கரௌலி

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

இயல்பான பக்தியில் திளைக்கும் திருத்தலம்

வழங்கியவர்: பக்தி விகாஸ ஸ்வாமி

இந்த தொலைதூர நகரத்தில், மக்களின் இதயத்தை வெல்லும் வசீகர அழகுடன் பகவான் ஸ்ரீ மதன-மோஹனர் காட்சி தருகிறார்.

கிழக்கு ராஜஸ்தானின் கரடு முரடான குன்று பிரதேசத்தில் உள்ள கரௌலி என்னும் சிறிய நகரம்தான் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான ஸநாதன கோஸ்வாமியால் வழிபடப்பட்ட பகவான் கிருஷ்ணரின் விக்ரஹமான ஸ்ரீ மதன-மோஹனரின் வசிப்பிடமாகும்.

கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்த பெரும்பாலான இடங்கள் காலப்போக்கில் மறைந்து போயிருந்த காரணத்தினால், அவற்றைக் கண்டுபிடிக்கும் பொருட்டு பகவான் சைதன்யர் ஸநாதனரை விருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தார். ஸநாதனர் பகவான் மதன-மோஹனரின் விக்ரஹத்தைக் கண்டுபிடித்து விருந்தாவனத்தில் வழிபட்டு வந்தார். சுமார் 150 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த விக்ரஹம் கரௌலிக்குக் கொண்டு வரப்பட்டது. (மதன-மோஹனர் எவ்வாறு கரௌலிக்கு வந்தார் என்ற விவரம் தனியே தரப்பட்டுள்ளது.)

விருந்தாவனத்திலுள்ள மதன-மோஹனரின் முதல் கோயிலைப் போன்றே கரௌலியில் இருக்கும் கோயிலும் ஒரு குன்றின் மீது சிவப்புநிற கற்களால் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் அங்குச் சென்றபோது, அங்கிருக்கும் பக்தர்கள் கோயிலின் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவதைக் கண்டோம். பெரிய நிலப்பரப்பில் மூன்று வெள்ளிக்கதவுகளுடன் கூடிய மூன்று கர்ப்பகிரகங்கள் இக்கோயிலில் உள்ளன. நடுவில் உள்ள கர்ப்பகிரகத்தில், பகவான் மதன-மோஹனர் இடது பக்கத்தில் ராதாராணியுடனும் வலது பக்கத்தில் லலிதா தேவியுடனும் (ராதாராணியின் முக்கிய தோழி) காட்சி தருகிறார். மதன-மோஹனருக்கு வலது புறத்திலுள்ள கர்ப்பகிரகத்தில், கோபாலர் என்னும் திருநாமத்துடன் பகவான் கிருஷ்ணர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பகவான் மதன-மோஹனர் கரௌலியில் தோன்றுவதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே கரௌலி தேசத்து அரசர்கள் இந்த விக்ரஹத்தை வழிபட்டு வந்தனர்.

கரௌலியின் மக்களில் பலர் தங்களது அன்பிற்குரிய பகவான் மதன-மோஹனரை தரிசிக்க தினமும் வருகின்றனர். மாலையில் அவருக்கு ஆடை அலங்காரம் மிகவும் அழகாகச் செய்யப்படுகிறது. ராஜஸ்தான்வாசிகள் அணிந்திருப்பது போன்ற தலைப்பாகையை பகவானும் அணிந்துகொள்கிறார்.

நகரத்தில் பக்தியும் மகிழ்ச்சியும் சூழ்ந்துள்ளன. இங்குள்ளவர்கள் ஜடத்தில் பற்று மிகுந்தவர்களாகத் தெரியவில்லை. இவர்கள் எளிமையாக வாழ்கின்றனர். பகவான் மதன-மோஹனரின் தரிசனத்திற்காக இவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் வருகின்றனர். மதன-மோஹனர் என்றால், “எல்லாரையும் கவர்ந்திழுக்கும் மன்மதனையும் வசீகரிப்பவர்” என்று பொருள்.

