சித்திரகூடம்

Must read

Bhakti Vikasa Swamihttp://www.bvks.com
தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி, இங்கிலாந்தில் பிறந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இஸ்கானில் தொண்டு செய்து வருபவர். ஸ்ரீல பிரபுபாதரின் நேரடி சீடரும், மூத்த சந்நியாசியுமான இவர், பல்வேறு புத்தகங்களுக்கு ஆசிரியருமாவார்.

பகவான் ஸ்ரீ இராமரின் குடில்

அயோத்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பகவான் ஸ்ரீ இராமசந்திரர் பன்னிரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வசித்த அழகிய புனித ஸ்தலம்.

வழங்கியவர்: தவத்திரு. பக்தி விகாஸ ஸ்வாமி

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும்  சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன.

பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

சித்திரகூடத்தில் இருந்த ரிஷிகள் அனைவரும் பகவான் ஸ்ரீ இராமர் அங்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். “இராட்சஸர்களினால் (மனிதர்களை உண்பவர்களால்) இவ்வுலகம் பெரும் தொந்தரவுக்கு உட்பட்டுள்ளது. ஸ்ரீ இராமர் அயோத்தியிலேயே வசித்து வந்தால், அசுரர்களை அழிக்கும் தன்னுடைய பணியை அவரால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?” என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ இராமர் சித்திரகூடத்திற்கு வந்த சமயத்தில், இராட்சஸர்கள், ரிஷிகளைத் தாக்கித் துன்புறுத்தி, அவ்விடத்தின் அமைதியான சூழ்நிலையைக் கெடுத்து வந்தனர். ஆதலால், ஸ்ரீ இராமர் அங்கு தங்கியிருந்தபோது பல்வேறு இராட்சஸர்களைக் கொன்றார்.

புனிதமான குப்த கோதாவரி நதி உற்பத்தியாகும் குகையிலுள்ள சிவபெருமானின் பஞ்சமுக விக்ரஹமும், சேவை செய்யும் சாதுவும்

ராம-காட் வழியாகப் பாயும் மந்தாகினி கங்கையின் தோற்றம்; சித்திரகூடத்தின் பெரும்பாலான கோவில்கள் இப்பகுதியில்தான் உள்ளன.

சித்திரகூடத்தில் உள்ள விக்ரஹங்களில் சில. இடப்பக்கம்: ஆஞ்சநேயர்; மேலே: சீதா ராம லக்ஷ்மண ஹனுமான்; கீழே: ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா

ஸ்ரீ இராமர் வனவாசத்திற்குக் கிளம்பிய சமயத்தில், அவருடைய தம்பி பரதன் அயோத்தியில் இல்லை; வெளியே சென்றிருந்தார். பரதன் அயோத்திக்குத் திரும்பி வந்தபோது, ஸ்ரீ இராமர் இல்லாத நிலையில் தான் மன்னராக வேண்டும் என்ற செய்தியைக் கேட்டு அதிக கலக்கம் அடைந்தார். ஸ்ரீ இராமர் திரும்பி வந்து அரசாட்சியை ஏற்க வேண்டும் என்று இராமரிடமே வேண்டுவதற்காக, பரதன், மிகப்பெரிய பரிவாரங்களுடன் சித்திரகூடம் சென்றார். அங்கே அவர்கள் இருவரும் சந்தித்த இடம், இராம-பரத மிலாப் என்ற பெயரில் இன்றும் ஞாபகச் சின்னமாக விளங்குகிறது.

ஸ்ரீ இராமரின் வனவாசத்தால் பரதன் மிகவும் வருத்தமுற்றார்; ஆனால் ஸ்ரீ இராமரோ சிறிதும் பாதிக்கப்படாமல் இருந்தார். ஸ்ரீ இராமர் மீண்டும் அயோத்திக்குத் திரும்பி வர வேண்டும் என்று பரதன் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்; அவருடன் வந்திருந்த பலரும் அதனை ஆமோதித்தனர். ஆனால் ஸ்ரீ இராமரோ தொடர்ந்து இராஜ்ஜியத்தை மறுத்தார்: “இல்லை, நான் என் தகப்பனாருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். அது மிகவும் முக்கியமானது.”

இறுதியில், தன் மாமனார் ஜனக மஹாராஜரிடம் முடிவை ஒப்படைத்த ஸ்ரீ இராமர், “மாமன்னர் ஜனகர் மிகவும் அனுபவசாலி, தெய்வ நம்பிக்கையுள்ளவர், நிபுணர். நான் இங்கேயே சித்திரகூடத்தில் தங்கியிருந்து வனவாசத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமா, அயோத்திக்குத் திரும்பிச் சென்று அரசாட்சியை ஏற்க வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்யட்டும்,” என்று கூறினார்.

பகவானின் நோக்கத்தை அறிந்த ஜனக மஹாராஜர், ஸ்ரீ இராமர் சித்திரகூடத்தில்தான் இருக்க வேண்டும் என்று கூறினார். ஸ்ரீ இராமர் தன்னுடைய பதினான்கு ஆண்டுகால வனவாசத்தில் பன்னிரண்டு ஆண்டுகளை சித்திரகூடத்தில் கழித்தார், பிறகு தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள தண்டகாரண்யத்திற்குச் சென்றார்.

மந்தாகினி கங்கையின் ஒரு பகுதியான ஜானகி குண்டம். ஜானகி தேவி (சீதா தேவி) சித்திரகூடத்தில் வசித்தபோது நீராடிய இடம்

ஸ்படிக் சீல என்னும் இடத்தில் பகவான் ஸ்ரீ இராமரின் திருவடிகளை யாத்திரிகள் தரிசிக்கும் காட்சி

ஹனுமான் குன்றிலுள்ள சிறிய கோவிலின் விக்ரஹங்கள். ஸ்ரீ இராமருக்கும் இலக்ஷ்மணருக்கும், சீதாதேவி சமையல் செய்த இடம்.

முனிவர்களுக்கான இடம்

சித்திரகூடம் என்றால் “மகிழ்ச்சி தரும் ஆஷ்ரமம்” என்று பொருள்; அந்த இடம் நெடுங்காலமாகவே கடுந்தவங்களைக் கடைபிடிக்க உகந்த இடமாகவே இருந்து வந்துள்ளது. சித்திரகூடம், மலைகளும் காடுகளும் குகைகளும் நிறைந்திருந்ததால், முனிவர்களுக்கும் துறவிகளுக்கும் புகலிடங்களாகப் பயன்பட்டன. இன்றும்கூட இஃது அழகாகவும், ஆன்மீக வாழ்க்கைக்கு உகந்ததாகவும் விளங்குகின்றது. இங்குள்ள காற்று தூய்மையாகவும், புத்துணர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. நாங்கள் அக்டோபர் மாதத் துவக்கத்தில் இங்கு வந்தோம். இரவுகளும் காலை வேளையும், இன்பமூட்டுவதாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதுடன், பகல் வேளையில், சிறிது உஷ்ணமாக, ஆனால் தாங்கக்கூடிய அளவில் இருந்தது.

எங்கு பார்த்தாலும் பெரிய மலைகளும், பாடும் பறவைகளாலும் குரங்குகளாலும் சூழப்பட்டக் காடுகளும் இங்கு உள்ளன. பகவான் ஸ்ரீ இராமர் வனவாசம் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தாலும், அவருக்கும் சீதாதேவிக்கும் சித்திரகூடம் ரம்மியமாகவே இருந்தது.

இன்றும் கூட சித்திரகூடம், துறவு வாழ்க்கையைக் கடைபிடிக்கத் தகுந்த சூழல்களுடன் உயர்வாகவே அமைந்துள்ளது. இஃது எந்தவொரு பெரிய நகரத்திலிருந்தும் தொலைவில் தான் உள்ளது. வட இந்தியாவில், உத்திர பிரதேசத்தின் சமவெளிப் பகுதிகளும், மத்திய பிரதேசத்தின் மலைகள், காடுகள், மற்றும் குன்றுகளும் இணையும் இடத்தில் சித்திரகூடம் அமைந்துள்ளது. தற்போதைய சித்திரகூட நகரத்தின் ஒரு பகுதி உத்திர பிரதேசத்திலும், மற்றொரு பகுதி மத்திய பிரதேசத்திலும் உள்ளன.

உள்ளூர் மக்கள் எளிமையாக, நெறிமுறை தவறாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். யாத்திரிகர்கள் தங்குவதற்கான அறைகள் மிகவும் எளிமையாக உள்ளன; உணவும் அதைப் போலவேதான். சித்திரகூடம் பெரிய நகரங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளதால், அருகில் விளைவிக்கப்படும் பழங்களும் காய்கறிகளுமே அங்கு கிடைக்கின்றன.

சித்திரகூடத்திலுள்ள ஒரு கோவிலில் மகன்களான லவ, குசவுடன் வீற்றிருக்கும் சீதாதேவியின் விக்ரஹம்

இராமரை பரதர் சந்தித்து அயோத்திக்குத் திரும்பும்படி கெஞ்சிக் கேட்ட பரத-மிலாப் என்னும் இடம்.

அங்குமிங்கும் கவனத்தைச் சிதற விடாமல் ஆழ்ந்த கவனத்துடன் பலமணி நேரமாகத் தொடர்ந்து இராமாயணம் படிக்கும் இராம பக்தை.

சித்திரகூடத்தில் பல கோவில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள், மந்தாகினி கங்கையில் ஸ்ரீ இராமர் குளித்த இராம காட் என்னும் இடத்திலும், காமத-நாதாஜி (ஆசைகளை நிறைவேற்றும் கடவுளின் மலை) என்னும் மலையைச் சுற்றியும் தான் அமைந்துள்ளன. பெரும்பாலானவை சீதா-இராமர் கோவில்கள்; ஆனால் அங்கு இரண்டு நரசிம்மர் கோவில்களும், சில கிருஷ்ணர் கோவில்களும், ஜகந்நாதர், பலதேவர், சுபத்ராதேவிக்கு ஒரு கோவிலும் சில சிவன் கோவில்களும் கூட உள்ளன. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக சித்திரகூடத்தில் பல கட்டிடங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில், பல கோவில்கள் அக்காலக் கட்டத்தில் தோன்றியதாகத் தெரிகிறது. பல மாமன்னர்கள் இங்கு கோவில்களைக் கட்டியுள்ளனர்.

பெரும்பாலான கோவில்கள் திருமணமான தம்பதிகளாலும், சில கோவில்கள் சாதுக்களாலும் கவனித்துக் கொள்ளப்படுகின்றன. விக்ரஹங்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் நன்றாக உள்ளன; மேலும், கோவில்கள், நேர்த்தியான முறையிலும், தூய்மையாகவும் பராமரித்து வரப்படுகின்றன. பெரும்பாலான கோவில்களில் பல்வேறு சாலகிராமங்கள் (கல்லின் உருவிலான விக்ரஹங்கள்) உள்ளன. இந்த சாலகிராமங்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றனர்; தினமும் புதிய திலகத்துடன் நன்கு காட்சி அளிக்கின்றனர்.

ஜானகி தேவி என்றும் அறியப்படும் சீதாதேவி குளிக்கும் இடமான ஜானகி குண்டத்திலும் சில கோவில்கள் உள்ளன. இங்கு இரண்டு ஜானகி குண்டங்கள்; ஒன்று, குப்த கோதாவரியிலும், மற்றொன்று ராம காட்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இராமாயணத்தின் ஆசிரியர் ஸ்ரீ வால்மீகி

குப்த கோதாவரி நதி தோன்றும் இடத்திற்கு அருகில் நடந்துவரும் ஆசிரியர்

காமத நாதாஜி குன்றிலுள்ள சீதா ராம லக்ஷ்மண விக்ரஹங்கள்

கோவில்கள் இருக்கும் அளவிற்கு சித்திரகூடத்தில் ஆஷ்ரமங்கள் உள்ளன. இரண்டு ஆஷ்ரமங்களில் பகவான் ஸ்ரீ இராமரின் நாம ஜெபம் தொடர்ந்து இடைவிடாமல் இரவு பகலாக நடைபெறுகிறது. ஓர் ஆஷ்ரமத்தில் இந்த ஜெபம் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், மற்றொன்றில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் நடைபெற்று வருகின்றது.

இரண்டு ஜானகி குண்டங்களில் ஒன்றில் ஓர் ஆஷ்ரமம் உள்ளது; அங்கு பத்து சாதுக்கள் வசித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு இருமுறை அங்கு வரும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நாங்கள் அங்கு சென்ற நாளன்று இருபத்தைந்து சாதுக்களும், நாற்பது யாத்திரிகளும் உணவருந்தினர். ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் இராமாயண பாராயணம் நடைபெறுவதால், பிரசாதம் எடுத்துக் கொள்ளும் போது, விருந்தாளிகள் பகவானின் லீலைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க முடிகிறது.

சித்திரகூட வாசியான ஒரு பள்ளி ஆசிரியரை நாங்கள் சந்தித்தோம். அந்த இடத்தின் ஆன்மீகத் தன்மைகளை அவர் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார். பிறகு மற்றவர்களைப் போலவே அவரும் எங்களிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.

அவர் கூறினார், “தூய்மையாக இருக்கும் பக்தர்கள் இன்றும்கூட சித்திரகூடத்தில் ஸ்ரீ இராமரைக் காண முடியும்; ஸ்ரீ இராமர் நடக்கிறார், ஸ்ரீ இராமர் குளிக்கின்றார், கீழே குனிந்து நதியில் ஸ்ரீ இராமர் நீர் அருந்துகிறார்.” ஆமாம்! நிச்சயம். தூய்மையாக இருப்பவர்கள் இப்போதும் சித்திரகூடத்தில் ஸ்ரீ இராமரைக் காணலாம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives