ஜட பரதரின் வாழ்க்கை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 9–12

சென்ற இதழில் பரத மஹாராஜரின் சீரிய ஆட்சி, அவர் துறவறம் மேற்கொண்டு கானகம் செல்லுதல், தவ வாழ்வில் ஈடுபடுதல், மானின் தொடர்பால் மானாகப் பிறத்தல் ஆகியவற்றைக் கண்டோம். இந்த இதழில் மான் பிறவியிலிருந்து மனிதப் பிறவியை அடைந்த அவரது அற்புத செயல்களைக் காண்போம்.

மானிலிருந்து மனிதனாகுதல்

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருந்தன. பக்தரல்லாத தமது உற்றார் உறவினர்களைக் கண்டு எங்கே தான் மீண்டும் வீழ்ந்துவிடுவோமோ என்று அஞ்சினார். அவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதற்காகவே தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போன்றும் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் காட்டிக் கொண்டார். அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை அவருக்கு வேத சாஸ்திரங்களிலும் சடங்குகளிலும் போதிய பயிற்சி அளிக்க விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அவை அனைத்திலும் அவர் தோல்வியடைந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜட பரதரின் தந்தை மரணமடைந்தார். அவரது தாயாரும் மகனை கணவனது முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி தன் கணவன் சென்ற உலகை அடைந்தாள். பரதரின் மாற்றாந்தாய் வயிற்று சகோதரர்கள் வேதங்களில் தேர்ச்சி பெற்ற பிராமணர்களாக இருந்தபோதிலும், ஜட பரதரின் பக்தி நிலையை அறிந்துகொள்ள இயலாதவர்களாக இருந்தனர்.

ஜட பரதர் தமது சகோதரர்கள் கூறும் வேலையைச் செய்தபடி, அவர்கள் வழங்கும் குருணை அரிசி, புண்ணாக்கு, கஞ்சி, உமி, தவிடு, தீய்ந்து போன சாதம் முதலிய எதுவானாலும், அதனை அமிர்தம் போன்று மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

(குறிப்பு: உடலைப் பராமரிப்பதில் ஆர்வமின்றி, எந்நிலையிலும் திருப்தியுடன் இருப்பவர் இரு வகைப்படலாம். ஒருவன் பைத்தியக்காரன், மற்றொருவர் பரமஹம்சர் அல்லது முக்தி பெற்ற ஆத்மா.)

பத்ரகாளி ஜட பரதரைக் காத்தல்

ஒருசமயம் கொள்ளைக் கூட்டத் தலைவன் தனக்கு ஒரு புதல்வனைப் பெற விரும்பி பத்ரகாளிக்கு நரபலி கொடுக்க திட்டமிட்டான். அதற்காக மந்தமதி படைத்த மிருகம் போன்றிருந்த ஒரு மனிதனைப் பிடித்து வைத்திருந்தான். பலி தருவதற்கு ஒருநாள் முன்பு, அந்நபர் தப்பித்து சென்றுவிடவே, அவனைக் கண்டுபிடிக்க தனது ஆட்களை அத்தலைவன் ஏவினான். பல இடங்களில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் ஜட பரதரை பலி கொடுப்பதற்குப் பிடித்துச் சென்றனர். அவரைப் பலியிடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்ட பூசாரி, அவரை வெட்டுவதற்காக வாளை உயர்த்தினான்.

ஜட பரதரின் உயர்நிலையை நன்கு அறிந்திருந்த பத்ரகாளி, பரதரை பலியிடத் துணிந்த கொடூர செயலைக் கண்டு கோபாவேசத்துடன் விக்ரஹத்திலிருந்து வெளியே தோன்றினாள். பொறுக்க முடியாத கோபத்தினால், தேவியின் புருவங்கள் நெறித்தன; கண்கள் சிவந்தன; கோரை பற்களைக் கொண்ட அவள் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக காட்சி அளித்தாள். ஜட பரதரை வெட்டுவதற்காக வைத்திருந்த அதே வாளினால் பாவிகளான அந்த திருடர்களின் தலைகளை அவள் வெட்டி வீழ்த்தினாள், அக்கயவர்களின் தலைகளைப் பந்தாடினாள். தூய பக்தர்களான மஹாத்மாக்கள் தங்கள் தலைகள் துண்டிக்கப்படப் போவதாக அச்சுறுத்தப்படினும் அவர்கள் எப்போதும் அமைதியாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக விரோத உணர்வுடையவர்கள் குற்றம் இழைக்கும்போது நிச்சயமாக தண்டிக்கப்படுகின்றனர்.

தூய பக்தரான ஜட பரதரை பலி கொடுக்க முற்பட்டபோது கொள்ளையர்களின் தலையை பத்ரகாளி வெட்டி வீழ்த்துதல்

மன்னர் ரஹூகணரின் கண்டிப்பு

சிந்து மற்றும் ஸெளவீர தேசங்களின் மன்னன் ரஹூகணர் இக்ஷுமதி நதிக்கரை வழியாக கபிலாஸ்ரமத்திற்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பல்லக்கைத் தூக்குவதற்கு மேலும் ஓர் ஆள் தேவைப்பட்டது. அப்போது, மன்னரின் பணியாட்கள் தற்செயலாக அந்தண குல திலகமான பரதரைக் கண்டனர். வாலிபனாகவும் நல்ல பருமனான உடற்கட்டுடனும் இருந்த பரதரை பல்லக்கு தூக்கும்படி அவர்கள் கட்டாயப்படுத்தினர். பரதரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பல்லக்கைச் சுமக்கலானார்.

ஜட பரதர் பல்லக்கைச் சுமந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில், ஊர்ந்து செல்லும் எறும்புகளுக்கு எவ்விதத் துன்பமும் நேரக் கூடாது என்று மூன்றடிகளுக்கு ஒருமுறை நின்று சென்றார். இதனால் பல்லக்கு தூக்கும் மற்றவரோடு இணைந்து அவரால் நடக்க முடியவில்லை. இதன் காரணமாக, பல்லக்கு கோணலாகத் தடுமாறிச் சென்றது. இதனால் பல்லக்கில் அமர்ந்திருந்த மன்னர் ரஹூகணர் பல்லக்கு சுமப்பவர்களை நோக்கி, “பல்லக்கு ஏன் கோணலாகச் செல்கிறது? ஒழுங்காகச் செல்லுங்கள்என்று உத்தரவிட்டார்.

பல்லக்கு சுமப்பவர்கள், “மன்னரே! இதற்கு காரணம் ஜட பரதரே, நாங்களல்லஎன்று தெரிவித்தனர். இதனால் ஜட பரதரை மன்னர் ஏளனமாகவும் வஞ்சப் புகழ்ச்சியாகவும் பேசி கண்டித்தார். ஆனால் பல்லக்கு அதன் பிறகும் சரியாகச் செல்லாததைக் கண்டு கோபமுற்ற ரஹூகணர், “அட முட்டாளே, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உடலில் உயிர் இருந்தும் இறந்துவிட்டாயா? எனது கட்டளையை நிறைவேற்றாமல் என்னை அவமதித்து விட்டாய். மரண தேவனான எமராஜன் எவ்வாறு பாவிகளைத் தண்டிப்பாரோ, அதுபோல பணிவில்லாத உன்னையும் நான் தண்டிக்கப் போகிறேன். அப்பொழுதுதான், நீ சரியான வழிக்கு வருவாய்,” என்று எச்சரித்தார்.

ஜட பரதர் புத்திமதி கூறுதல்

மன்னனின் பேச்சைக் கேட்ட ஜட பரதர் கூறினார், “அன்பார்ந்த மன்னரே! தாங்கள் ஏளனமாகக் கூறியவை அனைத்தும் சத்தியமே. தாங்கள் வழங்கப் போகும் தண்டனை உண்மையில் எனக்கானவை அல்ல, எனது உடலோடு மட்டுமே தொடர்புடையவை, நானோ உடலிலிருந்து வேறுபட்டவன். எனவே, தாங்கள் குறிப்பிட்டபடி நான் மெலிந்தவனோ தடித்தவனோ அல்ல. நீர் உம்மை அரசனாகவும் எஜமானாகவும் நினைத்து கட்டளையிட முயற்சிக்கும் வரை உடல்ரீதியான கருத்துகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இந்நிலை விதியின் வசத்தால் உருவாக்கப்படுபவை. தன்னுணர்வு பெற்ற என்னை தண்டிப்பதால் நீர் அடையப்போகும் நன்மைதான் என்ன?” இவ்வாறு கூறிவிட்டு, ஜட பரதர் தம் கடந்த காலச் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடன் மீண்டும் பல்லக்கை தூக்குவதற்கு முற்பட்டார்.

ஜட பரதர் வழியில் ஊர்ந்து செல்லும் எறும்புகளுக்கு எவ்விதத் துன்பமும் நேரக் கூடாது என்று மூன்றடிகளுக்கு ஒருமுறை நின்று செல்லுதல்

மன்னர் மன்னிப்புக் கோருதல்

மன்னன் ரஹூகணர் தத்துவ விசாரணைகளில் ஆர்வமுடையவர். ஜட பரதரின் வார்த்தைகள் அவரது இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தின. உடனே மன்னர் பல்லக்கிலிருந்து இறங்கி, தூய பிராமணரை இகழ்ந்ததை எண்ணி வருந்தினார். ஜட பரதரின் பாதங்களில் விழுந்து பின்வருமாறு பேசினார்: “அந்தணரே! பிறருக்குத் தெரியாத வண்ணம் உமது அடையாளத்தை நீர் மறைத்துக் கொண்டிருக்கிறீர், உமது இலட்சியப் பயணம் எமக்கு நன்மை தருவதன் பொருட்டுதானா? நீர் யார் என்று தயவுசெய்து எமக்கு அறிவிப்பீராக! இந்திரனின் வஜ்ராயுதத்திற்கோ சிவபெருமானின் சூலத்திற்கோ எமதர்மனின் தண்டனைகளுக்கோ நான் அஞ்சுவதில்லை, ஆனால் உம்மைப் போன்ற அந்தணருக்கு அபராதம் இழைப்பதை எண்ணி மிகவும் அஞ்சுகிறேன். நீர் கூறியவை சாஸ்திரங்களுக்கு உட்பட்டவை. அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் எனக்கில்லை. தயவுசெய்து அவற்றை எனக்கு விளக்கி அருள்வீராக!”

மன்னர் தொடர்ந்தார், “ஆன்மீக குருவே! இவ்வுலகில் மிகவும் பாதுகாப்பான அடைக்கலம் எது? ஞானவொளி பெறுவதற்காக பணிவுடன் உம் முன் நிற்கின்றேன், ஆன்மீக வாழ்வில் நான் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும்? நீங்கள் கூறியவற்றில் எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. உடல் வேதனையுறும்போது புலன்கள், மனம், ஆத்மா போன்றவை பாதிக்கப்படுகின்றன என்று எண்ணுகிறேன். நான் அரசனின் உடலைப் பெற்றதால், கர்வம் கொண்டு உமக்கு அபராதம் இழைத்துவிட்டேன். உமது கருணை நிறைந்த பார்வையை என் மீது செலுத்தி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.” அதன் பின்னர், ஜட பரதர் மன்னருக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்தார்.

முக்திக்கும் பந்தத்திற்கும் மனமே காரணம்

ஜட பரதர் பின்வருமாறு கூறினார்: “அன்பார்ந்த மன்னரே! நீங்கள் அனுபவசாலியைப் போல பேசினாலும் உங்களை அனுபவசாலியாகக் கருத முடியாது; ஏனெனில், நீங்கள் பேசுபவையெல்லாம் உடல் ரீதியான புறச்செயல்களாகும். இதுபோன்ற மனிதர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் நிச்சயம் வெளிப்படுவதில்லை.

முக்குணங்களால் மாசடைந்த மனம் மத யானையைப் போல் கட்டுக்கடங்காதது. நாம் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு பிறவிகள் எடுப்பதற்கு மனமே காரணமாகிறது. மாயையின் வசப்பட்ட மனம் பாவ புண்ணியச் செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் அனுபவிப்பதற்காக மீண்டும்
மீண்டும் பற்பல உயிர்வாழிகளாகப் பிறவி எடுக்கச் செய்கிறது.

கற்றறிந்த அறிஞர்கள் உடல்ரீதியான தோற்றம், விடுதலை மற்றும் பந்தம் இவற்றிற்கு மனமே காரணம் என்று கூறுகின்றனர். மனம் பெளதிகப் புலனின்பத்தின் மீது பற்றற்று இருக்கும்போது அது விடுதலைக்கு காரணமாகிறது. அப்போது கிருஷ்ண உணர்வின் ஒளி வெளிப்படுகிறது.”

மன்னர் ரஹூகணர் தாம் இழைத்த தவறுக்காக ஜட பரதரிடம் மன்னிப்பு கோருதல்

மனதை வெல்லுதல்

ஜட பரதர் தொடர்ந்தார்: “மனமானது பிணி, சோகம், மோகம், பற்று, துக்கம், பகைமை போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், ஜீவாத்மா கட்டுண்ட நிலையில் அனைத்து துன்பங்களையும் அனுபவிக்கிறான். அடக்க முடியாத மனமே ஆத்மாவின் ஆற்றல் மிகுந்த எதிரியாவான். ஆன்மீக குரு மற்றும் முழுமுதற் கடவுளின் தாமரைத் திருவடிகளுக்கு தொண்டு செய்வது எனும் மிகச்சிறந்த முறையால் மனதை எளிதில் வெல்லலாம்.”

ரஹூகணர் வினவுதல்

ஜட பரதரின் விளக்கங்களைக் கேட்ட ரஹூகணர் கூறினார்: “மேன்மைமிக்கவரே! நீர் உன்னத ஆனந்த நிலையில் இருப்பதை பிறர் அறியாவண்ணம் மறைத்துக் கொண்டிருக்கிறீர். அமிர்தம் போன்ற உமது உபதேசங்களே எனக்கு நன்மருந்தாகும். தன்னுணர்வு பெறுவதற்காக எனக்கு நீர் உபதேசித்த விஷயங்களின் உட்பொருளைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக உள்ளது. அருள்கூர்ந்து அவற்றை மீண்டும் எளிமையாக விளக்குவீராக.”

ஜட பரதர் மேலும் விளக்கினார்: “உமது பொய் அஹங்காரத்தால்நான் மன்னன், மக்களைப் பாதுகாக்கிறேன்என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களது பல்லக்கைத் தூக்கும் இந்த அறியா மனிதர்கள் உமது அநீதியின் காரணமாகத் துன்புறுகின்றனர். மண்ணின் உருமாற்றமாகிய இந்த உடல் ஆத்மா வெளியேறியவுடன் மீண்டும் மண்ணாகவே மாறிவிடுகிறது. உடல் மற்றும் பிரபஞ்சத் தோற்றத்திற்கு அணுக்கள் காரணமல்ல. உண்மையான அறிவின்படி பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூல காரணம் முழுமுதற் கடவுளே ஆவார். ஆனால், இந்த உடல் இயற்கையால் உருவாக்கப்பட்ட இயந்திரமாகும். எனவே, உடல் சார்ந்த அஹங்காரத்தை நீங்கள் விட்டொழிக்க வேண்டும்.”

பக்தரின் புகழ்

ஜட பரதர் தொடர்ந்தார்: “எங்கும் நிறைந்த பிரம்மனை உணர்வதே ஞானத்தின் முதல்நிலையாகும். அனைவரின் இதயங்களிலும் வீற்றிருக்கும் பரமாத்மாவை உணர்தல் இரண்டாவது நிலையாகும். அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பகவான் வாஸுதேவரை உணர்வதே ஞானத்தின் இறுதிநிலையாகும். சிறந்த பக்தரின் கருணைப் பெற்றவருக்கே முழு மெய்ப்பொருள் வெளிப்படுத்தப்படுகிறது. மற்ற பிற முறைகளால் பகவானை அறிய இயலாது. தூய பக்தர்கள் எப்பொழுதும் முழுமுதற் கடவுளின் நாமம், ரூபம், குணம், மற்றும் லீலைகளைப் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்.

“எனது முற்பிறப்பில் நான் பரத மன்னராக அறியப்பட்டேன். பின்னர் உலகைத் துறந்து பக்தித் தொண்டாற்றுவதற்காக கானகம் சென்றேன். துரதிர்ஷ்டவசமாக, ஒரு மானின் மீது பற்றுதல் கொண்டு மறுபிறவியில் மானாகப் பிறந்தேன். பகவானின் கருணையால், நான் மானின் உடலில் இருந்தபோதிலும், எனது கடந்த கால வாழ்வில் நடந்த அனைத்தையும் நினைவுகூர முடிந்தது.

“எனது வீழ்ச்சியின் காரணத்தை நன்கு புரிந்துகொண்ட நான், பெளதிகவாதிகளின் சகவாசத்தை முற்றிலும் தவிர்ப்பதற்காகவே என்னை மறைத்துக் கொண்டுள்ளேன். மேன்மைமிக்க சிறந்த பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் மூலம் அனைவரும் ஞானத்தின் நிறைவை எய்த முடியும். அந்த ஞானவாளைக் கொண்டு மோகத்தை வெட்டி விட முடியும். பக்தர்களின் தொடர்பால் பக்தித் தொண்டில் ஈடுபட்டு தன்னுள் செயலற்று இருக்கின்ற கிருஷ்ண உணர்வை அடைய இயலும். இதனால் இவ்வாழ்விலேயே முக்தி பெற்று முழுமுதற் கடவுளை அடையவியலும்.”

மன்னருக்கும் ஜட பரதருக்கும் இடையில் நிகழ்ந்த இதர உரையாடல்களை நாம் அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives