வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீமதியரே, ஸ்ரீமான்களே, கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரது வாழ்வும் வெற்றி பெறும் நிலைக்கு இட்டுச் செல்லும் நோக்கத்தோடு கிருஷ்ண பக்தி இயக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மனித வாழ்வின் உண்மையான நோக்கம் பற்றிப் பேச இருக்கிறேன். இந்த நோக்கத்தை உலகம் முழுவதும் அறியச் செய்ய நாங்கள் முயல்கிறோம்.
ஆத்மாவிற்கு முக்கியத்துவம்
மனிதப் பிறவி பற்பல கோடிக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சிக்குப்பின் பெறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தின்படி 84,00,000 உயிரின வகைகள் உள்ளன என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். ஆத்மா மனிதப் பிறவிகளில் மட்டுமே உள்ளது என்பதல்ல. நாம் எல்லாரும்—மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள், மரங்கள், செடிகள், நீர்வாழ் இனங்கள் என அனைவருமே ஆத்மாக்களே. ஆத்மா பல வகையான உடைகளால் மறைக்கப்பட்டுள்ளது. இஃது உங்களில் சிலர் சிவப்பு நிறத்திலும் சிலர் பச்சை, வெள்ளை நிறங்களிலும் வகைவகையாக உடை அணிந்திருப்பதைப் போன்றது. ஆனால் நாங்கள் உடைகளுக்கு (உடலுக்கு) முக்கியத்துவம் கொடுப்பதில்லை; ஆத்மாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
பௌதிக விஞ்ஞானிகள் ஆத்மா என்ற ஒன்றில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள், ஆனால் அஃது உண்மையல்ல. ஆத்மா இருக்கிறது. ஆத்மா இருப்பதே உயிருள்ள உடலிற்கும் மரணமடைந்த உடலிற்கும் இடையேயான வேறுபாடு. ஆத்மா உடலைவிட்டு வெளியேறியதும் உடல் மடிகிறது. அப்போது உடலிற்கு மதிப்பில்லை. ஒருவர் எவ்வளவு பெரிய விஞ்ஞானியானாலும் தத்துவஞானியானாலும், ஆத்மா உடலை விட்டு நீங்கியவுடன் உடல் மடிகிறது என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். அப்போது உடலுக்கு மதிப்பில்லாமல் போவதால் நாம் அதை எறிந்துவிடுகிறோம். மதிப்பு ஆத்மாவிற்கே, உடலிற்கு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
தெய்வீக வாழ்வைத் தேர்ந்தெடுப்போம்
ஓர் உடை பழையதாகும்போது, அதை அகற்றிவிட்டு வேறொன்றை அணிகிறோம். அதுபோல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக்கொள்கிறது. தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம் பெயர்கிறது. அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில்தான் உள்ளது.
மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சிபெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும் நாய்களையும் பன்றிகளையும் போல நாம் வாழ்வை வீணடிக்கக் கூடாது. இதுவே அறிவுரை. பூனை, நாயின் உடலைப் போல் நம் உடலும் அழியக்கூடியதென்றாலும், நாம் இந்த வாழ்வில் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைய முடியும். நாம் கடவுளின் அம்சம். ஆனால் எவ்வாறோ இந்த பௌதிக வாழ்வில் விழுந்துவிட்டோம். தற்போது மீண்டும் இறைவனைச் சென்றடைவதற்கான வகையில் நம் பரிணாமம் அமைய வேண்டும். அதுவே மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.
ஆசையும் புலம்பலும் இல்லாத வாழ்க்கை
கடவுளுக்குப் பிறப்போ இறப்போ இல்லாததுபோல், ஆத்மாவாகிய நமக்கும் பிறப்போ இறப்போ இல்லை. நீங்கள் நித்தியமானவர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது நிச்சயமாக மகிழ்ச்சி அடைவீர்கள் இல்லையா? நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள். இவ்வாறாக, பிரம்ம உணர்வைப் பெறும்போது அதாவது ஆன்மீக உணர்வைப் பெறும்போது, அங்கு இச்சைகளோ ஏக்கங்களோ இருப்பதில்லை. உலகம் முழுவதும் இச்சைகளும் புலம்பல்களும் நிறைந்து காணப்படுகின்றது. ஆப்பிரிக்கர்களான நீங்கள் ஐரோப்பியர்களைப் போலவும் அமெரிக்கர்களைப் போலவும் வாழ தீவிரமாக முயற்சிக்கிறீர்கள். ஆனால், ஐரோப்பியர்களோ தங்கள் சாம்ராஜ்ஜியங்களை இழந்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு சாரார் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், மற்றொரு சாரார் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறாக, பௌதிக வாழ்வு என்பது, ஆசைகள் மற்றும் புலம்பல்களின் கலவையே. நம்மிடம் இல்லாதனவற்றிற்காக நாம் ஆசைப்படுகிறோம். இழந்து விட்டதை எண்ணிப் புலம்புகிறோம். இதுவே நமது பௌதிக வாழ்வு. ஆனால், நாம் பரபிரம்மனான பரம புருஷ பகவானின் இணைபிரியா அம்சம் என்பதை உணர்ந்தால், அதாவது நாம் பிரம்மன் என்பதை உணர்ந்தால், அப்போது நாம் இச்சைகளையும் புலம்பல்களையும் கடந்தவர்கள் ஆவோம்.
பன்றியின் வாழ்வு முறை தேவையா?
உலக சகோதரத்துவம் அல்லது உலக ஒற்றுமை என்பதை நிறுவ ஐக்கிய நாடுகள் சபை முயற்சிக்கிறது. அது நீங்கள் ஆன்மீகத் தளத்திற்கு வரும்போது, அதாவது பிரம்ம உணர்வு பெறும்போது மட்டுமே சாத்தியம். பிரம்மனை உணர்வதே மனித வாழ்வின் இலட்சியம். ஒருவன் பன்றிகளையும் பூனைகளையும் நாய்களையும் போல் உழைக்கக் கூடாது. பன்றி நாள் முழுவதும் மலத்தைத் தேடி உண்பதில் மும்முரமாக இருக்கிறது. தேடியது கிடைத்த பின் அதை உண்டு பாலுணர்வு தூண்டப்பெற்று எவ்வித பாகுபாடுமின்றி தன் தாயுடனும் தங்கையுடனும் எவ்வித பாகுபாடுமின்றி உடலுறவு கொள்கிறது. இதுவே பன்றியின் வாழ்வு முறை.
ஆனால், புலன் திருப்திக்காகப் பன்றிகளையும் பூனைகளையும் நாய்களையும்போல் கடினமாக உழைப்பது மனிதப் பிறவியின் நோக்கமல்ல என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. “நான் இந்த பௌதிக உலகைச் சார்ந்தவனல்ல; நான் ஆத்மா, நித்தியமானவன். ஏதோ காரணத்தால் பிறப்பு, முதுமை, நோய், மரணம் எனும் இக்கட்டுண்ட வாழ்வில் விழுந்து விட்டேன்” என்று உணர்வதற்காக மனித வாழ்வு ஏற்பட்டுள்ளது. பிறப்பு, முதுமை, நோய், மரணம் ஆகிய நான்கு பௌதிகத் துயரங்களை வெற்றிகொள்வதற்காக மனிதப் பிறவி ஏற்பட்டுள்ளது. இதுவே மனித வாழ்வின் இலட்சியம். பன்றிகளைப் போல் கடினமாக உழைத்து சிறிது புலனின்பம் அனுபவித்துப் பின் திடீரென்று மடிவதற்காக மனித வாழ்வு ஏற்பட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
நித்திய வாழ்வை நோக்கிய பயணம்
ஆத்மாவை நம்பாத மக்கள் துரதிர்ஷ்டமான நிலையில் உள்ளனர். நாம் எங்கிருந்து வந்துள்ளோம், எங்கு போகிறோம் என்பதை அவர்கள் அறியார்கள். ஆத்மா பற்றிய அறிவு எல்லாவற்றிலும் சிறந்த முக்கியமான அறிவு. ஆனால் அஃது எந்தப் பல்கலைக்கழகத்திலும் விவாதிக்கப்படுவதில்லை. இந்த உடலின் அமைப்பு என்ன? மரணமடைந்த உடலிற்கும் உயிருடன் இருக்கும் உடலிற்கும் என்ன வித்தியாசம்? உடல் ஏன் உயிர் வாழ்கிறது? உடலின் நிலை என்ன? அதன் மதிப்பு என்ன? இவ்வினாக்களை இப்போது யாரும் ஆராய்வதில்லை. ஆனால், நாம் நம் உடலல்ல, ஆத்மா என்பதை மக்கள் அறியும்படிச் செய்ய கிருஷ்ண பக்தி இயக்கம் முயன்று வருகிறது. மனித வாழ்வின் நோக்கம் நாய், பூனைகளின் வாழ்வின் நோக்கத்தினின்று வேறுபட்டது. இதுவே நாங்கள் தரும் செய்தி. நித்திய வாழ்வை அடைவதே மனித வாழ்வின் நோக்கமாகும்.
அந்த நித்திய வாழ்வை அடைவதற்கான வழி மிகவும் எளிதானது, அதே சமயம் மிகவும் கடினமானது. கடினத்திற்கு காரணம் ஆத்மா உடல்விட்டு உடல் மாறுவதை ஆரம்பத்தில் மக்கள் நம்புவதில்லை. ஆனால், அதிகாரபூர்வமானவர்களிடமிருந்து நாம் இந்த அறிவைப் பெற்றுக்கொள்ளும்போது வழிமுறை மிகவும் எளிதாகிறது. கிருஷ்ண உணர்வு முறையில் நாங்கள் மிகவும் பக்குவமுடையவரான கிருஷ்ணரிடமிருந்து அறிவைப் பெறுகிறோம், ஜட இயற்கையின் விதிகளால் கட்டுண்டிருக்கும் ஒரு சாதாரணமானவரிடமிருந்து அல்ல.
நாட்டிற்குச் சொந்தக்காரர் யார்?
நீங்கள் உண்மையாகவே கடவுளைப் புரிந்துகொள்ள விரும்பினால் அது மிகவும் எளிது. கடவுளே எல்லாவற்றின் உடைமையாளர். ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம். துரதிர்ஷ்டவசமாக, “நானே உடைமையாளன்” என்று அறியாமையால் எண்ணுகிறோம். உதாரணமாக, உங்கள் நாட்டின் உடைமையாளர்களாக பிரிட்டிஷார் ஒரு காலத்தில் தம்மைக் கருதினார்கள். இப்போது நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள். வருங்காலத்தில் என்ன நடக்குமென்பதை யார் அறிவார்கள்? உண்மையான உடைமையாளர் யாரென்பதை யாரும் அறியார்கள். நிலம் இருக்கிறது. அது கடவுளுக்குச் சொந்தமானது. ஆனால், “நானே உடைமையாளன். இஃது எனக்குச் சொந்தம், அஃது எனக்குச் சொந்தம்” என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே அமெரிக்கா இருந்தது. ஆனால், தற்போது “நாங்கள் உரிமையாளர்கள்” என்று அமெரிக்கர்கள் எண்ணுகிறார்கள். அதுபோலவே, அவர்களுக்கு முன்பு சிவப்பிந்தியர்கள் “நாங்கள் உரிமையாளர்கள்” என்று நினைத்தார்கள். உண்மையில் எந்த மனிதனுமே உடைமையாளன் அல்ல, உடைமையாளர் கடவுளே.
ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா
மா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம்
“பிரபஞ்சத்திலுள்ள அசைகின்ற அசையாத பொருள்களெல்லாம் பரம்பொருளின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை, அவருக்குச் சொந்தமானவை. எனவே, ஒருவன் தன் தேவைக்கு அவசியமான பொருட்களை, தனக்கென ஒதுக்கப்பட்ட பங்கை, மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவை பிறருடையவை என்பதை அறிந்து அவற்றைப் பெற முயற்சிக்கக் கூடாது.” (ஈஷோபநிஷத், முதல் ஸ்லோகம்)
இந்த உணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. எல்லாப் படைப்பிற்கும் கிருஷ்ணரே உடைமையாளர்–அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், பூனைகள், நாய்கள், மரங்கள் உட்பட அனைத்திற்கும் அவரே உரிமையாளரும் உன்னதத் தந்தையுமாவார். இதை உணர்ந்த மாத்திரத்திலேயே நாம் கடவுள் உணர்வைப் பெறுகிறோம். அதிகாரபூர்வமான நூல்களிலும் வேத இலக்கியங்களிலும் வகுக்கப்பட்டுள்ள முறையின்படி நாம் இறையுணர்வைப் பெற்றால் கோஷ்டி சண்டை ஏற்படாது அனைத்திலும் அமைதி நிலவும்.
தந்தையின் சொத்தில் உரிமை
அனைவருக்கும் கடவுளின் சொத்தைப் பயன்படுத்தும் உரிமை உண்டு. இது தந்தையின் செலவில் வாழ்வதற்கு மகனுக்கு உரிமை இருப்பதைப் போன்றது. வீட்டிலுள்ள ஒரு சிறிய பிராணிக்கும் சிறிது உணவளிக்கப்பட வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதுவே ஆன்மீகப் பொதுவுடைமையாகும். எவரும் பசித்திருக்கக் கூடாது. ஒரு பாம்புகூட பசித்திருக்கக் கூடாது. இதுவே கடவுள் உணர்வு, கிருஷ்ண உணர்வின் கருத்தாகும். ஸம: ஸர்வேஷு பூதேஷு. உன்னதத் தளத்தில் நிலைபெற்றவன் ஒவ்வோர் உயிரையும் சமமாகக் கருதுகிறான். ஒருவன் மற்ற ஒவ்வொருவரையும் சமமாகக் காணும்போது, முழுமுதற் கடவுளின் அம்சமாகக் காணும்போது, அவனது பக்தி வாழ்வு ஆரம்பமாகிறது என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது.
ஒவ்வொருவரும் தான் யார், வாழ்வின் நோக்கமென்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிந்துகொள்ள கிருஷ்ண பக்தி இயக்கம் முயன்று வருகிறது. இதயத்தைத் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை மிகவும் எளிதானது. இந்த மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்தால் போதும்; ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இந்த இயக்கத்தில் வெவ்வேறு நாடுகளையும் மதங்களையும் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் ஈடுபட்டுள்ளதைக் காணலாம். ஆனால் யாரும் எந்தக் குறிப்பிட்ட பிரிவையோ நாட்டையோ மத ஸ்தாபனத்தையோ பின்பற்றுவதில்லை. தன்னை அறிவதும், கடவுளுடனான உறவை அறிவதும் மட்டுமே எங்கள் நோக்கம்.
புத்திசாலிகளை அழைக்கின்றோம்
கடவுளே உன்னத உரிமையாளர், நாம் அனைவரும் அவரது பிள்ளைகள் அல்லது சேவகர்கள். எனவே, பகவத் கீதையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முறையை அனுசரித்து கடவுளின் தொண்டில் நம்மை ஈடுபடுத்துவோமாக. கடவுள் எல்லாவற்றின் உடைமையாளர் என்று நாம் உணர்ந்தவுடன் உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் உடனடியாகத் தீர்வு காணப்படும். இதற்குச் சிறிது காலம் பிடிக்கலாம். இந்த உயர்ந்த தத்துவத்தை எல்லாரும் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள புத்திசாலிகள் இதைப் புரிந்துகொள்ள முயன்றால், அது போதுமானது. பகவத் கீதை (3.21) கூறுவதாவது:
யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்டஸ் தத் தத் ஏவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அனுவர்ததே
“பெரிய மனிதன் எத்தகைய செயல்களைச் செய்கின்றானோ, அதையே பொதுமக்களும் பின்பற்றுகின்றனர். தன் சீரிய செயல்களால் எந்தத் தரத்தை அவன் உதாரணம் அமைத்துக் காட்டுகிறானோ அதையே உலகம் முழுவதும் பின்பற்றுகின்றது.”
எனவே, நாங்கள் உலகின் தலைசிறந்த அறிவாளிகளை கிருஷ்ண உணர்வு தத்துவத்தைப் புரிந்துகொண்டு அதை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அழைக்கிறோம். இப்போது நாங்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு வந்திருக்கிறோம். இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதைப் பிறருக்கு வழங்கும்படி ஆப்பிரிக்க அறிவாளிகளை அழைக்கிறோம். நீங்கள் உங்களின் முன்னேற்றத்திற்காக முயன்று கொண்டிருக்கிறீர்கள். ஆன்மீக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள்; ஏனெனில், ஆன்மீக முன்னேற்றமே முழுமையான முன்னேற்றம். பூனைகளையும் நாய்களையும் போல வாழும் அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் நகல் செய்யாதீர்கள். புலனின்ப உணர்வின் அடிப்படையில் எழுப்பப்படும் நாகரிகம் வெகு காலம் நீடிக்காது. அணுகுண்டு ஏற்கனவே தயாராக இருக்கிறது. அடுத்த யுத்தம் ஆரம்பித்த உடனேயே அவர்களின் வானளாவிய கட்டிடங்களும் மற்றவையும் அழிந்து போகும். மனித வாழ்வின் கண்ணோட்டத்தில் அதாவது ஆன்மீகக் கண்ணோட்டத்தில் இதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். கிருஷ்ண உணர்வின் நோக்கம் இதுவே. எனவே, இந்த தத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.