விவாகரத்துகளைத் தவிர்ப்போம்

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

இனிய இல்லத்திற்கான சில அறிவுரைகள்

வழங்கியவர்: திருமதி, கீதா கோவிந்தா தாஸி

கணவனும் மனைவியும் அன்புடனும் அமைதியுடனும் வாழ்ந்து ஒற்றுமையாக தங்களது இல்லக் கடமைகளை கிருஷ்ண உணர்வுடன் பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். கிருஷ்ண உணர்வைத் தங்களது வாழ்வின் மையமாகக் கொண்ட திருமண வாழ்க்கை, இல்லறம் (இல்லத்தில் இருந்தபடி அறப் பயிற்சிகளில் ஈடுபடுதல்), அல்லது கிருஹஸ்தம் எனப்படுகிறது. அத்தகைய இல்லற வாழ்வு இன்றைய நாகரிகத்தில் சிதைவுற்று வருகிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு இல்லாத அளவில், இன்றைய சமுதாயத்தில் விவாகரத்துகள் பெருகி வருகின்றன. நல்ல குடும்பங்களே சமுதாயத்தின் ஆணிவேர்கள். குடும்பங்கள் சிதறும்போது குழப்பங்களும் துன்பங்களும் அதிகரிக்கின்றன. கணவன், மனைவி இருவரும் பிரியும்போது குடும்பத்தினர் அனைவரும் (குறிப்பாக குழந்தைகள்) பெரும் பிரச்சனைக்கு உள்ளாகின்றனர்.

இல்லறத்தில் நல்லறம் காண்பது எப்படி? வளர்ந்து வரும் விவாகரத்துகளை தவிர்த்து நமக்கும் சமுதாயத்திற்கும் நன்மை ஏற்படுத்துவது எப்படி? ஸ்ரீல பிரபுபாதர் இதற்கு ஆன்மீக ரீதியாக பல வழிகாட்டுதல்களை நல்கியுள்ளார்.

 

முக்கிய காரணம்

இல்லற வாழ்க்கை என்பது, குழந்தைகளைப் பெறுவதற்காக ஆணும் பெண்ணும் இணைவதற்குக் கொடுக்கப்படும் ஓர் உரிமம். அதே சமயத்தில், மனித வாழ்வின் குறிக்கோள் கடவுளை உணர்வதே என்பதை மறந்து விடக் கூடாது; இல்லற வாழ்வில் புலனின்பத்திற்கு உரிமம் உள்ளது என்றாலும், அதுவே இல்லற வாழ்வின் குறிக்கோள் அல்ல. இல்லற வாழ்வாகட்டும், துறவற வாழ்வாகட்டும், கிருஷ்ணரை உணர்வதே இரண்டிற்குமான குறிக்கோளாகும். இதனை மறந்து, புலனின்பத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு திருமணங்கள் நடைபெறுவதே அத்திருமணங்கள் (விவாகங்கள்) ரத்து ஆவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

கலி யுகத்தின் திருமண வாழ்க்கை வெறும் புலனின்பத்திற்காக மட்டுமே இருக்கும் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. தம்பத்யே அபிருசிர் ஹேதுர், ஸ்திரிவே பும்ஸ்த்வே ஹி ரதிர், “கலி யுகத்தின் தாம்பத்யம் வெறும் செயற்கையான கவர்ச்சிக்காக மட்டுமே இருக்கும், ஆண்மையும் பெண்மையும் காமச் செயல்களில் அவர்கள் எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார்கள் என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படும்.” (ஸ்ரீமத் பாகவதம் 12.2.3)

ஜாதகப் பொருத்தம்

தகுதியான ஜோதிடர்களை ஆலோசிக்காமல் செய்யப்படும் திருமணங்கள் விவாகரத்துக்களில் முடியலாம். சிலர் மூடத் தனமாக ஜோதிடத்தை நம்புகிறார்கள், சிலரோ நாஸ்திகமாக அதனை நம்பாமல் விட்டுவிடுகிறார்கள். வேதங்களிலிருந்து பெறப்படும் ஆயுர்வேதம், ஜோதிடம் போன்ற விஞ்ஞானங்கள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் பயன் தருபவை. வேத ஜோதிடம், ஒருவர் முக்குணங்களுக்கு ஏற்றவாறு எந்த வர்ணத்தில் பிறந்திருக்கிறார் என்பதைக் கணிக்கிறது. இது தற்காலத்தில் இருக்கும் ஜாதியின் அடிப்படையில் அல்ல. ஒவ்வொருவரும் பிறக்கும் போதே சில குணங்களோடு பிறக்கின்றனர். அதன் அடிப்படையில், விப்ர வர்ணத்தில் பிறந்த ஆண் சூத்ர வர்ணத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டால், திருமண வாழ்க்கை இருவருக்குமே துன்பமயமாக இருக்கும். தேவ கணம் கொண்ட ஆண் தேவ கணம் கொண்ட பெண்ணையும், ராக்ஷஷ கணம் கொண்ட ஆண் ராக்ஷஷ கணம் கொண்ட பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். இதைப் போலவே இதர முக்கிய பொருத்தங்களைப் பார்த்து திருமணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிடில், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்பதால், வீட்டுப் பெரியவர்களும் பெற்றோர்களும் சரியான ஜோதிடரை ஆலோசிக்காமல் திருமணம் செய்விக்கக் கூடாது.

பெண்களின் பலவீனம்

ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்திற்கான தனது விளக்கவுரை ஒன்றில் (4.4.3) பின்வருமாறு கூறுகிறார்: “வேத கருத்தின்படி குடும்ப வாழ்வில், கணவன் தனது உடலின் பாதியை மனைவிக்கும், மனைவி தனது உடலின் பாதியை கணவனுக்கும் கொடுக்கிறார்கள். வேறு விதமாகக் கூற வேண்டுமெனில், கணவன் இல்லாத மனைவியும் மனைவி இல்லாத கணவனும் முழுமையில்லாதவர்களாக கருதப்படுகிறார்கள். சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் வேத திருமண உறவு இருந்தது. ஆனால் சில நேரங்களில் பலவீனத்தின் காரணமாக, ஒரு பெண் தன் தாய் தந்தையின் குடும்பத்தினருடன் அதிகமான பற்று வைத்து விடுகிறாள். சதி தனது மிகவுயர்ந்த கணவரான சிவபெருமானை விட்டுச் செல்வது அவளது பெண்மையின் பலவீனத்தால்தான் என்று இந்த ஸ்லோகத்தில் குறிப்பாக எழுதப்பட்டுள்ளது. பொதுவாக, கணவன் மனைவியின் பிரிவிற்கு பெண்களின் பலவீனமே காரணமாகும். கணவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே பெண்ணுக்கு நன்மை பயக்கும். அது குடும்ப வாழ்க்கையை அமைதியாக வைக்கும். சில நேரங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம், மிகவுயர்ந்த நிலையிலிருக்கும் சிவபெருமானுக்கும் சதி தேவிக்கும் இடையேகூட கருத்து வேறுபாடுகள் வந்ததை இங்கு காண்கிறோம். ஆனால் அத்தகு கருத்து வேறுபாடுகளுக்காக மனைவி கணவனின் பாதுகாப்பை விட்டுச் செல்லக் கூடாது. அப்படி அவள் செய்தால் அது பெண்மையின் பலவீனமாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.”

சரியான பயிற்சியின்மை

பெண்மையின் பலவீனம் என்பது போதிய பயிற்சியின்மையைக் குறிக்கின்றது. தற்கால பெண்களுக்கு, “பணம் சம்பாதிப்பது எப்படி? உடலை எவ்வாறு அழகு செய்வது?” போன்ற விஷயங்கள்தான் கற்றுத் தரப்படுகின்றன. குடும்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது, கணவனிடம் எவ்வாறு அடக்கமாக இருப்பது போன்றவற்றை அறியாமல், சம உரிமை என்ற பெயரில் சண்டையிட்டு கொண்டு, குடும்ப அமைதியை கெடுத்துக் கொள்கிறார்கள். திருமணம் ஆனவுடன் கணவனை அவனது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து எவ்வாறு தனக்கு அடிமையாக்கிக் கொள்வது என்பதைத்தான் கற்றுக் கொள்கிறார்கள். இவை நல்லதல்ல. சமைத்தல், இல்லத்தை தூய்மையாக வைத்தல், குழந்தைகளை பராமரித்தல் உட்பட அனைத்து வீட்டுக் கடமைகளையும் முறையாக கற்று, கணவனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பண்புடனும் கற்புடனும் வாழ்வதற்கான பயிற்சி பெண்களுக்கு மிகவும் அவசியம்.

பௌதிக வாழ்க்கை துன்பமயமானது என்று பகவத் கீதையில் (8.15) கிருஷ்ணர் கூறுவதை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். மொத்த வாழ்க்கையே துன்பமயமானது என்னும்போது, அதன் ஓர் அங்கமான இல்லற வாழ்க்கை மட்டும் இன்பமாக இருந்து விடுமா என்ன? வாழ்வில் துன்பங்கள் நிச்சயமாக இருக்கும் என்பதை உணர்ந்து, அவற்றை பொறுத்துக் கொள்ள கற்றுக் கொடுக்க வேண்டும். (பகவத் கீதை 2.14)

மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள்

அத்தகைய பயிற்சிகள் ஏதும் இன்றைய பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. மாறாக, ஆண்களைப் பிரிந்து வாழலாம் என்ற மாயையை ஏற்படுத்தும்விதமாக பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பெண் தனது இள வயதில் தந்தையாலும், பின்னர் கணவனாலும், அதன் பின்னர் வளர்ந்த மகனாலும் பராமரிக்கப்பட வேண்டியவள். அதற்கு மாறாக, பெண்கள் சுதந்திரமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய சமுதாயம் பரவலாக பிரச்சாரம் செய்வதால், திருமணத்திற்கு முன்பே கருத்தரித்தல், கருக்கலைப்பில் ஈடுபடுதல், விவாகரத்து போன்றவை சகஜமாகி வருகின்றன. பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருகிறது. விவாகரத்து சட்டத்தை உபயோகிக்கும் பெண்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கை விளைவித்துக் கொள்கிறார்கள் என்பதை பெரும்பாலும் உணர்வதில்லை. பல பெண்கள் தங்களின் அறிவீலித்தனத்தாலும் பலவீனத்தாலும் அச்சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறையவே காண்கிறோம்.

தனக்கு அடங்காத கணவனை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் பலாத்காரம் போன்ற சட்டங்களைக் கொண்டு அடக்க முயற்சி செய்து விவாகரத்தில் முடிக்கிறார்கள். மேலும், பெண் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு தரும் ஒதுக்கீடு திட்டங்களினால் நல்ல வேலைகளை சுலபமாகப் பெற்று பணத்தினால் கணவனை அடக்கலாம், அல்லது வேறு கணவனைத் தேடிக் கொள்ளலாம் என்ற நிலைக்கும் வந்து விட்டனர்.

வேலைக்குச் சென்று தானும் பணம் சம்பாதிப்பதால், தனது வாழ்க்கைக்கு பணம் போதும் கணவன் வேண்டாம் என்று எண்ணுபவர்களும் உள்ளனர். அத்தகைய அகங்கார எண்ணங்கள் குடும்ப அமைதியைக் கெடுக்கின்றன.

விவாகரத்து சட்டம் என்று ஒன்று இருப்பதால், இல்லத்தில் நிகழும் சின்னஞ்சிறு பிரச்சனைகளால்கூட இல்லற வாழ்க்கை நிலையற்றதாகி வருகிறது. இத்தகைய சட்டங்கள் காம இச்சைகளைப் போக்குவதில்லை; மாறாக, தவறான பாதைக்கு வழியாக அமைகின்றன.

புலனின்பத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையை விடுத்து கிருஷ்ண பக்தியை மையமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துதல் சிறப்பானதாக அமையும்.

இதர காரணங்கள்

சினிமா, நாடகம், விளம்பரங்கள், கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்தல், மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் மற்றவர்களுடனான தொடர்பு போன்றவற்றினால், கணவன் அல்லது மனைவி கொள்ளும் தவறான உறவுகளும் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றன.

திருமணம் என்பது மிகவும் புனிதமான சடங்காகும். திருமணம் புரிபவர்களின் மனப்பான்மை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஸாம வேதம் (பிராமணா 1.3.9) பின்வருமாறு கூறுகின்றது: “உன் இதயத்தில் இருப்பதே என் இதயத்தில் இருக்கட்டும், என் இதயத்தில் இருப்பது உன்னுடையதாகட்டும்.”

இத்தகைய மனப்பான்மையை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் சண்டையிடுதல் நன்றா? “திருமணங்கள் ஸ்வர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.” “திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்” போன்ற பல வசனங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம், ஆனால் இன்று அவற்றை மறந்து கொண்டிருக்கிறோம்.

விவாகரத்து சட்டம் என்று ஒன்று இருப்பதால், இல்லத்தில் நிகழும் சின்னஞ்சிறு பிரச்சனைகளால்கூட இல்லற வாழ்க்கை நிலையற்றதாகி வருகிறது.

விவாகரத்து—பாரதப் பண்பாட்டில் இல்லாத ஒன்று

திருமண பந்தத்தில் ஈடுபட்ட பிறகு, பிரிவு என்பது இல்லை (வாழ்வின் இறுதியில் சந்நியாசம் வாங்கினால் தவிர). சில அரிய தருணங்களில், கணவனும் மனைவியும் பிரிந்து வாழும் பழக்கம் இருந்துள்ளது, அதிலும் விவாகரத்து இல்லவே இல்லை. வேத இலக்கியங்களிலோ இந்திய மொழிகளிலோ விவாகரத்து என்னும் வார்த்தையே இல்லாமல் இருந்தது. விவாகரத்து என்னும் தமிழ் சொல், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றே. தினம் தினம் கழற்றி மாற்றும் ஆடைகளைப் போல கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் மாற்றுவது திருமணம் அல்ல. அக்னியை சாட்சியாக வைத்து திருமணம் செய்த பிறகு, விலகுவதும் விவாகரத்து செய்வதும் மிகப்பெரிய பாவமாகும். மேலும், வேத சட்டத்தின்படி பெண்ணுக்கு மறுதிருமணம் என்பதும் கிடையாது. பெண்களுக்கு அவர்களது கணவன் குருவைப் போன்றவர் என்பதையும் கடவுளைப் போன்றவர் என்பதையும் குறிப்பதற்காக, பதி-குரு, பதி-பரமேஸ்வர் போன்ற வார்த்தைகள் பழக்கத்தில் இருந்து வந்துள்ளன.

கற்புடைய பெண்கள், கணவன்மார்களிடம் அன்போடும் பக்தியோடும் வாழ்வது வழக்கம். அவர் இறந்துவிட்டால் அவருடன் இணைந்து தானும் இறப்பது அல்லது வாழ்நாள் முழுவதும் நேர்மையான விதவையாக வாழ்வது என பெண்கள் தங்களது கணவரிடம் பெரும் அன்புடன் இருந்து வந்தனர். கணவரிடம் சிறந்த தர்ம பத்தினியாக வாழ்ந்த பெண்களை வெறுமனே நினைப்பதன் மூலமாக நாம் செய்த அனைத்து பாவங்களும் போகின்றன என சாஸ்திரம் கூறுகின்றது.

அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி

ததா பாஞ்சகன்யாஹ ஸ்மரேன் நித்தியம் மஹாபாதகான்ஸ்கினி

“அகல்யை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கற்புக் கரசிகளை நினைப்பதால் மஹாபாவங்களிலிருந்து விடுபடலாம்.”

இள வயது திருமணங்கள்

இள வயது திருமணங்கள் கணவன் மனைவியிடையே நெருக்கமான பந்தத்தை உருவாக்கும். சில காரணங்களால் அவை இன்று தடை செய்யப்பட்டுள்ளதால், ஆண்களுக்கு 24 வயதிலும் பெண்களுக்கு 18 வயதிலும் திருமணம் செய்விக்கப்பட வேண்டும். அப்போது, மனம் போன போக்கில் வாழ்வதை விடுத்து, அவர்கள் முறைப்படி திருமண பந்தத்தில் ஈடுபட்டு பொறுப்புடன் செயல்படுவர். இளமையில் திருமணம் செய்வதன் மூலம், திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் களங்கப்படுவதை தவிர்க்கலாம்.

பத்தினி தர்மம்

த்ருவ த்யோ: த்ருவ பிருத்வீத்ருவ விஷ்வம் இதம் ஜகத்

த்ருவாஸ: பர்வத இமேத்ருவ ஸ்தீரீ பதி-குலே

ஸ்ரீ விஷ்ணு-வைஷ்ணவ ஸேவஸு இயம் 

 “வானம் நிலைத்து இருக்கும் வரை, பூமி நிலைத்து இருக்கும் வரை, உலகம் நிலைத்து இருக்கும் வரை, மனைவி தன் கணவனின் வீட்டிற்கும் விஷ்ணு மற்றும் அவரது பக்தர்களின் தொண்டிற்கும் நிலைத்து நிற்க வேண்டும்.”

திருமணமான பெண்ணின் தலையாய கடமை கற்புடைய பெண்ணாக வாழ்வதே. வேதப் பண்பாட்டில் பெண்களுக்கு சிறு வயதிலிருந்தே கற்புடைய மனைவியாக இருப்பதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. ஸ்ரீல பிரபுபாதர் பெண்களுக்குரிய இத்தகைய அறிவுரைகளை பலமுறை வழங்கியுள்ளார். அவற்றில் சில,

“நாம் பெண்களுக்கு இரண்டு விஷயங்களை கற்றுத் தர வேண்டும்: எவ்வாறு கற்புடைய பெண்ணாக வாழ்வது, எவ்வாறு நன்றாக சமைப்பது. இந்த இரு தகுதிகளும் பெண்களுக்குத் தேவை.” (உரையாடல், ஜுலை 10, 1975)

“ஒரு பெண்ணின் முக்கியமான கடமைகள்: குடும்ப வேலைகளைச் செய்தல், எல்லாவற்றையும் அழகாகவும் சுத்தமாகவும் வைத்தல், தேவையான அளவு பால் கிடைத்தால் வெண்ணெய் கடைவதிலும் தயிர் தயாரிப்பதிலும் பாலினாலான இனிப்பு வகைகளை செய்வதிலும் ஈடுபடுதல், மற்றும் கைவேலைகள், தையல் வேலைகள், பூ கட்டும் வேலைகள் போன்றவற்றில் ஈடுபடுதல்.” (கடிதம், பிப்ரவரி 16, 1972)

சமுதாயத்தின் சொத்து நல்ல குழந்தைகள்: அவர்களைப் பெற்றெடுத்து வளர்ப்பது கற்புடைய பெண்களால்தான் முடியும். கற்புடைய பெண்ணின் உதவியால்தான் ஓர் ஆண் நான்கு புருஷார்த்தங்களை அடைய முடியும்.

சாஸ்திரங்கள் கூறும் பெண்களின் நான்கு முக்கிய கடமைகள்: (1) கணவனுக்குத் தொண்டு புரிதல், (2) கணவனுக்கு அனுகூலமாக இருத்தல், (3) கணவனின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவியாக இருத்தல், மற்றும் (4) கணவனுடைய விரதங்களை தானும் கடைபிடித்தல்.

ஒரு மனைவிக்கு அவளது கணவனே குரு என்றும் வழிபட வேண்டிய கடவுள் என்றும் சாஸ்திரங்களில் கூறியுள்ளதை முன்னரே எடுத்துரைத்தோம். கணவனுக்கு நன்றாக சமைத்தல், அவரிடம் இனிமையாக பேசுதல், துன்ப நேரங்களில் ஆறுதலாக நடந்து கொள்ளுதல், எப்போதும் மரியாதையோடு அழைத்தல், கணவனை தன்னை விட உயர்வாக கருதுதல், கணவன் இல்லாதபோது தன்னை வெகுவாக அலங்கரிக்காமல் எளிமையாக இருத்தல், பொன், பொருள் மீது பேராசைப்படாமல் கணவரின் வருமானத்தில் எளிமையாக வாழ்தல், உறவினர்களையும் விருந்தினர்களையும் அன்போடு உபசரித்தல், கணவனின் பெற்றோருக்கு தன் பெற்றோரை விட அதிக மரியாதையும் அன்பும் கொடுத்தல், குழந்தைகளை நல்ல முறையில் பராமரித்தல் போன்ற நற்குணங்களோடு பெண்கள் வாழ வேண்டும். இவற்றை ஒரு பெண் கடைப்பிடிக்கும் போது, குடும்பம் அமைதியாகத் திகழும், அமைதியான குடும்பத்தில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

பதி தர்மம்

“காதலன், நண்பன், குழந்தை, ஆசை, சொத்து, வாழ்வு என ஒரு பெண் தேடும் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கணவனின் வடிவில் நிற்கின்றான். அதுபோலவே, கணவனும் தனது மனைவியை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.” (பாவ பூதி, மாலதி மாதவா 6)

கணவனுக்கு மனைவி தொண்டு செய்வதைப் போலவே மனைவிக்காக கணவன் செய்ய வேண்டிய கடமைகளும் பல உள்ளன: வாழ்நாள் முழுவதும் மனைவியைப் பாதுகாத்தல், மதித்தல், அவளுக்கு தேவையானவற்றை சம்பாதித்து கொடுத்தல், மற்றும் அவளை முறையாக வழிநடத்திச் செல்லுதல்.

திருமணமான புதிதில் பெண்களிடம் இருக்கும் அழகு, குழந்தைப் பேறு மற்றும் முதுமையின் காரணத்தினால் குறைந்து விடும். இருப்பினும், அழகின்மையின் பொருட்டு மனைவியை ஒருபோதும் கைவிடலாகாது.

மனைவியையும் குழந்தைகளையும் பராமரிக்கும் அளவிற்கு தேவையான பொருளீட்ட வேண்டியது (இன்றைய மொழியில் கூறினால், பணம் சம்பாதிக்க வேண்டியது) கணவனின் முக்கிய கடமையாகும். அந்த வருமானம் நேர்மையான முறையில் இருக்க வேண்டும், பேராசை கொண்டு தவறான வழியில் செல்வோர் பெரும் இழப்பை சந்தித்து, மனைவி மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்த்துவதை அடிக்கடி காண்கிறோம். பேராசையின் காரணமாக மனைவியை வேலைக்கு அனுப்புவது, அல்லது அவளது பெற்றோரிடமிருந்து பணத்தை எதிர்பார்ப்பது போன்றவை கூடாது.

கடவுளின் பிரதிநிதியாக நடந்து குடும்பப் பொறுப்பை ஏற்று குடும்பத்தினர் அனைவரையும் உய்வித்தல் கணவனின் கடமையாகும். மனைவியை புலனின்பத்திற்கான பொருளாக கருதாமல், கடவுளால் தனக்களிக்கப்பட்ட பரிசாக எண்ணி வாழ வேண்டும். தனது மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் தாயாகக் கருத வேண்டும். அவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வதும், அதே சமயத்தில் அவளது அர்த்தமற்ற விருப்பங்களுக்கு அடிமையாகாமல் பொறுப்புடன் வாழ்வதும் புருஷ லக்ஷணமாகும்.

மனைவிகள் அடக்கமாக இருக்க விரும்பினாலும், சில ஆண்கள் தங்களது மனைவியருக்கு நவநாகரிக மேற்கத்திய ஆடைகளைக் கொடுத்து, அவர்களது உடலின் பாகங்கள் வெளியில் தெரியும்படி செய்கின்றனர், அவர்களை இதர கேளிக்கைளிலும் ஈடுபடுத்துகின்றனர். இவை ஆபத்தாக முடியும் என்பதை ஒவ்வொரு கணவனும் உணர வேண்டும்.

மேலும், கணவன் தன் மனைவி குழந்தைகளை புலனின்பத்தில் ஈடுபடுத்தாமல் ஆன்மீகத்தில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக, சினிமா பார்ப்பது, ஊர் சுற்றுவது, வீட்டில் எந்நேரமும் தொலைக்காட்சி காண்பது போன்ற விஷயங்களைத் தவிர்த்து (அல்லது குறைத்து), கோயில்களுக்குச் செல்லுதல், பக்தர்களிடம் சங்கம் கொள்ளுதல், பகவத் கீதை மற்றும் பாகவதம் போன்ற சாஸ்திரங்களைப் படித்தல் ஆகியவை உட்பட ஆன்மீக காரியங்களை அதிகரிக்க வேண்டும்.

குடித்து விட்டு மனைவியை அடித்தல், சூதாட்டத்தினால் சொத்துக்களை இழத்தல், மனைவியை விட்டுவிட்டு மற்றவரை அணுகுதல் போன்ற தவறுகளை ஒருகாலும் நினைத்துப் பார்க்கவும் கூடாது.

கணவன், மனைவி ஆகிய இருவரும் தங்களது தர்மத்தை உணர்ந்து அதன்படி செயல்படுதல் மிகவும் அவசியம்.

சமுதாயத்தின் கடமைகள்

ஒரு நாட்டு மன்னனுக்கு மக்கள் செய்யும் பாவங்களில் ஆறில் ஒரு பங்கு போய் சேருகிறது என சாஸ்திரம் கூறுகிறது. எனவே, மக்கள் வழி தவறிப் போவதிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது, அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்களின் கடமையாகும். பெண்களுக்கு சம உரிமை என்ற பெயரில், அவர்களை எல்லா வேலைகளிலும் புகுத்துதல் அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் தீங்காகும். அவர்கள் தங்களது இயல்பான கடமைகளை விட்டு விட்டு, பணத்தின் பின்னால் ஓடுவதால் சமுதாயத்தில் பற்பல சீர்கேடுகள் நடக்கின்றன. ஆண்களும் பெண்களும் காலத்தோடு திருமணம் செய்யாத பட்சத்தில், காமத்தை அடக்க முடியாமல் தவறான உறவில் ஈடுபடுகின்றனர், கருக்கலைப்பு, எயிட்ஸ், என அதன் பட்டியல் பெரிதாக உள்ளது. பெண்களுக்காக தனி காவல்துறை இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடாது: அவர்களுக்கான முழு பாதுகாப்பை பணமோ இதர வசதிகளோ தர இயலாது, தகுதி வாய்ந்த கணவனால் மட்டுமே தர இயலும்.

திருமண சட்டங்களை திருத்தியமைத்தல், விவாகரத்து சட்டங்களை (ரத்து செய்ய இயலாவிடில், குறைந்தபட்சம்) கடுமையாக்குதல் போன்றவை நிச்சயம் நன்மை செய்யும். விவாகரத்திற்கான வசதிகள் எளிமையாக இருப்பதால், அதிகமான விவாகரத்துகள் எழுகின்றன என்னும் உண்மையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். காமத்தை தூண்டும் திரைப்படங்களையும் நிர்வாணப் படங்களையும் தடை செய்ய வேண்டும், இணையம் (இண்டர்நெட்) மூலமாக பலரும் கெட்டுப்போவதைத் தடுக்க வலுவான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எயிட்ஸ் நோயை தவிர்ப்பதற்கு பாதுகாப்பான உடலுறவை போதிப்பதை நிறுத்திவிட்டு, கற்பு நெறியை ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுறுத்த வேண்டும். இருபாலர் பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றை மாற்றி தனித்தனி கல்வி மையங்களை நிறுவுவதும் உதவி செய்யும். அரை குறை ஆடைகளுடன் கூடிய பெண்களைக் கொண்டு ஊரெங்கும் வெளியிடப்படும் விளம்பர போஸ்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இணைந்து வாழும் குடும்பங்கள் நமது நாட்டின் அவசியத் தேவை என்பதை உணர்ந்து, அதற்கு உதவக்கூடிய செயல்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

வேதப் பண்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தி, அதில் ஆணுக்கும் பெண்ணுக்குமான கடமைகளை அறிவுறுத்தி, ஒவ்வொருவருக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். புலனின்பத்தை மையமாகக் கொண்டு வாழ்வதைத் தவிர்த்து, கிருஷ்ணரை வாழ்வின் மையமாகக் கொண்டுவரும்போது, உலகின் அனைத்து பிரச்சனைகளும் தானாகவே தீர்ந்துவிடும் என்று ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவதுண்டு. கணவன் தனது கடமைகளை உணர்ந்து அதை சரிவர செய்வதும் மனைவி தனது கடமைகளை உணர்ந்து சரிவர செய்வதும் விவாகரத்துகளை தடுக்க பெருமளவில் உதவும். கணவனும் மனைவியும் கிருஷ்ண உணர்வில் வாழ வேண்டும், லக்ஷ்மி-நாராயணர் மற்றும் ருக்மிணி-கிருஷ்ணரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.

இறுதியாக, தங்கள் குடும்பத்தை காப்பாற்ற நினைக்கும் ஒவ்வொருவரும் இக்கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் மாறுகிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் உங்கள் குடும்பம் மட்டுமாவது சீர்கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளட்டுமே.

கணவனும் மனைவியும் கிருஷ்ண உணர்வில் வாழ வேண்டும். லக்ஷ்மி-நாராயணர் மற்றும் ருக்மிணி-கிருஷ்ணரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives