அழகும் அகோரமும்

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

அழகை மேலும் அழகாக்கும் கலை

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

வேத பண்பாட்டில் அழகிய பெண்கள் தங்களின் உடல் அழகுடன் தங்களின் அக அழகையும் பாதுகாத்து, உலகே தலைவணங்கும்படி புகழ் பெற்றனர். ஆயினும், நவீன காலத்தின் அழகிய பெண்கள் தங்களது அழகை அகோரமாக்கி உலகே தலைகுனியும்படி செய்து விடுகின்றனர். இந்த இரு வகையினரையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உலக அழகி தேவஹூதி

ஸ்ரீமத் பாகவதம் மூன்றாவது ஸ்கந்தத்தில் ஸ்வாயம்புவ மனுவின் புதல்வியான தேவஹூதியின் சரித்திரம் விவரிக்கப்பட்டுள்ளது. அவள் பேரழகு வாய்ந்த இளம்பெண். ஒருமுறை அவள் தனது அரண்மனையின் மாடத்தில் பந்து விளையாடியதைப் பார்த்த விஸ்வாவஸு என்ற கந்தர்வன் அவளது அழகில் மயங்கி விமானத்திலிருந்து கீழே விழுந்தான். கந்தர்வனையே மயக்கும் அழகுடையவள் அவள்.

அதே சமயத்தில், அவள் கற்பில் மிகச்சிறந்தவளாக இருந்தாள். அவள் நாரத முனிவருடைய ஆலோசனையின்படி, பக்தியில் சிறந்த கர்தம முனிவருக்கு தன் மனதைக் கொடுத்தாள். பிறகு, தனது தந்தையினுடைய ஏற்பாட்டின்படி அவள் கர்தம முனிவரையே திருமணம் செய்து கொண்டாள். முனிவருக்குத் தொண்டு செய்தபோது அவளது அழகும் ஆரோக்கியமும் மிகவும் குன்றியது. நெடுங்காலம் கழித்து அவளை கவனித்த கர்தம முனிவர், இத்தனை பணிவிடை செய்த மனைவியிடம் என்ன வேண்டும் என்று வினவினார். கற்புடைய பெண்ணிற்கு குழந்தைகளே சிறந்த பொக்கிஷம் என்பதால், அவள் நன்மக்களை வேண்டினாள்.

கர்தம முனிவரும் தமது தவ வலிமையால் ஆகாயத்தில் விமானம் போன்று பயணிக்கும் ஓர் அற்புதமான மாளிகையை உருவாக்கினார். அந்த மாளிகையில் வீட்டிற்குத் தேவையான எல்லா வசதிகளும் இருந்தன, அவளுக்குப் பணிவிடை செய்ய பணிப்பெண்களும் இருந்தனர். கர்தமர் அந்த மாளிகையில் பல ஆண்டுகள் தேவஹூதிக்கு இன்பமளிக்க, அவள் ஒன்பது பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். முனிவர் மீண்டும் தவம் செய்ய விரும்பியபோது, அவள் ஓர் ஆண் குழந்தையை அவரிடம் வேண்டினாள். தேவஹூதியின் உயர்ந்த கற்பினாலும் கர்தம முனிவரின் உயர்ந்த பக்தியாலும், பகவான் விஷ்ணு அவர்களது மகனாக கபிலரின் உருவில் அவதரித்தார்.

தேவஹூதி உலக அழகியாக இருந்தாலும் தன் கற்பினாலும் உயர்ந்த செயல்களாலும் பகவானையே மகனாகப் பெற்று, அவர் மூலமாக ஆன்மீகத்தில் முன்னேறி வீடுபேறு அடைந்தாள். அவளுடைய தேகம் உருகி ஓர் ஆறு உருவானது, அது சித்த-பதம் (ஆன்மீகப் பக்குவமடைந்த இடம்) என்று போற்றப்படுகிறது.

கலி யுக அழகிகள்

பெண்களில் சிலர் முற்பிறவிகளில் செய்த புண்ணியச் செயல்களின் விளைவாக மிகவும் அழகாகப் பிறக்கின்றனர். அவர்கள் புனிதமான செயல்களில் ஈடுபடுவதைக் கைவிட்டு, தன்னுடைய உடல் அழகு மற்றவர்கள் பார்த்து ரசிப்பதற்கு என்று நினைத்து வீதிக்கு வந்து விடுகின்றனர். பெண்களைத் தவறாகப் பயன்படுத்த ஆசைப்படும் வியாபாரிகளும் விளம்பரங்கள், திரைப்படங்கள், அலுவலகங்கள் என பல இடங்களில் அவர்களுடைய உடலை விலை பேசுகிறார்கள். அழகான பெண்களுக்கு சிறிதும் அறிவில்லையோ என்று எண்ணும் அளவிற்கு, அவர்கள் அந்த அழகைக் கொண்டு, பணத்தையும் புகழையும் சம்பாதிக்க முயல்கிறார்கள்.

விமானப் பணிப்பெண்களைப் பார்க்கும்போது, என் மனதில் எப்போதும் எழும் கேள்வி: இவ்வளவு அழகாகப் பிறந்து விட்டு, மற்றவர்களுக்கு உணவு பரிமாறி எச்சில் தட்டை எடுக்க வேண்டிய வேலையில் இறங்கி விட்டார்களே? அது மட்டுமின்றி, பெண்ணிற்கு சிறிதும் ஒவ்வாத ஆடைகளையும் குதிகால் உயர் செருப்புகளையும் அணிந்து கொண்டு, விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அனைவரையும் பார்த்து புன்னகை புரிய வேண்டும். வாழ்க்கையை இவ்வாறு வீணடிக்கத்தான் வேண்டுமா?

திரைப்பட நடிகைகளுடைய நிலவரத்தைப் பற்றி என்ன எழுதுவது? அஃது அனைவருக்கும் தெரிந்ததே. அழகிய கதாநாயகிகள் பலரும் ஆண்களின் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கலை என்ற பெயரில் இங்கு அழகு விலைபோகிறது. பூஜைக்கான மலர்கள் குப்பையில் விழுந்து விடுகின்றன.

தேவஹூதி தனது கற்பினாலும் உயர்ந்த செயல்களாலும் பகவானையே மகனாகப் பெற்று, அவர் மூலமாகவே வீடுபேறு அடைந்தாள்.

உடல் அழகு நிரந்தரமற்றது

இளமை சென்றவுடன் முதுமை வருகிறது. எவ்வளவு அழகியாக இருந்தாலும் 30 வயதைத் தாண்டியவுடன் அந்த அழகு படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. இறுதியில், அழகு அகோரமாகத்தான் போகிறது. உடல் பஞ்ச பூதங்களால் ஆனது, மாற்றத்திற்கு உட்பட்டது. எல்லா உயிர்வாழியும் பிறந்து, வளர்ந்து, சில காலம் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து, படிப்படியாகக் குன்றி, இறந்து விடுகிறது. இந்த ஆறு மாற்றங்கள் அனைவருக்கும் கட்டாயம் நடக்கிறது. இதை உணர்ந்தவர்கள் மதிப்புமிக்க காலத்தை வீணாகக் கழிக்க மாட்டார்கள்.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் இளம்பெண்கள் தங்கள் உடல் அழகு மட்டுமல்ல அக அழகையும் பாதுகாக்க வேண்டிய செயல்களில் ஈடுபட வேண்டும். “இந்த வாழ்வில் ஒருவரை மட்டுமே மணம் முடிப்பேன், பலர் என்னைப் பார்க்கும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பேன்,” என்று பெண்கள் உறுதியெடுக்க வேண்டும். நாம் நமது வாழ்க்கையை எளிமையாக அமைத்துக் கொண்டால், பல ஆடவரோடு வேலை செய்யும் அவல நிலையைத் தவிர்க்கலாம். பெண்கள் மட்டும் பயிலும் கல்விக்கூடங்களில் படித்தால், ஆடவரோடு பழகும் சூழ்நிலையைத் தவிர்க்கலாம். பாதுகாப்பின்றி செயல்பட்ட இளம்பெண்களின் அவலங்களை தினம்தினம் கேள்விப்படுகிறோம்.

பெண்களே சிந்திப்பீர், பெற்றோர்களே செயல்படுவீர்

தற்போதைய காலக்கட்டத்தில், “பெண்களை வெளியே அனுப்ப வேண்டாம், வேலைக்கு அனுப்பாதீர்கள்,” என்று கூறினால், மக்கள் நம்மை அதிசயமாகப் பார்க்கிறார்கள். “எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்கின்றனர். ஆனால், நாட்டில் நிகழ்வதை சற்று கவனியுங்கள். பல பெண்கள் தினம்தினம் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர். படிக்கச் சென்ற பெண்களும் வேலைக்குச் சென்ற பெண்களும் எத்தனை ஆபத்தில் விழுகிறார்கள்!

பெற்றோர்கள் எந்த தைரியத்தில் இளம்பெண்களை சுதந்திரமாக விடுகிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. பெற்றோர்களே! பெண்களுக்கு எப்போதும் பாதுகாப்பு தேவைப்படுகிறது என்பதால், தக்க வயது வந்தவுடன் தகுதி வாய்ந்த ஆணுடன் மணமுடித்து வையுங்கள். பொருள் ஈட்டுதல், பணம் சம்பாதித்தல் முதலியவை ஆண்களின் வேலை. சமையல் செய்தல், குழந்தைகளை வளர்த்தல் முதலிய குடும்ப நிர்வாகப் பணிகள் பெண்களுக்கான வேலை. இதில் மாற்றத்தைக் கொண்டு வந்ததால், இன்றைய சமுதாயம் சீர்குலைந்து காணப்படுகிறது, மேன்மேலும் சீர்குலைந்து கொண்டே உள்ளது. எனவே, இளம்பெண்களே! கவனமாக இருப்பீர். பெற்றோர்களே! சமுதாய ஒழுங்கினைக் காப்பாற்ற உங்களது மகள்களுக்கு உரிய பாதுகாப்பைக் கொடுங்கள்.

உடலே பிரதானம் என்பவர்களின் உடல், காலப்போக்கில், முதுமை, நோய், இறப்பு ஆகியவற்றினால் அகோரமாகிறது. எனவே, வெளிப்புற அழகு குன்றுவதைப் பற்றிக் கவலைப்படாமல் கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுங்கள்.

கிருஷ்ண உணர்வே தீர்வு

கிருஷ்ண உணர்வை மேற்கொள்பவர்களுக்கு எல்லா ஒழுக்கமும் தானாக வருகிறது. கிருஷ்ணரை மையமாகக் கொண்ட வாழ்க்கையில் புலனின்பத்திற்கு இடமே இல்லை. நம்மை ஆள்பவர் கிருஷ்ணர் என்பதைப் புரிந்து கொண்டால், அவரால் அளிக்கப்பட்ட அழகையும் அவரது திருத்தொண்டில் ஈடுபடுத்தலாம். உடலே பிரதானம் என்பவர்களின் உடல், காலப்போக்கில், முதுமை, நோய், இறப்பு ஆகியவற்றினால் அகோரமாகிறது. வெளிப்புற அழகு குன்றுவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆன்மீகத்தில் ஈடுபட்ட தேவஹூதியின் அழகோ புனிதமான நதியானது. எனவே, நாமும் அழகை அகோரமாக்காமல் ஆன்மீகமாக்கலாமே.

இந்த கட்டுரையைப் படித்து, ஏதேனும் ஒரே ஒரு பெண் பாதுகாப்பாக வாழ முடிவு செய்தாலும், அஃது இந்த சமுதாயத்திற்கே நன்மையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives