வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்
ஒரு மனிதனை அவனுடைய சேர்க்கையை வைத்து அறியலாம் என்பது உலகெங்கிலும் அறியப்படும் பழமொழியாகும். “இனம் இனத்தோடு சேரும்,” “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” என பல விதங்களில் சகவாசத்தின் தன்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. நாம் மேற்கொள்ளும் சகவாசம் நம்முடைய ஆன்மீக வாழ்வில் மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. அந்த சங்கம் குறித்த சிறு அலசல் இதோ, இங்கே.
வஸுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவதாகப் பிறந்ததாக கருதப்பட்ட பெண் குழந்தையை கம்சன் ஒரு கல்லின் மீது வீசி வதம் செய்ய முயற்சித்தபோது, அவன் கையிலிருந்து நழுவி, வானில் எட்டு கை ரூபத்துடன் துர்கை தோன்றினாள். தன்னை வதம் செய்வதற்கான குழந்தை ஏற்கனவே வேறோர் இடத்தில் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு அரண்ட கம்சன் வஸுதேவர் மற்றும் தேவகியிடம் பணிவுடன் மன்னிப்பை வேண்டினான். அவன் பொழிந்த சொற்கள் மிகவுயர்ந்த ஆத்ம தத்துவ ஞானத்தை வெளிப்படுத்தின, இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற வியப்பை எழுப்பின. ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது காண்டம், நான்காம் அத்தியாயத்தில் ஸ்ரீல பிரபுபாதர் இது குறித்த பொருளுரைகளில், கம்சன் அச்சமயத்தில் உண்மையிலேயே தனது தவறுகளை உணர்ந்து ஆன்மீகத் தளத்தில் செயல்பட்டான் என்றும், ஆனால் அவன் வைத்திருந்த அஸத்-சங்கமே அவன் மீண்டும் கீழ் சறுக்கியதற்கான காரணம் என்றும் விளக்குகிறார்.
ஆத்மாவை பூவிற்கும் உடலை நாருக்கும் ஒப்பிடலாம். ஆன்மீக ஆத்மா ஸத்-சங்கத்தின் மூலமாக தன்னுணர்வில் நிலைபெற்றால், பூவோடு சேர்ந்து மணக்கும் நாரைப் போல, பௌதிக உடலும் மனமும் தூய்மையானதாக அமையும். மாறாக, ஆன்மீக ஆத்மா ஸத்-சங்கத்தினைத் துறந்து பௌதிக உடலின் உணர்வில் நிலைபெற்றுவிட்டால், நாரோடு சேர்ந்த பூவைப் போல, ஆத்மாவும் வாடிவிடும், களங்கமடைந்ததாக காணப்படும். எனவே, ஆன்மீக வாழ்க்கையின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் அவரவர் வைத்திருக்கும் சங்கமே தலையாய காரணம்–இதனை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
ஸத், அஸத்-விளக்கங்கள்
ஸத் என்பது நித்தியமான, நிலைத்த, உண்மையான தன்மையைக் குறிக்கிறது. அஸத் என்பது நிலையில்லாத, பொய்யான தன்மையைக் குறிக்கிறது.
முழுமுதற் கடவுள், ஆன்மீக உலகம், அதன் இயற்கை போன்றவை நித்தியமான ஆனந்தமயமான தன்மையைக் கொண்டுள்ளன; இதனால், அவை முற்றிலும் ஸத் பிரிவைச் சார்ந்தவை. ஆனால் பௌதிக உலகமும் அதன் இயற்கையும் துக்கங்களே நிரம்பிய தற்காலிகமான சூழ்நிலை என்பதால், அவை முற்றிலும் அஸத் பிரிவைச் சார்ந்தவை. ஆன்மீக ஆத்மா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆன்மீக சக்தியே என்பதால், அதுவும் முற்றிலும் ஸத் வகையைச் சார்ந்தது. ஆனால் பௌதிக உடலோ பகவானின் கீழ்நிலை சக்தியான பௌதிக இயற்கையைச் சார்ந்ததாக இருப்பதால், அது முற்றிலும் அஸத் பிரிவைச் சார்ந்ததாகும்.
ஆகையால், எந்த முயற்சி (எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள்) ஒருவனை தன்னுணர்வில் (ஆத்ம உணர்வில்) எப்பொழுதும் நிலைத்திருக்க வழிவகுக்கின்றதோ, அவையனைத்தும் ஸத்-ஸங்கம் எனப்படுகின்றன. அதற்கு மாறாக, எந்த முயற்சிகள் ஒருவனை பௌதிக உடல் மற்றும் மனதின் அடிப்படையில் செயல்படத் தூண்டுகிறதோ, அவையனைத்தும் அஸத்-ஸங்கம் எனப்படுகின்றன. நடைமுறையில் பார்க்கும்போது ஸத்-சங்கம் என்பது ஸாதுக்களின் சங்கத்தையும், அஸத்-சங்கம் என்பது பௌதிகவாதிகளின் சங்கத்தையும் குறிக்கின்றது.
ஸாது ஸங்கம்-ஈடு இணையற்ற வரம்
நாம் உடல் அல்ல, ஆன்மீக ஆத்மா என்பதே ஆன்மீக ஞானத்தின் முதல் பாடம்ஶீஇதையே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு முதன்முதலில் போதிக்கின்றார். இந்த அறிவைப் பெற்று இதில் நிலைத்திருப்பதற்கு கிருஷ்ண உணர்வில் செய்யப்படும் தூய பக்தித் தொண்டே அடிப்படையாகும். கிருஷ்ண உணர்வு இல்லாவிடில் யாராலும் தன்னுணர்வை அடைய முடியாது. வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வைப் பெறுபவர்களுக்கு தன்னுணர்வு தானாக அடையப்படுகிறது. உதாரணமாக, வெளிச்சம் இல்லாவிடில் யாராலும் இருட்டில் தன்னைத் தானே காண இயலாது. ஆனால் வெளிச்சத்தைக் கண்ட மாத்திரத்திலேயே தனது உருவத்தையும் ஒருவனால் காண முடிகிறது. அதுபோல, உடல் என்னும் இருட்டினுள் வசிக்கக்கூடிய ஆத்மாவை உணர்வதற்கு, கிருஷ்ண உணர்வு என்னும் வெளிச்சம் அவசியமாகும்.
எனவே, கிருஷ்ண உணர்வை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளே உண்மையான ஸத்-சங்கமாகும். இப்படிப்பட்ட ஸாது சங்கம் ஜீவராசிகளுக்கு கிருஷ்ணரின் காரணமற்ற கருணையால் வழங்கப்படும் வரமாகும். இந்த வரப் பிரசாதத்தை ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு (அல்லது ஸாது) ஞான ஒளியாக வழங்குகிறார், ஆகையால் அவர் கிருஷ்ணருக்கு சமமானவர். அவரை சாதாரண மனிதனாகக் கருதுபவனின் அறிவு, நீராடிய யானை மீண்டும் சேற்றை வாரி பூசிக்கொள்வதைப் போன்று பயனற்றதாகும். (ஸ்ரீமத் பாகவதம் 7.15.26)
ஆன்மீக நிலையில் வாழ வேண்டிய ஆத்மா, அஸத்-சங்கத்தினால் பௌதிக இயற்கை வழங்கும் பல வகையான உடல்களில் சிறைப்பட்டு பல காலங்கள் கடந்தபிறகு மனித பிறவியை எடுக்கின்றது. அவ்வாறு மனிதப் பிறவியை ஏற்கும் ஆயிரக்கணக்கான உயிர்களில், யாரேனும் ஒருவர் பக்குவமடைய முயற்சிக்கலாம். அவ்வாறு பக்குவமடைந்த ஆயிரக்கணக்கான மனிதர்களில் யாரேனும் ஒருவரே கிருஷ்ணரின் உண்மையான உணர்வில் நிலைபெற முடியும் என்று பகவத் கீதையில் (7.4) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே கூறுகின்றார். எனவே, கிருஷ்ண உணர்வு என்பது ஒருவருக்குக் கிடைக்கும் மாபெரும் அதிர்ஷ்டமாகும்.
மேலும், ஒரு ஜீவனின் பாக்கியம் என்னவெனில், பல பிரம்மாண்டங்களின் மூலைமுடிச்சுகளில் சிக்கித் தவித்த பின்னர், குரு மற்றும் கிருஷ்ணரின் கருணையால், ஒருவன் பக்தியின் விதையைப் பெறுவதாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகின்றார். மேலும், ஸாது சங்கத்தினை வலியுறுத்தும் வகையில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய லீலை 22.54) கூறுகிறது:
’ஸாது-ஸங்க ’ஸாது-ஸங்க கய
லவ-மாத்ர ஸாது-ஸங்கே ஸர்வ-ஸித்தி ஹய
பதினொன்றில் ஒரு பங்கு வினாடி (லவ-மாத்ர) ஒரு ஸாதுவின் சங்கத்தினை ஒருவர் பெற்றாலே, அவர் அனைத்து சித்திகளையும் பெறுகிறார். ஆகையால், அனைத்து சாஸ்திரங்களும் ஸாது-சங்கத்தினைப் பரிந்துரைக்கின்றன.
ஆன்மீக குருவை சாதாரண மனிதனாகக் கருதுபவனின் அறிவு, நீராடிய யானை மீண்டும் சேற்றை வாரி பூசிக்கொள்வது போன்றதாகும்.
அஸத்-சங்கம்–துயரங்களின் மூல காரணம்
ஆத்மாவிடம் மிக நுண்ணிய அளவில் சுய இச்சை எனும் சுதந்திரம் இருப்பதால், அது நடுத்தர சக்தி என்று அழைக்கப்படுகிறது. அந்த சுதந்திரத்தை அவன் தவறாக உபயோகித்து, பகவானின் மற்றொரு சக்தியான பௌதிக இயற்கையைக் கட்டுப்படுத்தி தனது ஆதிக்கத்தைச் செலுத்த நினைக்கும்போது, அவன் அஸத் என்னும் நிலையற்ற பௌதிக உடலை ஏற்கிறான். இதன் மூலம் ஏற்படும் அஸத் சங்கமே ஆனந்தமயமான ஆன்மீக இயற்கையை மறந்து ஆத்மா பல்வேறு உடல்களில் பிரயாணித்து கர்ம வினைகளின் (இன்ப துன்பங்களின்) வலைகளில் சிக்கித் தவிப்பதற்கு மூல காரணம் என்று பகவத் கீதையில் (13.22) பகவான் கிருஷ்ணர் தெளிவு படுத்துகிறார், காரணம் குண-ஸங்கோ ஸத்-அஸத் யோனி ஜன்மஸு.
வேதங்களின் கர்ம காண்ட செயல்களை மேற்கொள் வதும் ஒரு விதத்தில் அஸத்-சங்கமே; ஏனெனில், அச்செயல்கள் மீண்டும் ஆத்மாவை ஒரு பௌதிக உடலை ஏற்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்குகின்றன (பகவத் கீதை 9.21). அந்த பிறவி உயர் லோகங்களில் ஏற்பட்டால்கூட, அதுவும் பௌதிக உடலே என்பதால், அச்செயல்களும் அஸத்-சங்கமே.
அருவவாதமும் அஸத்-சங்கமே
ஆன்மீக நிலையில் (அதாவது ஸத் நிலையில்), உடல் அல்லது ரூபம் என்பது இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று நினைத்து, பகவான் விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் ரூபத்தைக்கூட பௌதிக இயற்கையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது (அதாவது அஸத் நிலையைச் சார்ந்தது) என்று மாயாவாதிகள் (சங்கரரைப் பின்தொடரும் அத்வைதிகள்) வாதிடுகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த வாதம் வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் இல்லாத காரணத்தினாலும் பகவத் கீதையின் வாக்குகளுக்கும் இதர சாஸ்திரங்களின் முடிவுகளுக்கும் முற்றிலும் எதிரானது என்பதாலும், இந்த வாதமே அஸத் தன்மையைப் பெறுகிறது. பகவத் கீதையில் (9.4-10), கிருஷ்ணர் தானே இந்த பௌதிக உலகின் படைப்பிற்கு மூலம் என்றும், பராமரிப்பாளர் என்றும், அனைத்து ஜீவராசிகளும் தன்னையே சார்ந்துள்ளனர் என்றும், பௌதிக படைப்பு எப்பொழுதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், தானோ ஒருபோதும் இந்த பௌதிகப் படைப்பில் இல்லை என்றும் தெளிவாகக் கூறுகின்றார். மேலும், தானே ஆன்மீக, பௌதிக இயற்கை இரண்டிற்கும் மூலம் என்றும் அதிபதி என்றும் அவர் பகவத் கீதையில் (10.8) கூறுகிறார். அவ்வாறு இருக்கையில், அவருடைய ரூபம் பௌதிக ரூபமல்ல என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை, அவருடைய ரூபம் முற்றிலும் ஆன்மீகமானது என்றும் ஸத்-சித்-ஆனந்த தன்மையைக் கொண்டது (நிரந்தரமானது, அறிவு நிரம்பியது, ஆனந்தமயமானது) என்றும் பிரம்ம சம்ஹிதையில் (5.1) பிரம்மதேவர் கூறுகிறார்.
