படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஏற்ற பக்தி

Must read

வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி

பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும். ஏனெனில், பக்தி என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டுகளைக் குறிக்கும். பகவானின் திருநாமத்தைப் பாடுதல், பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், அவற்றைக் கேட்டல், பகவானுடைய விக்ரஹத்திற்கு ஆரத்தி, நைவேத்தியம் போன்ற சேவைகளைச் செய்தல், பக்தர்களுக்குப் பணிவிடை செய்தல், பிரசாதம் விநியோகித்தல், கோவிலை சுத்தம் செய்தல், பக்தித் தொண்டை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்தல் போன்ற பல்வேறு செயல்கள் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றன.

இச்செயல்களைச் செய்வதற்கென்று குறிப்பிட்ட தகுதிகள் ஏதும் தேவையில்லை. தத்தமது நிலையில் இருந்தபடி அனைவரும் பக்தித் தொண்டில் ஈடுபடலாம். பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்கு ஒருவர் படித்தவரா படிக்காதவரா, ஏழையா பணக்காரனா, உயர் ஜாதியா தாழ்ந்த ஜாதியா, இளைஞரா முதியவரா, கருப்பரா வெள்ளையரா, இந்தியரா வெளிநாட்டவரா போன்றவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. முழுமுதற் கடவுளுக்கு பக்தித் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பமே மிகவும் அவசியமாகும். அறிவு, திறமை, பொருள்கள் என நம்மிடம் என்ன உள்ளதோ, அவை அனைத்தையும் பக்தித் தொண்டில் உபயோகிக்க முடியும்.

பல்வேறு விஞ்ஞானிகளின் மத்தியில் தவத்திரு. பக்திஸ்வரூப தாமோதர ஸ்வாமி (இடது)

 

படித்தவனின் பக்தி

ஒருவர் பல்வேறு மேற்படிப்புகளைப் படித்து விஞ்ஞானியாக இருக்கிறார் என்றால், அவர் தனது கல்வியைக் கொண்டு உலகத்தினருக்கு விஞ்ஞான ரீதியாக பக்தி மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கலாம். அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் பல்வேறு விஞ்ஞானிகள் அத்தகு சேவையைச் செய்து வருகிறார்கள். புகழ் பெற்ற விஞ்ஞானி திரு. T.D. சிங் (தவத்திரு. பக்திஸ்வரூப தாமோதர ஸ்வாமி) அவர்கள் இப்பணியில் சிறப்பாக ஈடுபட்டதைப் பலரும் அறிவர். கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பக்தர்கள், அங்கிருக்கும் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பக்தித் தொண்டினை பிரச்சாரம் செய்து வருகின்றனர். இவ்வாறாக, பொறியாளர்கள், கணித வல்லுநர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், இராணுவத்தினர் என பல தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்களது நிறுவனங்களில் நடைபெறும் மாநாடுகளில் சொற்பொழிவு ஆற்றியும், புத்தகங்களை வெளியிட்டும் பக்தித் தொண்டு புரிகின்றனர்.

 

பாமரனின் பக்தி

இவற்றைப் பார்க்கும் பாமரன், தான் என்ன செய்வது என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள குந்தி மகாராணியின் பிரார்த்தனையின்படி, பணம், அழகு, புகழ், கல்வி, உயர்குல பிறப்பு போன்ற தகுதிகளைப் பெற்றவர்கள் உண்மையான மனதுடன் இறைவனை அணுக முடிவதில்லை என்பதை அறிகிறோம். அவர்கள் கர்வத்துடன் இருப்பதே அதற்கு காரணமாகும். கர்வம் கொண்டோரால் எவ்வாறு பகவானை அணுக முடியும்? எனவே, அத்தகு பௌதிகத் தகுதிகள் ஏதும் இல்லாத, சாதாரண மனிதனால் இயற்கையாகவே இறைவனை அணுக முடியும். எளிமையான மனதுடன் இருப்போர் இறைவனின் கருணைக்கு எளிதில் பாத்திரமாவதை நாம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கண்டுள்ளோம்.

 

திருப்பாணாழ்வாரும் பிராமணரும்

உதாரணமாக, திருப்பாணாழ்வாரின் வாழ்க்கையைப் பார்ப்போம். தாழ்ந்த குலத்தில் தோன்றியதால் அரங்கநாதரின் திருக்கோவிலின் வாசலை மிதிப்பதற்கு அஞ்சிய ஆழ்வார், காவிரிக் கரையிலிருந்தபடி அவரைப் பாடி மகிழ்ந்து வந்தார். ஒருநாள் அரங்கநாதருக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வந்த பிராமணர், வழியிலிருந்த ஆழ்வாரை ஓரமாக நகரும்படி கேட்டார். பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த ஆழ்வார் அவரது குரலைக் கேட்கவில்லை. பலமுறை அழைத்தபோதிலும் கவனிக்காததைக் கண்டு கோபமுற்ற பிராமணர், ஒரு சிறு கல்லை எடுத்து அவர்மீது எறிந்தார். நெற்றியிலிருந்து இரத்தம் சொட்டியது, வெளியுணர்விற்குத் திரும்பிய ஆழ்வார் பிராமணரிடம் மன்னிப்புக் கேட்டு வழிவிட்டார். ஆனால் பிராமணர் நீருடன் அரங்கநாதரை தரிசிக்கச் சென்றபோது, அரங்கநாதரின் நெற்றியில் இரத்தம் சொட்டியதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரி யமும் அடைந்தார். ஆழ்வாரின் மீது கல் எறிந்த தனது அபச்சாரத்தை அறிந்து மிகவும் வருந்தினார். அரங்கனின் ஆணைப்படி ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்ட பிராமணர், அவரைத் தனது முதுகில் சுமந்து கோவிலுக்கு அழைத்து வந்தார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் பிராமணரும்

ஒருமுறை பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டபோது, பிராமணர் ஒருவர் பகவத் கீதையை படித்துக் கொண்டு அழுது கொண்டிருந்ததை ஸ்ரீரங்கத்தில் கண்டார். “ஏன் அழுகின்றீர்?” என பகவான் அவரிடம் வினவ, அந்த பக்தர் தன்னுடைய குரு தினமும் தன்னை பகவத் கீதை படிக்கச் சொன்னதாகவும், போதிய கல்வியறிவு இல்லாததால் தன்னால் முறையாகப் படிக்க இயலவில்லை என்றும், பேரழகு வாய்ந்த முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்தனான அர்ஜுனனுக்காக தேரோட்டும் கருணையை நினைத்து அழுவதாகவும் பதில் கூறினார். நீங்களே பகவத் கீதையை உண்மையாகப் புரிந்துகொண்டவன் என்று கூறி, சைதன்ய மஹாபிரபு அவரை அரவணைத்தார்.

 

போதிய கல்வியறிவு இல்லாதபோதிலும் பகவத் கீதையை உண்மையாகப் புரிந்துகொண்டிருந்த பிராமணரை ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அரவணைத்தல்

தாழ்ந்த சேவை, உயர்ந்த சேவை உண்டோ?

இந்நிகழ்ச்சிகளிலிருந்து பக்தித் தொண்டாற்றுவதற்கு பௌதிகத் தகுதிகள் எதுவும் தேவையில்லை என்பதை உணரலாம். பலவிதமான தொண்டுகளில், இந்த சேவை உயர்ந்தது, அது தாழ்ந்தது என்று பகவான் கருதுவதில்லை. பக்தர்களின் கழிவறைகளை சுத்தம் செய்வதும் பக்தித் தொண்டுதான். அரச வம்சத்தில் பிறந்த நரோத்தம தாஸ தாகூர் தனது குருவின் கழிவுகளை சுத்தம் செய்து அவரது கருணையைப் பெற்றார். பௌதிக வாழ்க்கையில் மட்டுமே ஏற்றத்தாழ்வுகள் உண்டு: பணம் படைத்தோர், மெத்தப் படித்தோர், திரைப்படங்களில் நடிப்போர், அரசியல்வாதிகள், பெரிய பதவிகளில் இருப்போர் போன்றவர்களை உயர்வாகவும், மற்றவர்களைத் தாழ்வாகவும் கருதுகிறார்கள். ஆனால் பக்தி மார்க்கத்தில் அவ்வாறு அல்ல. தூய்மையான அன்புடன் யார் எந்த சேவையை செய்தாலும், பகவான் அதை ஏற்றுக்கொள்கிறார். தன்னில் திருப்தி கொண்ட அவர் யாருடைய சேவையையும் சார்ந்திருப்பதில்லை; அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவரான அவர் தனது பக்தனின் அன்புமயமான தொண்டினால் கவரப்படுகிறார்.

எல்லாம் அவன் கருணை

ஆழ்வார்களின் வரலாற்றிலிருந்து மேலும் ஒரு நிகழ்ச்சியைக் காண்போம். பெரியாழ்வார் தினந்தோறும் மலர்களைப் பறித்து பூமாலை கட்டி பகவானுக்கு அர்ப்பணித்து வந்தார். ஒருமுறை சைவம் உயர்ந்ததா, வைணவம் உயர்ந்ததா என்ற சந்தேகம் பாண்டிய மன்னனுக்கு எழுந்தது. எனவே, வாதிடுவதற்கு பண்டிதர்கள் பலரை அழைத்தான். பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பகவான் அவரை அங்குச் செல்லும்படி பணித்தார். தனக்கு வாதிடுமளவிற்குப் போதிய அறிவும் தகுதியும் இல்லை என்று ஆழ்வார் கூற, பகவானோ, மாலை கட்டுவதற்கு மட்டும் தகுதி உண்டோ? யாம் சக்தியளித்தால் மட்டுமே தங்களால் அதைச் செய்ய முடியும். எனவே, வாதிடும் தகுதியையும் யாம் அளிப்போம். தாங்கள் சென்று வாதிடவும்,” என்று கூறி அனுப்பி வைத்தார். எந்த ஒரு தொண்டாக இருந்தாலும் அதை செய்யக்கூடிய திறமை பகவானிடமிருந்தே வருகிறது. நம்மிடம் இருக்கும் திறமை(கள்) பெருமாளின் கருணையால் மட்டுமே கிட்டியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படுதல் மிகவும் அவசியம்.

அடைக்கலம் நல்கும் ஸ்ரீ இராமர்

பக்தித் தொண்டு மிகவும் எளிமை யானது. பகவானிடத்தில் தூய்மையான அன்பு மட்டுமே இதற்கு வேண்டும். பத்ரம் புஷ்பம் பலம் தோயம் (பகவத் கீதை 9.26). அன்புடனும் பக்தியுடனும் எவனொருவன் தனக்கு ஓர் இலையோ பூவோ பழமோ நீரோ அளித்தால், அதை தான் ஏற்றுக்கொள்வதாக அவர் கூறுகிறார். எனவே, படித்தவன், பாமரன் என அனைவருக்கும் எளிதானது பக்தி.

மேலும், பகவத் கீதையில் (9.29), “நான் யார் மீதும் பொறாமை கொள்வதில்லை, பாரபட்சமாக நடந்துகொள்வதும் இல்லை. நான் எல்லாரையும் சமமாக பாவிக்கின்றேன். இருப்பினும் உயர்ந்த பக்தியுடன் யார் எனக்குத் தொண்டு புரிகிறானோ அவன் என் நண்பன். அவன் என்னில் இருக்கிறான், நானும் அவனுக்கு நண்பனாக இருக்கிறேன்,” என்று கூறுகிறார். இராமாவதாரத்தில் அவர் இதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். அவரிடம் சரணடைந்த அனைவருக்கும் அவர் அடைக்கலம் கொடுக்கிறார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த குகனின் அன்பைப் பாராட்டி அவரைத் தனது சகோதரனாக ஏற்றார், தனக்கு உதவி புரியுமாறு வேண்டி நின்ற சுக்ரீவனை நண்பனாக ஏற்றார். அபயம் என்று வந்த அசுர குலத்தவனாகிய விபீஷணனுக்கும் அடைக்கலம் கொடுத்தார். தனக்கு தொண்டாற்றிய எல்லாரையும் சமமாக பாவித்து அவர்களை நேசித்தார்: மிகப்பெரிய தொண்டாற்றிய ஹனுமானையும் நேசித்தார், தன் சிறிய தேகத்தைக் கொண்டு பாலம் கட்ட உதவிய அணிலையும் ஆதரித்தார். இராமாயணத்தின் யுத்த காண்டத்தில் (18.33),

ஸக்ருத் யேவ ப்ரபன்னோ யஸ் தவாஸ்மீதி ச யாசதே

அபயம் ஸர்வதா தஸ்மை ததாம்யேதத் வ்ரதம் மம

“உண்மையான மனதுடன், ‘இறைவா, இன்றிலிருந்து நான் உங்களிடம் சரணடைகிறேன்,’ என்று கூறினால், அவர் யாராக இருந்தாலும் நான் அவருக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கின்றேன். இது என்னுடைய விரதம்,” என்று ஸ்ரீ இராமர் பறைசாற்றுகிறார்.

