வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
நாஸ்திகம் பல்வேறு போர்வைகளில் மக்களிடையே ஆழமாக புகுந்துள்ளது, பெரும்பாலான மக்கள் இதனை உணர்வதில்லை. ஆழமாகப் பார்க்கும்போது, தங்களை ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்பவர்களில் பலரும்கூட நாஸ்திகர்களாக உள்ளனர். மதத்தின் போர்வையில் நிலவும் அந்த நாஸ்திகத்தை இங்கே வாசகர்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.
மதத்தில் நாஸ்திகமா?
உரிமைகள், மதச்சார்பின்மை ஆகிய போர்வையில் திகழும் நாஸ்திகத்தை ஏற்கனவே யாம் பகவத் தரிசனத்தில் (பிப்ரவரி, மார்ச் இதழ்களில்) விவரித்திருந்தோம். அவை எளிதில் உணரத்தக்கவை. ஆனால் மதத்தில் நாஸ்திகமா? மதமும் நாஸ்திகமும் எதிரெதிர் துருவங்கள். மதத்தைப் பின்பற்றுவோர் நாஸ்திகர்களை நம்புவதில்லை, நாஸ்திகர்கள் மதவாதிகளை நம்புவதில்லை. அவ்வாறு இருக்கையில், மதத்தில் எவ்வாறு நாஸ்திகம் இருக்க முடியும்? தலைப்பே குழப்பமாக உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆம்! தலைப்பை சரியாகவே படித்துள்ளீர். மதத்தின் பெயரிலும் பல்வேறு நாஸ்திக செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தங்களை மதவாதியாக கருதுவோர் பலரும், இக்கட்டுரையினை திறந்த மனதுடன் படித்தால், தங்களிடையே படிந்திருக்கும் நாஸ்திக எண்ணங்களை சிறிதளவேனும் உணர முடியும்.
கலி யுகத்தில் அசுரத் தன்மை ஒவ்வொரு ஜீவனிடமும் உள்ளது என்பதால், நாஸ்திக எண்ணங்கள் அனைவரிடமும் உள்ளன என்பதை நாம் தாழ்மையுடன் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியம். எமது பத்திரிகை மதம் சார்ந்த பத்திரிகை என்பதால், இந்த கட்டுரையைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ஆன்மீக அன்பர்களாகவே இருப்பர். இக்கட்டுரையின் மூலமாக அவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல; மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் தம்மிடையே படிந்திருக்கும் நாஸ்திக எண்ணங்களை அடையாளம் கண்டு, அதிலிருந்து விடுபட உதவுவதற்காகவே இதனை இங்கே வடித்துள்ளோம்.
கடவுளை போலியாக வணங்குதல்
அவநம்பிக்கை: கடவுள் உள்ளாரா இல்லையா என்பதிலேயே பலருக்கு சந்தேகம். “கடவுள் ஒருவேளை இருந்து விட்டால், ஆபத்தாகி விடுமே! அவரிடமும் சற்று அப்ளிகேஷன் போட்டு வைக்கலாம்,” என்ற எண்ணத்துடன் கோயிலுக்குச் செல்வோர் பலர். இவர்கள் வெளிப்படையாக ஆஸ்திகர்களைப் போன்று தோன்றினாலும், உள்ளூர நாஸ்திகர்களாகவே வாழ்கின்றனர். இதில் மற்றொரு வகையினர், வெளியில் தங்களை நாஸ்திகர்களாகக் காட்டிக் கொண்டு, மேலே கூறப்பட்ட அதே எண்ணத்துடன் அவ்வப்போது சில அப்ளிகேஷன் போட்டால் தப்பித்து விடலாம் என்று மறைமுகமாக ஆஸ்திகர்களாக வாழ்கின்றனர். ஆனால் இவர்களும் நாஸ்திகர்களே. முழுமையான நம்பிக்கையின்றி செய்யப்படும் வழிபாடுகள் உரிய பலனைத் தர இயலாதவை.
கௌரவ வழிபாடு: “ஊரில் இருப்பவர்கள் அனைவரும் கடவுளை வணங்குகின்றனர், நானும் வழிபட வேண்டும், இல்லாவிடில் கௌரவம் கெட்டு விடும், பலர் கேலி செய்யலாம்,” முதலிய பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணத்தினால், பலரும் வெளித்தோற்றத்தில் ஆஸ்திகர்களாகவும் உள்ளே நாஸ்திகர்களாகவும் வாழ்கின்றனர். இவர்கள் வெறும் கௌரவத்திற்காக, அல்லது பகட்டிற்காக இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இவர்களது வழிபாடும் நாஸ்திகமே.
இரக்கமற்ற இறை வழிபாடு: இறைவனை வழிபடுகிறோம் என்ற போர்வையில், சிலர் தங்களது இறைவனை மட்டுமே வழிபட வேண்டும், மற்ற இறை வழிபாட்டில் ஈடுபட்டிருப்போர் கொல்லப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். உண்மையில் அவர்களிடம் இறைவனைப் பற்றிய அறிவு துளியும் இல்லை என்பதால், அவர்களும் நாஸ்திகர்களாகவே கருதப்பட வேண்டும். வேறு சிலர், “தாழ்ந்த மிருகங்களை இறைவன் எங்களுக்காக படைத்துள்ளார், அவற்றைக் கொன்று திண்போம்,” என்ற எண்ணத்தில், மற்ற ஜீவன்களிடம் சிறிதளவும் இரக்கமின்றி செயல்படுகின்றனர். அவர்களும் நாஸ்திகர்களே.
போலி கடவுள்களை வணங்குதல்
கடவுளைப் போலியாக வணங்குவோர் ஒருபுறமிருக்க, போலி கடவுள்களை வணங்குவோர் இன்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக, இந்து மதத்தில் அதுபோன்றவர்கள் எண்ணற்றோர். மக்கள் கடவுளிடம் கொண்டுள்ள பக்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பணம், செல்வம், புகழ் மற்றும் இதர பௌதிக சுகங்களை அனுபவிக்க விரும்பும் பலர், தங்களையே கடவுளாக அறிவித்து (அல்லது மற்றவர்களால் தங்களை கடவுள் என்று அறிவிக்க வைத்து) மக்களை ஏமாற்றுகின்றனர். முறையான அறிவைப் பெறாத பல்வேறு அப்பாவி மக்கள் ஆஸ்திகம் என்ற பெயரில், அவர்களுடைய வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இத்தகு மக்கள் பஜனை செய்யலாம், விரதம் இருக்கலாம், கோயிலுக்குப் போகலாம், வாழ்வையே அர்ப்பணித்து முழு நேரப் பணியில்கூட ஈடுபடலாம்–ஆனால் அப்போதுகூட அவர்களுடைய வழிபாடு பிழையாக இருப்பதால், அவர்களும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.
பாபாக்கள், அம்மாக்கள், அய்யாக்கள், பரமஹம்சர்கள், குருஜிக்கள் என பல பெயர்களில் இந்த போலி கடவுள்கள் உலாவி வருகின்றனர். இவர்கள் கடவுள்கள் என்பதற்கு எந்தவொரு சாஸ்திர ஆதாரமும் கிடையாது. உண்மையான கடவுளுக்கும் இவர்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஆனால் ஏதோ உணர்ச்சிவயப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மனபூர்வமாக அந்த வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால், “முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்பதைப் போல, வெளித்தோற்றத்தில் அவர்கள் மதச் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் போல தோன்றினாலும், அடிப்படை அறிவு இல்லாத காரணத்தினால், நாஸ்திகர்களாகவே கருதப்படுவர்.
மனிதனைக் கடவுளாக வணங்குதல்
இந்திய பாரம்பரியத்தில், நம்மை விட பெரியவர்கள் அனைவரும் வழிபாட்டிற்குரியவர்கள்–பெற்றோர்கள், ஆசிரியர்கள், கணவர், வயதில் மூத்தவர்கள், மன்னர்கள், மேலும் பலர். அதுமட்டுமின்றி, நதிகள், மரங்கள், பசுக்கள் என பல இதர ஜீவன்களையும் இதில் சேர்க்கலாம். இவர்கள் கடவுளின் பிரதிநிதியாக செயல்படுவதால், நிச்சயம் நமது வழிபாட்டிற்கு உரியவர்கள், இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதே சமயத்தில், “இவர்களுடைய வழிபாடு மட்டுமே போதும், இறைவனை அணுக வேண்டிய அவசியம் எனக்கில்லை. என்னைப் பொறுத்தவரையில் இவர்தான் கடவுள்,” என்றெல்லாம் கூறி, மனிதனைக் கடவுளாக வழிபடும் கலாச்சாரம் பெருகி வருகிறது.
இவ்வாறு வழிபடுபவர்களில் பலரும் ஏதேனும் உள்நோக்கத்துடன் அத்தகு வழிபாட்டில் ஈடுபடுவதைக் காண்கிறோம். அரசியல் தலைவரை மகிழ்வித்தால் பதவி கிடைக்கும் என்ற எண்ணத்தில், அந்த தலைவரை கடவுளுக்கு சமமாக, அல்லது கடவுளை விட உயர்ந்தவராக வைத்துப் போற்றுதல், நிச்சயமாக நாஸ்திகத்தின் தாக்கமே. சினிமா நடிகர், நடிகைகளுக்கு கோயில் எழுப்புதல், கிரிக்கெட் வீரரை கடவுள் என்று அழைத்தல், கட்சித் தலைவருக்கு கோயில் எழுப்புதல் போன்றவை அனைத்தும் ஆழ்ந்து யோசித்தால் நாஸ்திகமே என்பது புலப்படும். அதாவது, உண்மையான கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதிருத்தல் என்பதை அறிய முடியும்.
சாஸ்திர நம்பிக்கை இல்லாதிருத்தல்
நாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.
வேத சாஸ்திரங்கள் என்பது வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசம், மற்றும் வேத வழி வந்த இதர நூல்களையும் குறிக்கும். கோயில்களுக்குச் சென்று தங்களை ஆஸ்திகர்களாக அடையாளம் காணும் பலரும்கூட, தற்போதைய நவீன கால விஞ்ஞானம் மற்றும் வாழ்க்கை முறையின் காரணத்தினால், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள கூற்றுகளை உண்மையென நம்ப மறுக்கின்றனர். இன்றைய மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் சாஸ்திரங்களில் இருக்கின்றன. அவற்றைக் காணும்போது, இவை தனது திறனிற்கு அப்பாற்பட்டவை என்று பணிவுடன் ஏற்பதற்கு பதிலாக, அஹங்காரத்துடன் சாஸ்திரங்கள் சொல்வது எல்லாம் உண்மையல்ல என்று நினைத்து அவற்றை ஒதுக்கி விடுகின்றனர். இவ்வாறு ஒதுக்குதல் நாஸ்திகமாகும்.
சூரிய சந்திர லோகங்கள் உட்பட எல்லா லோகங்களிலும் உயிர்வாழிகள் உள்ளனர், இராமர் கற்களைக் கொண்டு இலங்கைக்கு பாலம் அமைத்தார், மஹாபாரதப் போர்க்களத்தில் நிகழ்ந்த பல்வேறு அசாதாரண சம்பவங்கள், மனித சமுதாயம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு உகந்த சமூக நிலை வர்ணாஷ்ரமமே என்பவை உட்பட பல்வேறு விஷயங்களை நவீன மனிதன் சந்தேகப்படுகிறான். இவன் சாஸ்திரங்களை வெளிப்படையாக நம்பும்போதிலும், முழுமையாக நம்புவதில்லை. கடவுளும் இதர மாமனிதர்களும் நிகழ்த்திய அசாதாரண செயல்கள் எவ்வாறு சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகிறான். இவர்கள் அனைவரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர். (சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கைகுறித்து நாம் ஏற்கனவே பல கட்டுரைகளை இயற்றியுள்ளோம்)
கடவுளை அருவமாக நினைத்தல்
வேத சாஸ்திரங்களை நம்பாதவர்கள் ஒருபுறம் இருக்க, வேத சாஸ்திரங்களை நம்புவதாக கூறிக் கொண்டு, அதே சமயத்தில் வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ள இறைவனின் வியக்தித்துவத்தை (அதாவது, இறைவன் ஒரு நபர் என்பதை) நம்பாமல், அவருக்கு உருவம் கிடையாது, குணங்கள் கிடையாது, செயல்கள் கிடையாது என்று கூறி, இறைவனின் தனித்தன்மையினை மறுப்பவர்களும் நாஸ்திகர்களாகவே கருதப்பட வேண்டும். குறைந்தபட்சம் அத்தகு மக்களை நாம் மறைமுக நாஸ்திகர்கள் என்று கூறலாம்.
கடவுள் நிச்சயம் ஒரு நபரே, அவருக்கு பௌதிக ரூபங்கள் கிடையாது, பௌதிக குணங்கள் கிடையாது, பௌதிகச் செயல்கள் கிடையாது–அவருடையவை அனைத்தும் தெய்வீகமானவை, ஸச்சிதானந்த தன்மையைக் கொண்டவை. இதை உணராமல் அவருக்கு ரூபமே கிடையாது என்று கூறுதல் முறையன்று. எல்லாவற்றின் ஆதியாகத் திகழும் அந்த ஒரு பரம்பொருள், கிருஷ்ணர் என்ற பெயரில் வேத சாஸ்திர நிபுணர்களால் அழைக்கப்படுகிறார். அவர் தாமே உகந்து வழங்கிய பகவத் கீதையிலும் தானே முழுமுதற் கடவுள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளார். ஆயினும், சில மனசாட்சியற்ற நபர்கள் கிருஷ்ணரின் மீதுள்ள பொறாமையினால், அவருடைய உருவத் தன்மையினை மறுத்து பகவத் கீதைக்கு விளக்கமளிக்கின்றனர். இவர்களும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.
பூரண நம்பிக்கையுடன் கிருஷ்ணரை வழிபடுவோம்
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ளார். ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்புகளையும் அவர் நன்கறிவார். அவரை யாராலும் ஏமாற்ற முடியாது. மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை வெளிப்படுத்தி, அறியா மக்களை வேண்டுமானால் ஏமாற்றலாம்; ஆனால் முழுமுதற் கடவுளை ஏமாற்ற முடியாது. தனது பக்தனிடம் இருக்கும் எல்லா அனர்த்தங்களையும் (தேவையற்ற எண்ணங்களையும்) முற்றிலுமாக களைபவர் கிருஷ்ணர். அந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரை பக்குவமான அறிவுடன் வழிபடுவதே உண்மையான ஆஸ்திகம், மற்றவை அனைத்தும் நாஸ்திகமே. எனவே, அதற்கான முயற்சியில் ஈடுபடுவோமாக.
கேள்வி எழுப்புதல் என்பதும் அதன் மூலம் சந்தேகங்களைக் களைதல் என்பதும் இயற்கையானதே. நாஸ்திகத்தை எதிர்ப்பதால் நாம் கேள்விகளைப் புறக்கணிப்பதாகவோ நாங்கள் சொல்வதை காரணம் கேட்காமல் நம்ப வேண்டும் என்று வலியுறுத்துவதாகவோ நினைத்து விட வேண்டாம். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வரும் அனைவரையும் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைக் களைந்துகொள்ளும்படி நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பகவத் கீதையும்கூட அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. ஸ்ரீமத் பாகவதமும் கேள்வி பதிலாகவே அமைந்துள்ளது. முறையான அறிவை தெளிவாகப் பெறுவதற்கு கேள்வி கேட்டல் என்பது அவசியமானதாகும். அவ்வாறு முறையான அறிவினைப் பெற்று படிப்படியாக நமது கிருஷ்ண பக்தியை வளர்க்க வேண்டும். நாஸ்திகத்திலிருந்து முற்றிலுமாக விலகி, பூரண ஆஸ்திகச் செயல்களில் ஈடுபடுவோமாக.
மேலும் பார்க்க :