எல்லா வேத சாஸ்திரங்களும் கிருஷ்ணரை பௌதிக இயற்கை அல்லது உடலுக்கு அப்பாற்பட்டவர் என்று தெளிவாக வர்ணிக்கின்றன. ஆகையால், பகவான் கிருஷ்ணரும் அவரைச் சார்ந்த எல்லாச் செயல்களும் சேவைகளும் முற்றிலும் ஆன்மீகமானவை, முற்றிலும் ஸத் தன்மையைக் கொண்டவை. கிருஷ்ணரின் உன்னத நிலையை அறியாமல் அவரை சாதாரண மனிதர்களோடு ஒப்பிடுபவர்களை மூடர்கள் என்று பகவத் கீதையில் (9.11) கிருஷ்ணர் கண்டிக்கின்றார், அவஜானந்தி மாம் மூடா.
ஆகையால், மாயாவாதமும் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல்களும் கிருஷ்ணரின் வாக்குப்படி, அஸத் செயல்களாகும். எனவே, மாயாவாதம் அல்லது அருவவாதத்தை ஏற்கும் ஆத்மா, அஸத் சங்கத்தில் வீழ்ந்து தவிப்பது நிச்சயம் (ஸ்ரீமத் பாகவதம் 10.2.32).
அசுரர்களுக்கும் பக்தர்களுக்கும் உள்ள வேறுபாடுகள்
மீண்டும் கம்சனுடைய உதாரணத்திற்கு வருவோம். தனது பௌதிக உடல்மீது கம்சன் வைத்திருந்த எல்லை கடந்த பற்றுதலே அவனுடைய முதன்மையான அஸத்-சங்கம். கம்சன் தனது தவறை உணர்ந்த சமயத்தில், வஸுதேவர் மற்றும் தேவகிக்கு ஆறுதல் கூறும் வகையில், இயற்கையின் கட்டளைகளை மீற நினைத்து தனது சகோதரியின் ஆறு குழந்தைகளைக் கொன்ற பாவி என்று கதறி அழுது மன்னிப்பை வேண்டினான். இருந்தும், தனது பௌதிக உடல் மீதான பற்றுதலால் ஏற்பட்ட அஸத்-ஸங்கத்தினால், அவன் மீண்டும் வழிதவறிச் சென்றான்.
மேலும், கம்சனுடைய அமைச்சர்கள், நண்பர்கள் என அவனைச் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அசுரர்கள். தவறுகளை உணர்ந்து வருந்திய கம்சனுக்கு ஆறுதல் கூறும் பெயரில், அவர்கள் சிசுவதை போன்ற எண்ணற்ற அசுரத்தனமான பாவச் செயல்களை கம்சனிடம் பரிந்துரைத்தனர். அசுரர்களின் அஸத்-சங்கம், கம்சனின் அறியாமை நெருப்பிற்கு நெய்யை ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்தது, அவனிடம் தற்காலிகமாக காணப்பட்ட நற்குணங்கள் அனைத்தையும் நாரோடு வாடும் பூவாக வாடச் செய்தது.
கம்சனுக்கு வழங்கப்பட்ட (கூடிய விரைவில் கொல்லப்படுவாய் என்னும்) சாபம் ஒரு பக்தருக்கு வழங்கப்பட்டால், அவர் எவ்வாறு நடந்துகொள்வார்? இதற்கு சிறந்த உதாரணம், பரிக்ஷீத் மஹாராஜர். அவர் ஓர் அறியாத பிராமணச் சிறுவனால் “ஏழு நாளில் மரணம்” என்ற சாபத்திற்கு ஆளானார். ஆனால் அத்தருணங்களில் அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருப்பாதங்களில் சரணாகதி பெற்றிருந்ததால், கம்சனைப் போல செயல்படுவதற்குப் பதிலாக, தன்னிடம் எஞ்சியிருந்த ஏழு நாள்களையும் ஸாதுக்களின் சங்கத்தில் கழித்தார், ஸ்ரீமத் பாகவதத்தினைக் கேட்டு வாழ்வின் பக்குவநிலையை அடைந்தார். பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் எப்பொழுதும் தன்னுணர்வில் நிலைத்திருக்க முக்கிய காரணம், ஸாது-சங்கத்தில் அவர்களுக்குள்ள முழு ஈடுபாடும் சேவை மனப்பான்மையுமே.
விஷ்ணு அல்லது கிருஷ்ணரை வழிபடும் பக்தர்களை தேவர்கள் என்றும், பிறரை வழிபடுபவர்களை அசுரர்கள் என்றும் பத்ம புராணம் குறிப்பிடுகிறது. அசுரர்கள் கிருஷ்ணருக்கு எதிராகச் செயல்படுவதால், அவர்கள் எப்பொழுதும் அஸத் நிலையில் செயல்படுவார்கள். பக்தர்களோ எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் இருப்பதால், ஸத் நிலையில் நிலைத்திருப்பர்.
பகவான் கிருஷ்ணரின் உபதேசங்கள் மற்றும் லீலைகளை (பௌதிகவாதிகள், மாயாவாதிகள் உட்பட) அபக்தர்களிடமிருந்து கேட்பது அஸத்-சங்கம் என்றும், பாம்பினால் தீண்டப்பட்ட பாலைப் போன்று அபாயகர மானவை என்றும் பத்ம புராணத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால், ஒருவர் உயர்ந்த ஸாதுக்களை துன்புறுத்தினால், அவருடைய ஆயுள், அழகு, புகழ், தர்மம், ஆசி, உயர் லோகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உட்பட அனைத்தும் அழிக்கப்படும் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (10.4.46) எச்சரிக்கப்படுகின்றது. கம்சன், ஹிரண்யகசிபு, சிசுபாலன், ருக்மி போன்ற அசுரர்கள் அஸத்-சங்கத்தினால் இந்த எச்சரிக்கையை உதாசீனம் செய்து, தீய செயல்களின் விளைவுகளுக்கு பலியாயினர் என்பதை நாம் நினைவில் கொள்வது இன்றியமையாத தாகும்.
கம்சனைக் கொல்லப் போகும் குழந்தை வேறு இடத்தில் பிறந்துள்ளதாக துர்கை அறிவித்தல்.
தூய வைஷ்ணவர் சங்கம்
அஸத்-சங்கத்திற்கு எதிர்மாறாக இருப்பது தூய வைஷ்ணவர்களின் சங்கம். ஒருவர் தூய வைஷ்ணவருக்கு சிறிதளவு சேவை செய்தால்கூட அது மிகப்பெரிய சேவையாகக் கருதப்படும் என்று ஸ்ரீமத் பாகவதம் (5.5.2) கூறுகிறது. மேலும், அந்த ஸாது-சங்கத்தால் பகவான் வாசுதேவரின் கதைகள் என்னும் அமிர்தத்தில் ஆர்வம் பெறுவதற்கான எல்லா தகுதிகளையும் ஒருவர் பெறுகிறார் என்று ஸாது ஸங்கத்தின் முக்கியத்துவம் அங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூய பக்தருடைய சங்கத்தினால் மட்டுமே கிருஷ்ண பக்தியில் முன்னேற்றமடைய முடியும். ஸத்-சங்கம் என்றால், எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்வதும் அதன் மூலமாக கிருஷ்ண உணர்வில் இருப்பதுமே என்று ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீமத் பாகவதத்தின் (4.24.59) பொருளுரையில் கூறுகிறார். இதைத்தான் எல்லா சாஸ்திரங்களும் மஹாஜனங்களும் (பிரம்மா, சிவன், நாரதர் முதலானோர்) தமது பல்வேறு உபதேசங்களில் வலியுறுத்துகின்றனர். நாரதரைப் போன்ற பகவானின் தூய பக்தரின் சங்கத்தினால் வால்மீகி, மிருகாரி, பிரகலாத மஹாராஜர், ஏன் வியாஸதேவரும்கூட தத்தமது நிலையிலிருந்து மிகவுயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தனர்.
நாரதர் வழிவரும் பிரம்ம மத்வ கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தூய பக்தரான ஸ்ரீல அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் சங்கத்தினால் மட்டுமே உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது பாவச் செயல்களிலிருந்து விடுபட்டு ஆன்மீகப் பாதையின் உச்ச நிலையை எட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் ஸ்ரீல பிரபுபாதரின் பாதையைத் தவறாது பின்பற்றுவதன் மூலமாக பலரை ஆன்மீக உச்ச நிலையை எட்டும் பாதையில் வழிநடத்துகின்றனர். ஸாது-சங்கத்தின் மகிமையை இக்கலி யுகத்திலும் நாம் உணர்வதற்கு இதுவே சாலச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நூற்றுக்கணக்கான புத்தகங்கள், கட்டுரைகள், உபன்யாஸங்கள் மற்றும் உரையாடல்களின் மூலமாக ஸ்ரீல பிரபுபாதர் இன்றும் நம் அனைவருக்கும் அவருடைய ஸத்-சங்கத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறார். இவற்றினை முறையாக உபயோகித்து அவருடைய சங்கத்தைப் பெற்று, நாம் அனைவரும் இந்த வாடும் உடலை, ஆத்மாவின் உண்மையான நிலையான கிருஷ்ணரின் தூய பக்தித் தொண்டில் உபயோகித்து, பூவோடு மணக்கும் நாரைப் போல மாற்றுவோமாக.