திரைச் சீலைகள் விலக்கப்பட்டு பகவானை தரிசிக்கும்போது, பக்தர்கள் பகவானின் நாமத்தை சொல்லிப் புகழ்கின்றனர். வழிபாட்டு சடங்குகள் நிறைவுற்ற பின்னர், பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தீர்த்தம் பக்தர்களின் மீது தெளிக்கப்படுகிறது. எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டி “ஜெய்” என்று கூறியபடி கையை உயர்த்தி தீர்த்தத்தைப் பிடித்து தலையில் தெளித்துக்கொள்வதைக் கண்டேன். ஆரத்தி முடிந்ததும் பகவானுக்கு அணிவிக்கப்பட்ட மாலையிலிருந்து துளசி இலைகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அங்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடியிருப்பதால், சிலருக்கு மட்டுமே துளசி இலை கிடைக்கிறது. அவர்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

கோயிலுக்கு வழக்கமாக வருபவர்களில் பெரும்பாலானோர் கரெளலியில் வசிப்பவர்கள்; ஆகவே, அவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்களாக, ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் போன்று பழகுகின்றனர்.

பகவானுக்கு தினமும் எட்டு முறை பிரசாத நைவேத்தியமும் எட்டு முறை ஆரத்தியும் செய்யப்படுகின்றது. ஹரி பக்தி விலாஸம் என்னும் நூலில் ஸநாதன கோஸ்வாமியால் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையின்படி, பூஜாரிகள் பகவானை வழிபடுகின்றனர். மதிய வேளையில் பூஜாரிகள் பகவானுக்கு ஐம்பத்துநான்கு வகையான பதார்த்தங்களைப் படைக்கின்றனர்.

பகவானுக்குப் படைக்கப்பட்ட மஹா பிரசாதத்தை பக்தர்கள் அங்குள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். மால்பூரி, காஜா, இனிப்பு சமோசா உட்பட பலவகையான இனிப்புப் பண்டங்கள் அங்கு விற்கப்படுகின்றன. பகவானுக்கு பெரும்பாலும் இனிப்புப் பண்டங்களே படைக்கப்படுகின்றன. விருந்தாவனத்தைப் போல இங்கும் பல்வேறு இனிப்பு பண்டங்கள் உள்ளன. இங்குள்ள மக்களும் இனிப்புகளை அதிகம் விரும்புவதுபோலத் தோன்றுகிறது. (மேலும், கரடுமுரடான நிலப்பரப்பில் காய்களைப் பயிரிடுவது கடினம் என்பதால், காய்கறிகளுக்கு இங்குத் தட்டுப்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது.)

சைதன்ய மஹாபிரபுவினுடைய இயக்கம் இங்கு குதூகலத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பதைக் காணலாம். இங்குள்ள மக்களிடம் பக்தி மிகவும் இயல்பாக உள்ளது, இவர்கள் திறந்த மனம் கொண்டவர்களாக, இதயபூர்வமான அன்புடன் வாழ்கின்றனர். அதிகாலை 4:30 மணிக்கு சுமார் முந்நூறு பக்தர்கள் மங்கல ஆரத்திக்கு வருகின்றனர். ஆரத்தியின்போது மக்கள் கீர்த்தனம் பாட இரண்டு பிராமணர்கள் கரதாளம் வாசிக்கின்றனர். மங்கல ஆரத்தி முடிந்து சிறிது நேரம் வரை பகவானுக்கு முன்புள்ள திரைகள் திறந்தே வைக்கப்படுகின்றன. பகவான் மதன-மோஹனருக்கு முன்பாக ஆண்களும் பகவான் கோபாலருக்கு முன்பாக பெண்களும் என இரண்டு பக்கங்களிலும் பெருந்திரளான மக்கள் நின்று பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். பின்னர், சிலருக்குச் சுவையான பூரி வழங்கப்படுகிறது. மற்றவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு, அதில் சிறிதளவேனும் வாங்கிக்கொள்கின்றனர்.

விருந்தாவனத்தைப் போல அல்லாமல், கரௌலியில் பகவான் கிருஷ்ணருக்கு ஒரேயொரு பிரதான கோயில் மட்டுமே இருப்பதால், இது பக்தர்களை ஒன்று சேர்ப்பதுபோல உள்ளது. இங்கு வருபவர்கள் மதன-மோஹனரின் பெரிய குடும்பத்தில் தாங்களும் ஒருவர் என்று நினைக்கின்றனர்.

கரௌலிவாசிகளை கவனித்துப் பார்த்தால், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ள விருந்தாவனத்தின் பக்திச் சூழல் நினைவிற்கு வருகிறது: “கிருஷ்ணருக்கு பக்தி செய்ய வ்ரஜ பூமி எனப்படும் விருந்தாவனமே சிறந்தது. அங்குள்ள மக்கள் கிருஷ்ணரின் மீது இயல்பாகவே அன்பு வைத்துள்ளனர். கிருஷ்ணரும் அவர்களின் மீது இயல்பாகவே அன்பு வைத்துள்ளார்.”

மதன-மோஹனர் கரௌலிக்கு எப்படி வந்தார்?

பகவான் கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநாபன் என்ற அரசன், மன்மதனையும் வசீகரிக்கும் ஆற்றல் பெற்ற மதன-மோஹனர் உட்பட கிருஷ்ணரின் பல விக்ரஹங்களை விருந்தாவனத்தில் பிரதிஷ்டை செய்தார். அந்த மதன-மோஹனரைக் கண்டுபிடிக்க ஸநாதனர் மிகவும் ஆவல் கொண்டார், வெகுநாள் தேடியும் விக்ரஹம் கிடைக்காததால் அவர் மிகவும் வேதனையுற்றார்.

மிகவும் முன்னேறிய கிருஷ்ண பக்தர் என்பதால், ஸநாதனர் உறங்குவதற்கு விரும்ப மாட்டார். அவர் இரவுபகலாக ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பார். சிறிது நேரம் மட்டும் சற்றே கண்ணயர்வார். ஒருமுறை அவரது கனவில் அழகும் பிரகாசமும் கொண்ட ஒரு சிறுவன் தலையில் மயிலிறகுடனும் கையில் புல்லாங்குழலுடனும் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அந்தச் சிறுவன் கூறினான், “பாபா, நான் மதுராவில் உள்ள தாமோதர சோபேயின் இல்லத்தில் தங்கியுள்ளேன். அவர் என்னை “மதன்யா” என்று அழைக்கின்றார். அவரது இல்லத்திற்கு வந்து என்னை சந்தியுங்கள்.”

மறுநாள் ஸநாதனர் தாமோதர சோபேயின் இல்லத்திற்கு யாசகத்திற்காகச் சென்றார். தாமோதரரின் பத்தினி பிச்சை எடுத்துவர உள்ளே சென்றதும், ஸநாதனர் உள்ளே எட்டிப் பார்த்து அங்கே பகவானின் விக்ரஹம் இருப்பதை உறுதி செய்தார். “எனது உயிரைப் போன்ற இறைவனைக் கண்டுபிடித்து விட்டேன்,” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார். யாசகம் பெற்ற பின்னர், மதன-மோஹனரை தம்முடன் எவ்வாறு அழைத்துச் செல்வது என்ற சிந்தனையுடன் அங்கிருந்து அகன்றார்.

பகவான் கிருஷ்ணர் மீண்டும் ஸநாதனரின் கனவில் தோன்றி, தாமோதர சோபேயின் இல்லத்திற்குத் திரும்பிச் சென்று அவர்களது ஆறாவது குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு அறிவுரை வழங்கினார். மேலும், “அவர்கள் உமது சேவைக்கு வெகுமதியளிக்க விரும்பும்போது, என்னைத் தவிர வேறு எதையும் ஏற்கக் கூடாது,” என்றும் அறிவுறுத்தினார்.

அன்றிரவு தாமோதரர் வெளியூரில் இருக்க, அவரது ஆறாவது குழந்தை பெரிதும் நோய்வாய்ப்பட்டிருந்தான். தாமோதரரின் மனைவி பகவானை நினைத்து இனம் புரியாத கவலையடைந்தாள், இரவு முழுவதும் அவள் உறங்கவில்லை.

காலையில் கதவுக்கு வெளியே ஸநாதன கோஸ்வாமி ஜபம் செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். அந்த காலத்தில் முனிவர்கள் வைத்தியம் செய்வது வழக்கம் என்பதால், அவள் மகிழ்ச்சியுடன் அவரை உள்ளே அழைத்து வந்து, தமது மகனுக்கு வைத்தியம் செய்யுமாறு வேண்டினாள். ஸநாதனரும் ஒப்புக் கொண்டார், சில நாள் சிகிச்சைக்குப் பின்பு அவளது மகன் குணமடைந்தான்.

அப்போது அவள் ஸநாதனருக்கு ஏதேனும் வெகுமதி வழங்க விரும்பினாள். ஆனால் ஸநாதனரோ, “உங்களது பகவான்தான் எனக்கு வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

அவரது வேண்டுகோளைக் கேட்டு அவள் ஆச்சரியமடைந்தாள், கிருஷ்ண விக்ரஹத்தை, அதுவும் கணவர் வீட்டில் இல்லாதபோது கொடுப்பதற்கு அவள் விரும்பவில்லை. இருப்பினும், ஸநாதனரின் வயதான மெலிந்த உடலைப் பார்த்து, “இவரால் எப்படியும் விக்ரஹத்தைத் தூக்கக்கூட முடியாது,” என்று நினைத்தபடி அவள் கூறினாள், “சரி, உங்களால் பகவானைத் தூக்கிச் செல்ல முடியுமெனில், நீங்கள் அவரை எடுத்துச் செல்லலாம்.”

ஸநாதனர் மகிழ்ச்சியுடன் அந்த விக்ரஹத்தை ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல மிகவும் எளிதாகத் தூக்கினார். அந்த கனமான கற்சிலை அவருக்கு மிகவும் லேசாக இருந்தது. ஆச்சரியப்பட்ட அந்தப் பெண் நினைத்தாள், “கிருஷ்ணர் அன்பும் பக்தியும் நிறைந்த இவரது வழிபாட்டை விரும்பி, இவருடன் செல்ல விரும்புகிறார்.”

ஸநாதன கோஸ்வாமி மதன-மோஹனரை விருந்தாவனத்திற்குக் கொண்டு வந்தார். அங்கு ஸநாதனருக்கு சொந்தமான கோயில் எதுவுமில்லை, விக்ரஹத்தை எங்கு வைப்பது என்று கவலைப்பட்டார். “நீங்கள் எங்கே வசிக்க விரும்புகிறீர்கள்?” என்று மதன-மோஹனரிடமே விசாரித்து, அதன்படி யமுனை நதிக் கரையில் கிருஷ்ணர் காளிய நர்த்தனம் புரிந்த இடத்திற்கு அருகே, ப்ரஸ்கந்தன என்னும் படித்துறையில், த்வாதஷாதித்ய-திலா என்னும் குன்றின்மேல் மதன-மோஹனரை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்.

ஸநாதனர் அந்த குன்றின்மேல் ஒரு குடிசையைக் கட்டி மண்ணால் ஒரு பீடத்தை அமைத்து அதன் மீது மதன-மோஹனரை பிரதிஷ்டை செய்தார்.

வீட்டிற்குத் திரும்பிய தாமோதர சோபே ஸநாதனர் பகவானை எடுத்துச் சென்றதை அறிந்து, மனைவிமீது கடும் கோபம் கொண்டார். உடனடியாக அவர் ஸநாதனரைத் தேடி விருந்தா

வனத்திற்குச் சென்று, “எனது மதன்யாவைக் கொடுத்து விடுங்கள்,” என்று வேண்டினார். ஸநாதனரும் அவரிடம், “உங்களால் அவரைத் தூக்க முடிந்தால், நீங்கள் எடுத்துச் செல்லலாம்,” என்ற அதே நிபந்தனையுடன் பகவானை திருப்பித்தர ஒப்புக் கொண்டார்.

ஆயினும், தாமோதர சோபே தமது பலம் முழுவதையும் பயன்படுத்தி, அவரால் பகவானைத் தூக்க முடியவில்லை. அப்போது பகவான் மீதான ஸநாதனரின் அன்பை அறிந்து மகிழ்ச்சியடைந்தார். ஸநாதனரும், “மதன-மோஹனருக்கு உங்களது குடும்பத்தினர் தலைமுறைதலைமுறையாக பூஜாரிகளாக இருந்து சேவை செய்யலாம்,” என்று அவருக்கு உறுதியளித்தார்.

ஏழ்மையில் வாழ்ந்த ஸநாதனரால் பகவானுக்கு சிறப்பான உணவை சமைக்க இயலவில்லை. அவர் கோதுமை மாவை யாசித்து, அதை யமுனையிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரைக் கொண்டு உருட்டி, அடுப்பில் வாட்டி ரொட்டி சமைத்து, அவற்றை உப்புகூட இல்லாமல் பகவானுக்குப் படைப்பார்.

ஸநாதனரின் கனவில் மதன-மோஹனர் தோன்றி, “வறண்ட ரொட்டியைச் சாப்பிட்டு நான் களைத்து விட்டேன், சிறிதளவு உப்பு தர முடியுமா?” என்று வினவினார்.

ஸநாதனர் பதிலளித்தார்: “நீங்கள் ஏற்கனவே எனக்கு குறிப்பிட்ட சேவையை வழங்கியுள்ளீர், இப்போது உப்பு வேண்டுமென்று கூறுகிறீர்கள், நாளை மேலும் பல பொருட்களைக் கேட்பீர்கள். உங்களுக்காக என்னால் பலவகை உணவுப் பண்டங்களை சமைக்க முடியுமா? நான் மிகவும் வயதானவன்.”

(இது பகவானுக்கும் அவருடைய பக்தருக்கும் இடையிலான மிகவுயர்ந்த அன்பு பரிமாற்றமாகும். நூல்களை எழுத வேண்டும் என்றும் விருந்தாவனத்தில் மறைந்துவிட்ட புனித ஸ்தலங்களை மீட்க வேண்டும் என்றும் மதன-மோஹனர் ஏற்கனவே ஸநாதனருக்கு பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் வடிவில் கட்டளையிட்டிருந்தார். ஸநாதனர் அதையே இங்கு நினைவூட்டுகிறார்.)

மறுநாள், மதன-மோஹனரை ஸநாதனர் வழிபட்டுவந்த அந்த யமுனைக் கரையில் உப்பு ஏற்றி வந்த பெரிய படகு ஒன்று தரைதட்டி மாட்டிக் கொண்டது. படகின் உரிமையாளர் உதவி கோரி ஸநாதனரை நாட, அவர் மதன-மோஹனரை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அந்த வியாபாரியும் பகவானை வழிபட, “படகு மீண்டும் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்!” என்று அசரீரி அறிவித்தது. உப்பை விற்று பெரும் இலாபமடைந்த அந்த வியாபாரி 1580-81இல் மதன-மோஹனருக்கு ஓர் அழகிய கோயிலைக் கட்டித் தந்தார்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக மதன-மோஹனர் விருந்தாவனத்தில் வழிபடப்பட்டு வந்தார். விருந்தாவன பகுதியிலுள்ள கோயில்களை ஒளரங்கசீப் அழிக்கத் தொடங்கியபோது, ஜெய்ப்பூர் அரசர் ஜெய்சிங் அவர்கள், மதன-மோஹனர், கோவிந்த தேவர், கோபிநாதர் ஆகிய மூன்று விக்ரஹங்களையும் பாதுகாப்பிற்காக விருந்தாவனத்திலிருந்து ஜெய்ப்பூருக்குக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஜெய்ப்பூரில் சில வருடம் இருந்த பின்னர், மதன-மோஹனர் மீண்டும் விரஜ பூமிக்கு (விரிவுபடுத்தப்பட்ட விருந்தாவனத்திற்கு) திரும்பிச் செல்ல விரும்பினார். எனவே, அவர் ஜெய்சிங்கின் மைத்துனரும் கரௌலியின் மஹாராஜருமான கோபால்சிங்கின் கனவில் தோன்றி, “என்னை கரௌலிக்கு எடுத்துச் செல்” என்று கட்டளையிட்டார். அந்த அரசர் ஏற்கனவே மதன-மோஹனரை வழிபடுவதற்கு விருப்பம் கொண்டிருந்தார், கட்டளையை நிறைவேற்ற தீர்மானித்தார். ஆயினும், ஜெய்சிங்கிடமிருந்து மதன-மோஹனரை அழைத்து வருவது சுலபமானதல்ல. ஏனெனில், ஜெய்சிங்கும் பகவானின் மீது மிகுந்த பற்றுதல் வைத்திருந்தார்.

கோபால்சிங் கரௌலியிலிருந்து ஜெய்பூருக்குச் சென்று மதன-மோஹனரைத் தம்மிடம் தருமாறு ஜெய்சிங்கிடம் கேட்டார். ஆயினும், கோபால்சிங்கின் கதையைக் கேட்ட ஜெய்சிங்கிற்கு அதில் சற்று சந்தேகம் இருந்ததால், ஒரு நிபந்தனை விதித்தார்: “உங்களது கண்களைத் துணியால் மறைத்துக் கட்டி, கோவிந்தர், கோபிநாதர், மதன-மோஹனர் ஆகிய மூன்று விக்ரஹங்களும் இருக்கக்கூடிய அறையில் உங்களை அடைத்து விடுவேன். மதன-மோஹனரை நீங்கள் சரியாக அடையாளம் காட்டினால், அவரை எடுத்துச் செல்லலாம்.”

இரவில் கோபால்சிங் கண்கள் கட்டப்பட்டு பகவானுடைய அறைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் நேராக மதன-மோஹனரிடம் சென்று அவரது தாமரைத் திருவடிகளைப் பற்றிக் கொண்டார்.

எனவே, ஜெய்சிங் பெரும் மரியாதையுடனும் அன்புடனும் கோபால்சிங்கிடம் மதன-மோஹனரை ஒப்படைத்தார். அவர் விக்ரஹத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து கரௌலிக்குக் கொண்டு வந்து நகரத்தின் மையப்பகுதியில் புகழ்பெற்ற குன்றின் மேலிருந்த ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

மதன-மோஹனரை வழிபடுவதன் பலன்

சைதன்ய மஹாபிரபுவைப் பின்பற்றும் கெளடீய ஸம்பிரதாயத்தைச் சார்ந்த வைஷ்ணவர்கள், ஆன்மீக முன்னேற்றத்திற்கான பாதையை ஸம்பந்த, அபிதேய, பிரயோஜன என்று மூன்றாகப் பிரித்துள்ளனர்.

ஸம்பந்த என்றால் கிருஷ்ணருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுதல் என்று பொருள். அபிதேய என்றால் அந்த உறவுமுறையில் சேவை செய்தல் என்று பொருள். பிரயோஜன என்றால் அந்த உறவு முறையில் பக்குவமடைந்து கிருஷ்ண பிரேமை என்ற பழத்தைச் சுவைத்தல் என்று பொருள்.

கெளடீய வைஷ்ணவர்கள் ஸம்பந்த நிலையில் மதன-மோஹனரை வழிபடுகின்றனர். இந்த கிருஷ்ணர் ஜடவுலகின் மயக்கத்திலிருந்து நம்மை விடுவித்து, நம்மை அவரிடம் கவர்ந்திழுத்து, அனாதிகாலமாக நாம் இழந்துவிட்ட தொடர்பை மீண்டும் புதுப்பிக்க உதவுகிறார்.

மதன-மோஹனர் என்ற பெயருக்கு “மன்மதனையும் வசீகரிப்பவர்” என்று பொருள். எல்லா ஆசைகளுக்கும் பற்றுதலுக்கும், குறிப்பாக பாலுணர்வு ஆசைக்கு, அனைவரையும் மயக்குபவர் காமதேவனே. கிருஷ்ணருடனான நமது உறவை நிலைநாட்டுவதற்கு நாம் காமத்தை விட்டொழிக்க வேண்டும். மதன-மோஹனர் தமது அழகிலும் வசீகரத்திலும் நம்மை மயக்கி, தற்காலிக உடல் தொடர்பான ஆசைகளிலிருந்து விடுபட நமக்கு உதவுகிறார்.

பாடலினால் பகவானை மகிழ்விக்கும் உள்ளூர் பக்தை

கோயிலின் தலைமை பூஜாரி (இடப்பக்கம்) பக்தி விகாஸ ஸ்வாமிக்கு மதன-மோஹனரின் வரலாற்றைக் கூறுகிறார்..

கிருஷ்ணர் கோயில்களில் வழக்கமாகக் காணப்படும் துளசிச் செடியை வழிபடும் பக்தை.

ஸநாதனர் மதன-மோஹனருக்கு உப்பில்லாத ரொட்டியை அர்ப்பணித்தல்

உள்ளூர் பக்தர்களின் கீர்த்தனம்

கோயிலின் வாயிலில் பக்தர்கள் காத்திருக்க காவலர்கள் அமைதியாக நிற்கும் காட்சி

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives