வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்
புண்ணியம் செய்து ஸ்வர்கம் செல்லலாம் என்பது வேத வாக்கியம். ராக்கெட்டுகளால் வேறு லோகத்திற்குச் செல்லலாம் என்பது இன்றைய விஞ்ஞானிகளின் கூற்று. வேத சாஸ்திர கருத்துகளுக்கு எதிராக நாத்திகர்கள் முன்வைக்கும் பல்வேறு கூற்றுகளின் வரிசையில், விண்கலங்களின் உதவியுடன் வேற்று கிரகங்களுக்கு (அல்லது ஸ்வர்கத்திற்கு) செல்லுதல் சாத்தியம் என்றும் அவர்கள் பிரகடனம் செய்கின்றனர். பகவத் கீதை முதலிய சாஸ்திரங்களின் அடிப்படையில் இதனை ஆராய்ந்து வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வேற்று கிரக பயணம்
தற்சமயம் பூமியில் குடிநீர், உணவு தானியங்களை விளைவிப்பதற்கான செழிப்பான நிலம், வசிக்கும் இடம், தூய்மையான காற்று, கச்சா எண்ணெய் முதலிய இயற்கை வளங்களின் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற கிரகங்களுக்கு குடிபெயர்வதன் மூலம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான தீவிர ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இம்முயற்சியில் சிறிதளவு முன்னேற்றம் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முயற்சியில் அவர்களுக்கு முழு வெற்றி கிட்டும் என்பது நிச்சயமல்ல.
சவால்கள்
நாம் வாழும் பூமியில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எளிமையாக சென்று வருகிறோம். ஆனால் சென்னையிலிருந்து மதுரைக்கு இரயிலில் செல்வதைப் போன்றோ மும்பையிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு விமானத்தில் செல்வதைப் போன்றோ வேற்று கிரகங்களுக்குச் செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. கிரகங்கள் எப்போதும் சுற்றிக் கொண்டே இருப்பதால் அவற்றிற்கு இடையிலான தூரமும் பாதையும் மாறிக் கொண்டே இருக்கும். நாம் வாழும் பூமியிலேயே அதிகப்படியான குளிர்ச்சியினாலும் அதிகப்படியான வெப்பத்தினாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினாலும் மனிதன் வாழத் தகுதியற்ற இடங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, இமயமலையின் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்வதற்குகூட பல நாள் முறையான பயிற்சியும் பனியைத் தாங்குவதற்கு ஏதுவான உடைகளும் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனும் தேவைப்படுகிறது. இமயமலையின் உச்சியை அடைந்தாலும் அங்கு வெகுநாள் வசிப்பதற்கு நமது உடல் ஒத்துழைக்காது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே!
அவ்வாறு இருக்கையில் பூமிக்கு அப்பால் வெகுதொலைவிலுள்ள வானுலகங்களுக்கும் ஸ்வர்க லோகத்திற்கும் பிற கிரகங்களுக்கும் செல்லும் பாதையினை வகுத்து இதே உடலில் அப்பாதையைக் கடந்து சென்று அங்கு தங்கி சுகங்களை அனுபவிக்கலாம் எனும் எண்ணம் கடினமானதாகவே தோன்றுகிறது. இத்தகைய முயற்சி எத்தகைய பயனை அளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவும் மர்மமாகவும் உள்ளது.
அப்படியென்றால் மனிதன் நிலவிற்கு வெற்றிகரமாக சென்று திரும்பியது எவ்வாறு என்கிற வினா எழலாம். கடந்த ஏப்ரல், 2014ம் பிரதியில் வெளிவந்த “நிலவில் கால்பதித்த மனிதன்” எனும் கட்டுரையில் இதற்கான விடையும் அதன் தொடர்பாக உள்ள மேலும் பல சிக்கல்களும் சவால்களும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அக்கட்டுரையை பக்கத்திலுள்ள QR Code மூலமாக இணையத்தளத்தில் படிக்கலாம்.
இன்றைய விஞ்ஞானமும் வேத விஞ்ஞானமும்
விஞ்ஞானிகள் சோதனைகள் (experiments) மற்றும் கண்காணிப்பின் (observations) மூலமே பிரபஞ்சத்தைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றனர். இத்தகைய தகவல்கள் பக்குவமற்ற ஸ்தூல புலன்களால் பெறப்படுவதால் அவை பக்குவமான அறிவாகாது; அனுமானங்களே. எனவே, பௌதிக இயற்கையைப் பற்றிய முழுமையான அறிவைப் பெற வேண்டுமாயின் குறைபாடுகளுடைய புலன், மனம், புத்தி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட வேத சாஸ்திரங்களை அணுகுதல் இன்றியமையாததாகும்.
குருக்ஷேத்திர போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு வழங்கப்பட்ட உபதேசங்களே எல்லா வேத சாஸ்திரங்களின் சாராம்சம் என அனைத்து வேத நிபுணர்களும் சாதுக்களும் ஆச்சாரியர்களும் அறிவிக்கின்றனர். எனவே, பிற கிரகங்களுக்கான பயணக் குறிப்புகளை எடுத்துரைக்கும் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களை கருத்தில்கொள்ளாத நவீன கல்விக்கூடங்களின் பாடங்கள் என்ன பயனளிக்கும்? மனிதன் வேற்று கிரகங்களுக்கு பயணம் செய்வதுகுறித்து பகவத் கீதை என்னதான் கூறுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
கீதை காட்டும் பாதை
பௌதிக உலகில் கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன என்றும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் பல கிரகங்கள் உள்ளன என்றும் வேத சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அவையனைத்து பிரபஞ்சங்களிலும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய செயல்களை தாமே நிறைவேற்றுவதாகவும் இப்பிரபஞ்சங்கள் அனைத்தும் தம்மால் மீண்டும்மீண்டும் படைக்கப்பட்டு அழிக்கப்படுவதாகவும் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையின் ஒன்பதாம் அத்தியாயத்தில் (9.4–10) கூறுகிறார். மேலும், வேதங்களைக் கற்று அவற்றில் வழங்கப்பட்டுள்ள யாகங்களையும் தவங்களையும் புரிந்து புண்ணியங்களைச் சேகரிக்கும் ஒருவன், மரணத்திற்குப் பின்னர் ஸ்வர்க லோகங்களில் பிறந்து அங்குள்ள சுகபோகங்களை அனுபவிக்கின்றான் என்றும் அவர் பகவத் கீதையில் (9.20–28) தெரிவிக்கின்றார். எனவே, ஒருவன் இதே உடலில் ஸ்வர்க லோகங்களுக்கோ பிற கிரகங்களுக்கோ செல்ல முடியாது என்பது பகவத் கீதையில் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
வேற்று கிரக வாழ்க்கை
ஆத்மாவின் இயல்பு ஆனந்தமாக இருப்பதே என்பதால், பூலோகத்தில் பல சங்கடங்களில் சிக்கித் தவிக்கும் கட்டுண்ட ஆத்மாக்களின் மனதில் பிற கிரகங்களுக்குச் சென்றாலாவது பிரச்சனைகளின்றி நிரந்தரமாக மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிக்க முடியுமா என்ற எண்ணம் எழுவது இயல்பே. ஆனால், ஸ்வர்க லோகங்களில் அனுபவிக்கும் சுகபோகங்கள் தற்காலிகமானவை என்றும், நமது புண்ணியங்கள் தீர்ந்தவுடனேயே நாம் மீண்டும் பூலோகத்தில் பிறவியெடுக்க நேரிடும் என்றும் பகவத் கீதையில் (9.20–21) பகவான் எச்சரிக்கிறார். எனவே, புண்ணியங்களின் மூலம் கிட்டும் ஸ்வர்கம் அல்லது உயர்லோக வாழ்வு நிரந்தரமற்றது. அப்படியிருக்கையில் தர்ம கோட்பாடுகளை மீறி கோடானகோடி பாவச் செயல்களில் ஈடுபடும் நவீன விஞ்ஞானிகளால் அதுவும் இதே பூதவுடலில் வானுலகங்களுக்கு ராக்கெட்டில் அழைத்துச் செல்லுதல் எவ்வாறு சாத்தியமாகும்? புத்திமான்களே சற்று சிந்தியுங்கள்! தவிக்கும் பூலோக வாழ்விலிருந்து விடுபட்டு ராக்கெட்டில் ஸ்வர்க லோகம் செல்லலாம் என்பது கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பி நெருப்பில் குதித்த கதையன்றோ?
இறுதி தீர்வு
அப்படியெனில் நிரந்தரமான ஆனந்தத்தைப் பெறுவதற்கு வழியே இல்லையா எனும் உங்களது ஆதங்கம் எமது காதில் விழுகிறது. நிச்சயம் உண்டு! இதற்கான தீர்வை பகவானே பகவத் கீதையில் (8.21, 15.6) கூறுகிறார், “என்னுடைய திருநாடு எல்லா பௌதிக லோகங்களைக் காட்டிலும் உயர்ந்தது. துயரங்களற்றது, முற்றிலும் ஆனந்த மயமானது. ஒருமுறை அவ்விடத்தை அடைந்தபின் யாரும் மீண்டும் பௌதிக லோகங்களுக்குத் திரும்பிவர வேண்டிய அவசியம் இல்லை.” எனவே, பகவத் கீதையின் உபதேசங்களை ஏற்று ஆனந்தமயமான வாழ்வை அடைவதற்கான பக்தி யோகத்தை பயில்வதே ஆத்மாவின் நற்பயனாகும்.
வழிமுறை
கிருஷ்ணரின் திருநாட்டிற்குச் செல்ல முடியும். பிரம்மலோகம் வரை சென்றாலும் நாம் திரும்பி பூலோகத்திற்கு விழும் அபாயம் உண்டு, ஆனால் பகவானின் திருநாட்டை அடைந்தவர்கள் மீண்டும் பூலோகத்திற்கு வருவதில்லை என்று பகவத் கீதையில் (8.16) கிருஷ்ணர் உத்தரவாதம் அளிக்கின்றார்.
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ ’ர்ஜுன
“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலை விட்ட பின், மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகின்றான்.” (பகவத் கீதை 4.9)
முடிவு
வேத சாஸ்திரங்களின் உதவியின்றி பௌதிகக் கல்வியின் மூலம் ஸ்வர்கம் அல்லது வானுலகங்களைச் சென்றடைய முயலுதல் என்பது, நிச்சயம் நங்கூரம் விலக்காத படகில் கடலைக் கடக்க முயல்வதைப் போன்றதாகும். அப்படியே அங்கு சென்றாலும் அது நிரந்தரமான வாழ்க்கை அல்ல என்பதால், நிரந்தரமான இன்பத்தை வழங்கும் இறைவனின் திருநாட்டிற்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றுதல் தலைசிறந்ததன்றோ!