மனித வாழ்வின் நான்கு எதிரிகள்

Must read

கை நிறைய சம்பளம், வங்கிக் கணக்கில் பல இலட்சங்கள், ஆடம்பரமான பங்களா, அழகிய மனைவி, அன்பான குழந்தைகள், விரைந்து செல்லும் கார்–இவையே மனித வாழ்வின் வெற்றி என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால்…

வழங்கியவர்: பிரியதர்ஷினி ராதா தேவி தாஸி

ஒருவன் தனது வாழ்வை தூய்மைப்படுத்திக் கொண்டால், அதுவே மனித வாழ்வின் உண்மையான வெற்றியாகும். சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மனிதர்கள் தங்களது வாழ்வில் வெற்றியை (பக்குவத்தை) அடைய முடியும் என்று பகவத் கீதையில் (16.23) பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.

: ஷாஸ்த்ர-விதிம் உத்ஸ்ருஜ்ய வர்ததே காம-காரத:

ந ஸ ஸித்திம் அவாப்னோதி     ந ஸுகம் ந பராம் கதிம்

“சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து தனது மனம்போன போக்கில் செயல்படுபவன், பக்குவத்தையோ சுகத்தையோ பரம இலக்கையோ அடைவதில்லை.”

பக்குவமற்ற புலன்கள், ஏமாற்றும் இயல்பு, தவறு செய்யும் தன்மை, மாயையின் வசப்படுதல் ஆகிய நான்கு முக்கிய குறைபாடுகள் சாதாரண உயிர் வாழிகளிடம் காணப்படுகின்றன. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு விளங்கும் சாஸ்திர விதிகள், எல்லா சாதுக்களாலும் ஆச்சாரியர்களாலும் மஹாத்மாக்களாலும் எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றின்படி, மனித வாழ்வு தவத்திற்கானதாகும். மனித வாழ்க்கை என்பது நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட கிடைக்கும் புலனின்பத்திற்கானது அல்ல என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.1) ரிஷபதேவர் கூறுகிறார். மனித வாழ்வில் தவத்தை மேற்கொள்பவர்கள் தூய்மையான தளத்திற்கு உயர்வு பெற்று உன்னத ஆனந்தத்தை அடைய இயலும்.

தவம்

தவம் மேற்கொள்ள வேண்டும் என்றால், காட்டிற்குச் சென்று தனிமையில் கடுமையான தவத்தில் ஈடுபட வேண்டும் என்பது பொருளல்ல. தவம் என்றால் வாழ்வின் ஆன்மீக முன்னேற்றத்திற்காக சிரமங்களைத் தன்னிச்சையாக ஏற்றுக் கொள்வதாகும். நோய்வாய்பட்டவர் மருத்துவரின் பரிந்துரைப்படி உணவை ஏற்க வேண்டும். அதனை விடுத்து தான் விரும்பியவாறு எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று அந்த நோயாளி கருதினால், அவனது நோய் குணமடையாது. அதுபோல மனம்போன போக்கில் எதை வேண்டுமானாலும் செய்து கொண்டு ஆன்மீகத்திலும் ஈடுபடலாம் என்றால், நம்மால் வாழ்வின் உன்னத இலக்கை அடைய முடியாது.

தவறான/முறையற்ற உடலுறவு, போதைப் பழக்கங்கள், அசைவ உணவு உண்ணுதல், சூதாடுதல் ஆகிய நான்கும் மனித வாழ்வின் நான்கு எதிரிகள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இந்நான்கு செயல்கள் எங்கெல்லாம் செய்யப்படுகின்றனவோ, அங்கு பாவ புருஷனான கலி குடியிருக்கின்றான் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (1.17.38) கூறப்பட்டுள்ளது. “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்னும் பழமொழிக்கேற்ப துஷ்டமாக விளங்கும் இந்நான்கு தீய செயல்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டுமென அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வருபவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இத்தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இவ்வறிவுரைகளைப் பின்பற்றுவது கடினமாக இருக்கலாம். அக்கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு ஒருவன் அவ்வறிவுரைகளைப் பின்பற்றினால் அதுவே தவம் எனப்படுகிறது. மனம்போன போக்கில் செய்யலாம் என்று எண்ணாமல் சாஸ்திரங்களின் கட்டளைகளை உயர்ந்த அதிகாரிகளிடமிருந்து பின்பற்றியே ஆக வேண்டும்.

தற்காலத்தில் மக்கள் எத்தகைய தவங்களையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல், கடினமாக உழைத்து புலனின்பத்தை அனுபவிப்பதிலேயே தங்களது முழு வாழ்வையும் கழிக்கின்றனர். தற்போதுள்ள எந்தவொரு பள்ளியிலோ கல்லூரியிலோ தவத்தை பற்றிக் கற்பிக்கப்படுவதில்லை. பெரியோர்களின் முன்பு தவறான காரியங்களைச் செய்தாலும் அவை குற்றமெனக் கருதப்படுவதில்லை. இவை மனித குலத்திற்கான நாகரிகமன்று; மாறாக மிருகங்களின் நாகரிகமே. ஏனெனில், மிருக வாழ்க்கையில் விரும்பியவற்றைச் செய்யலாம். மனித வாழ்க்கை அ,ஆ,இ,ஈ படிப்பதில் ஆரம்பமாவது அல்ல. ஒருவர் படித்துப் பட்டங்களை பெற்றவராக இருப்பினும் மிருகத்தினும் கீழான குணங்களுடனிருந்தால், அதில் ஒரு பயனும் இல்லை. இந்த நான்கு பாவ காரியங்களும் தர்மத்தின் நான்கு தூண்களான வாய்மை, தூய்மை, தவம், தயை ஆகியவற்றை நேரடியாகச் சிதைத்தழிப்பவை. இதனைப் பற்றி விரிவாகக் காணலாம்.

சூதாட்டம்

சூதாட்டம் தர்மத்தின் முதல் தூணாகக் கருதப்படும் வாய்மையை முற்றிலும் அழித்து விடுகிறது. சூதாட்டம் என்பது பணத்தை பந்தயம் கட்டி ஆடுவது மட்டுமல்ல, தவறான வழியில் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுதல், லாட்டரி விற்பனை, தொலைக்காட்சி பார்த்தல், திரைப்படத்திற்குச் செல்வது, விளையாட்டுகள் பார்ப்பது, ஜட இசை கேட்பது, சீட்டாட்டங்கள், குறுக்கெழுத்து போட்டிகள் போன்ற செயல்கள் அனைத்தும் சூதாட்ட பிரிவில் அடங்கும். சூதாட்டம் ஒருவரை எப்போதும் ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. பேராசை, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை மேலும் தீவிரமாக்குகிறது. இவ்வாறு சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தங்களது வாழ்வையே பணயம் வைத்து இழக்கின்றனர்.

ஒரு சூதாடி அதிர்ஷ்டவசத்தால், அதிகமான பணத்தை வென்று புலனின்பத்தை அனுபவிக்கலாம் என்று நினைக்கிறான். சூதாட்டத்தில் சொல்லப்படும் அதிர்ஷ்டம், தற்செயல் போன்ற சொற்கள் இறைவனின் அதிகாரத்தையும் கர்ம விதிகளையும் நிராகரிக்கின்றன. ஸ்ரீல பிரபுபாதர் மனக்கற்பனைகளான சினிமா, விளையாட்டு போன்றவற்றையும் சூதாட்டப் பிரிவிலேயே சேர்த்தார்; ஏனெனில், வேதக் கொள்கைகளின் இறுதி இலக்கைவிட்டு விலக்கிச் செல்லும் மனக் கற்பனைகள் அனைத்தும் சூதாட்டப் பிரிவினையே சாரும். சாஸ்திரங்களிலும் சூதாட்டத்தினால் அனைத்தையும் இழந்தவர்களின் வரலாற்றை ஏராளமாகக் காணலாம். பாண்டவர்கள் எல்லாவற்றையும் சூதாட்டத்தில் பணயம் வைத்து இழந்தனர். அதுவே மஹாபாரத யுத்தத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றது என்பதை நாமறிவோம். நளதமயந்தி கதையிலும் நளனுக்கு இருந்த சூதாடும் பழக்கத்தினால் முழு இராஜ்ஜியத்தையும் இழந்து காட்டிற்குச் சென்று துன்பப்பட்டான் என்பதை அறியலாம்.

மானுட பிறவியை பெற்ற நாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரது சேவையில் நம்மை பணயம் வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நாம் மகிழ்வுருவோம். அவரது இராஜாங்கத்தை சென்றடைவோம். அவ்வாறு அல்லாமல் நமது வாழ்நாளைப் புலனின்பத்திற்காக பணயம் வைத்தால் கர்ம விளைவுகளால் பாதிப்படைந்து கீழ்நிலை விலங்குகளின் உடலிற்கு தாழ்த்தப்படுவோம்.

மது அருந்துதல், சூதாடுதல், தவறான பாலுறவில் ஈடுபடுதல், மாமிசம் உண்ணுதல் ஆகிய பாவக் காரியங்களில் ஈடுபடுவோர் நரகத்தில் அதற்குத் தகுந்த தண்டனைகளை அனுபவிக்க வேண்டும் என்பதைச் சித்தரிக்கும் வரைபடம்.

முறையற்ற (அ) தவறான உடலுறவு

இந்த பாவகாரியமானது தர்மத்தின் நான்கு தூண்களில் ஒன்றான தூய்மையை அழிக்கவல்லது. உடலின் தேவைகளில் பாலுறவும் ஒன்று என்பதால் அது சாஸ்திரங்களில் ஓரளவிற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கட்டுப்பாடற்ற உடலுறவையோ, இதர புலனுகர்வையோ அனுமதிப்பதில்லை. எனவே பண்பாடுடைய எல்லா மனித சமூகத்திலும் அறவாழ்வின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு திருமணம் செய்விக்கப்படுகிறது; ஏனெனில், இதுவே காம உணர்வை நெறிப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். கட்டுப்படுத்தப்பட்ட பற்றற்ற உடலுறவும் ஒருவித தபஸ்யமே ஆகும். பகவத் கீதையில் (7.11) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மாவிருத்தோ பூதேஷு காமோ (அ)ஸ்மி, “தர்மத்தின் கொள்கைகளுக்கு விரோதமில்லாத காமம் நானே,” என்று கூறுகிறார்.

ஒருவன் தனது மனைவியின் மூலம், குழந்தைகளைப் பெற்று கொள்வதற்காக மட்டுமே காம வாழ்வில் ஈடுபட வேண்டும். குழந்தைகள் தேவையில்லையெனில் அவன் காம வாழ்வை அனுபவிக்கக் கூடாது. கருத்தடை, மற்றும் இதர கொடூர முறைகளின் மூலம் குழந்தைப் பிறப்பைத் தடுத்து நவீன சமுதாயம் காம வாழ்வினை அனுபவிக்கின்றது. இஃது அசுரத்தனமானது என பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையற்ற ஆண்-பெண் உறவு, கருக்கலைப்பு, கருத்தடுப்பு, குழந்தை பிறக்காமல் இருக்கச் செய்யும் அறுவைச் சிகிச்சை, செயற்கை சிற்றின்பப் பழக்கம் ஆகியவை அனைத்தும் மஹா பாவகரமானவை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதற்கான நோக்கமின்றி ஒருவர் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. ஒருவனால் கிருஷ்ண உணர்வில் குழந்தைகளை வளர்க்க முடியுமென்றால் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பெறலாம்.

சைதன்ய மஹாபிரபு தன்னைக் காண வந்த சிவானந்த சேனரிடம் அவருக்குப் பிறக்கபோகும் பிள்ளைக்கு பரமானந்த தாஸன் என்று பெயர் சூட்டுமாறு அறிவுறுத்தினார். சிவானந்த சேனர் தர்மத்திற்கு விரோதமாக செயல்படாத காரணத்தினால், மஹாபிரபு அவரை நிராகரிக்கவில்லை. மாறாக, தனது நெருங்கிய சகாக்களில் ஒருவரான சோட்டா ஹரிதாஸ் என்பவரை, ஓர் இளம் பெண்ணை காம உணர்வுடன் வெறுமனே பார்த்த காரணத்தினால், தமது குழுவிலிருந்து விலக்கிவிட்டார். இதன் மூலம், தர்மத்தின் கொள்கைகளுக்கு புறம்பான தகாத உடலுறவிற்கான எண்ணம், விருப்பம் மற்றும் அதை அனுபவிப்பதற்கான திட்டத்தைத் தீட்டுதல் ஆகிய அனைத்தும் பாவகரமான செயல் என்பதை மஹாபிரபு நமக்கு கற்பிக்கிறார்.

முறையற்ற பாலுறவில் ஈடுபடுவோர் வஜ்ரகந்தக ஸால்மலி என்ற கொடிய நரகத்தைச் சென்றடைவர் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.

போதை வஸ்துக்கள்

போதை வஸ்துக்கள் என்பது உடல் பராமரிப்பிற்கு அப்பாற்பட்ட தேவையில்லாத இரசாயனப் பொருட்களை உட்கொண்டு மனம் மற்றும் உடலில் ஒருவித உந்துதலையும் மயக்கத்தையும் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதைக் குறிக்கிறது. மக்கள் தங்களது வலியையும் கஷ்டத்தையும் மறப்பதற்காக போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றனர். ஆகையால் அவர்கள் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கின்றனர். இன்பத்தை நாடி போதை வஸ்துக்களிடம் தஞ்சம் புகுவோர், இறைவனால் அளிக்கப்பட்ட இந்த மனித உடலையும் மனதையும் சுய நலத்திற்காக அனுபவிக்க நினைக்கும் இந்த வழிமுறையால் மாயையை அதிகரிக்கச் செய்து கொள்கின்றனர்.

போதை வஸ்துக்களின் பிரிவில் காபி, தேநீர் (டீ), புகையிலை, கஞ்சா, மது, எல்.எஸ்.டி, கஃபைன் அடங்கிய குளிர்பானங்கள், மாரிஜுனா, அபின் ஆகியவை அடங்கும். சாக்லேட்டிலும் மயக்கமளிக்கக் கூடிய கலவைகள் கலந்திருப்பதால் அவையும் இப்பிரிவில் அடங்கும். இப்பழக்க வழக்கங்களினால் ஒருவர் உடல் நலம் பாதிப்படைந்து நாளடைவில் தீராத வியாதியைச் சந்திப்பர். இத்தகையவர்களை வயோதிகம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே வந்தடையும். மேலும் இப்பழக்கத்தில் உள்ளவர்களின் மனம் எப்போதும் குழம்பியிருக்கும். அவர்களால் எந்தவொரு செயலிலும் விவேகத்துடன் ஈடுபட முடியாது. இவ்வாறாக போதை அளிக்கக்கூடிய பொருட்களை உட்கொள்வதால் ஒருவன் தனது ஜடப்பற்றை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல், மனதை இறைவனிடம் ஒருமுகப்படுத்துவதையும் இழக்கிறான். மனித வாழ்வு இறையுணர்வைப் புதுப்பிப் பதற்காகவேயன்றி குடிபோதையில் மறப்பதற்காக அல்ல.

“குடி குடியைக் கெடுக்கும்”, மது அருந்துதல் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு”, “புகை நமக்குப் பகை” என்று எச்சரிக்கப்படலாம்; ஆனால் போதைக்கு அடிமையானவர் எவராலும் அவற்றை விட்டொழிக்க முடியாது. ஏனெனில் ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது. ஒருவர் உயர்ந்த சுவையைப் பெறாதவரை, எவ்வளவு தான் அறிவுரைகளைக் கேட்டாலும் தாழ்ந்தவற்றிலேயே லயித்திருப்பர். அந்த அதி உயர்ந்த சுவையை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் அனைவருக்கும் அளித்தார். அவர் 1965இல் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள ஹிப்பிகள் போதை வஸ்துக்களுக்கு முற்றிலும் அடிமையாயிருந்தனர். ஸ்ரீல பிரபுபாதர் அவர்களை போதை பொருட்களை விட்டுவிடுங்கள் என்று முதலில் கட்டளை யிடவில்லை. மாறாக ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை வழங்கி, கிருஷ்ண பிரசாதத்தை அவர்களுக்கு அளித்தார். அதனால் அவர்கள் வெகுவிரைவில் கிருஷ்ண கீர்த்தனத்தினால் தங்களது உண்மை நிலையை உணர்ந்து, போதைப் பழக்கங்களை முற்றிலும் விட்டொழித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தொண்டர் களாயினர்.

மாபெரும் குடிகாரர்களான ஜகாய், மதாய் ஆகிய இருவரும் நித்யானந்த பிரபுவின் கருணையினால் பக்தர்களாக மாறியதை நாம் காணலாம். இதிலிருந்து நாம் அறியவேண்டியது என்னவெனில், தூய பக்தர்களின் கருணைக்கு பாத்திரமாகி, பக்தித் தொண்டில் தன்னிச்சையாக சேவை செய்ய முன்வந்தால், எளிமையாக தீய பழக்கங்களை விட்டொழிக்க முடியும்.

மாபெரும் பாவிகளான ஜகாய், மதாய் ஆகிய இருவரும் பகவான் சைதன்யரிடம் சரணடைதல்

மாமிசம் உண்ணுதல்

மாமிசம் எங்கெல்லாம் உண்ணப்படுகிறதோ, அங்கு தர்மத்தின் நான்கு தூண்களில் ஒன்றான கருணை (தயை) மனப்பான்மை அடியோடு அழிக்கப்படுகிறது. நாவின் ருசிக்காக உணவு சமைத்து உண்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள் என்று பகவத் கீதையில் (3.13) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். பாவியாக இருக்கும் வரை ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாது. மிருகங்கள் தன் இயற்கையின் நியதியை மீறுவதில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. பசு புல்லைத் தின்று நமக்கு பாலை அளிக்கிறது. ஆனால் மனிதனோ பாலைக் குடித்துவிட்டு பசுவையும் கொன்று தின்பான். இதனால் அவன் தாவரங்களை உண்பதால் ஏற்படும் பாவத்தைவிட பல நூறு மடங்கு அதிகமான பாவத்தை சேர்த்துக் கொள்கிறான்.

உண்மையான அஹிம்சை என்பது எந்தவொரு உயிர்வாழியின் வாழ்க்கை பரிணாமத்தையும் தடுக்காமல் இருப்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட மிருகம் கொல்லப்படும்போது, அதன் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உடலிலுள்ள மிருகம் இத்தனை நாள்கள் இத்தனை வருடங்கள் அவ்வுடலில் தங்கியிருக்க வேண்டுமெனில், நேரம் வருவதற்கு முன் கொல்லப்பட்டால், அந்த மிருகம் மற்றொரு இனத்திற்கு மாற்றம் பெறுவதற்குப் பதிலாக தன்னுடைய எஞ்சிய நாள்களை பூர்த்தி செய்வதற்காக அதே இனத்திற்கு மீண்டும் திரும்பி வர வேண்டும்.

நாவின் உந்துதலைக் கட்டுபடுத்த முடியாதவர்கள் விலங்குகளைக்கொன்று தின்கின்றனர். அத்தகையவர்கள் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கொதிக்கும் எண்ணெயில் போடப்படுகின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (5.26.13) குறிப்பிடப்பட்டுள்ளது. மிருகவதையை அனுமதிப்பவர், கொல்பவர், கூறுபோடுபவர், வாங்குபவர், விற்பவர், சமைப்பவர், பரிமாறுபவர், உண்பவர் ஆகிய அனைவரும் அந்த மிருகத்தைக் கொன்றவர்களாகவே கருதப்படுகிறார்கள் என்று மனுசம்ஹிதையில் (5.51) குறிப்பிடப்பட்டுள்ளது.

அசைவ உணவு உண்பதை எந்தவொரு அதிகாரப்பூர்வமான மதங்களும் அனுமதிப்பதில்லை. உதாரணமாக, கிருஸ்துவ மதபோதனைகளில், “உனது கரங்களில் இரத்தம் படிந்ததால் உனது பிரார்த்தனைகளை நான் ஏற்பதில்லை” (இசயா 1.15), “கொல்லாதிருப்பாயாக” (பத்துக் கட்டளைகள்), “உன்னுடைய உணவாக பழங்களாகட்டும், மருந்தாக இலைகளாகட்டும்” (ஏலாஹில் 47.12), “எருதைக் கொல்வது மனிதனைக் கொல்வதற்கு சமம்” (இசயா 66.3)என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குரானிலும் இதற்கு சான்றாக, “இந்த பூமியில் உள்ள மிருகங்களும், இரண்டு இறக்கைகளுடன் வானில் பறக்கும் பறவைகளும் உனக்கு மற்ற மக்களைப் போன்றவர்களே” (சுறா 6, பதம் 38), என்றும், “கடவுள் உனக்காக பயிர்களை விளையச் செய்து ஆலிவ் மற்றும் பேரிச்சம் பழம் மற்றும் திராட்சைப் பழங்களை உண்டாக்கினார்” (சுரா 16, பதம் 11) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமிசம் உண்பதை புத்தமதம் மற்றும் சமண மதமும் அவ்வாறே அனுமதிப்பதில்லை.

அசைவ உணவு உண்ணும் விலங்குகளுக்கு இரையை கிழித்து உண்ணத் தேவையான கூரிய நகங்கள், கோரைப் பற்கள், மாமிசத்தை எளிதில் ஜீரணிக்கக்கூடிய அமில சக்தி அதிகம் உள்ள உமிழ்நீர் சுரப்பி, சிறிய குடலமைப்பு ஆகியவை இயற்கையாகவே அமைந்துள்ளது. மனிதனின் உடலமைப்பு அசைவ உணவை உண்பதற்கும் ஜீரணிப்பதற்கும், தேவையற்றவையை வெளியேற்றுவதற்கும் பொருத்தமில்லாமல் அமைந்திருக்கின்றது. அசைவ உணவு சுவையும் சக்தியும் வாய்ந்தது என்று சிலர் நம்புகின்றனர். உண்மையில் மாமிசத்தை யாரும் அப்படியே உண்ண முடியாது. அதனோடு சேர்க்கப்படும் பொருள்களே அதற்கு சுவையையும் மணத்தையும் தருகின்றன. முட்டை ஒரு சைவ உணவு என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் முட்டைகளை உண்பது கருக் கொலைக்குச் சமம். முட்டைகளில் உள்ள பொருள் மாதவிடாய்க்குச் சமமானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. மாமிசம், மீன், முட்டை மட்டுமல்ல வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும் ஒருவர் உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இத்தகைய உணவுகள் ரஜோ, தமோ குணத்தில் இருப்பவை. அவை துன்பத்தையும் நோயையும் உண்டாக்குபவை. அது மட்டுமல்லாது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டி (பிரட்), பிஸ்கட்டுகள் மற்றும் பக்தரல்லாதோர் தயாரித்த அனைத்து உணவு வகைகளும் கர்ம விளைவுகளை உண்டாக்குபவை என்பதால் அவற்றையும் ஒருவர் உண்ணக் கூடாது. பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தினை மட்டுமே உண்ண வேண்டும்.

நாம் உண்ணும் உணவு ஆயுளை நீட்டித்து மனதை தூய்மைபடுத்தி உடலை பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். பால் பொருட்கள், சர்க்கரை, அரிசி, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவை ஸத்வ குணத்தைச் சார்ந்தவை. இவை இயற்கையிலேயே மிகவும் தூய்மையானதோடு மட்டுமின்றி அப்பாவி மிருகங்களைக் கொல்வதற்கான தேவை ஏதுமின்றி கிடைக்கின்றன. பகவத் கீதையில் (9.26) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்     யோ மே பக்த்யா ப்ரயச்சதி

ததஹம் பக்த்யுபஹ்ருதம்   அஷ்நாமி ப்ரயதாத்மன:

“இலை, பழம், பூ, நீர் ஆகியவற்றை அன்புடனும்

பக்தியுடனும் கொடுக்கப்படும்போது தாம் அவற்றை ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். எனவே மாமிசம், மீன், முட்டை போன்றவற்றை கிருஷ்ணர் ஏற்கமாட்டார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் பரமபுருஷ பகவானுக்கு நைவேத்யம் செய்த பிரசாதத்தை மட்டுமே உட்கொள்வதில் நாவினைப் பயிற்சி செய்தால் வெகுவிரைவில் அசைவ உணவு மட்டுமல்ல, எல்லா வேண்டாத விஷயங்களிலிருந்தும் படிப்படியாக விலகித் தூய்மையடைவர் என்பது உறுதி. ஒருவன் பாவகாரியங்களில் ஈடுப்பட்டிருக்கும் வரை இறைவனை அணுக முடியாது. பகவத் கீதையில் (7.28) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், யாரது பாவ விளைவுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதோ அவர்களே பக்தி தொண்டில் உறுதியுடன் ஈடுபட முடியும் என்று கூறுகிறார். ஆகவே இந்த மனித வாழ்வின் நான்கு எதிரிகளை விட்டொழித்தல், மனிதனாக வாழ விரும்பும் அனைவருக்கும் அவசியம்.

விடுபடுவதற்கான வழி

இக்கட்டுரையை எழுதும் சேவையை கொடுக்கப்பட்ட நான் இஸ்கான் பக்தர்களின் சங்கம் கிடைப்பதற்கு முன்னர், மாமிசம் உண்ணுதல், டீ, காபி குடித்தல், டிவி பார்த்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டிருந்தேன். ஸ்ரீல பிரபுபாதரின் கருணையை பக்தர்களின் மூலம் பெற்ற நானும் எனது குடும்பத்தவரும் பாவ காரியங்களை விட்டொழித்து கிருஷ்ண பக்தியை தற்போது மகிழ்ச்சியுடன் பயிற்சி செய்து வருகிறோம். ஒருவர் கிருஷ்ண பக்தியை முறையாக பயிற்சி செய்யத் தொடங்கினால், பாவச் செயல்களை விட்டொழித்தல் என்பது கடினமாக இருக்காது. பாவ காரியங்களை விட்டொழித்து மனித வாழ்வைத் தூய்மைப்படுத்தி இறைவனை அடைய விரும்புவோர், தூய பக்தர்களின் சங்கத்தில் அவர்களது அறிவுரையைப் பின்பற்றி நடக்க வேண்டும். அதன் மூலம் மனித வாழ்வின் எதிரிகளை எளிமையாக வெற்றி காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives