—ஸ்ருத கீர்த்தி தாஸரின் நினைவுகள்
டிசம்பர் 18, 1972, மும்பை: தினசரி காலை நானும் சியாமசுந்தர தாஸும் ஸ்ரீல பிரபுபாதருடன் இணைந்து, கார்த்திகேயனின் அம்பாசிடர் காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் சென்று, அங்கே சிறிது நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஒருநாள் காலை, நடைப்பயிற்சியை முடித்து விட்டு அனைவரும் காருக்கு வந்தோம்; சியாமசுந்தர் சாவியை உள்ளிட்டு காரை ஸ்டார்ட் செய்கிறார், ஆனால் எவ்வளவோ முயன்றும் அது ஸ்டார்ட் ஆகவில்லை.
“ஸ்ரீல பிரபுபாதரே, ஏதோ பிரச்சனை, தவறு நடந்து விட்டது. இது சரிப்பட்டு வராது. நான் சென்று ஒரு டாக்ஸியை அழைத்து வருகிறேன்,” என்று கூறிய சியாமசுந்தரர் என்னையும் பிரபுபாதரையும் காரின் பின் இருக்கையில் அமர வைத்து விட்டு சென்று விட்டார். சற்று நேரம் கழித்து நல்ல மிடுக்குடன்கூடிய இரண்டு இந்தியர்கள் காரின் கதவைத் திறந்து முன் இருக்கையில் அமர்ந்தனர். நான் பயந்து விட்டேன். ஸ்ரீல பிரபுபாதர் சிரித்துக் கொண்டே மிகவும் அமைதியாக அவர்களுடன் இந்தியில் பேசினார். அவர்கள் சாவியைப் போட்டு திருப்ப காரின் இஞ்சின் உடனடியாக ஓடத் துவங்கியது.
அப்போதுதான் நாங்கள் தவறான காரில் அமர்ந்திருந்தோம் என்பதை உணர்ந்தேன். எனினும், ஸ்ரீல பிரபுபாதரை அவருடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று இறக்கி விட விரும்புவதாக அவர்கள் வலியுறுத்த, பிரபுபாதரும் இசைந்தார். பயணம் முழுவதிலும் ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுடன் பேசிக் கொண்டே வந்தார்.
அவர்கள் எங்களை ஊருக்குள் அழைத்துச் சென்று ஸ்ரீல பிரபுபாதரின் இருப்பிடத்தில் இறக்கி விட்டனர். மேலே வந்து பிரசாதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் அவர்களிடம் கூறினார்.
இருப்பினும், அவர்கள், “இல்லை, சுவாமிஜி, மிக்க நன்றி. நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், நிறைய அலுவல்கள் உள்ளன,” என்று பணிவுடன் கூறி விட்டு புறப்பட்டனர்.
அதன் பின்னர், பிரபுபாதர் கூறினார்: “இதுவே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வேறுபாடு. இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால், ‘ஏய், எங்களுடைய காரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? காரை விட்டு வெளியேறு’ என்று கூச்சலிட்டு, அடிக்கக்கூட முற்படலாம். ஆனால் இந்தியாவில் பண்பாடு இன்னும் எஞ்சியுள்ளது.”
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!