மஹாபாரதத்தில் மஹாராணிகளின் பெருமை

Must read

வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி

ஐந்தாவது வேதமாகக் கருதப்படுவதும் அளவில் மிகப்பெரியதும் உயர்ந்ததுமான மஹாபாரதம் மாமன்னர் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனரால் உபதேசிக்கப்பட்டு வேத வியாஸரால் தொகுக்கப்பட்டதாகும். மஹாபாரதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு பெண்களில் நான்கு மஹாராணிகளின் வரலாற்றையும் சிறப்புத் தன்மைகளையும் மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்: ஸத்யவதி, காந்தாரி, குந்தி, மற்றும் திரௌபதி.

இவர்கள் நால்வரும் மஹாராணிகளாக வாழ்ந்தபோதிலும், தங்கள் வாழ்க்கையில் பற்பல கஷ்டங்களையும் சோதனைகளையும் அனுபவித்தவர்கள். அவை அனைத்தையும் தங்களின் அறிவினாலும் தியாகத்தினாலும் பக்தியினாலும் அவர்கள் வெற்றியாக மாற்றினர்.

ஸத்யவதி

வியாஸரைப் பெற்றெடுத்தல்: மீனவப் பெண்ணாகிய ஸத்யவதி, யமுனை நதியில் படகு ஓட்டுபவள். அவளுக்கு மத்ஸ்யகந்தி என்ற பெயரும் உண்டு. பேரழகியான அவள் தனது பெயருக்கேற்ப உண்மையை மட்டுமே பேசக்கூடியவள். மாமுனிவரான பராசரர் ஒருமுறை யமுனை நதிக்கரைக்கு வந்தபோது, தமது உடலினுள் ஒரு மஹா புருஷர் நுழைந்திருப்பதை உணர்ந்து, அப்புருஷரை ஒரு பெண்ணின் கருவினுள் செலுத்த எண்ணினார். ஸத்யவதியைக் கண்ட அவர் அதற்கான வேண்டுகோளை முன்வைக்க, அவளும் மாமுனிவரின் உயர்ந்த நிலையை அறிந்து ஒப்புக் கொண்டாள். மேலும், அவள் கன்னித் தன்மை மாறாமல் இருப்பாள் என்றும், அவளது உடலில் எப்போதும் இருந்த மீனின் துர்நாற்றம் விலகி, நல்ல அற்புதமான நறுமணம் கமழும் என்றும் வரமளித்தார்.

கருவூட்டியவுடன் பராசரர் அவளிடமிருந்து பிரிந்து விட்டார். அதே நாளில் ஸத்யவதிக்கு குழந்தை பிறந்தது, அக்குழந்தை உடனே வளர்ந்தது, அவரே வியாஸதேவர். அவர் யமுனையின் நடுவில் ஒரு தீவில் பிறந்ததாலும் கறுப்பு நிறத்துடன் இருந்ததாலும், “கிருஷ்ண துவைபாயனர்” என்ற பெயரையும் பெற்றார். வியாஸதேவரைப் பெற்றெடுத்த புண்ணியவதி என்ற பெருமைக்கு வேறு ஏதேனும் ஈடாக இயலுமா?

சந்தனுவை மணத்தல்: சந்திர வம்சத்தில் உதித்த அரசன் சந்தனுவிற்கும் கங்கைக்கும் திருமணம் நிகழ்ந்தது, அவர்களுக்கு தேவவிரதன் என்ற மகன் இருந்தார். தேவவிரதன் பிற்காலத்தில் தமது தந்தையும் ஸத்யவதியும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக, பிரம்மசரிய விரதம் மேற்கொண்டு “பீஷ்மர்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

சந்தனுவிற்கும் ஸத்யவதிக்கும் சித்ராங்கதன், விசித்திரவீர்யன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். சித்ராங்கதன் தனது இளம் வயதிலேயே கந்தர்வர்களோடு போரிட்டு மடிந்தான்; விசித்திரவீர்யன் அம்பிகா, அம்பாலிகா என்ற இரு பெண்களை மணம் செய்து கொண்டபோதிலும், சிறிது காலத்தில் வாரிசு ஏதுமின்றி உடல்நலம் குன்றி மாண்டான்.

ஸத்யவதி கைம்பெண்களான அம்பிகா, அம்பாலிகா ஆகிய இருவரையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டு, ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்ய வாரிசு இல்லையே என வேதனைப்பட்டாள். அன்றைய வழக்கத்தின்படி, அவள் பீஷ்மரை அழைத்து அம்பிகா, அம்பாலிகாவின் வயிற்றில் குழந்தைகளைத் தரும்படி வேண்டினாள். பீஷ்மர் அதற்கு உடன்பட மறுத்ததால், தன்னுடைய மற்றொரு மகனான வியாஸரை அழைக்க, வியாஸரின் மூலமாக, திருதராஷ்டிரன், பாண்டு என்னும் இரண்டு மகன்களை அப்பெண்கள் பெற்றெடுத்தனர்.

இருப்பினும், வியாஸரின் தோற்றத்தால் அம்பிகா கண்களை மூடிக் கொண்டதால் திருதராஷ்டிரன் குருடனாகப் பிறந்தார், அம்பாலிகாவின் உடல் வெளுத்ததால் பாண்டு சோகை நோயுடன் பிறந்தார். பாண்டு சிறிது காலம் அரசாட்சி புரிந்தார், பின்னர் ஒரு சாபம் காரணமாக குந்தியுடன் வனவாசம் செல்ல, குருடனாக இருந்தாலும் திருதராஷ்டிரன் வேறு வழியில்லாமல் அரியணை ஏறினார்.

ஸத்யவதியின் குணங்கள்: ஒரு கைம்பெண்ணாக இருந்தபோதிலும், ஸத்யவதி ராஜ்ஜியத்தைப் பரிபாலனம் செய்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. வியாஸரின் அன்னையாகவும், குரு வம்சத்தைக் காத்தவளாகவும் அவள் ஆற்றிய பங்கு மிகவும் போற்றத் தகுந்ததே.

காந்தாரி

இணையற்ற பதிபக்தியுடன் திகழ்ந்த காந்தாரி மஹாபாரதத்தின் முக்கிய நாயகிகளில் ஒருத்தியாவாள்.

காந்தார தேசத்து அரசன் சுபலனின் மகளாகிய காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க விரும்பிய பீஷ்மர் அதற்கு தூது அனுப்பினார். அறிவும் அழகும் சிறந்த குணமும் கொண்ட காந்தாரியை ஒரு குருடனுக்குத் திருமணம் செய்விக்க சுபலனுக்கு விருப்பமில்லை. இருப்பினும், குரு வம்சத்தின் பெருமையை கவனத்தில் கொண்டு அதற்கு அவர் உடன்பட்டார். தனது வருங்கால கணவர் குருடன் என்பதை அறிந்த மாத்திரத்தில், காந்தாரி அவருக்காக அப்போதே தனது இரு கண்களையும் துணியினால் கட்டி பார்வையை மறைத்துக் கொண்டாள்.

காந்தாரிக்கும் திருதராஷ்டிரனுக்கும் திருமணம் நிகழ்ந்தது, காலப்போக்கில் கருவுற்ற காந்தாரி நீண்ட காலம் கர்ப்பத்தைத் தாங்கிய பிறகும் பிரசவ அறிகுறி ஏதும் அவளிடம் தென்படவில்லை. குந்திதேவிக்கு யுதிஷ்டிரர் பிறந்து விட்ட செய்தியை அறிந்த காந்தாரி ஒரு வகையான பொறாமையினால் பொறுமையை இழந்து தன் கைகளால் வயிற்றைக் குத்திக் கொண்டாள். இதனால் ஒரு சதைப் பிண்டம் அவளது வயிற்றிலிருந்து வெளியே வந்து விழுந்தது; வியாஸதேவர் அதனை நூறு பகுதிகளாகப் பிரித்து பானைகளில் பாதுகாக்கச் செய்தார். காலப்போக்கில், அப்பானைகளிலிருந்து முதலில் துரியோதனனும் அதன் பிறகு மேலும் 99 பிள்ளைகளும் பிறந்தனர்.

மஹாபாரதப் போர்: பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பதினெட்டு நாள்கள் நிகழ்ந்த மஹாபாரதப் போரில் காந்தாரியின் நூறு பிள்ளைகளும் மாண்டு போயினர். அனைவரும் மாண்டதை அறிந்து காந்தாரி பெரும் துயருற்றாள்.

திருதராஷ்டிரனும் காந்தாரியும் யுதிஷ்டிரரின் பாதுகாப்பில் சிறிது காலம் வாழ்ந்த பின்னர், வனத்திற்குச் சென்று விட்டனர். திருதராஷ்டிரன் தனது தவ வலிமையால் உடலை எரித்துக்கொள்ள அதே நெருப்பில் காந்தாரி அவருடன் உடன்கட்டை ஏறினாள்.

காந்தாரியின் சிறப்பு: கணவருக்காக தானும் குருடியாக வாழ்ந்தாள். கணவரும் மகன்களும் தீய வழியில் சென்றபோதும், அவள் தன்னால் இயன்ற வரை அவர்களுக்கு நல்லுபதேசம் வழங்கி வந்தாள். அவர்களோ அவற்றை ஏற்காமல் இறுதி வரை பாண்டவர்களிடம் விரோதம் பாராட்டி வந்தனர். அவள் சிறந்த பதிவிரதையாக திகழ்ந்து வந்தாள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வியாஸருடன் ஸத்யவதி. வியாஸதேவரைப் பெற்றெடுத்த புண்ணியவதி என்ற பெருமைக்கு வேறு ஏதேனும் ஈடாக இயலுமா?

குந்திதேவி

குந்திதேவி ஒரு மஹாராணியாக இருந்தபோதிலும், அவள் தன் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்தவள். ஆயினும், அவள் தனது தீவிர கிருஷ்ண பக்தியினால் அவை அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொண்டாள்.

யது வம்சத்து அரசரான சூரசேனரின் மகளும், வசுதேவரின் தங்கையுமான பிருதாவினை மன்னர் தமது நண்பரான குந்திபோஜருக்கு தத்துக் கொடுத்தார். அதனால், குந்தி என்று அழைக்கப்பட்டாள். ஒருமுறை குந்திபோஜரின் இல்லத்திற்கு விஜயம் செய்த மாமுனிவர் துர்வாஸர் குந்தியின் பணிவிடையில் மனம் மகிழ்ந்து, அவளது வருங்காலத்தை நினைத்துப் பார்த்து ஒரு மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி, அவளால் தான் விரும்பும் குறிப்பிட்ட தேவரின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அந்த மந்திரத்தைச் சோதிக்க நினைத்த குந்தி, சூரியதேவனை நினைத்து அதனை உச்சரிக்க, அவரும் அவள் முன்பாகத் தோன்றினார். அப்போது சூரியதேவனால் குந்திக்கு பிறந்த குழந்தையே “கர்ணன்.” ஆயினும், குந்தி கன்னித்தன்மை மாறாமல் இருந்தாள்.

குந்தி பாண்டுவை மணந்தாள்; ஒரு சாபத்தின் காரணத்தினால், பாண்டு தனது மனைவியுடன் சேர்ந்து புத்திரர்களைப்  பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார். எனவே, கணவருடைய விருப்பத்தின்படி, குந்தி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தேவர்களின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டாள். அதன்படி, எமராஜரின் மூலமாக யுதிஷ்டிரர், வாயுவின் மூலமாக பீமன், இந்திரனின் மூலமாக அர்ஜுனன் என மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். பாண்டுவின் மற்றொரு மனைவியான மாத்ரிக்கும் குந்தி அந்த மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க, அவள் அஸ்வினி குமாரர்களின் மூலமாக நகுலன், சகாதேவன் என்ற இரண்டு மகன்களைப் பெற்றாள். குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோதே, பாண்டு மரணிக்க, மாத்ரியும் உடன்கட்டை ஏற, குந்தி ஐவரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க நேர்ந்தது.

பீஷ்மர், விதுரர், துரோணர் ஆகியோரின் துணை கொண்டு குந்தி தன் பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்த்து வந்தாள். பாண்டவர்கள் ஐவரும் துரியோதனனால் விளைவிக்கப்பட்ட அத்தனை துன்பங்களையும் எதிர்கொண்டு சமாளித்ததில் அன்னை குந்தியின் பங்கு மிகப்பெரியதாக இருந்தது.

குந்தியின் பெருமைகள்: கிருஷ்ணருக்கு அத்தை என்றபோதிலும், குந்தி கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை நன்கு உணர்ந்து, கிருஷ்ணரிடம் தீவிர பக்தி கொண்டிருந்தாள்.

தீயவர்களை அழிக்கவும் பக்தர்களைக் காக்கவும் கிருஷ்ணர் அவதரித்துள்ளார் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். துன்பத்தைப் போக்கும்படி கிருஷ்ணரை வேண்டும் மக்களிடையே, “எப்போதும் துன்பத்தையே கொடு கிருஷ்ணா! இல்லையென்றால், உன்னை மறந்துவிடுவேன்!” என்று யாசித்தவள் அவள். பாகவதத்தின் முதல் ஸ்கந்தத்தில் இடம்பெற்றுள்ள “குந்திதேவியின் பிரார்த்தனைகள்” (26 ஸ்லோகங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

அவள் எப்போதும் காந்தாரிக்கு மரியாதையுடன் தொண்டு செய்து வந்தாள், அவளிடம் பொறாமை குணம் சிறிதும் கிடையாது. திருதராஷ்டிரனும் காந்தாரியும் வனவாசம் மேற்கொண்டபோது, குந்தியும் அவர்களுடன் காட்டிற்குச் சென்று அவர்களுக்குத் தொண்டு புரிந்தாள். வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து துன்பத்தை சந்தித்து வந்தபோதிலும், பிள்ளைகளுக்கு ராஜ்ஜியம் கிடைத்த பின்னர் சுகமாக அரண்மனையில் வாழ நினைக்காமல், ராஜ போகத்தைத் துறந்து காட்டிற்குச் சென்றாள். இதுபோன்ற தியாக மனப்பான்மை, எளிமை மற்றும் பணிவை வேறு எந்தப் பெண்ணிடமும் காண இயலாது.

திருதராஷ்டிரன் தனது தவ வலிமையால் உடலை எரித்துக்கொள்ள அதே நெருப்பில் காந்தாரி அவருடன் உடன்கட்டை ஏறினாள்.

திரௌபதி

திரௌபதி கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தியும் பிரியமும் கொண்டவள். கிருஷ்ணரும் திரௌபதியிடம் பெரும் அன்பு கொண்டிருந்தார், திரௌபதி எப்போது அழைத்தாலும் உடனே அங்கு வருவார்.

பாஞ்சால தேசத்தை ஆண்டு வந்த துருபதனின் யாகத் தீயிலிருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. நீலநிறச் சுருள் முடியுடனும் கறுமை நிறத்துடனும் பேரழகுடனும் அவள் வெளிவந்தபோது, வானத்திலிருந்து அசரீரி ஒலித்தது: “இவள் எண்ணிலடங்கா சத்திரியர்களின் அழிவிற்கு காரணமாக அமைந்து, பூமியின் பாரத்தைக் குறைக்கும் முழுமுதற் கடவுளின் செயலுக்கு முக்கிய காரணமாக விளங்குவாள்.” அவ்வண்ணமே திரௌபதியின் அவிழ்ந்த கூந்தலை முடிக்க மாபெரும் பாரதப் போரையே பகவான் கிருஷ்ணர் நிகழ்த்திக் காட்டினார்.

துருபதனின் மகள் என்பதால் திரௌபதி என்றும், பாஞ்சால தேசத்து பெண் என்பதால் பாஞ்சாலி என்றும், கறுப்பு நிறத்துடன் இருந்ததால் கிருஷ்ணா என்றும் பல பெயர்களில் இவள் அழைக்கப்பட்டாள். பாண்டவர்கள் ஐவரின் மனைவியாக விசேஷ நிலையில் தொண்டாற்றினாள்.

திரௌபதியின் குண நலன்கள்: கிருஷ்ணரிடம் அதீத பக்தி கொண்டவள், கிருஷ்ணரால் மிகவும் நேசிக்கப்பட்டவள். பதிவிரதையான அவள் தர்மத்தை எப்போதும் கடைப்பிடித்து அதனைச் சிறப்பித்தவள். கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி, ஒரு சமயம் திரௌபதியிடம் வந்து இல்லறத்தில் பெண்ணொருத்தி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டாள் என்றால், திரௌபதியின் பெருமையை நாம் என்னவென்று சொல்வது!

திரௌபதியின் பக்தியும் அவள்மீது கிருஷ்ணர் கொண்டிருந்த பாசமும் அவளின் துகில் உரியப்பட்டபோது நன்கு வெளிப்பட்டது. முதலில் அவள் தன் ஒரு கையை மட்டும் உயர்த்தி கிருஷ்ணரைக் கூப்பிட்டாள். பின்னர் முழுவதுமாக இரு கைகளையும் உயர்த்தி கிருஷ்ணரை அழைத்து முழு சரணாகதி அடைந்தாள். “கோவிந்த!”, “புண்டரீகாக்ஷ!” என்று அவள் பகவானின் நாமங்களைச் சொல்ல அவளுக்கு புடவைகள் வந்து கொண்டே இருந்தன. இதன் மூலம் பகவானின் திருநாம வைபவத்தினை திரௌபதியின் செயல் உலகத்தவருக்கு வெளிப்படுத்தியது; கலி யுகத்தில் நாம ஸங்கீர்த்தனம் ஒன்றே நம்மை பகவானின் திருவடிகளில் சேர்க்கும் என்பதை நமக்குக் காண்பித்தது.

பாண்டவர்கள் ராஜ்ஜியத்தைத் திரும்பப் பெறுவதற்கும் திரௌபதியின் அவிழ்ந்த கூந்தலை முடிவதற்கும் கௌரவர்கள் அழிவதற்கும் என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் பகவான் கிருஷ்ணர் வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். தன் வாழ்க்கையில் சந்தித்த எல்லா சோதனைகளையும் திரௌபதி கிருஷ்ணரின் துணையுடன் எதிர்கொண்டு வெற்றியடைந்தாள்.

கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை நன்கு உணர்ந்த குந்தி, அவரிடம் தீவிர பக்தி கொண்டிருந்தாள்.

கணவனுக்குத் தொண்டாற்றுதல்

பழங்கால பாரதத்தில் பெண்கள் எவ்வாறு பக்தியுடனும் விவேகத்துடனும் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இந்த நால்வரும் மிகச்சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றனர். பாரதப் பண்பாட்டில் பெண்களுக்குத் தனிச் சிறப்பும் முக்கியத்துவமும் எப்போதும் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

யத்ர நார்யஸ் து பூஜ்யந்தே

 ரமந்தே தத்ர தேவதா:

யத்ரைதாஸ் து ந பூஜ்யந்தே

 ஸர்வாஸ் தத்ராபலா: க்ரியா:

மனு ஸ்மிருதி (3.56) சொல்கிறது: “எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் ஆனந்தப்படுகின்றனர்; எங்கே பெண்கள் மதிக்கப்படவில்லையோ அங்கே அவர்களுக்கு விதிக்கப்பட்ட எல்லாச் செயல்களும் பயனற்றுப் போய்விடுகின்றன.”

கிருஷ்ண உணர்வுள்ள கணவனுக்கு சேவை செய்வதினாலேயே ஒரு பெண் முக்தி பெற முடியும் என்று சாஸ்திரங்கள் உறுதியளிக்கின்றன. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் கூறுகின்றார்: “வேத கலாசாரத்தில் கணவன் தூய பக்தியுடன் உண்மையான முறையில் கிருஷ்ணருக்கு சேவகனாக இருக்க வேண்டும், மனைவியானவள் கணவரின் பக்திக்கு உதவி புரிந்து உண்மையான சேவகியாக இருக்க வேண்டும்.” எனவே, ஒவ்வொரு பெண்ணும் தனது கடமைகளை நன்கு உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டும். இல்லறத்தைக் காத்து, குழந்தைகளை கிருஷ்ண உணர்வுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.

திரௌபதி இரு கைகளையும் உயர்த்தி கிருஷ்ணரிடம் முழு சரணாகதி அடையும்போது அவளுக்குப் புடவைகள் வந்து கொண்டே இருந்தன.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives