மேற்கத்திய பசுக்கள் உண்மையான பசுக்களா?

Must read

கடந்த சில வருடங்களாக பல்வேறு பொய்யான தகவல்கள் இந்தியாவில் வாட்ஸ்ஆப் முதலிய செயலிகளின் மூலம் விரைவாகப் பரவி, மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துள்ளன. அவற்றில் ஒன்று: ஜெர்ஸி பசு உட்பட மேற்கத்திய நாட்டின் பசுக்கள் உண்மையான பசுக்கள் அல்ல, அவை பன்றியையும் எருமையையும் சேர்த்து கொண்டு வரப்பட்ட கலப்பினம். இந்தக் கூற்று எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் முற்றிலும் அபத்தமானது என்றபோதிலும், பல்வேறு இந்தியர்கள் இதனை நம்புகின்றனர்.

மேலும், இதன் மற்றொரு நிலையில், மேற்கத்திய பசுக்கள் பசுக்களே அல்ல என்றும், அதனால் அவற்றைக் கொல்வதில் பெரிய குற்றம் இல்லை என்றும் சில பெரிய மனிதர்களே பேசத் தொடங்கியுள்ளது மிகுந்த வருத்தத்திற்கு உரியதாகும். உதாரணமாக, பசு பாதுகாப்பிற்காக சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலமான மூத்த அரசியல்வாதி ஒருவரும்கூட இந்தியப் பசுக்களுக்கு (Bos Indicus) மட்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பேசி வருகின்றார்.

எனவே, இக்கட்டுரை இங்கு தேவைப்படுகிறது.

பசுவல்ல என்பதற்கான காரணங்கள்

மேற்கத்திய நாட்டின் பசுக்களை பசுக்கள் அல்ல என்று கூறுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. (1) மேற்கத்திய பசுக்கள் பன்றியின் கலப்பினம், (2) அவை கவய எனப்படும் காட்டெருமையின் இனத்தைச் சார்ந்தவை, (3) அவற்றிற்கு பெரிய திமில், நீண்ட வால் இல்லை, (4) அவற்றிற்கு சூரிய-கேது நாடி இல்லை, (5) அவற்றால் வழங்கப்படும் பால் A1 வகையைச் சார்ந்தவை, பருகுவதற்கு உகந்ததல்ல. இந்த காரணங்கள் எவ்வாறு ஆதாரமற்று வழங்கப்படுகின்றன என்பதை ஒன்றன்பின் ஒன்றாகக் காண்போம்.

பன்றியின் கலப்பினம்

இது துளிகூட ஆதாரமில்லாமல் முற்றிலும் புரளியின் மூலமாகப் பரவியுள்ள தகவல். உயிரியல் ரீதியாக இதற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை, வரலாற்றில் யாரும் அதுபோன்று செய்யவும் இல்லை. நமது ஊரிலுள்ள நாய்களையும் மேற்கத்திய நாட்டின் நாய்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவற்றின் தோற்றம், செயல்கள் என பலவற்றில் வேறுபாடுகளைக் காணலாம். அதற்காக, அந்த நாய்கள் நாய்களே அல்ல என்று கூறி விட முடியுமா? அதுபோலவே, மேற்கத்திய பசுக்கள் இந்திய பசுக்களிடமிருந்து மாறுபட்டிருப்பதால், அவற்றை பன்றிகளின் கலப்பினம் என்று கூறுதல் முற்றிலும் அபத்தமானதாகும்.

கவய என்றழைக்கப்படும் வனவிலங்கான காட்டெருமை

கவய என்றால் என்ன?

வடமொழியில் கோ என்றால் “பசு” என்றும், கவய என்றால் “காட்டெருமை” என்றும் பொருள்படும். சிலர், மேலைநாட்டு பசுக்களை கவய இனம் என்று கூறுகின்றனர். கோசேவை செய்ய வேண்டும், கவயசேவை அல்ல என்றும் கூறுகின்றனர். இவை இந்திய பசுக்களின் மீதான அபரிமிதமான பாசத்தினால் வரும் கூற்றே தவிர, அறிவுபூர்வமானதோ விஞ்ஞானபூர்வமானதோ அல்ல.

கவய என்றால் என்ன? இச்சொல் காட்டெருமை, நீலான் (ஒரு வகையான மான் இனம்) முதலிய வனவிலங்குகளைக் குறிப்பதாகும். மேற்கத்திய ரக பசுக்கள் வீட்டுவிலங்குகளாக வளர்க்கப்படுபவை, அவற்றை ஒருபோதும் வனவிலங்குகளுடன் ஒப்பிட இயலாது. இந்திய பசுக்களைப் போலவே மேற்கத்திய பசுக்களும் தங்களது எஜமானருடன் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு இருக்கையில், அவற்றை வனவிலங்குகளுக்கு இணையாக பாகுபடுத்துவது முற்றிலும் தவறாகும்.

பெரிய திமில், நீண்ட வால்

சிலர் பதஞ்சலியின் பின்வரும் விளக்கத்தை பசுவிற்கு வழங்குகின்றனர்: ஸாஸ்னா-லாங்கூல-ககுத-குர-விஷாணி, “பசு என்பது அசைதாடி (கழுத்திற்குக் கீழுள்ள சதை) (ஸாஸ்னா), நீண்ட வால் (லாங்கூல), பெரிய திமில் (ககுத), குளம்பு (குர), கொம்பு (விஷாணி) ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.” இந்த விளக்கத்தை ஆராய்வோம்.

அசைதாடி, குளம்பு, கொம்பு ஆகியவை எல்லா வகையான மாடுகளிலும் காணப்படுகின்றன. ஆயினும், மேற்கத்திய மாடுகளுக்கு பெரிய திமிலும் நீண்ட வாலும் இல்லை என்பதால், அவை பசு அல்ல என்கின்றனர். ஆனால், பதஞ்சலியின் வார்த்தைகளில் “பெரிய,” “நீண்ட” என்னும் சொற்களே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கை. லாங்கூல என்றால் “வால்” என்றுதான் பொருள், ககுத என்றால் “திமில்” என்றுதான் பொருள்; “நீண்ட” “பெரிய” என்பவை மொழிபெயர்ப்பாளரின் இடைச்செருகல். இவை மேற்கத்திய பசுக்களைப் புறக்கணிப்பதற்காக மொழிபெயர்ப்பாளரால் திணிக்கப்பட்டவை.

உண்மையில், மேற்கத்திய மாடுகளுக்கும் ஓரளவு நீண்ட வால் உள்ளது, சின்னஞ்சிறு திமிலும் உள்ளது. பெரிய திமிலும் நீண்ட வாலும் மாடுகளுக்கு பக்குவமான தோற்றத்தைக் கொடுத்து, அவற்றை அழகுடையதாக மாற்றுகின்றன. அதே சமயத்தில் அழகற்ற பசுவினை பசுவே அல்ல என்று கூறுவது சரியோ?

மற்றொரு புறம், பதஞ்சலி பசுவைப் பற்றிய விளக்கத்தையா வழங்கியுள்ளார் என்பதை ஆராய்ந்தால், அது மஹாபாஷ்ய எனப்படும் இலக்கண நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய பசுக்களை நிராகரிப்பவர்கள் முழு ஸ்லோகத்தைக் கூறுவதில்லை. முழு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

அத கௌரய இத்யத்ர க: ஷப்த:

கிம் யத் தத் ஸாஸ்னா-லாங்கூல-

ககுத-குர-விஷாண்யர்த-ரூபம் ஸ ஷப்த:

நேத்யஹ, த்ரவயம் நாம தத்

இங்கு பசுவை உதாரணமாகக் கொண்டு, சொற்கள், அவற்றின் பொருள், பாகங்கள், அல்லது குணங்களுக்கு இடையிலான தொடர்பைப் பற்றிய விளக்கத்தை பதஞ்சலி வழங்குகின்றார். இங்கு அவர் பசுவிற்கு விளக்கமளிக்கவில்லை. விலங்குகளைப் பற்றிய தெளிவான தகவல்களை வழங்கும் சாரக ஸம்ஹிதை போன்ற சாஸ்திரங்களை விடுத்து, ஏதோ ஓர் இலக்கண நூலிலிருந்து ஒரு ஸ்லோகத்தை எடுத்து, அதிலிருந்து ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்து, அதன் மொழிபெயர்ப்பிலும் இடைச்செருகலை வழங்கி, இதுநாள் வரை உலகெங்கிலும் பசுக்களாக மதிக்கப்பட்ட ஓர் இனத்தை பசுவே அல்ல என்று கூறி மறுப்பது நியாயமா? அறிவியல், பொது அறிவு, நியாயம், சாஸ்திர பிரமாணம் என எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு செயல்படுதல் சரியா?

சூரிய-கேது நாடி

மேற்கத்திய பசுக்களை நிராகரிப்பவர்களின் மற்றுமொரு வாதம், இந்திய பசுக்களுக்கு சூரிய-கேது நாடி உள்ளது, மேற்கத்திய பசுக்களுக்கு அஃது இல்லை என்பதாகும். இதில் கவனிக்க வேண்டிய முதல் விஷயம், நாடிகள் இருப்பதையும் இல்லாததையும் சோதிப்பதற்கு ஏதேனும் வழி உண்டா? நிச்சயம் இல்லை. மனித உடலில் 72,000 சூட்சும நாடிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மனித உடலிலுள்ள நாடிகள், சக்கரங்களைக்கூட நம்மால் உறுதிசெய்யவோ மறுக்கவோ இயலாது என்னும்பட்சத்தில், பசுவைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மேற்கத்திய பசுக்களுக்கு சூரிய-கேது நாடி இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்? இந்திய பசுக்களுக்கு அவை உள்ளன என்பதற்கும் என்ன ஆதாரம்?

சூரிய-கேது நாடியைப் பற்றிய எல்லாத் தகவல்களும்—இதுவரை நாங்கள் அறிந்த வரை—சமூக வலைத்தளங்களில் மட்டுமே உலாவுகின்றன. இவற்றில் எங்குமே இதுவரை எந்தவொரு ஸ்லோகத்தையும் பார்க்கவில்லை, எந்தவொரு பிரமாணத்தையும் (ஆதாரத்தையும்) பார்க்கவில்லை. சாஸ்திரத்தில் அதுபோன்று ஏதேனும் எங்கேனும் கூறப்பட்டிருந்தால், அந்த விவாதத்தை நாம் ஏற்கலாம்; இல்லாவிடில், இயலாது.

தீர விசாரித்து அறிவதே மெய். ஆயினும், பெரும்பாலான மக்கள் இன்றைய உலகில் எதையும் தீர விசாரிப்பதில்லை. படித்த அறிஞர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள் என பலரும்கூட கண்மூடித்தனமாக எங்கோ படித்ததை அப்படியே மற்றவர்களுக்கு அனுப்புகின்றனர்.

A1 வகை பால்

மேற்கத்திய பசுக்களின் பால் A1 வகையைச் சார்ந்தது என்றும், இந்திய பசுக்கள் A2 வகை பாலைத் தருகின்றன என்றும் கூறப்படுகிறது. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது; ஆயினும், A1 பால் விஷத்தன்மை உடையது, புற்றுநோயை உண்டாக்குகிறது என்று கூறப்படுபவை அனைத்தும் அபத்தமானவை.

A1, A2 பாலிற்கு இடையில் என்ன வேறுபாடு? லாக்டோஸ் எனப்படும் இரட்டைசர்க்கரை A1 பாலில் அதிகமாகவும், A2 பாலில் குறைவாகவும் காணப்படுகிறது. இதைத் தவிர A1, A2 பாலிற்கு இடையே எந்தவொரு வேற்றுமையும் இது வரை கண்டறியப்படவில்லை. அதிக லாக்டோஸ் இருந்தால், அதனை ஒரு சில மனிதர்களால் அரிதான முறையில் சகித்துக்கொள்ள இயலாது. யாருக்கு அந்த அரிதான நோய் இருக்கின்றதோ, அவர்கள் A1 வகை பாலைப் பருகினால், அஜீரணம் ஏற்படலாம். இதைத் தவிர A1 வகை பாலினால் எந்தவொரு தீங்கும் ஆராயப்படவில்லை. மேற்கத்திய நாடுகளில் பன்நெடுங்காலமாக மக்கள் A1 வகை பாலைத்தான் பருகி வந்துள்ளனர். அவர்களுக்கு ஏன் கடும் நோய்கள் வரவில்லை?

இன்றைய உலகில் பல்வேறு தகவல்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதால், பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது கடினமாக உள்ளது. விஞ்ஞானிகள் A1, A2 என இரண்டு வகையான பாலை 1990ஆம் ஆண்டுகளில் கண்டறிந்தனர். அஃது அறியப்பட்டவுடன், A2 Milk Company என்னும் நிறுவனம் அதற்கு உரிமம் (patent right, trademark) வாங்கி விட்டது. அதன்படி, A2 என்னும் எழுத்துகள் எந்த பால் பாக்கெட்டில், கவரில், அட்டையில் எழுதப்பட்டாலும், அதற்காக அந்த கம்பெனிக்கு லைசென்ஸ் பணம் உலகின் எல்லா மூலையிலிருந்தும் வழங்கப்பட வேண்டும். A2 வகை பாலைப் பற்றிய எல்லா ஆராய்ச்சிகளும் அதன் விளம்பரங்களும் இந்த கம்பெனியினால் செய்யப்படுபவை. எனவே, இவர்களின் ஆய்வுகளை எந்தளவிற்கு உண்மையாக ஏற்க முடியும்?

பெரும்பாலான இந்திய மக்கள் விஷத்துடன் விளைவிக்கப்பட்ட பயிர்களை உண்கின்றனர், பலரும் புற்றுநோய் கொடுக்கும் ஆஸ்பெஸ்டால் கூரைக்குக் கீழ் வாழ்கின்றனர். ஆயினும், தங்களின் புற்றுநோய்க்கு A1 பால் காரணம் என்று எண்ணுமளவிற்கு சமூக வலைத்தளங்கள் கருத்துகளை பரப்புகின்றன. இந்தியாவில் கிடைக்கும் 70% பாலில், யூரியா, சோப்பு, சோயா முதலிய பல்வேறு கலப்படங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில், A1 பாலாக இருந்தால் என்ன, A2 பாலாக இருந்தால் என்ன?

எப்படிப் பார்த்தாலும், A1 பாலைக் கொடுக்கும் பசுக்களை பசுக்களே அல்ல என்று கூறி விட முடியுமா? ஜெர்மனியில் உள்ள ஹோல்ஸ்டின் ஃப்ரிஷியன் ( Holstein Friesian) இன பசுக்கள் A2 பாலைத் தருகின்றன. எனவே, A2 பால் என்பது இந்திய பசுக்களுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல. இந்திய பசுக்களில் A2 பால் அதிகளவில் உள்ளது, மேற்கத்திய பசுக்களில் குறைந்த அளவில் உள்ளது. மாடுகளின் உட்பிரிவு இனத்தையும் அவை வளர்க்கப்படும் இடத்தின் தட்பவெப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு A1, அல்லது A2 பால் கிடைக்கின்றது. சில இனங்கள் ஒரு நாட்டில் A2 பாலையும் மற்றொரு நாட்டில் A1 பாலையும் வழங்குகின்றன.

A2 பாலைத் தரும் ஜெர்மனியிலுள்ள ஹோல்ஸ்டின் ஃப்ரிஷியன் இன பசுக்கள்

பசு வதையாளர்களின் சதியோ?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நிகழ்ந்தபோது, பசுக்களைக் கொன்று தின்னும் பழக்கம் கொண்ட இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும்கூட அதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேற்கத்திய பசுக்களை இந்திய பசுக்களிடமிருந்து வேறுபடுத்தி, அதன் மூலமாக பசு வதையினை இந்தியர்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும் என்பது அவர்களின் உள்நோக்கமாகத் தெரிகிறது. ஏனெனில், சில வருடங்களுக்கு முன்பாக, மேற்கத்திய பசுக்களைக் கொல்வதில் பாவமில்லை என்று யாரும் கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ, பிராமணர்கள்கூட, “அவை பசுக்களே கிடையாது, கொல்லலாம்” என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு பசுவை பசுவாக அறிவதற்கு எந்த விசேஷ அறிவும் தேவையில்லை. மேற்கத்திய அறிஞர்களின் திட்டமிடப்பட்ட சதி எவ்வாறு வேலை செய்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் இங்கு வந்து இந்திய பண்பாட்டைப் போற்றுவதைப் போலப் பேசி, நாம் பயன்படுத்தும் அதே வார்த்தைகளை வைத்து நம்மை படிப்படியாக ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முன்னரே கூறியதுபோல, நாய்களில் பல நூறு இனங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் நாய்தான். நாயைத் தின்பவன் சண்டாளன் என்று சாஸ்திரம் கூறுகிறது. நாளை சிலர் கூறலாம், “இந்திய நாயைத் தின்பவனே சண்டாளன், மேற்கத்திய நாயைத் தின்பவன் சண்டாளன் அல்லன்.” இன்று நீங்கள் இதைப் படித்து சிரிக்கலாம். அவ்வாறுதான் மேற்கத்திய பசுவைக் கொல்வதில் பாவமில்லை என்று கூறுவதும் நகைப்பிற்கு உரியதாகும்.

ஸ்ரீல பிரபுபாதரின் கருத்து

மேற்கத்திய உலகில் பாரதப் பண்பாட்டினை ஸ்திரமாக நிலைநாட்டிய ஸ்ரீல பிரபுபாதரின் கருத்துகள் (குறைந்தபட்சம் இஸ்கான் பக்தர்களால்) இறுதி வாக்கியமாக ஏற்கப்பட வேண்டும் என்பதால், மேற்கத்திய பசுக்களைப் பற்றிய அவரது கருத்துகளையும் இங்கு முன்வைக்கின்றோம். ஸ்ரீல பிரபுபாதர் மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் செய்தபோது, பல முறை பசு வதையைப் பற்றி பேசியுள்ளார். உலகின் எல்லா பிரச்சனைகளுக்கும் அதுவே மூல காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேற்கத்திய பசுக்கள் பசுக்களே அல்ல என்றால், பசு வதையைப் பற்றி அவர் ஏன் அங்கு பேச வேண்டும்? பின்வரும் உரையாடலைப் படியுங்கள்.

பிரபுபாதர்: மேற்கத்திய நாட்டில் பசுக்கள் அதிகமாகக் கொல்லப்படுகின்றன. அதன் விளைவாக, போர், குற்றங்கள் என பல வன்முறைகள் நிகழ்கின்றன. மக்கள் அவற்றைப் பார்த்து வருந்துகின்றனர். உண்மையில், அவர்கள் வருங்காலத்தில் மேலும் வருந்த வேண்டியிருக்கும்.

ஜயதீர்த்தர்: போரும் குற்றங்களும் பசு வதையின் நேரடி விளைவுகளா?

பிரபுபாதர்: ஆம், நிச்சயமாக. அவை பசு வதையினால் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் ஒட்டுமொத்த விளைவாகும்.

(உரையாடல், ஜுலை 5, 1975)

மற்றோர் இடத்தில் ஸ்ரீல பிரபுபாதர் எழுதுகிறார்: “பசு வதை என்னும் இந்த பாவச் செயலினால், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நாகரிக வாழ்க்கை நாசமடையும்.” (கடிதம், 31 மே, 1975)

மேற்கத்திய பசுக்களைக் கொல்வதன் மூலமாக அமெரிக்க நாகரிகம் நாசமடையும் என்று பிரபுபாதர் ஏன் கூறுகிறார்? ஏனெனில், மேற்கத்திய பசுக்களையும் இந்திய பசுக்களையும் ஸ்ரீல பிரபுபாதர் பசுக்களாகவே பார்த்தார். மேற்கத்திய பசுக்களும் பசுக்களே. அவற்றைக் கொல்வதும் கோ-ஹத்யா எனப்படும் கொடும் பாவமே.

ஒருமுறை, “மேற்கத்திய பசுக்களைக் கொல்லலாம்,” என்னும் கூற்றினை ஸ்ரீல பிரபுபாதரிடம் ஒருவர் முன்வைத்தார்:

விருந்தினர்: பசு வதை பற்றி என்னிடம் சிலர் வாதாடினர். அவர்கள் பொதுவாக பசுவை உண்ண மாட்டார்கள் என்றபோதிலும், மேற்கத்திய பசுக்களை உண்கின்றனர். “இந்திய பசு அல்ல என்பதால், இதனை உண்ணலாம்.” என்று வாதிடுகின்றனர்.

பிரபுபாதர்: இந்தியர்களா அவ்வாறு கூறுகின்றனர்?

விருந்தினர்: சில இந்தியர்களும் கூறுகின்றனர், அமெரிக்க மக்களும் வீம்பிற்காக வாதிடுகின்றனர், “உங்களது நாட்டின் பசுக்கள் புனிதமானவை, நாங்கள் அந்த புனிதமான பசுக்களைக் கொல்வதில்லை.”

பிரபுபாதர்: அப்படியெனில், இந்தப் பசுக்களை என்னவென்று கூறலாம்? அமெரிக்க பசுக்களா?

விருந்தினர்: ஆம், “எங்களது பசுக்கள் புனிதமானவை அல்ல,” என்று கூறுகின்றனர்.

பிரபுபாதர்: அவர்கள் குருடர்கள். வாழ்வை வீணடிப்பவர்கள்.

மேற்கத்திய பசுக்கள் பசுக்களே அல்ல என்னும் கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் அபத்தமான அபிப்பிராயமாக நினைத்து ஆச்சரியமடைவதை இங்கு காண்கிறோம்.

மேற்கத்திய பசுவை ஆதரிக்கின்றோமா?

இந்தியாவின் புராதன மாடுகள் நிச்சயம் அழகு வாய்ந்தவை, திறன் வாய்ந்தவை, அதிக அன்பு கொண்டவை, சில வழிகளில் சிறப்பான பாலை வழங்குபவை. இவற்றில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்தியர்கள் நமது புராதன வகையான பசுக்களை வளர்த்து, இறுதிவரை (கசாப்புக்

கூடங்களுக்கு அனுப்பாமல்) முறையாக பராமரிக்க வேண்டும் என்பதிலும், பாரம்பரிய இனங்கள் அழிந்து விடக் கூடாது என்பதிலும் இஸ்கான் பக்தர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.

அதே சமயத்தில், மேற்கத்திய பசுக்களை பசுக்களே கிடையாது என்று கூறுவதும், அதன் விளைவாக பசு வதையை அனுமதிப்பதும் முற்றிலும் தவறு என்பதை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இக்கட்டுரை ஜானவ நிதாய் தாஸ் அவர்கள் ஆங்கிலத்தில் வழங்கிய கட்டுரையைத் தழுவி, சுருக்கமான முறையில் வடிக்கப்பட்டதாகும்.

பசுக்களைக் கொல்லும் பாவச் செயலினால், ஐரோப்பா, அமெரிக்காவின் நாகரிக வாழ்க்கை நாசமடையும் என்று பிரபுபாதர் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட பசுக்கள் மேற்கத்திய பசுக்களே!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives