வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
Gen Z என்று அழைக்கப்படும் இளைய தலைமுறையினர், பஜன் கிளப்பிங் என்னும் பெயரில் ஒன்றுகூடி, பல்வேறு பஜனைப் பாடல்களைப் பாடுவது இன்று டிரண்டிங் ஆகியுள்ளது. இந்நிகழ்ச்சிகளில், மின்னணு தாளங்கள், லோ-ஃபை (lo-fi) ஒலிகள் போன்றவற்றுடன் பக்திப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. நவீன இந்தியர்கள் தங்களது அடித்தளத்தை மறக்காமல், பக்தி, பண்பாடு, ஆன்மீகம் ஆகியவற்றை Gen Zக்கு ஏற்ற வகையில் ஒரு ஃபியூஷனாக முன்வைத்துள்ளனர். இந்தப் புதுமையான முயற்சியை, பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டுகின்றனர்.
மறுபுறம், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு அவ்வப்போது இசைக் கருவிகளைக் கைப்பற்றி தீயிட்டு வருகிறது. இதுவரை 21,000க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைப் பொசுக்கியதாக, அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். இறைவனை அறியும் வழியில் இசை ஹராம் (தவிர்க்க வேண்டியது) என்பது அவர்களது நிலைப்பாடாக உள்ளது.
ஆன்மீக முன்னேற்றத்திற்கு இசை ஒரு தடையா, அல்லது ஒரு துணையா? இசையினால் இறைவனை அறிய முடியுமா? சற்று ஆராயலாம், வாருங்கள்.
இசையும் மனித இயல்பும்
மனிதன் இயல்பாகவே இசைக்கு மயங்குபவனாக உள்ளான். குழந்தை தாலாட்டுப் பாடலைக் கேட்டு உறங்குகிறது; வளர்ந்தவன் திரைப்படப் பாடலைக் கேட்டு மகிழ்கிறான்; ஆன்மீகவாதிகள் பக்திப் பாடலில் லயிக்கின்றனர். இவ்வளவு ஏன், மரணம் நிகழ்ந்த வீட்டில்கூட ஒப்பாரி பாடி ஆறுதல் பெறுகின்றனர். ஆகவே, மனிதனின் இன்பதுன்பங்களில் இசை முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்கவியலாது. இது பயிற்சியால் உருவான பண்பு கிடையாது; மனிதனின் உள்ளார்ந்த இயல்பு.
வேதப் பண்பாட்டில் இசையின் முக்கியத்துவம்
பாரதப் பண்பாட்டில், வேத மந்திரங்கள் குறிப்பிட்ட சந்தத்துடன் உச்சரிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஸாம வேதம் முழுவதும் இசை வடிவத்தில்தான் அமைந்துள்ளது. நாட்டியம், பாடல், தாளம், இசைக் கருவிகள் ஆகியவை அனைத்தும் வழிபாட்டுடன் இயற்கையாக இணைந்துள்ளன.
ஸநாதன தர்மத்தில் காணப்படும் தேவ தேவதைகள் அனைவரின் கைகளிலும் வீணை, மத்தளம், மிருதங்கம், ஊதுகுழல் என ஏதோவோர் இசைக் கருவியைக் காணலாம். சிவபெருமானின் உடுக்கையும், பகவான் விஷ்ணுவின் சங்கும்கூட இசைக் கருவிகளே. ஸாமகாய: (ஸாம வேதத்தால் பாடப்படுபவர்) என்னும் பெயரை விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் காண்கிறோம்.
இசை ஒரு பொழுதுபோக்கா?
ஆயினும், இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், இசை ஒரு மாயை போலத் தோன்றலாம். அதிகபட்சமாக, இசையை ஒரு பொழுதுபோக்கு என்றே கருதலாம். பொழுதைப் போக்குபவர்களால் இறைவனை எவ்வாறு உணர முடியும்? இசை மனதை மயக்குவதாக இருப்பின், மயக்கத்திலிருந்து விடுபட விரும்பும் ஆன்மீகவாதிகள், இசையிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமல்லவா!
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று வாழ்ந்தால், இறைவனை எவ்வாறு உணர முடியும்? வாழ்வின் நோக்கத்தை அறிந்தவன் நொடிப் பொழுதையும் வீணடிக்க விரும்புவதில்லை (ஸ்ரீமத் பாகவதம் 11.9.29). அவ்வாறு இருக்கையில், பொழுதுபோக்கில் ஏன் நேரத்தைச் செலவிட வேண்டும்?
இந்த முரண்பட்ட கருத்துகளுக்குத் தீர்வு என்ன?
இசையில் மூன்று குணம்
இதற்கான பதிலை, இயற்கையின் முக்குணங்களை ஆராய்வதன் மூலம் அறியலாம். ஜடவுலகிலுள்ள ஒவ்வொன்றிலும் நற்குணம் (ஸத்வம்), தீவிர குணம் (ரஜஸ்), அறியாமை குணம் (தமஸ்) ஆகிய முக்குணங்கள் இருப்பதை நாம் அறிவோம். நற்குணம் உயர்வைத் தருகிறது; தீவிர குணம் இவ்வுலகில் செயல்பட உதவுகிறது; அறியாமை குணம் இழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. எனவே, எந்தவொரு செயலாக இருந்தாலும், அஃது எந்த குணத்தில் செய்யப்படுகிறது என்பதை வைத்தே அதன் விளைவைத் தீர்மானிக்க முடியும். (காண்க, பகவத் கீதை, அத்தியாயம் 14)
இசையும் இதற்கு விதிவிலக்கன்று. அதாவது, நாம் எத்தகைய இசையில் ஈடுபடுகிறோம் என்பதை வைத்தே இசை நம்மை உயர்த்துமா தாழ்த்துமா என்பதைத் தீர்மானிக்க முடியும். “இசை” என்று பொதுவாக வைத்து முடிவு செய்ய இயலாது.
அதன்படி, சோம்பல், பைத்தியக்காரத்தனம், இருள், மயக்கம் ஆகியவற்றைத் தூண்டும் இசை தமோ குணத்தைச் சார்ந்தது; சாவுக்கு வாசிக்கப்படும் தாரை- தப்பட்டை, குடி போதையுடன் நிகழும் பார்ட்டி இசை முதலியவற்றை இத்தகு இசைக்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
அடுத்ததாக, காமம், கோபம், ஏக்கம் ஆகியவற்றைத் தூண்டும் இசை ரஜோ குணத்தைச் சார்ந்தது; காம உணர்ச்சிகளைத் தூண்டும் பாடல்கள், தும்-தும்-தும் என்று வெறியையும் வேகத்தையும் தூண்டும் இசைக் கருவிகள், குத்தாட்டம் முதலியவற்றை இத்தகு இசைக்கான எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
இறுதியாக, பாவத்திலிருந்து விடுவித்து, ஞானத்துடன் தொடர்பு கொண்டு அமைதியைத் தூண்டும் இசை ஸத்வ குணத்தைச் சார்ந்தது; நற்பண்புகளை போதிக்கும் பாடல், வீணை, புல்லாங்குழல், கடம் முதலிய கருவிகளுடன் நிகழும் கச்சேரிகள், பெரும்பாலான வேத மந்திர உச்சாடனங்கள்—இவை அனைத்தும் இத்தகு இசைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
வேத மொழி, ஸத்வத்திற்கு அப்பாற்பட்டது
அதே சமயத்தில், மேற்கூறிய முக்குணங்களும் மனிதனை ஜடவுலகில் பந்தப்படுத்துகின்றன என்பதையும், முக்தி பெற விரும்பும் ஆன்மீகவாதிகள் அவற்றைக் கடக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. (பகவத் கீதை 2.45, 14.26)
ஆகவே, ஆன்மீகவாதிகள் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட இசையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதாவது, எந்த ஒலி நம்மை பௌதிக உலகத்துடன் பந்தப்படுத்தாதோ, அந்த ஒலியையே நாம் பற்றிக்கொள்ள வேண்டும். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் நாமம், ரூபம், குணம், லீலை மற்றும் பரிவாரங்களைப் பற்றிய பாடல்களும், அவற்றிற்கு உதவும் சந்தங்களும், இசைக் கருவிகளும் சுத்த-ஸத்வ குணத்தைச் சார்ந்தவை.
பார்ப்பதற்கு ஒன்றுபோலத் தோன்றினாலும்—பௌதிக இசை நம்மைத் தாழ்த்தும்; தெய்வீக இசை நம்மை உயர்த்தும்.
இசை எவ்வாறு முக்குணத்தைக் கடக்கிறது?
இங்கு ஒரு கேள்வி எழலாம்: “ஒலி என்பது ஒரு பௌதிக வஸ்து. அவ்வாறு இருக்கையில், அஃது எவ்வாறு பௌதிகத்திற்கு (முக்குணங்களுக்கு) அப்பாற்பட்ட நிலையைக் கொடுக்க முடியும்?”
இதற்கான பதில் இதுவே: பகவான் இவ்வுலகினுள் அவதரித்தாலும், அவர் எவ்வாறு முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவராக தொடர்கிறாரோ, அவ்வாறே அவரைச் சார்ந்தவையும்—நாமம், ரூபம், குணம், லீலை முதலியவையும்—முக்குணத்திற்கு அப்பாற்பட்டவையே. (ஸ்ரீமத் பாகவதம் 1.11.38) “கிருஷ்ண” என்னும் ஒலியை நாம் பௌதிக நாவிலிருந்து உச்சரித்தாலும், அது பகவானுடைய திருப்பெயர் என்பதால், முற்றிலும் ஆன்மீகமான வஸ்துவாகும். ஆகவே, இந்தத் திருநாமங்கள் முக்குணங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டுள்ளன.
