ஆம், அது சாத்தியம். மானவ சேவை, மாதவ சேவையாக மாற முடியும். அஃது எவ்வாறு என்பதை இங்கு காணலாம்.
வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்
மாதவனின் தொண்டில் நிலைபெற்றவர்
மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வது ஒருபோதும் மாதவனின் தொண்டாக முடியாது என்பதைக் கண்டோம். அதே சமயத்தில், மாதவனை திருப்தி செய்யும் விதத்தில், மக்களுக்குத் தொண்டு செய்தால், அந்த தொண்டு, மாதவனின் தொண்டாக முடியும்.
மாதவனின் தொண்டானது ஒன்பது வகைப்படும்: அவரைப் பற்றிக் கேட்டல், கூறுதல், நினைவு கொள்ளுதல், அவரது பாதங்களுக்கு பணிவிடை செய்தல், அவரை வழிபடுதல், அவருக்கு வந்தனம் செய்தல், அவரது தொண்டனாக செயல்படுதல், அவருடன் நட்புறவு கொள்ளுதல், மற்றும் எல்லாவற்றையும் அவருக்கு அர்ப்பணித்தல். இவற்றில் ஏதேனும் ஒன்றையோ பலவற்றையோ அனைத்தையுமோ ஒருவர் தனது வாழ்வில் திடமாக செய்தால், அவர் மாதவனின் தொண்டில் நிலைபெற்றவர் என்று அறியப்படுகிறார்.
நிரந்தர நன்மையை வழங்குவோம்
அவ்வாறு மாதவனுக்கு தொண்டு செய்தல் என்பது ஜீவனின் எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வாக அமையும். உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி போன்றவை தற்காலிக தீர்வையே கொடுப்பவை. ஒருவன் நீரில் மூழ்குவதாக எடுத்துக் கொள்வோம். அவனைக் காப்பாற்ற விரும்புபவன், மூழ்கு பவனை விட்டுவிட்டு, அவனது சட்டையை மட்டும் மீட்பதில் என்ன இலாபம்? ஆத்மாவை பிறவிப் பெருங்கடலில் மூழ்க விட்டுவிட்டு உடலுக்கு தொண்டு செய்வதன் உண்மையான பலன் என்ன?
ஒவ்வோர் உயிர்வாழியும் ஜடவுடலில் அடைபட்டு, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் சுழலில் சிக்கி துன்பப்படுகிறான். இத்துன்பத்திற்கு காரணம், முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை மறந்து தனியாக அனுபவிக்க வேண்டும் என்ற அவனது ஆசையே. அந்த ஆசையிலிருந்து விடுபடும்போது, அவன் பிறப்பு, இறப்பின் சுழற்சியிலிருந்து விடுபட்டு நிரந்தரமான மகிழ்ச்சியை அடைகிறான். அந்த மகிழ்ச்சியான நிலை முக்தி எனப்படுகிறது.
மாதவனுக்கு பிரியமானவராக மாறுதல்
முக்தியைப் பெற இகலோக தர்மங்களை விட்டுவிட்டு தனக்கு தொண்டு செய்யும்படி கிருஷ்ணர் கீதையில் (18.65) கட்டளையிடுகிறார். அந்த கட்டளையை மக்களிடம் எடுத்துச்சொல்வோர், அதாவது “கிருஷ்ணரின் தொண்டில் ஈடுபடுங்கள்” என்று பிரச்சாரம் செய்வோர், கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள். அவர்களைவிட பிரியமானோர் வேறு எவரும் இல்லை என்பதை நாம் கீதையில் (18.69) காண்கிறோம்.
முழுமுதற் கடவுள் ஒருபோதும் நமது தொண்டினை எதிர்பார்த்து இருக்கவில்லை. இருப்பினும் பக்தன் அவருக்கு அன்புடன் தொண்டாற்றும்பொழுது, அந்த அன்புத் தொண்டில் அவர் திருப்தியடைகிறார். அந்த பக்தன் மேலும் பல்வேறு ஜீவன்களை பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுத்தினால், அவன் பகவானுக்கு மிகவும் பிரியமானவனாக மாறுகிறான்.
உயர்ந்த நல்வாழ்வுத் திட்டங்கள்
இவ்வாறாக, மாதவனின் தொண்டில் ஈடுபடுவது மக்களுக்கு நிரந்தர நன்மையைத் தரும், வாழ்வின் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர விடுதலைலைத் தரும். மக்களிடம் கிருஷ்ண உணர்வை போதிப்பதும், பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு அவர்களுக்கு உதவி செய்வதும், மிகவும் உன்னதமான தொண்டுகளாகும். இந்த கலி யுகத்தில் மக்கள் விடுதலையடைவதற்கு ஹரி நாமம் ஒன்றே வழி, வேறு எந்த கதியும் இல்லை. ஆகவே, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் ஹரி நாமத்தை நாமும் உச்சரித்து, மக்களுக்கும் கொடுக்க வேண்டும்.
ஹரி நாமத்தைக் கொடுத்து மக்களை மாதவனின் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) உண்மையான மக்கள் தொண்டினை நல்கி வருகின்றது.
எத்தனையோ மருத்துவமனைகள் உள்ளன, ஆனால் உலக வாழ்க்கை என்னும் பெரும் நோயை குணப்படுத்தும் மருத்துவமனைகள் எங்கும் இல்லை. எத்தனையோ கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன, ஆனால் உன்னதமான ஆத்ம விஞ்ஞானத்தைக் கற்பிக்கும் கல்விக் கூடங்கள் எங்கும் இல்லை. எத்தனையோ அன்னதானக் கூடங்கள் உள்ளன, ஆனால் கிருஷ்ணரின் கருணையை பிரசாதமாக விநியோகம் செய்யும் மையங்கள் எங்கும் இல்லை.
இக்குறைகளைப் போக்கும் விதத்தில், இஸ்கான் கோவில்கள், மருத்துவமனைகளாக, கல்விக் கூடங்களாக, பிரசாதக் கூடங்களாகத் திகழ்கின்றன. மக்களுக்கு நிரந்தர நன்மையை வழங்கும் இத்தகு செயல்களில் ஈடுபட்டிருக்கும் காரணத்தினால், கிருஷ்ண பக்தர்களே உலகின் மிகச்சிறந்த சமூக சேவகர்களாவர்.