யக்ஞ-தான-தப:-கர்ம
ந த்யாஜ்யம் கார்யம் ஏவ தத்
யக்ஞோ தானம் தபஷ் சைவ
பாவனானி மனீஷிணாம்
“யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது. அவற்றைச் செய்ய வேண்டியது அவசியம். உண்மையில், யாகம், தானம், தவம் ஆகியவை மிகச்சிறந்த ஆத்மாக்களையும்கூட தூய்மைப்படுத்துகின்றன.” (பகவத் கீதை 18.5)
யாகம், தானம் மற்றும் தவம்
ஆன்மீக வாழ்வின் நான்கு நிலைகள்: பிரம்மசரியம், கிருஹஸ்தம், வானபிரஸ்தம், மற்றும் சந்நியாசம். பிரம்மசரியம் எனப்படும் மாணவ பருவத்தின் தொடக்கத்திலிருந்தே பரம புருஷரை திருப்திப்படுத்துவதற்கு ஒருவனுக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். அதிகாலையில் எழுதல், வேள்விகளைச் செய்தல், வேதங்களைப் படித்தல், ஸங்கீர்த்தனம் செய்தல், பகவானின் புகழை பிரச்சாரம் செய்தல் ஆகியவை பிரம்மசாரிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகின்றன. பிரம்மசாரி தினமும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன.
கிருஹஸ்தர்களுக்கான முதல் கடமை தானம். இவர்கள் பிரம்மசாரிகளுக்கும் துறவிகளான சந்நியாசிகளுக்குமே தானம் வழங்க வேண்டும். பிரம்மசாரி தனது ஆன்மீக குருவின் சார்பாக தானத்தை ஏற்கிறார். சந்நியாசி தனது பராமரிப்பிற்குத் தேவையானதை மட்டும் ஏற்கிறார். கிருஹஸ்தர்கள் பிராமணராக இல்லாதபட்சத்தில் தானங்களை ஏற்கக் கூடாது. தானம் ஏற்கும் கிருஹஸ்த பிராமணர்களும் அதனைச் சேமித்து வைக்கக் கூடாது. தனக்குக் கிடைத்த தானத்தில், தனது பராமரிப்பிற்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை தானம் செய்துவிட வேண்டும். வங்காள பழமொழி ஒன்று கூறுகிறது, “பிராமணர் 1,00,000 ரூபாய் தானம் பெற்றாலும், அவர் யாசகராகவே இருப்பார்.” ஏனெனில், அவர் உடனடியாக அனைத்தையும் தானம் செய்துவிடுவார்.
சந்நியாசிகளுக்கும் வானபிரஸ்தர்களுக்கும் தபஸ்ய (தவம்) மிகவும் முக்கியமானதாகும். தவம் என்றால் தாமாக முன்வந்து அனைத்து வகையான அசௌகரியங்களையும் ஏற்றுக்கொள்வதாகும். பௌதிக வாழ்வில் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்கு நாம் முயல்கின்றோம். ஆனால், ஆன்மீக வாழ்விலோ அசௌகரியமான சூழ்நிலையிலும் கிருஷ்ணருக்காக அனைத்து வகையான தவங்களையும் ஏற்க வேண்டும்.
தற்போது குறைந்தபட்சம் உண்மையான மாயாவாதி சந்நியாசிகள் தவ வாழ்வின் நியமங்களை தவறாது பின்பற்றுகின்றனர்; தினந்தோறும் மும்முறை நீராடுகின்றனர்; கடுமையான குளிர்காலத்திலும் தரையில் உறங்குகின்றனர்; எப்போதும் வேதாந்தம் மற்றும் ஸாங்கிய தத்துவங்களைக் கற்கின்றனர். இத்தனை தவங்களை மேற்கொண்டாலும், அருவவாதிகளாக இருப்பதால், அவர்கள் பரம புருஷ பகவானின் தெய்வீக உருவத்தின் வழிபாட்டை ஏற்பதில்லை. எனவே, சாஸ்திரங்கள் கூறுகின்றன, யே ’ன்யே ’ரவிந்தாக்ஷ விமுக்த-மானினஸ் த்வய்யஸ்த-பாவாத் அவிஷுத்த-புத்தய:, “மாயாவாதிகள் தங்களை முக்திபெற்றவர்களாக கருதும்போதிலும், கிருஷ்ணருடைய தாமரைத் திருவடிகளின் வழிபாட்டை நிராகரிப்பதால் அவர்களுடைய எண்ணங்கள் அசுத்தமானவை.”
அனைவரும் கடவுளா?
மாயாவாதி சந்நியாசிகள் ஒருவரையொருவர், நமோ-நாராயணாய (நாராயணரை வணங்குகின்றேன்) என்று அழைக்கின்றனர். தாங்கள் அனைவரும் முழுமுதற் கடவுளான நாராயணராகிவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த நமோ-நாராயணாய (அனைவரும் நாராயணர்) கொள்கையிலிருந்தே தரித்ர-நாராயண, “ஏழை நாராயணர்” என்ற வார்த்தையை ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இவ்வாறாக, மாயாவாதிகளுக்கு நாராயணர் மிகவும் அற்பமான விஷயமாக உள்ளார்: “அனைவரும் நாராயணராகலாம், அனைவரும் கடவுளாகலாம்.” இந்த அயோக்கிய கடவுள் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். அவருக்கு வெட்கமில்லை. “நான் கடவுள் எனில், என்னால் எனது நோயை ஏன் குணப்படுத்திக்கொள்ள முடியவில்லை? நான் எத்தகைய கடவுள்?” என்னும் சிந்தனையே அந்த மாயாவாதிகளுக்கு உண்டாவதில்லை. மாறாக, இத்தகைய முட்டாள்கள் தங்களையே கடவுளாக பறைசாற்றுகின்றனர். மற்றொரு வகையான முட்டாள்கள் இவர்களை கடவுளாக ஏற்கின்றனர். “எதற்காக நீங்கள் கடவுளைத் தேடி அலைகின்றீர்? வீதிகளில் எண்ணற்ற கடவுள்கள் சுற்றிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையோ?” என்று ஒருவர் கேட்கின்றார்.
இத்தகைய (போலி) கடவுளை நாம் ஏற்கக் கூடாது. நமது கடவுள் வேறுபட்டவர். நமது நாராயணரே உண்மையான நாராயணர். அவரே மேன்மைமிகு பரம புருஷ பகவான். பிரம்மா, சிவன் போன்ற தேவர்களைக்கூட அவருடன் ஒப்பிடமுடியாதபோது, மாயாவாதி முட்டாள்களுடன் ஒப்பிடுவதைப் பற்றி என்னவென்று கூறுவது? இதுகுறித்து ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை (25.80) பின்வருமாறு கூறுகின்றது:
யஸ் து நாராயணம் தேவம்
ப்ரஹ்ம-ருத்ராதி-தைவதை:
ஸமத்வேனைவ வீக்ஷேத
ஸ பாஷண்டீ பவேத் த்ருவம்
“பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை பகவான் நாராயணருக்கு இணையாகக் கருதுபவன் அயோக்கியன்.” எனவே, மாயாவாதிகள் அயோக்கியர்கள். “தேவர்களும் விஷ்ணுவைப் போன்றவர்கள்; எந்த தேவரை வழிபட்டாலும் ஒரே பலனே கிடைக்கும்; யாரை வழிபடுகிறோம் என்பது பொருட்டல்ல,” என்று அவர்கள் கூறுகின்றனர். பூரண உண்மை அருவம் என்று அவர்கள் நம்புகின்றனர். எனவே, எந்த உருவத்தை வேண்டுமானாலும் கற்பனை செய்து தியானித்து இறுதியில் அருவ பிரம்மத்தினுள் கலக்கலாம் என்பது அவர்களுடைய கொள்கை. ஆனால், இஃது உண்மையல்ல.
பூரண உண்மை உருவமா, அருவமா?
ஆழ்ந்து சிந்தித்தால், கிருஷ்ணர் எனப்படும் பரம புருஷ பகவானே பூரண உண்மை, அவரே இறுதியான பரம்பொருள் என்பதை அறியலாம். ப்ரஹ்மேதி பரமாத்மேதி பகவான் இதி ஷப்த்யதே, “பூரண உண்மை மூன்று நிலைகளில் அறியப்படுகிறார்—அருவ பிரம்மன், உள்ளுறையும் பரமாத்மா, பகவான்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.11) பூரண உண்மையின் இறுதிநிலை பகவானே. அவர் (கிருஷ்ணர்) எண்ணற்ற விரிவங்கங்களைக் கொண்டுள்ளார். அவர்களுள் ஒருவரே அனைவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மா. ஒவ்வோர் அணுவிலும் பரமாத்மா வீற்றிருக்கிறார்.
பகவான் கிருஷ்ணருக்கு விரிவங்கங்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் அனைவரும் ஒருவரே. ஆயிரக்கணக்கான பானைகளில் நீரை நிரப்பி சூரிய ஒளியில் வைத்தோமெனில், நீரில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். இருப்பினும், சூரியன் ஒன்றே என்பதை நாம் அறிவோம். அதுபோல, கடவுள் ஒருவரே, அவர் தம்மை பல்வேறு [விஷ்ணு] ரூபங்களில் விரிவடையச் செய்கின்றார். அந்த விரிவங்கங்களின் எண்ணிக்கையை கணக்கிட இயலாது.
கடவுள் எண்ணற்ற ரூபங்களில் விரிவடைந்து, எங்கும் நீக்கமற பரவியிருப்பதால், அவர் அழிந்துவிட்டார் என்று மாயாவாதிகள் நினைக்கின்றனர். இது பௌதிகக் கண்ணோட்டமாகும். ஒரு பெரிய காகிதத்தை எடுத்து, அதனைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிந்துவிட்டால், அந்த மூல காகிதம் இருக்காது. அதுபோல, கடவுள் எங்கும் நீக்கமற பரவியிருப்பதால், அவருக்கு உருவமில்லை என்பது மாயாவாதிகளுடைய கொள்கை.
ஆனால், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இஃது உண்மையல்ல. பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவாவஷிஷ்யதே, பகவான் கிருஷ்ணர் பூரணமானவர், அவரே பரம உண்மை. அவர் தம்மை பல்வேறு ரூபங்களாக விரிவடையச் செய்தபோதிலும், அவர் முழுமையானவராகவே இருக்கிறார். கிருஷ்ணர், அவ்யய, எந்நிலையிலும் அழிவற்றவர் எனப்படுகிறார். நான் எனது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வைத்திருந்து, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ரூபாய் என செலவு செய்துகொண்டிருந்தால், எனது வங்கிக் கணக்கு முடிந்துவிடும். ஆனால், கிருஷ்ணர் இத்தகையவர் அல்லர். தம்மிடமிருந்து எண்ணிலடங்காத முழுமையான ரூபங்களை விரிவடையச் செய்தாலும், அவர் பூரணமாகவே இருக்கிறார். ஈஷோபநிஷத்தின் இந்த வாக்கியமே கடவுளைப் பற்றிய உண்மையான கண்ணோட்டமாகும்.
ஆயிரக்கணக்கான பானைகளில் நீரை நிரப்பி சூரிய ஒளியில் வைத்தோமெனில், நீரில் ஆயிரக்கணக்கான சூரியன்கள் பிரதிபலிப்பதைக் காணலாம். இருப்பினும், சூரியன் ஒன்றே. அதுபோல, கடவுள் ஒருவரே அவர் தம்மை பல்வேறு ரூபங்களில் விரிவடையச் செய்கின்றார்.
எளிமையான யாகம்
யாகம் செய்யாவிடில், உங்களால் இந்த தத்துவத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? அது சாத்தியமல்ல. தற்போதைய காலத்தில் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள யாகங்களை நிறைவேற்றுவது மிகவும் கடினம். அதற்கு பெருமளவில் செலவாகும்; அதிகமான நெய், தானியம் என பலவகையான பொருட்கள் தேவை, தினந்தோறும் பலருக்கு உணவளிக்க வேண்டும். இவற்றைக் கடைப்பிடிப்பது இந்த யுகத்தில் மிகவும் சிரமமானது.
எனவேதான், கிருஷ்ணர் யாகத்தை எளிமைப்படுத்தியுள்ளார். ஸ்ரீமத் பாகவதத்தில் (11.5.32) பின்வருமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸு-மேதஸ:
தற்போதைய யுகத்திற்கான யாகம் எது? ஸங்கீர்த்தனம். பகவானின் திருநாமங்களை பலர் ஒன்றுகூடி பாடும் இந்த வழிமுறை தற்போதைய (கலி) யுகத்திற்கான பகவானின் அவதாரத்தினால் கற்றுக் கொடுக்கப்பட்டது.
கலி யுகத்திற்கான அவதாரம்
தற்போதைய யுகத்திற்கான அவதாரம் யார் என்று வினவலாம். [மேலே மேற்கோள் காட்டப்பட்ட] ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றின்படி, இந்த யுகத்திற்கான கிருஷ்ண அவதாரம் ஸங்கீர்த்தனத்தைக் கற்பிப்பவர்; அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்றபோதிலும், கிருஷ்ணரை வர்ணித்து, கிருஷ்ண நாமத்தை உச்சரிப்பவர். அவரது திருமேனி கறுமையாக இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
அப்படியெனில், அவர் எந்த நிறத்தில் இருப்பார்? பரம புருஷ பகவானுக்கென்று சில குறிப்பிட்ட நிறங்கள் உள்ளன. பண்டிதரும் ஜோதிடருமான கர்க முனிவர் நந்த மஹாராஜரின் இல்லத்தில் கிருஷ்ணருடைய பிறப்பு சார்ந்த சடங்கை மேற்கொண்டபோது கூறினார், ஷுக்லோ ரக்தஸ் ததா பீத இதானீம் க்ருஷ்ணதாம் கத, “நந்த மஹாராஜரே, உனது மைந்தன் இதற்கு முன்பாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என்று மூன்று நிறங்களில் அவதரித்துள்ளார். தற்போது அவர் கறுமை நிறத்தில் அவதரித்துள்ளார்.” எனவே, தற்போதைய யுகத்தில் அவருடைய அவதாரம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள் ஆகிய மூன்று வர்ணங்களுள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
ஆகவே, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மஞ்சள் நிற (பொன்னிற) திருமேனியில் அவதரித்தார். அவர் எப்பொழுதும் கிருஷ்ணரை வர்ணித்துக் கொண்டும் கிருஷ்ண நாமத்தை உச்சரித்துக் கொண்டும் உள்ளார். அவரே தற்போதைய யுகத்திற்கான அவதாரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஸ்ரீமத் பாகவதம் மேலும் கூறுகிறது, ஸாங்கோபாங்கஸ்த்ர-பார்ஷதம், “அவர் எப்போதும் தமது சகாக்களாலும் விரிவங்கங்களாலும் சூழப்பட்டிருப்பார்.” அங்க என்றால் “உடனடி விரிவங்கம்” என்றும், உபாங்க என்றால் “விரிவங்கத்தின் விரிவங்கம்” என்றும் பொருள்படும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது உடனடி விரிவங்கமான நித்யானந்த பிரபுவுடனும் பல்வேறு உப-அங்கங்களுடனும் அவதரித்தார். அவருடன் அத்வைத பிரபு, ஸ்ரீவாஸ தாகூர், கதாதர பண்டிதர் மற்றும் எண்ணற்ற பக்தர்களும் அவதரித்தனர். இவ்வாறாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தற்போதைய யுகத்தின் அவதாரத்திற்கான எல்லா அறிகுறிகளுடனும் காணப்படுகின்றார்.
கடவுளைப் பற்றிய முழுமையான விஞ்ஞான ஆய்வு சாஸ்திரங்களில் உள்ளது. எனவே, எந்தவோர் அயோக்கியனாலும் “நான் கடவுள்” என்று சொல்ல முடியாது, நாம் அதனை ஏற்கவும் கூடாது. கடவுளை சாஸ்திர ஆதாரத்தின்படி அறிய வேண்டும். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஒரு சாதாரண மனிதரைப் போல, நிமாய் பண்டிதராகத் தோன்றியபோதிலும், அவர் பரம புருஷ பகவான் என்பது சாஸ்திரங்களின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அயோக்கியர்கள் பலர் அவரை பாவனை செய்ய முயல்கின்றனர். “நிமாய் பண்டிதரை அவதாரமாக ஏற்கும்போது, இந்த சட்டர்ஜியையும் அவதாரமாக ஏற்கலாமே?” என்று வாதாடுகின்றனர். அவர் சைதன்ய மஹாபிரபுவைப் போல பாவனை செய்தார். ஆயினும், அவர் கடவுள் என்பதற்கு சாஸ்திரத்தில் என்ன ஆதாரம் உள்ளது? சைதன்ய மஹாபிரபு கடவுள் என்பதற்கு, மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், உபநிஷதங்கள் முதலியவற்றில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. எனவே, அவரை நாங்கள் பரம புருஷ பகவானாக ஏற்கின்றோம், மற்ற அயோக்கியர்களைப் போன்று ஒரு சாதாரண மனிதனை கடவுளாக்கிவிடவில்லை.
கலி யுக அவதாரத்திற்கான யாகம்
இப்போது, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை எவ்வாறு வழிபடுவது என்னும் கேள்வி எழலாம். ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது, யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸு-மேதஸ:, “புத்திசாலிகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை ஸங்கீர்த்தன யாகத்தினால் வழிபடுகின்றனர்.” யாருடைய மூளை களிமண்ணால் நிரப்பப்பட்டுள்ளதோ அவர்களால் ஸங்கீர்த்தன யாகத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாது. புத்திசாலிகளோ ஸங்கீர்த்தன யாகத்தை மேற்கொண்டு, பகவத் கீதையின் கட்டளைகளையும் நிறைவேற்றுகின்றனர்: யக்ஞ-தான-தப:-கர்ம ந த்யாஜ்யம், “யாகம், தானம், மற்றும் தவத்தின் செயல்களை என்றுமே துறக்கக் கூடாது.”
ஸங்கீர்த்தனமே இந்த யுகத்திற்கான யாகமாகும். வாழ்வின் எந்தவொரு நிலையிலும் இந்த யாகத்தைத் துறக்கக் கூடாது. வேதங்களில் கூறப்பட்டுள்ள இதர வழிமுறைகள் இந்த யுகத்திற்கு உகந்தவை அல்ல. இந்த யுகத்திலுள்ள மக்கள் தங்களை முன்னேறியவர்களாகக் காண்பித்துக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டவர்களாகவும், சோம்பல், துரதிர்ஷ்டம் மற்றும் குழப்பங்களால் ஆட்கொள்ளப்பட்டவர்களாகவும் உள்ளனர். ஸ்ரீமத் பாகவதம் இதனை ஏற்கனவே கூறியுள்ளது, மந்தா: ஸு-மந்த-மதயோ மந்த-பாக்யா ஹ்யுபத்ருதா:. இதுவே இன்றைய உலக மக்களின் நிலை. இந்நிலையில் அவர்களால் எவ்வாறு வேத வேள்விகளை மேற்கொள்ள முடியும்? நிச்சயமாக முடியாது.
எனவேதான், கிருஷ்ணர் ஸங்கீர்த்தன யாகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளார். தமது சகாக்களால் சூழப்பட்டுள்ள ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் படத்தை வைத்து அவர்களின் முன்பாக ஸங்கீர்த்தனம் மேற்கொண்டால், நீங்களும் மிக எளிதில் பூரணத்துவத்தை அடையலாம்.
ஸ்ரீமத் பாகவதம் (12.3.52) கூறுகிறது:
க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும்
த்ரேதாயாம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம்
கலௌ தத் தரி-கீர்தனாத்
“ஸத்ய யுகத்தில் தியானமும், திரேதா யுகத்தில் யாகமும், துவாபர யுகத்தில் விக்ரஹ வழிபாடும் யுக தர்மங்களாகும். கலி யுகத்திலோ ஸங்கீர்த்தனமே வழிமுறை. மற்ற யுகங்களில் அந்தந்த வழிமுறைகளினால் எந்தப் பலன் அடையப்பட்டதோ, அதனை இந்த கலி யுகத்தில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதாலேயே எளிதில் அடைந்துவிட முடியும்.” இதுவே சாஸ்திரங்களின் கட்டளை.
மிக்க நன்றி. ஹரே கிருஷ்ண.