மேலும், பக்தர்கள் பகவானின் மகிழ்ச்சிக்காக ஆன்மீக உலகில் பயன்படுத்தக்கூடிய (சுத்த-ஸத்வ) இசைக் கருவிகளை, நாமும் அவரது மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்தினால், அவை முக்குணங்களைக் கடந்துவிடுகின்றன. அதாவது, கருவி ஒன்றுதான்; ஆனால் அதன் பயன்பாட்டைப் பொறுத்து, அது ஸத்வ குணமா, சுத்த-ஸத்வமா என்று தீர்மானிக்கப்படுகிறது. அதே சமயத்தில், ரஜஸ்-தமோ குணத்திற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு, ஆன்மீக உலகில் இடமில்லை என்பதையும் கவனத்தில் நிறுத்த வேண்டும்.

போலியான துறவு
பக்திக்கு உதவும் இசைக் கருவிகளைத் துறப்பது போலியான துறவாகும். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தமது ஸ்ரீ சைதன்ய பாகவத உரையில் (2.23.102) பின்வருமாறு கூறியுள்ளார்: “பாரதவாசிகள் ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், மற்றும் பாஞ்சராத்ரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதி–நியமங்களைப் பின்பற்றி பகவானை வழிபடுகின்றனர். இந்த முறையில், இசைக் கருவிகளைப் பயன்படுத்துவதும் இடம் பெறுகிறது. ஆயினும், பாவகரமான மக்கள், முழுமுதற் கடவுளின் திருமேனியை பௌதிக உலகை அனுபவிக்கும் சாதாரண ரூபங்களுக்கு சமமாகக் கருதுகின்றனர்; அதன் காரணமாக, இசையும் இசைக் கருவிகளும் பகவானின் சேவைக்குத் தடைகளாக இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர்.
“ஹரியுடன் தொடர்புடைய வஸ்துக்களை பௌதிகமானவை என்று எண்ணி விலக்குவோர், ஹரியின் சேவைக்கு அனுகூலமான செயல்களையே அனுகூலமற்றவை என்று கருதுகின்றனர். துறவின் தன்மையை இவ்வாறு தவறாகப் புரிந்துகொள்வோர், முழுமுதற் கடவுளின் தொண்டில் இசைக் கருவிகளைப் பயன்படுத்த மாட்டார்கள். இது பல்கு-வைராக்யம் (பொய்யான துறவு) எனப்படுகிறது.”
ஆன்மீக உலகில் இசைக் கருவிகள்
மனிதன் இசையில் ஆர்வத்துடன் இருப்பதற்கான மூல காரணம் இதுவே: எல்லாவற்றின் ஆதி மூலமாக இருக்கும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவும், இசையில் ஆர்வமுடையவராக இருப்பதுதான். கிருஷ்ணரிடம் இருக்கும் எல்லாத் தன்மைகளும் குறுகிய அளவில் ஜீவன்களிடமும் இருப்பதால்தான், ஜீவன்கள் இசையில் ஆர்வம் கொண்டுள்ளனர். இருப்பினும், அந்த ஆர்வம் திரிபடையும்போது, அது பௌதிக இசையாக வெளிப்படுகிறது.
கிருஷ்ணரின் கையில் எப்போதும் குழலும் கொம்பும் இருக்கின்றன; அவருடன் இருப்பவர்கள், அவரது இன்பத்திற்காக, பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் எப்போதும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். விஷ்ணுவின் கையில் எப்போதும் சங்கு இருக்கிறது; வைகுண்டவாசிகள் பல்வேறு இசைக் கருவிகளை வாசித்து, பகவானின் பெருமைகளைப் பாடி ஆடுகின்றனர். ஆன்மீக உலகில் ஒவ்வோர் அசைவும் நடனமே; ஒவ்வொரு பேச்சும் பாடலே. ஆடலும் பாடலும் அந்த உலகின் இயல்பான தன்மைகள். (பிரம்ம சம்ஹிதை 5.56)
புல்லாங்குழலின் கலி யுக அவதாரம்
பகவான் கிருஷ்ணர் இவ்வுலகிற்கு ஸ்ரீ சைதன்யராக வந்தபோது, ஆன்மீக உலகின் தெய்வீக நிலையை அப்படியே வழங்கும் பொருட்டு, அவரது புல்லாங்குழல், கலி யுகத்தில் மிருதங்கமாக உருவெடுத்தது. கௌடீய ஸம்பிரதாயத்தில் பயன்படுத்தப்படும் விசேஷ அமைப்பு கொண்ட மிருதங்கம், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் சுயமாக வடிவமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அவர், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திர கீர்த்தனத்திற்காக, பிரத்யேகமாக உருவாக்கினார். ஆகவே, மஹா மந்திரத்தின் பதினாறு நாமங்களை நினைவுபடுத்தும் வண்ணம் 16 வார்களுடன் மிருதங்கத்தைக் கொடுத்தார்.
மிருதங்கமும் கரதாளமும், சாதாரண பௌதிக ஒலியை எழுப்புவதில்லை. இவை சுத்த-ஸத்வ குணத்தைச் சார்ந்த இசைக் கருவிகள். பகவானது திருநாம கீர்த்தனத்துடன் இணைக்கப்படும்போது, இவை தெய்வீக இசையைக் கொடுத்து, கிருஷ்ணருடனான உறவில் இணைவதற்கு வழிவகுக்கின்றன. அதே சமயத்தில், ஒரு ஜீவனை மயக்கி, முழுமுதற் கடவுளின் சேவையிலிருந்து அவனை திசைதிருப்பக்கூடிய இசைக்கருவிகளை நிச்சயமாக விலக்கிவைக்க வேண்டும்.
கீர்த்தனத்தில் இதர இசைக் கருவிகள்
கிருஷ்ணரின் திருநாமம் புனிதமானது; இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டது. ஆகவே, திருநாமத்தை எந்த இசைக் கருவியுடன் இணைத்து பாடினாலும், அது நிச்சயம் பலனைக் கொடுக்கும்—எப்படிப் பாடினாலும் நன்மை கிடைக்கும். தமோ குணத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் ராக் இசையில்கூட, திருநாமத்தைப் பாட முடியும். ஆயினும், சுத்த-ஸத்வ நிலையிலுள்ள மிருதங்கம், கரதாளத்துடன் இணைந்து கிருஷ்ண நாமத்தைப் பாடும்போது, அது முழுமையான பலனை அளிக்கிறது.
இதனால்தான், ஆச்சாரியர்கள் பாரம்பரிய இசைக் கருவிகளையே பரிந்துரைக்கின்றனர். ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பின்வரும் வரிகள் நம்மைத் தெளிவாக எச்சரிக்கின்றன: “மிருதங்கம், கரதாளம் முதலிய பாரம்பரிய இசைக் கருவிகள் புறக்கணிக்கப்பட்டு, நவீன வெளிநாட்டு இசைக் கருவிகள் கீர்த்தனங்களுக்குள் நுழைந்தால், அங்கே நல்ல பொழுதுபோக்கு இருக்கலாம்; ஆனால் ஸ்ரீ பக்தி தேவி படிப்படியாக உடைக்கப்படுகிறாள்!” (ஸஜ்ஜன தோஷணி 11.3)
Gen Z இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இளைஞர்களே, பஜனையுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளில் தங்களது ஆர்வத்தை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஊக்குவிக்கிறோம். இது நிச்சயமாக நன்மை பயக்கும். இறைவனை அறிவதற்கு இசை தடையாக இருப்பதில்லை என்பதை இங்கு ஆணித்தரமாக உரைக்க விரும்புகிறோம்; உண்மையில், இசை இறைவனை அடையக்கூடிய ஒரு சக்திவாய்ந்த பாதை.
அதே சமயத்தில், அந்த இசை பஜனை ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலின்படி இருந்தால், அது நம்மை கிருஷ்ணரை நோக்கி இன்னும் விரைவாக அழைத்துச் செல்லும். மிருதங்கம், கரதாளத்துடன் கூடிய கீர்த்தனம் பழைய ஸ்டைல் என்று நினைத்துவிட வேண்டாம்—இத்தகு கிருஷ்ண கீர்த்தனம் நிச்சயமாக உங்களை ஆட வைக்கும், பாட வைக்கும், மகிழ்ச்சி வெள்ளத்தில் நிரப்பும்; மற்றும் நிலையான ஆனந்தத்தையும் வழங்கும். இந்த வழிமுறை அன்றும் இன்றும் என்றும் நம்மை உயர்த்தக்கூடியது. ஒருமுறை வந்து பாருங்கள்; பழையது என்று நினைத்தது புதியதாக உணரப்படும்.
ஆகவே, தயக்கம் வேண்டாம். காசு கொடுத்து பஜன் கிளப்பிங் நிகழ்ச்சிக்குச் சென்று இசையைக் கேட்டு ஆடுவதற்கு பதிலாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் இஸ்கான் கோயில்களில் வாரந்தோறும் நிகழும் ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஆடிப்பாடி மகிழுங்கள்.






