பணம் யாருக்குச் சொந்தம்?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

பணம் பத்தும் செய்யும். பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று மக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பணம் யாருக்குச் சொந்தம் என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

இடம் மாறும் பணம்

பணம் தனது இடத்தை மாற்றிக் கொண்டே உள்ளது. ஒருவன் தனது கைக்கு பணம் வந்தவுடன் அதனை வங்கியில் செலுத்துகின்றான், வங்கி அப்பணத்தை வாடிக்கை யாளர்களுக்கும், அவர்கள் அதனை வேறு காரணத்திற்காக மற்றவர்களின் கைகளுக்கும் கொடுக்கின்றனர். எங்கும் யாரிடமும் பணம் நிலைத்து நிற்பதில்லை.

தன்னை புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு, பணத்தை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தால், அதிலும் பலதரப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக அளவிற்கு சொத்தையோ பணத்தையோ சேர்த்துவிட்டால், இனம் புரியாத பயம் கவ்விக்கொள்கிறது. யாராவது திருடிவிடுவார்களோ, உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ, வருமான வரித்துறை வீட்டிற்கு வந்துவிடுமோ என்கிற பயத்தில் முழுமையாக மக்கள் உறைகின்றனர். “யாருக்கும் தெரியாமல் பணத்தை எங்கே ஒளித்து வைத்தாலும், அதனை யாராவது கண்டுபிடித்து விடுவர்”–இதுவே இவ்வுலகின் நியதியாக உள்ளது.

பணத்தினால் வரும் பயம்

அறியாமையின் காரணத்தால் மனிதன் இயற்கையின் சட்டத்தை புரிந்துகொள்வதில்லை. மனிதனால் தன்னுடைய தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவன் தனது தேவைக்கு அதிகமாக பணத்தைச் சேர்க்க முயற்சிக்கும்போது, இயற்கை பலவித இடைஞ்சல்களைக் கொடுக்கின்றது. போராசையினால் இயற்கையின் சட்டத்தை மீறும்போது, அவன் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகி நிம்மதியை இழந்து பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகின்றான்.

ஒவ்வொருவரின் பரிதாப நிலைக்கும் அவரவர்களே பொறுப்பு. ஒரு கழுகு இறைச்சியைக் கவ்விக் கொண்டு மேலே பறந்தது. அப்போது பல கழுகுகள் அதனைச் சுற்றி தாக்க வந்தன. பயத்தில் அந்த கழுகு இறைச்சியை கீழே விட்டபோது அனைத்து கழுகுகளும் கீழ்நோக்கி பறந்தன. இறைச்சியை பிடுங்கிக்கொள்ளவே மற்ற கழுகுகள் வந்தன, தன்னை தாக்குவதற்கு அல்ல என்பதை அக்கழுகு உணர்ந்தபோது ஒருவித ஆனந்தம் அதற்கு கிடைத்தது. அதுபோல, மனிதனின் பேராசையே அவனது பல்வேறு துன்பங்களுக்கு காரணமாக அமைகிறது. மடியில் கனம் இல்லை என்றால், பயம் எதற்கு?

மனிதன் பணத்தை சேகரிக்க கடுமையாக உழைக்கிறான், சேர்த்த பணத்தைக் காப்பாற்றுவதற்கு அதை விட கடுமையாக போராடுகிறான். அவனது வழி முழுவதும் துன்பமே நிறைந்துள்ளது. அவன் தனது வாழ்நாள் முழுவதும் பணக்கார னாகவே வாழ்ந்தால்கூட, மரணம் அவனை பணத்திடமிருந்து பிரித்துவிடுகிறது. உயிருடன் இருக்கும்போது கூட, அவன் சேர்த்து வைத்துள்ள பணத்திற்கு அவன் அதிபதியா என்றால், அதுவும் கேள்விக்குறியே.

இதர துன்பங்கள்

உயர் படிப்புகளை முடித்து விட்டு நிறைய சம்பளம் வாங்குவதற்காக உயர் நிறுவனங்களை நாடுபவன் அங்கே பல்வேறு வாக்குறுதிகளை வழங்குகிறான். பல பக்கங்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கிறான். தன்னைத் தேர்ந்தெடுத்தால் கழுதையைப் போல உழைப்பேன், நாயைப் போல விசுவாசமாக இருப்பேன் என்று நாகரிகமான (?) முறையில் உத்தரவாதம் கொடுக்கின்றான். வேலையில் உயர் அதிகாரிகளின் கருணையினை நம்பி இருக்கின்றான். தனது திறமையினால் சம்பாதிக்க முடிகின்றது என்று அவன் நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அவன் அடுத்தவர்களின் கீழ் வேலை செய்யும் ஒரு சாதாரண மனிதனே.

பேராசையின் காரணமாக பல அரசியல்வாதிகள் குறுக்கு வழியில் கோடிகளைச் சம்பாதிக்கின்றனர். விளைவு: தன் கையே தனக்கு தலையணை என்று சிறையில் படுத்து உறங்குகின்றனர். ஒரு சாதாரண மனிதன் இறந்து விட்டால், அவனுடைய ஈமச் சடங்கு அன்றே நிகழ்ந்துவிடும். ஆனால் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் ஏதேனும் ஓர் அரசியல்வாதி இறந்து விட்டால், அவரை குணப்படுத்துகிற மாதிரி ஒரு தோற்றத்தை மருத்துவமனையில் ஏற்படுத்தி, பினாமிகளிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை ஓரளவு கறந்து முடித்த பின்னரே, அவரது மரணம் உலகிற்கு வெளியிடப்படுகிறது. அவரால் தனது ஈமச் சடங்கைகூட தகுந்த நேரத்தில் அனுபவிக்க முடிவதில்லை.

மனிதன் பணத்தை தேனைவிட தித்திப்பானதாக உணர்கின்றான், உயிரைவிட பிரியமானதாக கருதுகிறான். தேனீக்கள் சேர்க்கும் தேனை வேடன் எவ்வாறு களவாடிச் செல்கின்றானோ, அதுபோல மனிதன் சேர்க்கும் செல்வத்தை பந்தம் என்கிற பெயரில் பலரும் சூறையாடி விடுகின்றனர். இதனை சாதாரண மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடிவதில்லை. இல்லற வாழ்க்கை நிரந்தர சுகத்தைக் கொடுக்கும் என்ற தவறான எண்ணமே அதற்கு காரணம்.

விதுரர் கூறிய கதை

விதுரர் தன் சகோதரர் திருதராஷ்டிரருக்கு கூறிய கதை இங்கு மிகவும் பொருத்தமானதாகும்.

அடர்ந்த காட்டில் தாகத்துடன் தவித்துக் கொண்டிருந்த ஒருவனை கொடிய மிருகங்கள் துரத்தின. பயத்தில் அவன் ஓடியபோது, ஒரு கிணற்றின் மேல் படர்ந்திருந்த ஆலமரத்து விழுதுகளில் அவனது இருகால்களும் சிக்கியதால், அவன் தலைகீழாக கிணற்றில் தொங்கத் தொடங்கினான். அவனை விரட்டிய மிருகங்கள் கிணற்றை சுற்றிக் கொண்டன, கிணற்றின் உள்ளே அவனைத் தீண்டுவதற்காக பாம்பு ஒன்று தயாராக இருந்தது. அவன் காலில் சிக்கிய ஒரு விழுதை கறுப்பு எலியும், மற்றொரு விழுதை வெள்ளை எலியும் கடித்துக் கொண்டிருந்தன. அச்சமயத்தில், ஆலமரத்தின் தேன்கூட்டிலிருந்து சில தேன் துளிகள் அவனது நாக்கில் நேராக விழுந்தன. அதனைச் சுவைத்தவுடன், “ஆஹா, வாழ்க்கை எவ்வளவு நன்றாக இனிக்கின்றது” என்று எண்ணினான்.

இதுவே நம் அனைவரின் நிலை. அடர்ந்த காடு ஜடவுலகத்தைக் குறிக்கின்றது; கொடிய மிருகங்கள் இவ்வுலகில் காணப்படும் துன்பங்கள்; கிணறு என்பது குடும்ப வாழ்க்கை; பாம்பு என்பது மரணம்; ஆலமரத்து விழுதுகள் என்பது சொந்த பந்தங்கள்; வெள்ளை எலி என்பது ஆயுளைக் குறைக்கும் பகல் நேரம்; கறுப்பு எலி என்பது ஆயுளைக் குறைக்கும் இரவு நேரம்; மற்றும் தேன் என்பது இல்லற வாழ்வின் சுகம். (மஹாபாரதம், ஆஸ்ரம வஸிக பர்வம்)

நமது வாழ்க்கை முற்றிலும் துன்பமயமானது என்பதை மறந்து, இல்லற வாழ்வில் கிடைக்கும் சிறிய சுகத்திற்காக வாழ்வை தியாகம் செய்துவிடக் கூடாது. இவ்வுலகில் நாம் வாழ்வதற்காக பொருள் சேர்க்க வேண்டும்; ஆனால் பொருள் சேர்ப்பதற்காக வாழக் கூடாது. அதாவது, பணம் சேர்ப்பதிலேயே நமது வாழ்க்கையை மூழ்கடித்துவிடக் கூடாது. வாழ்வின் குறிக்கோள் பணம் சம்பாதித்து இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்வது அல்ல. இந்த உலகம் மகிழ்ச்சிக்குரிய இடமல்ல என்பதை நாம் உணர வேண்டும். கிருஷ்ணரின் உலகமான ஆன்மீக உலகிற்கு நாம் நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்–அதுவே, மனித வாழ்வின் குறிக்கோள்.

வாழ்வின் முக்கியத்துவத்தை தனது சகோதரரான திருதராஷ்டிரருக்கு எடுத்துரைக்கும் விதுரர்.

பணம் மகிழ்ச்சியைக் கொடுக்காது

முயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் மட்டும் யாரும் செல்வந்தனாகி விட முடியாது. அவனுடைய பூர்வ ஜென்ம கர்மத்தின்படி அவனுக்கு என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ, அந்த செல்வம் அவனை நிச்சயம் வந்தடையும். ஆனால் செல்வம் யாருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. ஜீவன்களின் இயற்கை கிருஷ்ணருக்கு சேவை செய்வதே. அத்தகு சேவை மட்டுமே ஜீவனை மகிழ்ச்சியாக வைக்க இயலும்.

இந்தியாவின் மாபெரும் செல்வந்தர்களின் பட்டியலில் இருக்கும் அனில் அகர்வால், ஹரே கிருஷ்ண பக்தர்களிடம் உரையாடும்போது பின்வருமாறு கூறினார்: “எனக்கு இலண்டனில் நூற்றுக்கணக்கான அறைகளைக் கொண்ட வீடு உள்ளது. இவ்வுலகின் அனைத்து சுகத்தையும் அனுபவித்து விட்டேன். ஆயினும், என்னிடம் உள்ள செல்வங்கள் கடல் நீரைப் போன்று தாகத்திற்கு உதவாதவை. உங்களிடம் இருக்கும் பக்தி என்கிற செல்வமோ கிணற்று நீரைப் போன்று தாகத்திற்கு உதவக்கூடியது. நான் எப்போதும் கவலையில் மூழ்கியுள்ளேன், நீங்களோ ஆனந்தமாக இருக்கிறீர்கள். எனக்கு உங்களுடைய ஆனந்தம் வேண்டும்.”

பணத்தினால் மட்டும் இவ்வுலகில் இன்பம் காணலாம் என்று நினைத்தல் கானல் நீரைப் போன்றதாகும்.

 

உயிரைப் பறிக்கும் பணம்

அதிக பணத்தை எதிர்பார்த்து, பங்குச் சந்தை உட்பட பல் வேறு வணிகத்தில் ஈடுபடுவோர் பெரும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் தற்கொலைகூட செய்கின்றனர். இருக்கும் செல்வம் போதுமானது என்று எண்ணுபவன் பேராசையினால் அழிவதில்லை.

கொல்கத்தாவில் சட்டர்ஜி ஒருவர் இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வாங்கியிருந்த லாட்டரி சீட்டுக்கு பத்து இலட்சம் பரிசு விழுந்தது. இதை அறிந்த நெருங்கிய உறவினர்கள் மருத்துவரை அணுகி, இதனைப் பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டினர். மருத்துவரும் சட்டர்ஜியை அணுகிப் பக்குவமாக, “உனக்கு லாட்டரியில் ஒரு இலட்சம் விழுந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். இரண்டு இலட்சம், மூன்று இலட்சம் என்று கேட்ட பின்னர், “பத்து இலட்சம் விழுந்தால் என்ன செய்வாய்?” என்று கேட்டார். சட்டர்ஜியோ, “எனக்கு பத்து லட்சம் விழுந்தால் அதை அப்படியே உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்” என்றார். அந்த இன்ப அதிர்ச்சியில் டாக்டர் அதே இடத்தில் உயிரை விட்டார். (கொல்கத்தா நாளிதழில் வந்த செய்தி)

மனிதன் பணத்தை உயிரைவிட பிரியமாக கருதுகிறான். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும். பணம் என்றால் பிளந்த வாயும் பிணமாகி விடும்.

உலக அதிசயம் எது?

ஒருமுறை, பாண்டவர்களில் மூத்தவரான மாமன்னர் யுதிஷ்டிரரிடம் யக்ஷர் ஒருவர், “இல்வுலகில் அதிசயமானது எது?” என்று கேட்டார். அதற்கு யுதிஷ்டிரர், “தினமும் பல்வேறு மக்கள் இறப்பதை ஒவ்வொருவரும் காண்கின்றனர். ஆனால் காண்பவரோ, தான் மட்டும் விசேஷமானவன், தனக்கு மரணம் வராது என்று நினைக்கின்றார். இதுவே அதிசயமான விஷயம்,” என்று பதிலளித்தார்.

இதுவே உலக அதிசயம். நாம் அனைவரும் நிச்சயம் மரணத்தைச் சந்தித்தாக வேண்டும், மரணத்தைத் தவிர்க்க யாராலும் முடியாது. ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் மூடர்களாக வாழ்ந்து வருகிறோம். நமது வாழ்வின் எந்த நேரத்திலும் தற்போதைய உடலைக் கைவிட நேரிடலாம் என்பதை உணர்ந்து, படிப்படியாக பௌதிக பந்தத்திலிருந்து வெளிவர முயற்சி செய்தல் புத்திசாலித்தனம்.

அலெக்சாண்டரின் மூன்று நிபந்தனைகள்

கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் தனது இறுதி காலக் கட்டத்தில் மந்திரிகளிடம் மூன்று நிபந்தனைகளை விதித்தார். முதல் நிபந்தனை: “எனது சவப்பெட்டியை எடுத்துச் செல்லும்போது, என் இரண்டு கைகளும் வெளியில் தெரிய வேண்டும்.” இரண்டாவது நிபந்தனை: “எனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் சவப்பெட்டியை சுமந்துச் செல்ல வேண்டும்.” மூன்றாவது நிபந்தனை: “சவப்பெட்டி செல்லும் பாதை முழுவதும் தங்க நாணயங்களை தெருவில் சிதறவிட வேண்டும்.”

இந்த நிபந்தனைகளுக்கான காரணத்தை மந்திரிகள் வினவியபோது, அவர் பின்வரும் பதிலை வழங்கினார். முதல் காரணம்: “உலகின் மாபெரும் சக்கரவர்த்தி என்றபோதிலும், நான் என் இரண்டு கைகளில் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உலக மக்கள் அறிய வேண்டும்.” இரண்டாவது காரணம்: “ஒருவனுக்கு மரணம் வந்துவிட்டால், சிறந்த மருந்தோ மருத்துவர்களோ அதனைத் தடுக்க முடியாது என்பதை உலக மக்கள் அறிய வேண்டும்.” மூன்றாவது காரணம்: “தெருவில் தங்க நாணயங்களைச் சிதற விடும்போது, மக்கள் ஆர்வமாக அதனை பொறுக்கிக் கொண்டு கைகளை இறுக்கமாக வைத்துக் கொள்வர். எனது மரணத்தைப் பார்த்தும் உலக மக்கள் எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளப் போவ தில்லை என்பதை அறிஞர்கள் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.” (ஆதாரம்: டியோ டோர்வஸ் ஆஃப் ஸிசிலி என்னும் புத்தகம்)

 

மரணப் படுக்கையில் மாவீரன் அலெக்சான்டர்

பணத்தின் நிரந்தரமான இடம்

பணம் அல்லது செல்வமானது லக்ஷ்மி என்றும் அழைக்கப் படுவதுண்டு. லக்ஷ்மி தேவியின் மற்றொரு பெயர் சஞ்சலா தேவி. சஞ்சலா தேவி என்றால், ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் தனது இடத்தை அடிக்கடி மாற்றிக்கொள்பவள் என்று பொருள்படும்.

லக்ஷ்மி யாரிடமும் நிரந்தரமாக தங்க மாட்டாள்; அவள் நிரந்தரமாகத் தங்கி சேவை செய்யக்கூடிய ஒரே இடம் பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள் மட்டுமே. இதனை நன்கறிந்தவர்கள் பணம் கிடைக்கும்போது அதனை விஷ்ணுவின் பாத சேவையில் ஈடுபடுத்துகின்றனர். அப்போது லக்ஷ்மி பூரண திருப்தியடைகிறாள்.

உண்மையில் சொல்லப்போனால், பணத்தை யாரும் நிரந்தரமாக அனுபவிக்க முடியாது. லக்ஷ்மி எப்போதும் நாராயணரின் சொத்து என்பதால், பணம் நிரந்தரமாக யாருடைய கையிலும் தங்குவதில்லை. செல்வம் கிடைக்கும்போது அதனை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துவது புத்திசாலித்தனம். நம்மிடம் உள்ள செல்வத்தை ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை பரப்புவதற்கும், கிருஷ்ண பிரசாதத்தை விநியோகிப்பதற்கும், பாகவத தர்மத்தை எடுத்துரைப்பதற்கும், புத்தகங்களை விநியோகம் செய்வதிலும், பல்வேறு கோயில் திருப்பணிகளிலும் ஈடுபடுத்தலாம்.

லக்ஷ்மி தேவியின் நிரந்தரமான இடம் பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகள் மட்டுமே.

இராவணனும் ஹனுமானும்

பணத்தை கிருஷ்ணரின் தொண்டில் உபயோகித்தல், லக்ஷ்மியை அவளது கணவரிடம் ஒப்படைக்கும் ஹனுமானின் நிலையைப் பிரதிபலிக்கும். அதற்கு மாறாக, பணத்தை அவரவர்களின் புலனின்பத்திற்கு செலவு செய்தல், சீதையை (லக்ஷ்மியை) தனது புலனின்பத்திற்கு உபயோகிக்க விரும்பி தோல்வியுற்ற இராவணனின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

ஏதேனும் ஒரு பொருளைத் துறக்க வேண்டும் என்றாலும் அதனை அனுபவிக்க வேண்டும் என்றாலும், அப்பொருள் நமக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், இவ்வுலகில் இருப்பவை அனைத்தும் பெருமாளுக்குச் சொந்தம் என்னும்போது, நாம் எதைத் துறக்க முடியும்? எதை அனுபவிக்க முடியும்?

எனவே, வைஷ்ணவர்கள் துறவிகள் அல்ல, அனுபவிப்பவர்களும் அல்ல; வைஷ்ணவர்கள் பெருமாளின் எளிமையான சேவகர்கள். பெருமாளின் சேவைக்கு என்னவெல்லாம் அனுகூலமாக உள்ளதோ, அவற்றை வைஷ்ணவர்கள் ஏற்றுக்கொள்வர். அவரது சேவைக்கு அனுகூலமற்றவை அனைத்தையும் நிராகரித்து விடுவர். ஆசையை யாராலும் அழிக்க முடியாது, ஆனால் அதனைத் தூய்மைபடுத்த முடியும். பகவானுக்கும் வைஷ்ணவர்களுக்கும் சேவை செய்வதற்கு நாம் எவ்வளவு வேண்டுமானாலும் ஆசைப்படலாம். அதில் எவ்வித தவறும் இல்லை.

பகவானின் சேவைக்கு நூறு ரூபாய் கொடுக்கத் தயங்குபவர்கள், மருத்துவமனையில் பல இலட்சங்களைச் செலவிடுகின்றனர். நம்மிடம் உள்ள பணத்தை பகவத் சேவையில் ஈடுபடுத்தாவிடில், அது விரய செலவாக மாறிவிடும் என்கிற சூட்சுமம் பெரும்பாலான மக்களுக்குப் புரிவதில்லை. உயர்ந்த நோக்கத்திற்காக நம் முடைய செல்வத்தைச் செலவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். செல்வம் மட்டும் வேண்டும், ஆனால் செல்வத் திருமகளின் (லக்ஷ்மியின்) கணவர் (விஷ்ணு) வேண்டாம் என்கின்றனர்; இது முறையல்ல.

உலகிலுள்ள பலரும் பணப் பைத்தியம் பிடித்து அலைகின்றனர். வெகு சிலர் மட்டுமே கிருஷ்ணர் மீது பைத்தியம் பிடித்து அலைகின்றனர். இதில் எது சிறந்தது? கிருஷ்ணர் மீது பித்துப்பிடித்து அலைபவர்கள் பூரணத்துவ பாதையை நோக்கி செல்கின்றனர் என ஸ்ரீமத் பாகவதம் தெரிவிக்கின்றது. எனவே, பணம், பணம் என்று அலையாமல், பணம் கிருஷ்ணருக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்து, அதனை அவரின் தொண்டில் ஈடுபடுத்தக் கற்றுக்கொள்வது சாலச் சிறந்ததாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives