத்திற்குத் திரும்பினான்.
கணவனின் எதிர்பாராத வருகையினால் மகிழ்ந்த கயாது, பத்தாயிரம் ஆண்டுகள் புரிய வேண்டிய கடுந்தவத்தைக் கைவிட்டு விரைவில் கணவன் திரும்பியதற்கான காரணத்தை வினவினாள். தான் தவம் மேற்கொண்டிருந்த கைலாய மலையில் இரு சிட்டுக்குருவிகள் தோன்றி நமோ நாராயணாய என்று மும்முறை உச்சரித்த சம்பவம், அம்பு எய்த எண்ணியது, அதன் தோல்வி, தான் அடைந்த ஏமாற்றம் என அனைத்தையும் அவன் விளக்கினான். மேலும், விதியை சக்தி வாய்ந்ததாகக் கருதி தலைநகரம் திரும்பியதாகவும் கூறினான். இவ்வாறு கணவன், மனைவி இருவரும் உரையாடிய பின்னர், அவர்கள் புலனின்பத்தில் இணைந்தனர். அதன் விளைவாக கயாது உயர்ந்த பக்தரான பிரகலாத மஹாராஜரைத் தனது மகனாக ஈன்றெடுத்தாள்.
இந்த சம்பவத்தின் தாத்பரியத்தை மார்கண்டேய ரிஷி ஸஹஸ்ரநிக மன்னரிடம் பின்வருமாறு விளக்கினார்: முதலில் ஹிரண்யகசிபு தூய பக்தரான நாரதரின் திருவாயிலிருந்து பக்தியுடன் உச்சரிக்கப்பட்ட நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைக் கேட்டான். பின்னர், அவன் தனது மனைவியுடன் இணைவதற்கு முன்பாக அவளிடம் இம்மந்திரத்தை அவ்வாறே திரும்பவும் உச்சரித்தான். அதன் விளைவாக பகவான் கிருஷ்ணரின் உயர்ந்த பக்தர் ஒருவர் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார்.”
ஸ்ரீல பிரபுபாதர் இதுகுறித்து தமது பொருளுரைகளில் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்: கருத்தரிக்கும் சமயத்திற்கு முன்பாக ஒருவருடைய மனம் நிதானமாக பக்தியுடன் இருக்க வேண்டியது அவசியம். இதற்காகவே வேத சாஸ்திரங்கள் கர்பதான-ஸம்ஸ்காரம் என்னும் வழிமுறையைப் பரிந்துரைக்கின்றன. தந்தையின் மனம் நிதானமாக இல்லாவிடில், விடுவிக்கப்படும் விந்துவும் சிறப்புடையதாக அமையாது. அச்சமயத்தில், தாய் தந்தையின் ஜடக்கலவையினால் பிறக்கும் குழந்தை, ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபுவைப் போன்று அசுரனாகவே இருப்பான். (ஸ்ரீமத் பாகவதம் 3.16.35)
குழந்தை பெறுவதற்கு முன்பாக ஒருவன் தனது களங்கமான மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களது மனதை பகவானின் தாமரைத் திருவடிகளில் நிலைநிறுத்தும்போது,