வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
மஹாபாரதம், இராமாயணம் போன்ற புராணங்களை முறையான சீடப் பரம்பரையில் வரும் அங்கீகாரம் பெற்ற நபர்களின் நூல்களை வைத்தே அறிந்துகொள்ள வேண்டும் என்னும் அடிப்படைக் கருத்தினை யாம் எமது பகவத் தரிசனத்தில் பலமுறை வெளியிட்டுள்ளோம். இதனை பக்தர்களான நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்பதை உறுதியாக நம்பும் பட்சத்திலும், தற்போது தமிழ் தொ(ல்)லைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் மஹாபாரதம் தொடர் குறித்து பக்தர்களை எச்சரிப்பதற்கு யாம் கடமைப்பட்டுள்ளோம்.
மஹாபாரதம் என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த கற்பனைத் தொடர் நீண்ட காலமாக வெளிவந்து கொண்டுள்ளது என்றபோதிலும், அதனைப் பார்க்கும் துர்பாக்கியம் எனக்கு சமீபத்தில்தான் கிட்டியது. நமது ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் மஹாபாரதம் அறியாதவர்கள் என்பதை நன்கு அறிந்து, மஹாபாரதம் என்ற பெயரில் தங்களது கற்பனைக் கதையினை உலவ விட்டிருக்கின்றனர். முற்றிலும் அபத்தமான முறையில், சாஸ்திரங்களை தங்களது மனம்போன போக்கில் மாற்றியமைத்து வடிவமைத்துள்ளனர்.
மஹாபாரதம் என்று முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட நாடகம், உண்மையிலிருந்து விலகியிருந்தபோதிலும் ஓரளவிற்கு மஹாபாரதத்தை ஒத்திருந்தது. ஆனால் இன்றோ, இந்த அயோக்கியர்கள் “இதிகாச கதையை அடிப்படையாக வைத்து பொழுதுபோக்கிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நாடகம்; யாருடைய மத எண்ணத்தையும் புண்படுத்துவதற்காக அல்ல,” என்று வெறும் சட்ட ரீதியிலான தகவலை போட்டுவிட்டு, மனதிற்கு தோன்றிய கற்பனைகளை மஹாபாரதம் என்னும் புண்ணிய காவியத்தினுள் புகுத்தியிருப்பதைக் கண்டு மனம் கொதிப்படைகிறது; தட்டிக் கேட்க நாதி இல்லையே! அரசாங்கம் ஏன் இத்தகைய கற்பனைகளை அனுமதிக்கின்றது! வருந்தினேன், வெதும்பினேன், செய்வதறியாது தவித்தேன்–இறுதியில், குறைந்தபட்சம் நமது பகவத் தரிசன வாசகர்களுக்காவது இந்த நாடகத்தின் அபத்தமான நிலையினை எடுத்துரைத்து எச்சரிக்க விரும்பி, இங்கே இதனை எழுதுகிறேன்.
புராணங்களும் இதிகாசங்களும் உண்மையில் நிகழ்ந்த சரித்திரங்கள், இந்த சரித்திரங்கள் கடவுளின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் அவரது பக்தர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையும் எழுத்து வடிவில் நமக்கு படம் பிடித்துக் காண்பிக்கின்றன. இதில் தங்களது சொந்த கற்பனைகளை சொருகுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு சொருகுதல் மாபெரும் குற்றம். ஆனால், அந்தோ பரிதாபம்! மக்களுக்கு மஹாபாரதம் தெரியவில்லையே! அவர்கள் இந்த கற்பனையையும் மஹாபாரதம் என்று எண்ணி ஆர்வத்துடன் பார்க்கின்றனரே என்பதை நினைக்கும்போது, வருத்தத்தினை தாங்க முடியவில்லை.
“பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டுள்ள நாடகம்” என்றால், அஃது ஏன் மஹாபாரதம் என்ற பெயரில், மஹாபாரதத்தின் கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட வேண்டும்? ஏதோ ஒரு பெயரில், மனதிற்கு தோன்றியதை எடுக்க வேண்டியது தானே? யாரேனும் ஒருவர், காந்தியின் சரிதம் என்ற பெயரில் நாடகம் எடுத்து, அதில் தங்களது சொந்த கருத்தின்படி காந்தியின் கதைகளை மாற்றியமைத்தால், சட்டம் அதனை ஏற்குமா? நிச்சயமாக அந்த நாடகத்தை தயாரிப்பவரும் இயக்குபவரும் சிறைக்குத் தள்ளப்படுவர். அதுபோல, இந்த மஹாபாரதம் என்னும் போலியான கதையினை தயாரிப்பவர்கள் உண்மையில் சிறைக்குச் செல்ல வேண்டியவர்கள்.
காந்தி கோட்சேயின் குண்டுகளால் கொல்லப்பட்டார்–இது வரலாறு. ஆனால், காந்தி என்ற பெயரில் வரும் நாடகத்தில், காந்தி பத்து நபர்களால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டார் என்று காட்டினால், அஃது ஏற்கத்தக்கதா? நிச்சயம் இல்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அர்ஜுனனால் வீழ்த்தப்பட்ட பீஷ்மரை, பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் இணைந்து வீழ்த்துவதாக காண்பிப்பது எந்த விதத்தில் நியாயம்? நான் பார்த்தது, மூன்று காட்சிகள் மட்டுமே. ஆனால் அதில் கண்ட எண்ணிலடங்காத அபத்தங்கள் எழுதி மாளாதவை. உண்மை மஹாபாரதத்தின் மேலோட்டமான வடிவம், அதன் கதாபாத்திரங்கள், அதன் சூழ்நிலைகள்; ஆனால் நிகழ்ச்சிகளோ தங்களது சொந்த கற்பனை–இதுவே விஜய் டிவியின் போலி மஹாபாரதம்.
ஸநாதன தர்மத்தின் புராணங்கள், இதிகாசங்கள் என்று வந்துவிட்டால், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம், நாடகம் இயற்றலாம் என்று மோசமான நிலைமை நம் பாரதத்தில் நிலவி வருகிறது. வெளிநாட்டைச் சார்ந்த இதர மதத்தினரால் இயக்கப்படும் இந்த தொலைக்காட்சியில், மஹாபாரதத்தை இவ்வளவு தைரியமாக இந்தியாவிலேயே திரிந்து வெளியிடுவதைக் காணும்போது ஆச்சரியமும் கோபமும் வெறுப்பும் ஒருசேர வருகின்றது. யாரேனும் இயேசு கிருஸ்துவின் வரலாற்றினை திரித்து, “பொழுதுபோக்கு நாடகம்” என்ற பெயரில் மனம்போன போக்கில் நாடகம் தயாரிக்க முடியுமா? அல்லது முகமது நபிகளின் வரலாற்றினை அவ்வாறு திரிக்க முடியுமா? ஆனால் மஹாபாரதத்தை மட்டும் திரிக்கின்றனர். காரணம், இந்தியாவில் வசிக்கும் மக்கள் மஹாபாரதம் அறியாதவர்கள்; அவர்களை மேலும் குழப்பி, இதிகாச கருத்துகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கான முயற்சியே இந்த போலி நாடகம்.
இவை அனைத்திற்கும் யார் மணி கட்டுவது? இஃது அரசாங்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்று. ஆனால் அவர்கள் நிச்சயம் இதனைச் செய்ய மாட்டார்கள். ஓட்டு வங்கி அரசியலில் வாழ்க்கையை நடத்தும் இவர்களை நம்பி எந்த பலனும் இல்லை.
எனவே, பகவத் தரிசன வாசகர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் மஹாபாரதத்தினை அறிய விரும்பினால், உண்மையான நூல்களைப் படியுங்கள். தயவுசெய்து, இந்த போலி நாடகத்தினைப் புறக்கணியுங்கள். உங்களுக்கு தெரிந்த நபர்களிடமும் இந்த விஷயத்தைப் பரப்புங்கள். நம்மால் முடிந்ததைச் செய்வோம்.