எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 3

சென்ற இதழில் விஷ்ணு தூதர்களுக்கும் எம தூதர்களுக்கும் இடையிலான உரையாடலின் மூலமாக ஹரி நாமத்தின் மகிமையைக் கண்டோம். இந்த இதழில் ஹரி நாமம் மற்றும் பகவத் பக்தர்களின் மகிமையினை எமராஜர் தமது தூதர்களுக்கு எடுத்துரைப்பதைக் காணலாம்.

எம தூதர்களின் கேள்விகள்

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை எழுப்பினர்:

“எஜமானரே! அஜாமிளன் ‘நாராயண’ என அழைத்ததும், ‘பயப்படாதே’ எனக் கூறியபடி, அங்கே வந்து அவனை விடுவித்த அந்த நான்கு அழகிய நபர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். அஃது உகந்ததாக இருக்குமெனில், தயவுசெய்து கூறுங்கள்.

“ஜடவுலகில் எத்தனை ஆளுநர்கள் உள்ளனர்? அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிகழும்பட்சத்தில் என்ன நடக்கும்? எல்லாரிலும் உயர்ந்த பரம ஆளுநர் யாரேனும் இருக்கின்றாரா? அந்த உன்னத ஆளுநர் நீங்கள்தான் என நாங்கள் நினைத்திருந்தோம். நீங்களே உன்னத ஆளுநர் என்றால், உங்களது கட்டளையின்படி செயல்பட்ட எங்களைத் தடுத்த அந்த அற்புத புருஷர்கள் நால்வரையும் நீங்கள் தண்டிக்க வேண்டும்.”

முழுமுதற் கடவுள்

தமது சேவகர்கள் நாராயணரின் திருநாமத்தை உச்சரித்து விவரித்ததால் பெரும் மகிழ்ச்சியடைந்த எமராஜர் பகவானின் தாமரைத் திருவடிகளை தியானித்து பதிலளிக்கத் தொடங்கினார்.

“அன்புள்ள சேவகர்களே! நீங்கள் என்னை பரம ஆளுநராக நினைக்கலாம், ஆனால் நான் பரம ஆளுநர் கிடையாது. இந்திரன், சந்திரன், பிரம்மா, சிவன் முதலிய அனைவருக்கும் உயர்ந்தவராக, மூல காரணமாக விளங்கும் பரம புருஷர் ஒருவர் இருக்கின்றார், உலகம் முழுவதும் அவராலேயே ஆளப்படுகிறது.

“ஸத்வ குணத்திலுள்ள தேவர்களும் முனிவர்களும்கூட அந்த பரம புருஷரைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அப்படியிருக்க இறைவனை அறிந்துவிட்டதாக மனப்பால் குடிக்கும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? உடலின் மற்ற பாகங்களால் கண்களைக் காண முடியாததைப் போல, எல்லா ஜீவன்களின் இதயத்திலும் பரமாத்மாவாக உறைந்துள்ள பரம புருஷ பகவானைப் பற்றி புலன்களாலோ அனுமானத்தினாலோ அறிய முடியாது.”

தமது சேவகர்களின் வினாக்களுக்கு எமராஜர் பதிலளித்தல்.

பக்தர்களுக்கு பாதுகாப்பு

எமராஜர் தொடர்ந்தார்: “பரம புருஷ பகவான் தன்னிறைவு உடையவர், பூரண சுதந்திரமானவர். மாயாசக்தி உட்பட அனைத்து சக்திகளுக்கும் அவரே மூலம், அவரே எஜமானர். அவர் அற்புதமான ரூபம், குணங்கள் மற்றும் அம்சங்களைக் கொண்டவர். அவரே பகவான் விஷ்ணு, நாராயணர். அவரது சேவகர்களான விஷ்ணு தூதர்கள் ஏறக்குறைய அவரைப் போன்ற தேக அம்சங்களையும் பூரண சுதந்திரத்தையும் பெற்றுள்ளனர்.

“அந்த விஷ்ணு தூதர்கள் விஷ்ணு பக்தர்களை எதிரிகளிடமிருந்தும் அசுரர்களிடமிருந்தும் தேவர்

களிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும் எமராஜனான என்னிடமிருந்தும் அனைத்து விதமான தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கின்றனர்.

“தர்மம் து ஸாக்ஷாத் பகவத் ப்ரணீதம், உண்மையான தர்மம் என்பது பரம புருஷரால் நேரடியாக உபதேசிக்கப்பட்டதாகும். இதன் விளக்கங்களை ஸத்வ குணத்திலுள்ள தேவர்களாலும் முனிவர்களாலும்கூட முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது என்னும்போது, சாதாரண மனிதர்கள் மற்றும் அசுரர்களைப் பற்றி என்ன சொல்வது!

“பிரம்மதேவர், நாரதர், சிவபெருமான், நான்கு குமாரர்கள், தேவஹூதியின் மகனாக அவதரித்த பகவான் கபிலர், ஸ்வாயம்புவ மனு, பிரகலாத மஹாராஜர், ஜனக மஹாராஜர், பீஷ்மர், பலி மஹாராஜர், சுகதேவ கோஸ்வாமி, நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான தர்மத்தை அறிந்த மஹாஜனங்களாவோம்.

“அந்த உண்மையான தர்மம் பரம புருஷரிடம் சரணாகதி அடைவதாகும். இதுவே பாகவத தர்மம் என்று அறியப்படுகிறது. சற்றும் குறைபாடற்ற இந்த மிக இரகசியமான விஷயத்தைப் புரிந்துகொள்வது சற்று கடினமானதாக இருந்தால்கூட, இதனைப் புரிந்து கொண்டு செயல்படும் அதிர்ஷ்டசாலி உடனே முக்தி பெற்று பகவானின் ராஜ்ஜியத்தை அடைவான்.”

பாவத்தை அழிக்கும் ஹரி நாமம்

பாகவத தர்மத்தை விளக்கிய பின்னர், நாம உச்சாடனத்தின் மகிமைகளை எமராஜர் எடுத்துரைத்தார்: “எனது மகன்களுக்கு நிகரான சேவகர்களே! அந்த பகவானுடைய திருநாம ஜபத்தின் மகிமையைப் பாருங்கள்! பாவங்கள் பல செய்த அஜாமிளன், பகவானுடைய திருநாமத்தை உச்சரிக்கிறோம் என்பதைக்கூட அறியாமல், தனது மகனை அழைப்பதற்காகவே மரணத் தருவாயில் ‘நாராயண’ என உச்சரித்தான். இருந்தும்கூட, அவனது பாவங்கள் அனைத்திலிருந்தும் அவன் உடனடியாக விடுபட்டான்.

“பகவானுடைய திருநாமத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டே மனித சமுதாயத்தின் இறுதியான தர்மமாகும். பகவானுடைய திருநாமம், குணங்கள் மற்றும் லீலைகளைப் பாடுவதால், ஒருவன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் எளிதில் விடுபடுகிறான். பகவானின் நாமத்தை பிழையுடன் உச்சரித்தாலும் குற்றமின்றி உச்சரித்தாலும், அவன் பௌதிக பந்தத்திலிருந்து நிச்சயம் விடுதலை அடைவான்.

“வேதச் சடங்குகளில் கவர்ச்சி கொண்டவர்களும் பரம புருஷரின் மாயையில் மதி மயங்கியவர்களும் ஸ்வர்க்கத்திற்கு ஏற்றம் பெறுவதைப் போன்ற தற்காலிக நன்மையிலேயே நாட்டம் கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் கவர்ச்சி ஏற்படுவதில்லை.”

எமராஜரிடமிருந்து பாதுகாப்பு

எமராஜர் தொடர்ந்தார்: “எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண விரும்பும் புத்திசாலிகள் பகவானின் திருநாமத்தை உச்சரித்து பக்தித் தொண்டைப் பின்பற்றுகின்றனர். அத்தகைய பக்தர்கள் எனது அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் அல்லர்.

“பக்தர்கள் பொதுவாக பாவம் செய்வதில்லை. ஒருவேளை அவர்கள் அறியாமல் ஏதேனும் பாவம் செய்ய நேர்ந்தாலும், அவர்களுடைய இடையறாத ஹரி நாம உச்சாடனம் அப்பாவங்களைச் சுட்டெரித்து விடுகிறது.

“அன்புள்ள சேவகர்களே! பகவானிடம் பூரண சரணாகதி அடைந்துள்ள பக்தர்களை தேவர்களும் முனிவர்களும் போற்றிப் புகழ்கின்றனர். எனவே, நீங்கள் அவர்களை நெருங்கவே கூடாது. பகவானின் கதாயுதத்தினால் எப்போதும் பாதுகாக்கப்படும் அந்த பக்தர்களை பிரம்மதேவரோ நானோ காலமோகூட நெருங்கவோ தண்டிக்கவோ இயலாது.

“அதே சமயத்தில், பக்தர்களிடம் சகவாசம் கொள்ளாமல், பகவானின் திருநாமத்தை உச்சரிக்காமல், பகவானை நினைக்காமல், பௌதிக சுகபோகங்களில் பற்றுதல் கொண்டு பாவம் செய்பவர்கள் அனைவரையும் என்னிடம் தண்டனைக்காக அழைத்து வாருங்கள்!”

எமதூதர்களின் பயம்

இவ்வாறு பேசிய எமராஜர் அஜாமிளனுடைய விஷயத்தில் தாமும் தம் சேவகர்களும் குற்றம் புரிந்துவிட்டதாக எண்ணி மிகவும் வருந்தினார். பகவானிடம் மன்னிப்புக்கோரும் விதத்தில் அவர் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்: “பகவானே, தாங்கள் கருணாமூர்த்தி என்பதால், அஜாமிளனை அறியாமல் கைது செய்த எங்களை தயவுசெய்து மன்னித்தருளுங்கள். பெருங்குற்றம் செய்துவிட்ட எங்களை நற்குணங்கள் நிரம்பிய தாங்கள் தயவுகூர்ந்து மன்னித்தருளுங்கள். தங்களுக்கு எங்கள் மரியாதைக்குரிய வணக்கங்களை மீண்டும்மீண்டும் சமர்ப்பிக்கிறோம்.”

இவ்வாறாக, தங்கள் தலைவரான எமராஜரிடமிருந்து பகவானுடைய நாமம், ரூபம், குணம், மற்றும் லீலையின் மகிமைகளைக் கேட்டு, எமதூதர்கள் பெரும் ஆச்சரியமும் அச்சமும் அடைந்தனர். அவர்கள் அன்று முதல் பக்தர்களைக் கண்டதும் அவர்களை நெருங்கக்கூட பயப்படுகின்றனர்.

இந்த வரலாற்றை அகஸ்திய முனிவரிடமிருந்து தாம் கேட்டறிந்ததாக சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித் மஹாராஜரிடம் விவரித்தார்.

அடுத்த இதழில் ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனையைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives