வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
இந்தியாவில் கறிக்கோழி இறக்குமதிக்கான தடையை உலக வர்த்தக அமைப்பு ரத்து செய்ததை அடுத்து மும்பை துறைமுகத்திற்கு அமெரிக்க கறிக்கோழி கன்டெய்னரில் வந்துள்ளதாக பத்திரிகை செய்தி. கறிக்கோழி உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடம், சீனா இரண்டாம் இடம், பிரேசில் மூன்றாமிடம், ஐரோப்பிய நாடுகள் நான்காமிடம், இந்தியா ஐந்தாமிடம் என்ற வரிசையில் உள்ளன. தற்போது இந்தியா போகும் வேகத்தில் முதலிடத்தில் வருவதற்கு வெகுநாள் ஆகாது. பறவை காய்ச்சல் போன்ற அபாயங்கள் பல இருப்பினும் மாமிசத்தை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? என கேள்வி கேட்டாலோ, மாமிசம் உண்பது பாவம் என்று கருத்து கூறினாலோ, மக்கள் பொதுவாக சொல்லும் பதில் ஒன்று தான்: கொன்றால் பாவம் தின்றால் போச்சு. கொலை செய்வதால் உருவாகும் பாவம் அதை தின்பதால் போகுமா? இது குறித்து சற்று பார்ப்போம்.
அசைவ உணவு உண்ணத்தக்கதல்ல
ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வகையான உணவு உண்டு, அந்த உணவானது அந்த உயிரினம் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக அமைகிறது; இந்த விதியிலிருந்து பிறழும்போது அச்செயல் குற்றமாகிறது. அதன்படி, மனிதர்களுக்கு உகந்த உணவு சைவ உணவுகளே என்னும் கருத்தானது, வேத சாஸ்திரங்களில் மட்டுமின்றி மனிதனின் உடலமைப்பினை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றும் திருப்தியடையாத நாவினை திருப்திப்படுத்துவதற்கான ஆசையில் ஊறித் திளைக்கும் மானிடர்கள் இதைப் பற்றி சற்றும் யோசிப்பதில்லை; நாவின் அடிமைகளான இவர்கள் உயிர்களைக் கொல்வதை பாவமாக நினைக்க மறுக்கின்றனர். புலி பசித்தாலும் புல்லைத் தின்பதில்லை; மனிதனோ ருசிக்காக எதையும் தின்கின்றான்.
பகவத் கீதையில் (9.26) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஒருவர் அன்புடனும் பக்தியுடனும், இலையோ பழமோ பூவோ நீரோ அளித்தால் அதை தான் ஏற்பதாக கூறுகிறார். அதாவது, பகவான் தாவர உணவையே தனக்கு அளிக்குமாறு கூறுகிறார். தனக்கு அசைவ உணவை அளிக்குமாறு ஸ்ரீ கிருஷ்ணர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, எனவே அசைவ உணவு நாம் உண்ணத்தக்கதல்ல என்பது திண்ணம்.
ஏன்? உண்மையில், அசைவ உணவு உண்பதை முஸ்லீம், கிறிஸ்துவ, யூத, புத்த, சமண, சீக்கிய மதங்கள் உட்பட எந்தவொரு மதமும் அனுமதிப்பதில்லை.
அசைவம் உண்பதால் வரும் பாவங்கள்
தன்னுடைய சொந்த வாழ்விற்காக, மற்ற உயிர்களைக் கொல்லக்கூடிய கொடூரமான நபரை கொன்றுவிட வேண்டும் என்றும், அவ்வாறு கொல்வது அவனுக்கு நன்மை பயக்கும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.7.37) கூறுகின்றது. ஏனெனில், ஓர் உயிரைக் கொல்வதால் அவன் அடையும் பாவத்திலிருந்து அந்த தண்டனை அவனைக் காப்பாற்றும் என்று குறிப்பிடுகிறது.
கலி எனும் பாவ புருஷன் குடியிருக்கும் நான்கு இடங்களில் மாமிசம் உண்ணும் இடமும் ஒன்றாகும். (ஸ்ரீமத் பாகவதம் 1.17.38) மாமிசம் உண்ணும் இடத்தில் கருணை மனப்பான்மை அடியோடு அழிவதால், கலியின் கேடுகள் அவ்விடத்தினை அடைகிறது. கலி வீற்றிருக்கும் இடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதால், மாமிசம் உண்பவர்களிடத்தில் அமைதியும் உண்மையான மகிழ்ச்சியும் நிச்சயம் இருப்பதில்லை. மேலும், அப்பாவி மிருகங்களை தனது சொந்த மகிழ்ச்சிக்காக கொன்று உண்பவன் இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் மகிழ்ச்சியடைய மாட்டான் என்று மனுசம்ஹிதை (5.54) கூறுகின்றது.
உணவிற்காகவும் நாவின் சுவைக்காகவும், விலங்குகள் மற்றும் பறவைகளைக் கொல்லும் கொடிய மனிதர்கள் நரக வேதனையினை அனுபவிக்க வேண்டும்; இவர்கள் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு எம தூதர்களால் தூக்கிச் செல்லப்பட்டு, அங்கே கொதிக்கும் எண்ணெயில் போடப்படுகின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதம் (5.26.13) கூறுகின்றது.
மேலும், மிருகவதையை அனுமதிப்பவர், மிருகத்தைக் கொல்பவர், மாமிசத்தை விற்பவர், வாங்குபவர், சமைப்பவர், பரிமாறுபவர், உண்பவர் ஆகிய அனைவரும் பாவிகளாகவே கருதப்படுவார்கள் என்று மனுசம்ஹிதை (5.51) குறிப்பிடுகிறது. மேலும், எந்த மிருகத்தை ஒருவர் உண்கிறாரோ, அந்த மிருகம் அதன் மறுபிறவியில் அந்த மனிதனை உண்ணும் என்றும் மனு சம்ஹிதை (5.55) கூறுகிறது.
மற்ற உயிர்களைத் துன்பப்படுத்தும் மனிதர்கள், வேதங்களை ஓதினாலும் தவங்கள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும் ஸ்வர்கத்திற்குச் செல்ல இயலாது என்றும், அஹிம்சையே மிகப்பெரிய புண்ணியம், பெரும் தவம், பெரும் தானம் என்றும் பத்ம புராணம் (3.31.25-28) குறிப்பிடுகிறது.
மிருகங்களும் நம்மைப் போலவே உண்கின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கமும் செய்கின்றன; ஆனால் அவை சற்று அறிவு குறைந்து காணப்படுவதால் அவற்றைக் கொல்லலாம் என்று கருதுவது முட்டாள்தனம். நமது குடும்பத்தில் இருக்கும் சகோதரர் ஒருவர், அறிவிற் குறைந்தவராக அல்லது சற்று இயலாதவராக இருந்தால், அவரைக் கொல்லலாமா? அத்தகு கொலை நாட்டின் சட்டத்தினால் எவ்வாறு குற்றமாக கருதப்படுமோ, அவ்வாறே விலங்குகளைக் கொல்வதும் கடவுளின் சட்டத்தினால் குற்றமாக கருதப்படுகிறது.
மிருகங்களை பலி கொடுக்கலாமா?
அசைவ உணவு உண்பவர்களில் சிலர், விலங்குகளை சில கோயில்களில் வைத்து பலியிட்டு உண்கின்றனர். அவ்வாறு உண்பதால் பாவங்கள் தங்களை தீண்டாது என்றும் நினைக்கின்றனர். ஆனால் அஃது உண்மையல்ல. கொலை செய்பவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவித்தேயாக வேண்டும், அதிலிருந்து தப்பிக்க இயலாது. பின்னர் ஏன் சில கோயில்களில் மிருகங்கள் பலியிடப்படுகின்றன?
அசைவ உணவு உண்ண விரும்பும் கீழ்நிலை மக்களை ஓரளவிற்காவது கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மிருக பலிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று மிருக பலியில் ஈடுபடுபவன், இயற்கையாகவே இதர நாள்களில் மாமிசம் உண்பதிலிருந்து தடுக்கப்படுகிறான்; அதாவது, அவனது பாவத்தின் அளவு குறைக்கப்படுகிறது. மேலும், தனது கண்களுக்கு முன்பாக விலங்குகள் கொல்லப்படுவதைக் காணும்போது, மாமிசம் உண்பதற்கான ஒருவனது எண்ணம் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, “மிருகமே, நான் உன்னை இந்த பிறவியில் கொல்கிறேன், நீ என்னை மறுபிறவியில் கொலை செய்துகொள்ளலாம்,” என்ற பொருளுடன்கூடிய மந்திரத்தை கேட்டுக்கேட்டு, அவன் திருந்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆனால், இன்றைய நிலையோ தலைகீழாக உள்ளது. கோயிலுக்குச் சென்று மிருக பலி கொடுப்பவர்கள் யாரேனும் இதர நாள்களில் மாமிசம் உண்ணாமல் உள்ளனரா? முறையான மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றதா? அதன் அர்த்தங்கள் புரிந்துகொள்ளப்படுகின்றதா? நிச்சயம் இல்லை.
யாகத்தில் பலி கொடுத்தல்
பலி கொடுப்பதில் மற்றொரு வகை: யாகத்தில் பலி கொடுத்தல். அஸ்வமேத யாகத்தில் குதிரையும் கோமேத யாகத்தில் பசுவும் பலியிடப்படுவது வழக்கம்; யாகத்தின் வெற்றி என்பது அதனை நடத்தும் முனிவர்களைப் பொறுத்ததாகும். உயர்ந்த முனிவர்களால் நிகழ்த்தப்படும் மாபெரும் யாகங்களில் மந்திரங்கள் முறையாக உச்சரிக்கப்பட்டனவா என்பதை சோதிக்கும் பொருட்டு, அதன் இறுதியில் மிருகங்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. மந்திரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், அந்த மிருகம் மானிட உடலை ஏற்பதை அங்கு கூடியிருப்பவர்கள் நேரில் காண முடியும்; மந்திரங்கள் சரியாக இல்லாவிடில், மிருகம் மடிந்துவிடும், முனிவர்கள் அதற்கான பாவத்திற்கு ஆளாவர். சரியான முறையில் மந்திரங்களை உச்சரிக்கும் தகுதி வாய்ந்த முனிவர்கள் இல்லாத காரணத்தினால், இத்தகு யாகங்கள் கலி யுகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.
மிருக பலி கொடுப்பதில் இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கையில், மனம்போன போக்கில் பலி கொடுப்பவர்களுக்கு கொடூரமான பாவங்களே பலனாகக் கிட்டும்.
தாவர உணவு உண்பது பாவமில்லையா?
பெரும்பாலான அசைவ உணவு பிரியர்கள் எழுப்பும் கேள்வி: தாவர உணவு உண்பது மட்டும் பாவமில்லையா? அதுவும் உயிர்கள்தானே?
ஆம். தாவரங்களை உண்பதும் பாவமே. இருப்பினும், ஓர் உயிர் மற்றோர் உயிரைச் சார்ந்து வாழ்வதே இயற்கையின் நியதி, ஜீவோ ஜீவஸ்ய ஜீவனாம், என்று ஸ்ரீமத் பாகவதம் (1.13.47) குறிப்பிடுகிறது. அதன்படி, மனிதனுக்கென்று விதிக்கப்பட்டுள்ள உணவு தாவர உணவாகும். மிருகங்களுக்கு அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப, தாவர உணவோ இறைச்சியோ இயற்கையால் விதிக்கப்பட்டுள்ளது; மிருகங்கள் இயற்கையின் நியதியை மீறுவதில்லை. புலி புல்லைத் தின்பதில்லை, பசுவும் மாமிசத்தை உண்பதில்லை. அதுபோலவே, மனிதனும் இயற்கை நியதிக்கு உட்பட்டு தாவர உணவை உட்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறான்.
மேலும், மிருகங்களுடைய உணர்வு வளர்ச்சியானது தாவரங்களின் உணர்வைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிகமானது என்பதால், ஓர் உருளைக்கிழங்கை நிலத்திலிருந்து எடுப்பதற்கும் ஓர் ஆட்டினைக் கொல்வதற்கும் பரந்த வித்தியாசம் உண்டு. சுருக்கமாகக் கூறினால், விலங்கைக் கொல்லும்போது ஏற்படும் பாவம், தாவரங்களை உண்பதால் ஏற்படும் பாவத்தைவிட பல நூறு மடங்கு அதிகமானதாகும்.
அவ்வாறு இருப்பினும், தாவரங்களும் உயிர்வாழிகளே என்பதால், அவற்றை உண்பதும் உயிர்க் கொலையைப் போன்றதே என்பதால், தாவர உணவு உண்பவர்கள்கூட உண்பதற்கு முன்பாக, அந்த உணவினை பகவானுக்கு அர்ப்பணித்து, பிரசாதமாக உண்ணும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அர்ப்பணிக்காத உணவை உண்பவன் பாவத்தையே உண்கிறான் என்று பகவத் கீதை (3.13) கூறுகின்றது. மேலும், உணவை கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக ஏற்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால், தாவர உணவை உண்பவர்களின் பாவம் குறைவான பாவம் என்றபோதிலும், அதிலிருந்தும் விடுபட, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்து உணவை பிரசாதமாக ஏற்க வேண்டும் என்பது சாஸ்திர விதி.
பால், பசுவின் இரத்தமாயிற்றே?
அசைவ உணவு பிரியர்களின் மற்றொரு வாதம்: பால், பசுவின் இரத்தமாயிற்றே, எவ்வாறு உண்ணலாம்?
மனிதர்களின் அன்றாட தேவைக்கும் ஸத்வ குணத்தின்படி வாழ்வதற்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இன்றியமையாத உணவாக சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சாஸ்திரங்களின் பரிந்துரை ஒருபோதும் பிழையாகாது. ஒரு செயல் பாவமா புண்ணியமா என்பதை நாம் நமது சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்கக் கூடாது, தீர்மானிக்கவும் இயலாது. பால் மற்றும் பால் பொருட்களினால் ஸத்வ குணம் மேலோங்கி, நல்ல குணங்களும் நல்ல எண்ணங்களும் வளர்ச்சி பெறுகின்றது என்பதை நடைமுறையில் ஒவ்வொருவரும் உணர முடியும்.
இயற்கையின் அமைப்பால், பசுவானது தனது கன்றின் தேவைக்கு அதிகமாகவே பாலைச் சுரக்கின்றது. அதிகப்படியான அந்த பாலை கன்று குடித்தால், கன்றுக்கு தீமையே உண்டாகும்; கறக்காமல் விட்டால் பசுவிற்கு துன்பத்தை தரும். அதுமட்டுமின்றி, பாலை பசுவிடமிருந்து கறப்பதால் யாரும் பசுவைக் கொல்வதில்லை. ஓர் உயிரைக் கொன்று பெறப்படும் இரத்தத்தையும் பாலையும் மூடர்கள் மட்டுமே சமன்படுத்துவர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தாய்மார்கள் இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதில் பசுவும் ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் தாயின் பாலைக் குடித்தே வளர்கிறது. தாயின் பாலை அருந்தும் குழந்தை தாயைக் கொல்வதாக அர்த்தமில்லை; அதுபோலவே, பசுவின் பாலை அருந்துபவர்கள் பசுவைக் கொல்வதாக அர்த்தமில்லை. மேலும், தாயை கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை குழந்தைக்கு இருப்பதைப் போலவே, பசுவையும் கால காலத்திற்கும் காப்பாற்ற வேண்டிய கடமை மனித சமுதாயத்திற்கு உள்ளது.
முட்டை உண்ணலாமா?
முட்டையைத் சைவ உணவு என்று கூறி அதனை உண்பவர்கள் ஏராளமானோர். ஆனால் உண்மையில் முட்டைக்கும் தாவர உணவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முட்டைகளை உண்பது கருக்கொலைக்குச் சமமாகும். மேலும், குறுகிய காலத்தில் அதிக முட்டைகளைப் பெறுவதற்காக, கோழிப் பண்ணைகளில் கையாளப்படும் கொடிய பாவங்கள் நிச்சயமாக அந்த முட்டைகளிலும் அதை உண்பவர்களிடமும் வந்து சேர்கிறது. முட்டையிட்டு முடிந்தவுடன் அந்தக் கோழிகள் கொல்லப்படுகின்றன, அந்த கொடிய பாவத்திற்கு முட்டை உண்பவர்களும் உடந்தையாகின்றனர்.
சிலர், கோழிப் பண்ணைகள் உருவாக்கும் குஞ்சு பொறிக்காத முட்டைகளை மட்டுமே நாங்கள் உண்கிறோம், இதில் என்ன பாவம் என்பர். ஆனால் இந்த முட்டைகள் கோழிகளின் மாதவிடாய்க்குச் சமமானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஒவ்வொரு மாதமும் வேண்டாத விஷயங்கள் எவ்வாறு மாதரால் வெளியேற்றப்படுகிறதோ, அவ்வாறே குஞ்சு பொறிக்காத கோழியும் தன்னுடைய கழிவுகளை முட்டையின் வடிவில் வெளியேற்றுகின்றன. இதுவே குஞ்சு பொறிக்காத முட்டையின் ரகசியம்.
தின்றால் போகுமா?
அசைவ உணவை உண்பதில் இவ்வளவு பிரச்சனைகள் பாவங்கள் இருக்கும்போது, சிலர் முட்டாள்தனமாக, “கொன்றால் பாவம், தின்றால் போச்சு” என்று உளறுகின்றனர். இந்த பேச்சுக்கு, மக்களின் மூடத்தனத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கொன்று தின்பதால், மேன்மேலும் பாவத்தைச் சேகரிக்கின்றோமே தவிர, பாவத்தைக் களைதல் என்பது சாத்தியமே இல்லை. எந்தவொரு சாஸ்திரத்திலும் அவ்வாறு கூறப்படவில்லை. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்னும் வாதங்கள், நாவினைக் கட்டுப்படுத்த இயலாத நயவஞ்சகர்களின் வார்த்தைகளாகும். இதில் துளியளவும் உண்மையில்லை.
அசைவ உணவுப் பிரியர்கள் இதுபோன்ற போலியான பழமொழிகளை உருவாக்கி தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்ள முயற்சி செய்யலாம். ஆனால் அத்தகு சமாதானங்கள் உண்மையான பலனைக் கொடுக்குமா? நிச்சயமாக இல்லை. சினிமாக்காரர்களும் நாஸ்திகர்களும் பாடல்களை வேண்டுமானால் எழுதலாம், ஆனால் பாவம் என்றும் பாவ விளைவைக் கொடுத்தே தீரும்.
நீங்கள் கொல்வதால் விளையும் பாவம், அந்த உயிர்வாழி உங்களைத் திண்ணும்போது போகலாம்; அல்லது அந்த பாவத்திற்காக நீங்கள் நரகத்திற்குச் சென்று, உங்களுடைய சதையை நீங்களே திண்ணும்படி சித்ரவதை செய்யப்படுவீர்களே, அப்போது வேண்டுமானால் போகலாம். எனவே, கொல்வதால் விளையும் பாவம், அதைத் தின்பதால் நிச்சயம் போகாது; மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும். போலியான பழமொழிகளை நம்பி ஏமாற வேண்டாம்.
அசைவ உணவை விடுவதற்கு வழி
மாமிசத்தை பிரதான உணவாக உண்டுவந்த மேலை நட்டவர்கள்கூட, இன்று மாமிச உணவின் கெடுதிகளை உணர்ந்து அவற்றை பெருமளவில் கைவிட்டு வருகின்றனர். எனவே, அசைவ உணவினைக் கைவிடுவது என்பது ஒன்றும் கடினமான செயல் அல்ல.
சிலர் அசைவத்தின் கெடுதிகளை அறிந்தும்கூட, அதனைக் கைவிட முடியாமல் தவிக்கின்றனர்; பலர் உணர்ச்சிபூர்வமாக சிறிது காலம் கைவிட்டுவிட்டு, வாய்ப்பும் சூழ்நிலையும் அமையும் போது மீண்டும் தொடர ஆரம்பித்து விடுகின்றனர். நீண்ட காலமாக அசைவ உணவை உண்டதால் ஏற்பட்ட பாவங்களின் ஆதிக்கமே இதற்கு காரணமாக அமைகிறது. குறிப்பாக, நம் ஆழ்மனதில் அசைவத்தின் மீதான ஆசை முழுமையாக மாறாததும் காரணமாகும்.
இந்த பாவத்திற்கு முதல் முக்கியக் காரணகர்த்தா யார் என்றால், நாக்குதான். ஆம்! ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி நாக்குதான். நாக்கை மட்டும் கட்டுப்படுத்திவிட்டால் அனைத்து முயற்சிகளும் வெற்றியே! (நாவினைப் கட்டுப்படுத்துவதைப் பற்றி நவம்பர் மற்றும் டிசம்பர் 2014 பகவத் தரிசனத்தில் வெளியான கட்டுரைகளைப் படியுங்கள்). ஸ்ரீல பக்திவினோத தாகூர் இதற்கு பின்வரும் வழியைக் கூறுகிறார்: “நாக்கு அடக்க முடியாததும் ஆற்றல் வாய்ந்ததுமாகும். இந்நாக்கை வெல்வது மிகவும் கடினமானது. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கருணையுடன் பிரசாதத்தினை வழங்கி நாம் நமது நாக்கை அடக்குவதற்கு உதவுகிறார். இந்த பிரசாதத்தை ஏற்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை பாடிப் புகழுங்கள். இதுவே நாக்கை வெல்லும் எளிய வழியாகும்.”
ஆம். உண்மையே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய நாமத்தை உச்சரித்ததாலும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை உண்டதாலும் இலட்சக்கணக்கான பேர் எந்தவொரு சிரமமும் இன்றி அசைவத்தை வென்றுள்ளனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்திலும் பிரசாதத்திலும் எண்ணற்ற சக்திகள் அடங்கியிருக்கின்றன. எனவேதான், கருட புராணம், “சிங்கம் கர்ஜிக்கும்போது சிறு விலங்குகள் பயந்து ஒடுவதுபோல், பாவங்கள் அனைத்தும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்போது நம்மை விட்டு விரைவில் நீங்குகின்றன” என்று குறிப்பிடுகிறது. கிருஷ்ண பக்தி, கிருஷ்ண பிரசாதம் என்னும் உயர்ந்த சுவையை அனுபவிப்பதால், தாழ்ந்த சுவைகள் தானாக விலகிவிடும் என்று பகவத் கீதையும் (2.59) குறிப்பிடுகிறது.
பாவகரமான உணவுகளைத் தவிர்ப்போம்! கிருஷ்ண பிரசாதத்தினை ஏற்போம்!