இதர உதாரணங்கள்

கிருஷ்ண லீலையிலும் எந்தப் பாகுபாடும் பாராமல், பல இடங்களில் அவர் கருணை வழங்குவதைக் காண்கிறோம். அழகற்ற குப்ஜையின் சேவையை ஏற்றார், வறுமையில் வாடிய குசேலரின் அவுலை உண்டு மகிழ்ந்தார். மேலும், துவாரகையில் அரசாண்ட போது மிதிலை நகரை ஆண்ட பகுலாஸ்வ மன்னனையும் எளிமையான ஸ்ருததேவரையும் சமமாக பாவித்தார். இருவரும் அவரை தத்தம் இல்லத்திற்கு அழைக்க, இருவரின் மனமும் வருந்தக்கூடாது என்பதால், இருவரின் இல்லத்திற்கும் ஒரே நேரத்தில் சென்றார்.

அம்பரீஷ மன்னர் மிகப்பெரிய அரசனாக இருந்தபோதிலும், தூய்மை யான மனதுடன் ஒன்பது விதமான பக்தித் தொண்டுகளை செய்து வந்ததையும், துர்வாச முனிவர் தனது கர்வத்தால் அவரை அழிக்க முயன்றபோது, இறைவன் தனது சக்ராயுதத்தினால் முனிவருக்கு பாடம் புகட்டியதையும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து நாம் அறிவோம்.

இவை மட்டுமின்றி, இன்றைய கால கட்டத்திலும், பூரியின் அரச வம்சத்தினர் ஸ்ரீ ஜகந்நாதரின் ரதத்தின் முன் வந்து குப்பைகளைக் கூட்டி ரதவீதியைத் தூய்மைப்படுத்துவதைக் காண்கிறோம்.

 

மிகவும் எளியவனான தனது இல்லத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணர் வருவதைக் கண்ட பேரானந்தத்தில் ஸ்ருததேவர்.

இறுதி வரிகள்

ஒருவன் நாட்டை ஆளும் அரசனாகப் பிறக்கிறான், மற்றொருவன் சாதாரண குடிமகனாக பிறக்கிறான்; ஒருவன் கல்வி கற்று பண்டிதனாகிறான், மற்றொருவன் கல்வி அறிவின்றி வாழ்கிறான்; ஒருவன் செல்வந்தனாக இருக்கிறான், மற்றவன் வறுமையினால் வாடுகிறான். இத்தகைய வேறுபாடுகள் கர்ம வினையினால் ஏற்பட்டவை என்பதை உணர்ந்து, உயர்நிலையில் இருப்பதால் கர்வம் கொள்ளாமலும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் ஒதுங்கி நிற்காமலும் ஒவ்வொருவரும் பக்தித் தொண்டில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

கலி யுகத்தில் பகவானை அடைவதற் கானத் தொண்டுகளில் மிக மிக முக்கிய மானது நாம சங்கீர்த்தனமே.

கலி-காலே நாம-ரூபே க்ருஷ்ண-அவதார்

நாம் ஹைதே ஹய் ஸர்வ-ஜகத்-நிஸ்தார்

 “கலி யுகத்தில் பகவான் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தின் வடிவில் அவதரித்துள்ளார். இந்த திருநாமங்களை உச்சரிப்பதால் இறைவனுடன் எளிதில் தொடர்புகொண்டு, விடுதலை பெறுவது நிச்சயம்,” என்று சைதன்ய சரிதாம்ருதத்தில் (ஆதி லீலை, 17.22) கூறப்பட்டுள்ளது. இந்த நாம சங்கீர்த்தனத்தில் படித்தவன், பாமரன் என அனைவரும் ஈடுபடலாமே!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives