சமுதாயத்தில் பிராமணர்கள் தேவையா?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

1971இல் ஸ்ரீல பிரபுபாதர் சோவியத் யூனியனில் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின்போது சோவியத் விஞ்ஞானக் கழகத்தின் இந்தியத் துறையின் தலைவரும் மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவின் தலைவருமான பேராசிரியர் க்ரிகோரி கடோவ்ஸ்கியை சந்தித்தார். ஆன்மீகத் தலைவரான ஸ்ரீல பிரபுபாதரும் பொதுவுடைமை அறிஞரான கடோவ்ஸ்கியும் இந்தியாவின் வர்ணாஷ்ரம முறையைப் பற்றி இங்கு விவாதிக்கின்றனர்.

கடோவ்ஸ்கி: மாஸ்கோ மற்றும் லெனின்கிராட் நூலகங்களில், வேதங்களிலிருந்து தொடங்கி, அனேகமாக, இந்திய கலாசாரத்தின் எல்லா நூல்களின் பிரதிகளும் மூல சமஸ்கிருத வடிவில் உள்ளன. உதாரணமாக, எங்கள் கழகத்தின் லெனின்கிராட் கிளையில் மனு ஸ்மிருதியின் ஆறு-எட்டு பதிப்புகள் உள்ளன. இந்தக் கழகம் ரஷ்யப் பேரரசினால் லெனின்கிராட் நகரத்தில் நிறுவப்பட்டது. அங்கு முக்கியமாக இந்திய மதத்தின் சரித்திரம், இந்தியாவில் இந்து மதத்தின் நிலை, இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் போன்ற விவரங்களைக் காணலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: இந்து மதம் ஒரு சிக்கலான விஷயம்.

கடோவ்ஸ்கி: ஆமாம்! (இருவரும் சிரிக்கிறார்கள்) உண்மையில் ஐரோப்பிய நோக்கில் அஃது ஒரு மதமல்ல என்பது என் கருத்து. அஃது ஒரு வாழ்க்கை முறை—மதம், தத்துவம், வாழ்க்கை முறை எதுவாகவும் அதை எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: “ஹிந்து” என்பது சமஸ்கிருதச் சொல் அல்ல. அது முஸ்லிம்களால் வழங்கப்பட்டது. ஸிந்து என்ற பெயரில் நதி ஒன்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள். முஸ்லிம்கள் ஸ என்பதை ஹ என்றே உச்சரிப்பர். எனவே, ஸிந்துவை ஹிந்து என அவர்கள் மாற்றி விட்டனர். ஹிந்து என்ற சொல் சமஸ்கிருத அகராதியில் இல்லை! வழக்கத்தில் வந்துள்ளது. ஆயினும், உண்மையான கலாச்சார முறை வர்ணாஷ்ரமம் எனப்படுகிறது. பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சமுதாயப் பிரிவுகள் நான்கு வர்ணங்களாகும். பிரம்மசாரி, கிருஹஸ்தன், வானபிரஸ்தன், சந்நியாசி என்னும் ஆன்மீகப் பிரிவுகள் நான்கு ஆஷ்ரமங்களாகும். வாழ்க்கையைப் பற்றிய வேதக் கோட்பாட்டின்படி இந்த நான்கு வர்ணங்களையும் ஆஷ்ரமங்களையும் பின்பற்றாத மனித சமுதாயம் நாகரிகமானதாக இருக்க முடியாது. இந்த நான்கு சமுதாயப் பிரிவுகளையும் நான்கு ஆன்மீக அமைப்புகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதுதான் வர்ணாஷ்ரமம். இந்திய கலாசாரம் இந்த புராதன வேத முறையின் அடிப்படையில் அமைந்தது.

கடோவ்ஸ்கி: வர்ணாஷ்ரமம்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், வர்ணாஷ்ரமம். மேலும், பகவத் கீதையில்—நீங்கள் பகவத் கீதையைப் படித்திருப்பீர் என்று நினைக்கிறேன்.

கடோவ்ஸ்கி: படித்துள்ளேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையில் (4.13) சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம், இந்த வர்ணாஷ்ரம அமைப்பு பகவான் விஷ்ணுவால் படைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. வர்ணாஷ்ரமம் பரம்பொருளான இறைவனால் படைக்கப்பட்டது. எனவே, அதை மாற்ற இயலாது! இந்த முறை எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறது. இது சூரியனைப் போன்றது. சூரியன் பரம்பொருளின் படைப்பு, சூரிய வெளிச்சம் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் இந்தியாவிலும் காணப்படுகிறது. அதுபோலவே, இந்த வர்ணாஷ்ரம முறையும் ஏதாவதோர் உருவில் எங்கும் உள்ளது. உதாரணமாக, மிகுந்த புத்திசாலிகளான பிராமண வகுப்பினரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் சமுதாயத்தின் மூளையைப் போன்றவர்கள், சத்திரியர்கள் ஆளும் வகுப்பினர்; வைசியர்கள் உற்பத்தி செய்பவர்கள்; சூத்திரர்கள் தொழிலாளர்கள். இந்த நான்கு வகையான மனிதர்கள் வெவ்வேறு பெயர்களில் எங்கும் உள்ளனர். வர்ணாஷ்ரம தர்மம், முழுமுதற் கடவுளால் உண்டாக்கப்பட்டதால் எங்கும் காணப்படுகிறது.

கடோவ்ஸ்கி: சில ஐரோப்பிய மற்றும் பழைய ரஷ்ய அறிஞர்களது கருத்துபடி, இந்த வர்ணாஷ்ரம முறை பிற்காலத்தில் ஏற்பட்டது; பழைய வேத இலக்கியங்களைப் படித்தால் அப்போது இதைவிட மிகவும் எளிதான விவசாய சமுதாயம் இருந்ததென தெரிய வருகிறது. வர்ணாஷ்ரம முறை இந்திய சமுதாயத்தில் வேத காலத்தின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்டது, ஆரம்பத்திலிருந்து அல்ல என்பது அந்த அறிஞர்களின் கருத்து.

ஸ்ரீல பிரபுபாதர்: எங்களைப் பொறுத்தவரை இது பகவத் கீதையில் (4.13) குறிப்பிடப்பட்டுள்ளது: சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம். பகவத் கீதை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உரைக்கப்பட்டது. கீதையில் கிருஷ்ணர், “இந்த பகவத் கீதையினை நான் முன்னரே சூரியதேவனுக்கு உரைத்தேன்,” என்று கூறுகிறார். எனவே, அதன் காலத்தைக் கணக்கிட்டால், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றாகிறது. ஐரோப்பிய அறிஞர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான சரித்திரத்தை அறிவார்களா? அவர்களால் நான்கு கோடி ஆண்டுகள் பின்நோக்கிச் செல்ல முடியுமா? இந்த வர்ணாஷ்ரம முறை குறைந்தபட்சம் ஐயாயிரம் ஆண்டுகள் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

வர்ணாஷ்ரம முறை விஷ்ணு புராணத்திலும் (3.8.9) கூறப்பட்டுள்ளது. வர்ணாஷ்ரமாசார-வதா புருஷேண பர: புமான். வர்ணாஷ்ரம தர்மத்தின் கோட்பாடுகள் நவீன யுகத்தினரால் கணிக்கப்பட்ட சரித்திர காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல. அஃது இயல்பாக ஏற்பட்டது. ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ள விளக்கத்தின்படி, உடலில்—மூளை, கை, வயிறு, கால் என்பனவற்றைச் சார்ந்த நான்கு பிரிவுகள் இருப்பதுபோல், சமுதாயமாகிய உடலிலும் இயற்கையாகவே இந்த நான்கு பிரிவுகள் உள்ளன. மூளை என்று கருதப்படும் பிரிவினர், கைகள் எனக் கருதப்படும் பிரிவினர், உற்பத்தியாளர்கள் எனப்படும் பிரிவினர் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே, சரித்திர ஆராய்ச்சி தேவையில்லை. படைப்பின் தொடக்கத்திலிருந்தே இஃது இயற்கையாக உள்ளது.

கடோவ்ஸ்கி: எல்லா சமுதாயத்திலும் நான்கு பிரிவுகள் உள்ளன என்று கூறுகிறீர்கள். ஆனால் அவற்றை அவ்வளவு சுலபமாக இனம் காண முடிவதில்லை. உதாரணமாக, எந்த சமுதாயத்திலும் பல சமுதாயப் பிரிவுகளையும் தொழிற்பிரிவுகளையும் ஒட்டு மொத்தமாக நான்கு பிரிவுகளில் வகுக்கலாம். இதில் சிரமமில்லை. ஆனால் பொதுவுடைமை சமுதாயத்தில் எங்கள் நாட்டிலும் மற்ற பொதுவுடைமை நாடுகளிலும் உற்பத்தி செய்பவர்களை தொழிலாளிகளிலிருந்து எப்படிப் பிரித்துக் கூற முடியும்?

ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணமாக, நாம் அறிவாளிகள் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இஃது ஒரு பிரிவு.

கடோவ்ஸ்கி: அறிவாளிகள் வர்க்கம்—பிராமணர்கள். எல்லா அறிவாளிகளையும் இந்தப் பிரிவில் வகைப்படுத்தலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

கடோவ்ஸ்கி: பின்பு, ஆட்சி நடத்தும் பிரிவினர்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

கடோவ்ஸ்கி: ஆனால், வைசியர்களும் சூத்திரர்களும் யார்? அதுதான் சிரமம்; ஏனெனில், மற்றவர்களெல்லாம் தொழிலாளர்கள்; தொழிற்சாலைத் தொழிலாளர்கள், கூட்டுப்பண்ணைத் தொழிலாளர்கள், இத்யாதி. எனவே, இந்த வகையில் பொதுவுடைமை சமுதாயங்களுக்கும் அதற்கு முந்தைய சமுதாயத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளதென்பது எனது கருத்து; ஏனெனில், நவீன மேல்நாட்டு சமுதாயத்தின் அனைத்து சமுதாய மற்றும் தொழிற்பிரிவுகளை முறையே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்—அறிவாளிகள், உற்பத்தியாளர்கள், உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் (உதாரணமாக, தொழிற்சாலை முதலாளி), சாதாரண தொழிலாளர்கள் என்று பிரிக்கலாம். ஆனால் இங்கு (பொதுவுடைமை சமுதாயத்தில்) வைசியர்கள் இல்லை. தொழிற்சாலைகளில் உள்ள நிர்வாகிகளை நீங்கள் சத்திரியர்கள் என்று கூறலாம். பின்னர், தொழிலாளிகளை சூத்திரர்கள் என வகைப்படுத்தலாம். ஆனால் இவர்களுக்கு இடைப்பட்ட பிரிவு என்று எதுவும் இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அதுவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலௌ ஷூத்ர-ஸம்பவ: இந்த யுகத்தில் எல்லா மனிதர்களும் அனேகமாக சூத்திரர்களே. ஆனால், சூத்திரர்கள் மட்டும் உள்ள சமுதாயத்தில் குழப்பங்களே விளையும். இங்கே சூத்திரர்களாலான உங்கள் நாட்டிலும் பிராமணர்கள் காணப்படுகிறார்கள். அது தேவையும்கூட. சமுதாயத்தை இவ்வாறு பிரிக்காவிடில் குழப்பம் ஏற்படும். இது வேதங்களின் விஞ்ஞானபூர்வமான முடிவு. நீங்கள் சூத்திர வகுப்பினரைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆயினும், சமுதாயத்தைப் பராமரிப்பதற்கு சில சூத்திரர்களை நீங்கள் பிராமணர்களாக பயிற்றுவிக்க வேண்டும். சமுதாயம் சூத்திரர்களையோ பிராமணர்களையோ மட்டும் நம்பியிருக்க முடியாது. உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய, மூளை, கை, வயிறு, கால் எல்லாம் தேவை. உடலின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற, கால், மூளை, கை ஆகிய எல்லாவற்றின் ஒத்துழைப்பும் தேவை. ஒரு சமுதாயத்தில் இந்த நான்கு பிரிவுகளும் இருந்தாலொழிய குழப்பம் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.

அப்போது அலுவல்கள் சரிவர நடைபெறாது. மாயையின் காரணமாக தொல்லைகள் ஏற்படும். மூளை இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இப்போது மூளைகள் குறைவாகவே காணப்படுகின்றன. நான் உங்கள் நாட்டையோ என் நாட்டையோ பற்றிப் பேசவில்லை. உலகம் முழுவதையும் கருத்தில் கொண்டு பேசுகிறேன்.

கடோவ்ஸ்கி: இந்த வர்ணாஷ்ரம முறை பொதுவாக, புராதன சமுதாயத்தில், உழைக்கும் பொறுப்பை இந்நான்கு இயல்பான பிரிவுகளில் பங்கீடு செய்து வந்துள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இன்று, எந்த சமுதாயத்திலும் உழைப்பை மக்களிடையே பகிர்ந்தளிப்பது சிக்கலான, சாதுர்யமான விஷயமாகி விட்டது. எனவே, சமுதாயத்தை நான்கு வகையாகப் பிரிப்பது மிகவும் குழப்பமாக உள்ளது.

ஸ்ரீல பிரபுபாதர்: குழப்பம் ஏற்படுவதற்கு காரணம் இந்தியாவில், பிற்காலத்தில், பிராமணர்களின் மகன்கள் பிராமணத் தகுதிகள் இல்லாமலேயே தங்களையும் பிராமணர்கள் என உரிமை கொண்டாடினர். மற்றவர்களும் மூட நம்பிக்கையால் அல்லது பரம்பரை வழக்கப்படி, அவர்களை பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டனர். இதனால் இந்திய சமுதாய அமைப்பு விரிசல் கண்டது. ஆனால் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் நாங்கள் பிராமணர்களுக்கான பயிற்சியினை எல்லா இடங்களிலும் அளித்து வருகிறோம்.

ஏனெனில், இன்றைய உலகிற்கு பிராமண மூளை மிகவும் தேவைப்படுகிறது. பரீக்ஷித் ஓர் அரசராக இருந்தபோதிலும், அவர் பிராமணர்களும் கற்றறிந்த பண்டிதர்களும் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்திருந்தார். அரசர்கள் தமது விருப்பம்போல் சுதந்திரமாக அரசாளவில்லை. ஒழுங்கற்ற அரசர்களை பிராமண ஆலோசனைக் குழு அரச பதவியிலிருந்து நீக்கியதற்கான சான்றுகள் சரித்திரத்தில் காணப்படுகின்றன. பிராமணர்கள் அரசியலில் பங்கேற்காவிடினும், அரசர்கள் தம் பதவியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டுமென்பதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள். இது நடந்தது மிகப் பழங்காலத்தில் என்றும் கூறுவதற்கில்லை. அசோகன் வாழ்ந்தது எந்த காலம்?

கடோவ்ஸ்கி: எங்கள் சொல் வழக்குப்படி அது புராதன அல்லது மத்திய கால இந்தியாவாக இருக்கும்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.

கடோவ்ஸ்கி: இந்தியாவில் புராதன முறை வழக்கத்திலிருந்தபோது, நீங்கள் சொல்வது சரி—சட்டமன்றத்தின் உயர் நிர்வாக அதிகாரிகளாக பிராமணர்களே இருந்தனர். முகலாயர்கள் காலத்திலும் மன்னர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கு பிராமண ஆலோசகர்கள் இருந்தனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அதுதான் உண்மை. பிராமணர்கள் அக்காலத்தில் மதிக்கப்பட்டார்கள். அரசனின் ஆலோசனைக் குழுவில் அவர்களே இருந்தார்கள். உதாரணமாக, இந்து அரசரான சந்திரகுப்தர் மகா அலெக்சாண்டர் காலத்தவர். சந்திரகுப்தருக்குச் சற்று முன்பு மகா அலெக்சாண்டர் கிரீஸிலிருந்து வந்து இந்தியாவின் ஒரு பகுதியை வென்றார். சந்திரகுப்தர் அரசரானபோது சாணக்கியர் அவரது பிரதம மந்திரியாக இருந்தார். சாணக்கியரின் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கடோவ்ஸ்கி: ஆம்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர் ஒரு சிறந்த பிராமண அரசியல்வாதி. புதுதில்லியில் வெளிநாட்டு அரசு தூதரகங்கள் அடங்கியுள்ள இடத்திற்கு சாணக்கியபுரி என்று அவரது பெயரை இட்டிருக்கிறார்கள். பேரறிஞரும் அரசியல்வாதியுமான சாணக்கிய பண்டிதர் ஒரு பிராமணர். அவர் நன்கு கற்றறிந்தவர். அவரது நீதிக் கருத்துகள் இன்றும் மதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சாணக்கிய பண்டிதரின் அறிவுரைகள் கற்றுத் தரப்படுகின்றன. பிரதம மந்திரியாக இருந்தாலும் சாணக்கிய பண்டிதர் தனது பிராமணத் தன்மையை தக்க வைத்திருந்தார்; அவர் ஊதியம் எதுவும் பெறவில்லை. பிராமணன் ஊதியம் பெற்றால் அவன் நாயாகி விடுகிறான் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படுகிறது. அவன் ஆலோசனை வழங்கலாம். ஆனால், உத்தியோகம் வகிக்கக் கூடாது. ஆகையால், சாணக்கிய பண்டிதர் பிரதம மந்திரியாக இருந்தபோதும் குடிசையில் வாழ்ந்து வந்தார். இத்தகைய பிராமண பண்பாடும் பிராமண மூளையும் வேத நாகரிகத்தின் தரத்தை உணர்த்துபவை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives