வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்
கடந்த வருடம் பகவத் தரிசனம் சேவாதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீர்த்த யாத்திரையில் பக்தர்களுடன் கலந்துகொள்ளும் பாக்கியம் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எல்லையற்ற கருணையினால் எமக்கும் கிட்டியது. பகவத் தரிசனத்திலிருந்து வருடந்தோறும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுக்கு பக்தர்களை அழைத்துச் சென்று, அங்கே பகவான் கிருஷ்ணர் புரிந்த லீலைகளையும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு புரிந்த லீலைகளையும் உபதேசங்களாக எடுத்துரைத்து, பக்தர்கள் அனைவரும் கிருஷ்ணரின் பேரன்பு என்னும் பேரமுதை சுவைக்கும் அரிய பாக்கியத்தை வழங்குகின்றனர். அப்படி கடந்த வருட யாத்திரையில் நாங்கள் சென்ற சிறப்பான திருத்தலங்களுள் ஒன்று, மங்களகிரி என்று அறியப்படும் பகவான் நரசிம்மதேவரின் க்ஷேத்திரம். அம்மாபெரும் புண்ணிய க்ஷேத்திரத்தின் மகத்துவத்தை பகவத் தரிசனம் வாசகர்களின் திவ்ய இன்பத்திற்காக யாம் இங்கு கட்டுரையாக வழங்குகின்றோம்.
ஸ்தல புராணம்
மங்களகிரி என்னும் சிறுநகரம் இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மங்களகிரி என்றால் மங்களகரமான மலை என்று பொருள். இந்நகரத்தின் பெயர் காரணம், அங்கு வீற்றிருக்கும் பகவான் நரசிம்மதேவரே. இம்மலையைச் சுற்றி மூன்று நரசிம்ம பகவான் திருக்கோயில்கள் அமைந்துள்ளன: பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில் மலை அடிவாரத்திலும், பானக நரசிம்மரின் திருக்கோயில் மலையின் பாதி உயரத்திலும், கண்டல நரசிம்மரின் திருக்கோயில் மலை உச்சியிலும் அமைந்துள்ளன. இம்மலை இந்தியாவின் எட்டு மஹா-க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும், லக்ஷ்மிதேவி இங்கு தவம் புரிந்த காரணத்தினாலும் தோட்டா-கிரி என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலையின் மங்களத்திற்கு இதர சில விஷயங்களையும் காரணங்களாக பாரம்பரியம் கூறுகின்றது.
இம்மலை எந்த திசையிலிருந்து பார்த்தாலும் ஒரு யானையைப் போன்று காட்சியளிக்கின்றது. இந்த மலையின் தோற்றத்திற்குப் பின்னால் ஒரு புராண கதை உள்ளது. பரியத்ரன் எனும் அரசனின் மகனான ஹரஷ்வ ஷ்ருங்கி பற்பல தீர்த்த யாத்திரைகளின் முடிவில், தேவர்களின் அறிவுரைப்படி இவ்விடத்தில் பகவான் விஷ்ணுவைத் துதித்து தவம் புரிந்தார். அச்சமயம் அவரது தந்தை தனது பரிவாரங்களுடன் மங்களகிரிக்கு வந்து ஹரஷ்வ ஷ்ருங்கியை மீண்டும் தனது ராஜ்ஜியத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் இளவரசனோ உடனடியாக ஒரு யானையின் உருவத்தை ஏற்று, பகவான் பானக நரசிம்மரின் இருப்பிடமாக மாறியதாக ஐதீகம்.
மலைமீது பகவான் நரசிம்மதேவர் தமது திருமுகத்தோடு மட்டும், திருவாய் நன்கு பெரியதாக திறந்த கோலத்தில் காட்சியளிக்கின்றார். பகவான் பானக நரசிம்மரின் திருக்கோயில் சுமார் 600 படிக்கட்டுகளைக் கொண்டதாகும். அடிவாரத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகளின் பக்கத்தில் விஜயநகர மாமன்னன் கிருஷ்ணதேவராயர் செதுக்கிய கல்வெட்டுகளைக் காணலாம். இக்கோயிக்குச் சற்று அருகில் ஸ்ரீலக்ஷ்மி தேவியின் திருக்கோயிலும் அமைந்துள்ளது. ஸ்ரீலக்ஷ்மி தேவியின் கோயிலுக்கு மேற்கு திசையில் சில குகைகள் உள்ளன. இக்குகைகள் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள உண்டவளிக் குகைகளுக்கு இட்டுச்செல்லும் பாதைகள் என்றும், பழங்காலத்தில் சாதுக்களும் ரிஷிகளும் இக்குகைகளின் வழியாக இம்மலையிலிருந்து கிருஷ்ணா நதிக்கு நீராடச் செல்வர் என்றும் கூறப்படுகிறது.
பானகம் அருந்தும் நரசிம்மர்
மங்களகிரியின் பிரதான மூர்த்தியான பகவான் நரசிம்மதேவருக்குப் பானக நரசிம்மர் என்று பெயர். இந்த பெயருக்குப் பின்னால் ஒரு முக்கியமான கதை சொல்லப்படுகிறது. தனது பக்தனான பிரகலாதரை அசுரத் தந்தையான ஹிரண்யகஷிபுவிடமிருந்து காக்க, பகவான் விஷ்ணு பாதி மனிதனாகவும் பாதி சிங்கமாகவும் நரசிம்மதேவரின் உருவில் அவதரித்தார். அதே போன்று, மற்றொரு சமயம் க்ருத யுகத்தில் நாமுச்சி என்னும் அசுரன் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்து ஒரு மிகப்பெரிய வரத்தைப் பெற்றான். அதன்படி, அவனுக்கு எவ்விதமான ஈரப்பசையோ உலர்ந்த பசையோ கொண்ட ஆயுதத்தினால் தாக்கப்பட்டு அவனுக்கு மரணம் உண்டாகாது. இந்த சக்தி வாய்ந்த வரத்தைக் கொண்டு, அவன் தேவர்களுக்கு மிகுந்த தொல்லைகளையும் துயரங்களையும் அயராது கொடுத்து வந்தான். பகவான் விஷ்ணுவின் ஊக்குவிப்பின் கீழ் தேவர்களின் அரசனான இந்திரன் தனது முழு படைகளுடன் நாமுச்சியைக் கடுமையாகத் தாக்கி, அவனது படைகளைச் சின்னாபின்னமாக்க, நாமுச்சி தனது ஸ்தூல சரீரத்தைத் துறந்து சூட்சும சரீரத்துடன் இந்த மலையின் குகையில் ஒளிந்து கொண்டான். பிறகு, இந்திரன் பகவான் விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தைக் கடல் நீரின் நுரையில் தோய்த்து, நாமுச்சி ஒளிந்து கொண்டிருந்த மலைக் குகையினுள் ஏவினான். நுரை ஈரப்பசையையும் சார்ந்ததல்ல, உலர்ந்த பசையையும் சார்ந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பகவான் விஷ்ணு சுதர்சன சக்கரத்தின் மத்தியில் நரசிம்ம தேவராகத் தோன்றி தனது அபார சக்தியால் நாமுச்சியின் பிராண வாயுவை உறிஞ்சி அவனை மாய்த்தார். அந்த அசுரனின் இரத்தம் ஆறாக ஓடி, மலையின் அடிவாரத்தில் குளமாக மாறியது. இந்த சம்பவத்தைக் கொண்டே இங்கு பகவானுக்கு சுதர்சன நரசிம்மர் என்று மற்றொரு பெயரும் உண்டு. நாமுச்சியை மாய்த்த பின்னும் பகவான் நரசிம்மதேவரின் தெய்வீக சினம் அடங்காததால், தேவர்கள் அனைவரும்கூடி பகவானுக்கு அமிர்தத்தை அர்ப்பணித்தனர். அதன்பின் திருப்தியடைந்த பகவான், திரேதா யுகத்தில் நெய், துவாபர யுகத்தில் பால், கலி யுகத்தில் பானகம் என்று அருந்தி வருகிறார்.
இன்றும்கூட மங்களகிரிக்குச் செல்லும் பக்தர்கள் பகவானின் திருவிக்ரஹத்திற்கு தினசரி பல குடங்கள் பானகங்களை அர்ப்பணிக்கின்றனர். இதன் காரணமாக பகவானை பானக நரசிம்மர் என்று பக்தர்கள் அன்போடு அழைத்துப் போற்றுகின்றனர். பக்தர்கள் கொண்டு செல்லும் பானகத்தின் பாதியை பகவான் நரசிம்ம தேவரின் திறந்த வாயினுள் பூஜாரிகள் சங்கு மூலமாக ஊற்றுவார், மீதியைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கிவிடுவர். இந்தச் சங்கு பகவான் கிருஷ்ணரால் உபயோகிக்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் தஞ்சாவூர் மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றன.
இதில் வியப்பான ஓர் அதிசயம் யாதெனில், ஒவ்வொரு முறையும் பகவான் நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்யப்பட்டு, அது பிரசாதமாக ஏற்கப்படும்போது, அதன் சுவை தனிப்பட்ட தன்மையைக் கொண்டதாக உள்ளது. நரசிம்மருக்கு படைக்கப்படும் அனைத்து குடங்களிலும் இருக்கும் பானகம் ஒன்றே என்ற போதிலும், நைவேத்யத்திற்குப் பிறகு வெவ்வேறு சுவைகளைக் கொண்டதாக வெளிவருகின்றது. பகவான் கிருஷ்ணரின் திவ்ய ரசனையில் காணப்படும் வேற்றுமைகளை பக்தர்கள் உணர்வதற்கு, இங்கு அவருடைய பானக பிரஸாதம் ஒரு நல்ல பாக்கியத்தினை அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டல நரசிம்மர் கோயில்
மலையின் உச்சியில் உள்ள கண்டல நரசிம்மரின் கோயிலில், பகவானின் திருவிக்ரஹம் ஏதும் இல்லை. இருப்பினும், இங்குள்ள உள்ளூர் கிராமத்து மக்கள் அங்கு சென்று, பகவான் நரசிம்மருக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர். இந்த தீபம் பிரகாசமாக எரிவதை மலை அடிவாரத்தில் இருக்கும் கிராமங்களில்கூட காணலாம்.
லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில்
மங்களகிரியின் அடிவாரத்தில் பகவான் லக்ஷ்மி நரசிம்மரின் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக் கோயிலின் கிழக்கு கோபுரம் காளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது, பதினோரு அடுக்குகளுடன் பழங்கால கட்டுமான அமைப்பைக் கொண்டுள்ளது. இத்திருக்கோயில் மஹாராஜா யுதிஷ்டிரரின் காலத்தைச் சார்ந்ததாகக் கூறப்படுகின்றது. இம்மலைக்கு அருகில் அர்ஜுனன் தவம் புரிந்து சிவபெருமானிடமிருந்து பசுபத ஆயுதத்தை வரமாக பெற்றதாகவும் கூறப்படுகின்றது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அமராவதியைத் தலைநகரமாக கொண்டு ஆண்ட மன்னன் வஸிரெட்டி வெங்கடாதிரி நாயுடு, இத்திருக்கோயிலுக்கு 153 அடி உயரமும் 49 அடி அகலமும் கொண்ட காளி கோபுரம் என்று அழைக்கப்படும் கிழக்கு வாசலைக் கட்டினார்.
இக்கோயிலில் பகவான் நரசிம்மதேவர் இடது தொடையில் லக்ஷ்மிதேவியுடன் அற்புதமான திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இங்கு பகவான் 108 சாலிக்கிராமத்தினால் ஆன மாலையை அணிந்துள்ளார். இக்கோயிலைச் சுற்றி பிரகாரங்களும் மண்டபங்களும் கோபுரங்களும் பழங்கால விஜயநகர அரசரின் தளபதியான திம்மராஜு தேவராஜுவினால் புதுப்பிக்கப்பட்டது. கோயிலின் மேற்கு திசையில் பகவான் ஊர்வலம் வரக்கூடிய தங்க கருட வாகனம், வெள்ளி அனுமந்த வாகனம் ஆகியவை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மங்களகிரியின் உற்சவங்கள்
பானக நரசிம்மரின் பிரம்மோத்சவம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் முக்கியமான உற்சவமாகும். இது பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிர மஹாராஜாவால் துவக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், இந்த உற்சவமானது பகவான் கிருஷ்ணருடைய புதல்வரான பிரத்யும்னரின் விருப்பத்தின்படி, பிரத்யும்னர் தோன்றிய தினத்தின் நினைவாக, வருடந்தோறும் பதினோருநாள் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான பொறுப்பை மஹாராஜா யுதிஷ்டிரருக்கு கிருஷ்ணரே ஒப்படைத்தார் என்று தெரிகிறது. இந்த உற்சவம் பங்குனி மாதத்தின் (பிப்ரவரி – மார்ச்) சுத்த சஷ்டியில் தொடங்கி பௌர்ணமி வரை நீடிக்கின்றன. நிறைவு நாளுக்கு முன் தினமான சதுர்தசியன்று, பகவான் சாந்த நரசிம்மருக்கும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் நிகழ்த்தப்படுகிறது.
உற்சவத்தின் நிறைவு நாளான திருநல்லா என்று அழைக்கப்படும் பௌர்ணமி திருநாளன்று, சுமார் ஒரு இலட்சம் பத்தர்கள் கலந்து கொண்டு பகவானைத் தேரில் அமர்த்தி ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். ஸ்ரீ இராம நவமி, நரசிம்ம சதுர்தசி, வைகுண்ட ஏகாதசி போன்ற இதர உற்சவங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மங்களகிரி விஜயம்
மங்களகிரியின் பிரதான மூர்த்தியான பகவான் பானக நரசிம்மதேவரின் மகிமைகளும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மங்களகிரி பயணமும் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் (மத்ய லீலை 9.66-67) சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ஸ்வ-ப்ரபாவே லோக-ஸபார காரணா விஸ்மய
பானா-ந்ருஸிம்ஹே ஆஇலா ப்ரபு தயா-மய
ந்ருஸிம்ஹே ப்ரணதி-ஸ்துதி பிரேமாவேஷே கைல
ப்ரபுர ப்ரபாவே லோக சமத்கார ஹைல
“பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பகவான் பானக நரசிம்மரை தரிசித்து, மிகவுயர்ந்த பிரேமையின் பரவசத்தில் அவர் முன்பாகப் பாடினார், அவரது காரணமற்ற கருணையால், அவரது பக்திப் பரவசத்தைக் கண்ட அனைத்து மக்களும் பெரும் பிரமிப்பினாலும் ஆச்சரியத்தினாலும் பாதிக்கப்பட்டனர்,” என்று கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி குறிப்பிடுகின்றார்.
தெய்வத்திரு. பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள், 31 டிசம்பர், 1930ஆம் ஆண்டு மங்களகிரியின் மலைக்கு படிகளின் வழியாகச் செல்லும் பாதையில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மங்களகிரி விஜயத்தைக் குறிப்பிடும் வண்ணம் அவரது திருப்பாதச் சுவடுகளை ஸ்தாபித்தார். இன்றும் அங்கே தனது திருப்பாதங்கள் மூலமாக எழுந்தருளியுள்ள பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உள்ளுர் கௌடீய வைஷ்ணவர்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தனது தென்னிந்திய யாத்திரையினை ஸ்ரீ கூர்ம க்ஷேத்திரத்தில் தொடங்கி, வழியெங்கிலும் தன்னை தரிசித்த அனைத்து மக்களுக்கும் ஜாதி, மதம், இனம் என எந்த பேதமும் இன்றி, கிருஷ்ண பிரேமையை வாரி வழங்கி பல அற்புத லீலைகளைப் புரிந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தென்னிந்தியா முழுவதும் பாத யாத்திரையாகச் சென்று, ஆயிரக்கணக்கான புண்ணிய தீர்த்தங்களை தரிசித்தார். அங்கே வசித்த பல்லாயிரக்கணக்கான மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றி, அவர்களை பௌதிக பந்தத்திலிருந்து விடுவித்தார்.
முழுமுதற் கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பக்த அவதாரத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து, தனது திருப்பாதங்களைப் பதித்த திருத்தலங்களுள் ஒன்றான மங்களகிரிக்கு பக்தர்கள் குழுவுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடனும் பங்கேற்கும் நற்பலன் எமக்குக் கிட்டியது. பல்வேறு திருத்தலங்களை தரிசித்து அங்குள்ள லீலைகளையெல்லாம், குறிப்பாக பகவான் ஸ்ரீ சைதன்யரின் லீலைகளை எல்லாம் கேட்டு மகிழும் பெரும் பாக்கியத்தினை பரிசாக அளித்த பகவத் தரிசன சேவாதாரிகளுக்கு கோடானக் கோடி நமஸ்காரங்கள். இந்த திருத்தலத்திற்குச் சென்று, தரிசித்து, பகவான் ஸ்ரீ நரசிம்மர் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்யரின் கருணை யினை பகவத் தரிசன வாசகர்கள் அனைவரும் பெற்று இன்பமடைய வேண்டும் என்ற பிரார்த்தனை யோடு இக்கட்டுரையை யாம் நிறைவுசெய்கிறோம்.