வழங்கியவர்: வைகுண்டானந்த தாஸ்
மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுகள் முடிந்து விட்டன, முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர். இன்று நம்முடைய இந்திய சமுதாயத்தில் பள்ளி செல்லக்கூடிய மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு என்பது நீண்ட கால வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக அமைந்து விட்டது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றிபெறா விட்டால் அல்லது குறைந்த மதிப்பெண்களை எடுத்து விட்டால், வாழ்க்கை முற்றிலுமாக இருண்டு விடும் என்று ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் எண்ணுகின்றனர். அப்படியே உழைத்து அதிக மதிப்பெண்களை எடுத்துச் சென்றாலும் கல்லூரி வாசலில் பல போட்டியாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ சமுதாயம் முழுவதும் எந்த யோசனையுமின்றி ஒரே விதமான கல்வியைத் தொடர்கின்றது. நவீன கல்வியின் மேல் மோகம் கொண்டு பலவித மன உளைச்சல், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீய பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கல்வியாளர்கள் நவீன கல்வி குறித்து பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சமூக ஆர்வலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று, விவாத மேடைகளில் விவாதித்து நமது கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். ஆனால் இவையெல்லாம் எந்த பலனையும் தந்த பாடில்லை. மாணவர்களிடையே இருக்கும் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இவையனைத்தையும் கவனித்துப் பார்த்தேன், மனதில் பல வினாக்கள் எழுந்தன. கல்வியின் நோக்கம் என்ன? நாம் பயிலும் கல்வி நம்மை எங்கே கொண்டு செல்கிறது? எல்லாருக்கும் ஒரே மாதிரியான (சமச்சீர்) கல்வி தேவைதானா? கல்வி உடலுக்குத் தேவையான பொருட்களை ஈட்டுவதற்கு மட்டுமா? மனதை செம்மைப்படுத்துவதற்காகவா? ஓராண்டு படிப்பில் எதிர்காலத்தையே தீர்மானித்து விட முடியுமா?
இப்படிப்பட்ட வினாக்களுக்கு நெடுங்காலமாக உலகிற்கு வழிகாட்டும் வேத நூல்களில் பதிலைக் கண்டேன். அதில் ஒன்று, பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கல்வியின் குறிக்கோளைப் பற்றிக் கூறுகிறார்:
வித்யா-வினய- ஸம்பன்னேப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
ஷுனி சைவ ஷ்வ-பாகேசபண்டிதா: ஸம-தர்ஷின:
கல்வியும் பணிவும் கொண்டவர்கள் தங்களது உண்மை ஞானத்தின் வாயிலாக, கற்றறிந்த தன்னடக்கமுள்ள பிராமணன், பசு, யானை, நாய், நாயைத் தின்பவன் (கீழ் ஜாதி) என அனைவரையும் சமநோக்கில் காண்கின்றனர்.” (பகவத் கீதை 5.18)
அஃதாவது, உண்மையான கல்வி என்பது எல்லா தரப்பட்ட மக்களையும் சமநோக்குடன் காண்பதற்கு வழிவகுப்பதாக இருக்க வேண்டும். மேலும், அஃது ஒருவனிடம் பணிவை வளர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
நவீன கல்வியை இதன் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், அதன் உண்மை நிலை புலப்படும். நவீன கல்வி மக்களின் மனதில் வேற்றுமையை உருவாக்குகிறது. இவன் என் நண்பன், இவன் பகைவன், யாரொருவன் எனது புலன்களை திருப்தி செய்கின்றானோ அவனே எனது நண்பன், இல்லையெனில் அவன் பகைவன்,”ஶீஇத்தகு கீழ்நிலை மனப்பான்மை மக்களிடையே ஆழமாக உருவாகி வருகிறது. ஆனால் அனைவரும் கல்வி கற்க பள்ளி செல்பவர்களாகவே உள்ளனர். அப்படியெனில், அவர்கள் உண்மையிலேயே கல்வி கற்கின்றனரா என்பதில் சந்தேகம் எழுகின்றது.
கல்வி கற்றும் மனோநிலை மாறாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதனை எவ்வாறு புரிந்துகொள்வது? நம்முடைய இன்றைய கல்வி முறையானது பல ஆண்டுகளாக நம்மை ஆண்டுவந்த ஆங்கிலேயர்களால் புலனின்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, இது வாழ்வின் உன்னத நோக்கத்தை மறைக்கச் செய்கின்றது. எவ்வாறு? வேத காலத்தில் கல்விக்கும் பணத்திற்கும் சம்பந்தமே கிடையாது. பெரிய ஜமீன்தார் ஒருவர் பள்ளியை எட்டிப் பார்க்காதவராகவும் இருந்திருக்கலாம், பற்பல வருடங்கள் செலவழித்து கல்வி கற்ற பிராமணர் ஒருவேளை உணவிற்கு கஷ்டப்படுபவராகவும் இருந்திருக்கலாம். அதாவது, கல்விக்கும் செல்வத்திற்கும் எந்தவொரு நேரடித் தொடர்பும் இருக்கவில்லை. கல்வியை விரும்பியோர் தங்களது வாழ்க்கையினை கல்வியை நாடிக் கழித்தனர். செல்வத்தை விரும்பியோர் தங்களது வாழ்க்கையினை செல்வத்தை நாடிக் கழித்தனர்.
ஆனால் நவீன காலத்திலோ செல்வமும் புலனின்பமும் அனைவரிடமும் பெருமளவில் ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், அந்த புலனின்பத்தைப் பெறுவதற்காகவே (அதாவது பணம் சம்பாதிப்பதற்காகவே) கல்வி கற்கப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது. இன்றைய உலகில் யாருமே கல்விக்காக கல்வி கற்கவில்லை, செல்வத்திற்காகவே கல்வி கற்கின்றனர். கல்விச் சான்றிதழ் பெற்றுவிட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். அதன்மூலம் புலன்களுக்கு இன்பத்தைத் தரக்கூடிய ஸ்மார்ட் போன், தொலைக்காட்சி, பிரிட்ஜ், கார் முதலியவற்றை வாங்கி அனுபவிக்கலாம்.” இதுவே மக்களின் எண்ணமாக உள்ளது. இந்த கருத்தை ஆழமாகக் கொண்டதே நவீன கல்விமுறை. புலனின்பத்தை அடைவதே வாழ்வின் குறிக்கோள் என்று மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகிறது.
பிறப்பு, இறப்பு, முதுமை, பிணிஶீஇவையே வாழ்வின் உண்மையானப் பிரச்சனைகள், ஆனால் இவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைப் பற்றி எந்தவிதக் கருத்தும் இன்றைய கல்வியில் இல்லை. அழியக்கூடிய இந்த உடலுக்குக் கிடைக்க வேண்டிய புலனின்பம் தானாகக் கிடைக்கும் என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எவரும் தேடாமலேயே அனைவரையும் தேடித் தானாக வரும் துன்பத்தைப் போல, அவரவருக்கான இன்பமும் தானாகத் தேடி வரும் என்பதே வேதங்கள் கூறும் உண்மை. ஆகையால், பணத்தின் அடிப்படையிலான இன்றைய விசாலமான கல்வி அமைப்புகள் தேவையில்லை. இவை மாணவர்களை கடின உழைப்பிற்கும் பந்தயத்திற்கும் சோர்விற்கும் வழிவகுக்கின்றன. மானிடப் பிறவியில் வழங்கப்பட்ட உயர்ந்த அறிவை சரியாகப் பயன்படுத்துவதற்கு உதவாமல், இக்கல்வி துன்பம் எனும் பாதையில் மக்களை ஆழ்த்துகிறது.
ஸ்ரீல பிரபுபாதர் நவீன கல்விமுறையை கசாப்புக் கூடத்திற்கு ஒப்பிடுகிறார். இதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? ஒவ்வோர் உயிர்வாழியும் இவ்வுலகில் தனிப்பட்ட மனநிலை மற்றும் குணத்துடன் பிறக்கிறது. ஒவ்வோர் உயிர்வாழியும் தனது மன நிலைக்கு ஏற்றவாறு இயற்கையாகவே ஒரு செயலில் ஈர்ப்புடன் இருக்கின்றது. உண்மை அவ்வாறு இருக்கும்பொழுது, எல்லாருக்கும் ஒரே மாதிரியான சமச்சீர் கல்வியை எவ்வாறு வழங்க இயலும்? கல்வி முறை ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை உடையதாகத் தெரிய வில்லை. பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.13),
சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்குண-கர்ம-விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம்வித்த்-யகர்த்தாரம் அவ்யயம்
வேதப் பண்பாட்டில் ஒவ்வொருவருக்கும் அவரவரின் குணத்திற்கு ஏற்றாற்போல கல்வி அளிக்கப்பட்டது. உதாரணமாக, அறிஞர் மனப்பான்மையில் இருக்கக்கூடியவர் பலவிதமான சாஸ்திரங்களைப் படித்து மக்களுக்கு அவற்றை உபதேசிக்கும் மனப்போக்கு உடையவராக இருக்கலாம். இவரை நாம் அறிவாளி வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறலாம். இன்னொருவர் மற்றவர்களைப் பாதுகாத்தல், எதிரிகளை அடக்குதல், நிர்வாகத் திறமை போன்ற மனப்பான்மை உடையவராக இருக்கலாம். இவரை நாம் நிர்வகிக்கும் வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறலாம். மற்றொருவர் பொருட்களை நியாயமான முறையில் சேர்க்கக்கூடிய திறனுடையவராக இருக்கலாம். இவரை நாம் வணிக வகுப்பைச் சார்ந்தவர் என்று கூறலாம். மற்றவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகுப்பினருக்கு உதவியாக பணிபுரியும் மனப்பான்மையுடன் இருக்கின்றனர். இவ்வாறாக, சமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனப்பான்மையுடன் வாழ்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அவரவரது மனநிலைக்கு ஏற்றவாறு கல்வியளித்து தேர்வுடையவனாக ஆக்குவதுதானே ஏற்றது. இதைத் தவிர்த்து எல்லாருக்கும் ஒரே விதமான கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் இயற்கை மனப்பான்மை முரண்பாடாக அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது.
மேலும், மனித வாழ்வின் உன்னதமான குறிக்கோள், பகவானிடத்தில் அன்பு செலுத்தி அவருடைய திருநாடான வைகுண்டத்திற்குச் செல்வதாகும். நமது கல்வி அங்கே செல்வதற்கு வழிவகுக்க வேண்டும். நவீன கல்வி அவ்வாறு செய்யாதிருப்பது வருந்தத்தக்கதாகும். இந்த கருத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு அவரவரின் குணத்திற்கு ஏற்றவாறு கல்வியளித்து, அதனுடன் இணைந்து பகவான் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்து, அவருடைய திருநாட்டிற்குச் செல்லும்விதமாக ஒரு நல்ல திடகாத்திரமான மாணவ (மனித) சமுதாயத்தை உருவாக்குவோமாக.