நரகாசுர வதம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பௌமாசுரன் என்னும் நரகாசுரனைக் கொன்று 16,100 இளவரசியரை கிருஷ்ணர் காப்பாற்றுதல்

தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய, கிருஷ்ணா, புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுள்”

என்னும் புத்தகத்தின் ஐம்பத்து ஒன்பதாம் அத்தியாயத்தின் ஒரு பகுதி

பௌமாசுரன் என்னும் நரகாசுரன், கிருஷ்ணரால் கொல்லப்பட்ட திருநாள், தீபாவளியாகக் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில், நரகாசுரன் எவ்வாறு, ஏன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான் என்பதை இங்கு காண்போம்.

பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம்  முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.

ஸ்வர்க லோக மன்னனான இந்திரனின் முறையீடுகளைச் செவியுற்ற பகவான் கிருஷ்ணர் தனது துணைவியரான சத்யபாமா சமேதராக உடனடியாக பௌமாசுரனின் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டார். (நரகாசுரனின் தாயான பூமாதேவியின் அனுமதியுடன் மட்டுமே அவன் கொல்லப் படுவான் என்ற வரத்தை கிருஷ்ணர் பூமித்தாய்க்கு வழங்கியிருந்தார். பூமாதேவி சத்யபாமாவின் அம்சம் என்ற காரணத்தினால், நரகாசுரனுடன் போர் புரிய வந்த கிருஷ்ணர் சத்யபாமாவையும் உடன் அழைத்து வந்தார்.) இருவரும் கருடவாகனத்தில் அமர்ந்து பௌமாசுரனின் தலைநகரமான பிராக்ஜோதிஷபுரத்தை அடைந்தனர். பாதுகாப்பான அரண்களைக் கொண்ட அந்த நகரத்தினுள் செல்வது எளிதான காரியமல்ல. முதலில், நகரின் நான்கு திசைகளுக்கும் பாதுகாப்பாக பலம் மிக்க அரண்கள் அமைந்திருந்தன; பலம் மிக்க சேனைகள் அவற்றைக் காவல்காத்து வந்தன. அதனையடுத்து, நகரத்தைச் சுற்றி ஆழமான அகழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது மட்டுமின்றி, நகரத்தைச் சுற்றிலும் மின்சாரம் பாய்ந்த கம்பிகள் இடப்பட்டிருந்தன. அடுத்தபடியாக, அனிலம் என்ற வாயுப்பொருள் பாதுகாப்பிற்காக நிரப்பப்பட்டிருந்தது. அதன்பின், முரன் என்ற அசுரனால் நிர்மாணிக்கப்பட்ட அபாயகரமான கம்பிகளைக் கொண்ட வேலி, நகரைச் சுற்றிப் போடப்பட்டிருந்தது. இவ்வாறாக இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின்படி பார்த்தாலும் அந்நகரம் மிகவும் திறமையாக பாதுகாக்கப்பட்டிருந்ததைப் போல தோன்றியது.

கிருஷ்ணர் அங்கு வந்தவுடன், அவர் தமது கதாயுதத்தின் தாக்குதல்களால் அனைத்து பலமான கோட்டைகளையும் நொறுக்கினார், அவர் விடுத்த அம்பு மழை பலமான படைகளை அங்குமிங்கும் விரட்டியடித்தது. தமது புகழ்மிக்க சுதர்சன சக்கரத்தைப் பிரயோகித்து, அவர், மின்சார வேலிகளைச் செயலற்றுப் போகச் செய்தார், அகழிகளையும் வாயுக்களின் பாதுகாப்பையும் அழித்தார், முராசுரனால் அமைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பு களைத் துண்டுதுண்டாக வெட்டி எறிந்தார். அவர் எழுப்பிய சங்கநாதம் மாவீரர்களின் இதயத்தை மட்டுமின்றி அவர்களின் போர்க் கருவிகளையும் உடைத்தது. அதே போன்று, தனது வெல்வதற்கரிய கதாயுதத்தைக் கொண்டு நகரை வளைத்திருந்த கோட்டையின் சுவர்களை நிர்மூலமாக்கினார்.

கிருஷ்ணர் எழுப்பிய சங்கொலி பிரளயத்தின் இடியைப் போல் ஒலித்தது. அவ்வோசையைக் கேட்ட முராசுரன் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, என்ன நடக்கிறதென்பதை காண்பதற்காக வெளியே வந்தான். ஐந்து தலைகளைக் கொண்டிருந்த அவன் நீண்ட காலமாக நீரினுள் வசித்து வந்தான். முராசுரன் பிரளய காலத்து சூரியனைப் போல் பிரகாசித்தான், கொழுந்து விட்டெறியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன் இருந்தான். வெறும் கண்களால் காண இயலாத அளவிற்கு அவனது மேனி மிகவும் பிரகாசமாக இருந்தது. வெளியே வந்ததும் அவன் திரிசூலத்தை ஏந்தியபடி முழுமுதற் கடவுளை நோக்கி விரைந்தான். முராசுரன் கடுமையான தாக்குதலில் ஈடுபட்ட போது கருடனைத் தாக்க வரும் ஒரு பெரிய பாம்பினைப் போன்று காட்சியளித்தான். மிகுந்த கோப மடைந்திருந்த அவன் மூவுலகத்தையும் விழுங்கத் தயாராக இருப்பதைப் போலத் தோன்றியது. முதலில் கிருஷ்ணரின் வாகனமான கருடனைத் தாக்குவதற்காக திரிசூலத்தை சுழற்றி வீசினான், அவன் தனது ஐந்து வாய்களாலும் சிங்கம்போல கர்ஜித்தான். அவன் எழுப்பிய கர்ஜனை வாயுமண்டலம் மூலமாக உலகெங்கிலும் பரவி, விண்வெளியில் எதிரொலித்து, பத்துத் திசைகளையும் சென்றடைந்து பிரபஞ்சம் முழுவதிலும் கடகடவென ஒலித்தது.

முராசுரனின் திரிசூலம் தம் வாகனமான கருடனை நோக்கி வருவதைக் கண்ட பகவான் கிருஷ்ணர், உடனடியாக இரண்டு அம்புகளைப் பிரயோகித்துத் தம் கரத்தின் திறமையால் திரிசூலத்தைக் கண்ட துண்டமாகச் செய்தார். அதே சமயத்தில், பல அம்புகளைப் பயன்படுத்தி முராசுரனின் வாய்களைத் துளைத்தார். முழுமுதற் கடவுளால் வெற்றிகொள்ளப்படுவதைக் கண்ட முராசுரன் உடனடியாக கடுங் கோபத்துடன் பகவானைத் தனது கதாயுதத்தால் அடிக்க முயன்றான். ஆனால் முரனின் கதாயுதம் தன்னை அணுகுவதற்கு முன்பே பகவான் கிருஷ்ணர் அதனைத் தனது கதையைக் கொண்டு உடைத்து நொறுக்கினார். ஆயுதங்களை இழந்த அசுரன், பலம் வாய்ந்த தனது கரங்களால் கிருஷ்ணரைத் தாக்க முற்பட்டான். ஆனால் கிருஷ்ணர் தம் சுதர்சன சக்கரத்தின் உதவியுடன் அசுரனின் ஐந்து தலைகளையும் அவனது உடலிலிருந்து வெட்டி வீழ்த்தினார். இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட பெரும் மலையின் சிகரத்தைப் போல் அசுரன் நீரினுள் வீழ்ந்தான்.

முராசுரனுக்கு தாம்ரன், அந்தரிக்ஷன், ஷ்ரவணன், விபாவஸு, வஸு, நபஸ்வான், அருணன் ஆகிய ஏழு குமாரர்கள் இருந்தனர். செருக்குற்றிருந்த அவர்கள் தங்கள் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்க எண்ணி, மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரோடு போரிட ஆயத்தமானார்கள். அதற்கான ஆயுதங்களைச் சேகரித்துக் கொண்டு பீடன் என்ற அசுரனைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். பௌமாசுரனின் கட்டளையின்படி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் கிருஷ்ணரைத் தாக்கினார்கள்.

அவர்கள் கிருஷ்ணரின் முன்பு வந்தபோது, வாள், கதை, ஈட்டி, அம்பு, சூலம் போன்ற பல வகையான ஆயுதங்களை அவர்மீது பொழிந்தனர். ஆனால் முழுமுதற் கடவுளின் சக்தி அளவிட முடியாதது என்றும் வெல்ல இயலாதது என்றும் அவர்கள் அறியார்கள். கிருஷ்ணர் தம் அம்புகளால் பௌமாசுரனின் படைவீரர்களின் எல்லா ஆயுதங்களையும் தானியங்களைப் போல் சிதறடித்தார். கிருஷ்ணர் தனது ஆயுதங்களைப் பிரயோகிக்க, பௌமாசுரனின் படைத் தலைவனான பீடனும் அவனது உதவியாளர்களும் தலைகளை இழந்து, போர் உடைகளை இழந்து, கால்கள், கைகள், தொடைகள் துண்டிக்கப்பட்டு விழுந்தனர். அவர்கள் அனைவரும் மரணத்தின் அதிபதியான எமராஜரிடம் அனுப்பப்பட்டனர்.

பூமாதேவியின் குமாரனான பௌமாசுரனுக்கு நரகாசுரன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தனது சேனாதிபதிகளும் வீரர்களும் முழுமுதற் கடவுளின் ஆயுதங்களால் போர்க்களத்தில் கொல்லப்பட்டதைக் கண்ட அவன், பகவானிடம் அதிபயங்கர கோபம் கொண்டான். பின்னர் அவன் மாபெரும் யானைப் படையுடன் நகரைவிட்டு வெளியே வந்தான். அந்த யானைகள் எல்லாம் கடல் பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவை. அவை அனைத்தும் மிகுந்த போதையில் இருந்தன. அவை வெளியே வந்த போது பகவான் கிருஷ்ணரும் அவரின் தேவியும் விண்வெளியில் உயர்ந்த இடத்தில் அழகாக வீற்றிருக்கக் கண்டன; கிருஷ்ணர் சூரியனையொட்டிய கருமேகம் போல் ஒளிர்ந்தார். நூற்றுக்கணக்கான போர் வீரர்களை ஒரே வீச்சில் கொல்லக்கூடிய சதக்னீ என்ற ஆயுதத்தை பௌமாசுரன் உடனடியாக விடுத்தான். அதேசமயத்தில் அசுரனின் உதவியாளர்களும் தத்தம் ஆயுதங்களை முழுமுதற் கடவுளை நோக்கி வீசினார்கள். இறகுகளுடன் கூடிய தனது அம்புகளின் மூலம் அவர்களின் அஸ்திரங்களையெல்லாம் பகவான் கிருஷ்ணர் முறியடித்தார். இப்போரின் விளைவாக பௌமாசுரனின் படைவீரர்களும் படைத்தளபதிகளும், கைகள், கால்கள், மற்றும் தலைகளை இழந்தவர்களாக பூமியில் விழுந்தனர். அவர்களுடன் அவர்களின் குதிரைகளும் யானைகளும் வீழ்ந்தன. இவ்வாறாக, பௌமாசுரன் பிரயோகித்த அனைத்து ஆயுதங்களும் இறைவனின் அம்புகளால் துண்டிக்கப்பட்டன.

கிருஷ்ணரின் சங்கொலியைக் கேட்ட ஐந்து தலை கொண்ட முராசுரன் கடுங்கோபம் கொண்டு திரிசூலத்தினால் கருடனைத் தாக்க விரைந்தான்

இறைவன் கருடனின் முதுகில் வீற்றிருந்தபடியே போரிட்டார். அவருக்கு உதவும் வகையில் கருடனும் தன் இறக்கைகளால் குதிரைகளையும் யானைகளையும் அடித்தார்; தன் கூரிய நகங்களாலும் கூர்மையான அலகாலும் அவற்றின் தலைகளில் ரணங்களை யும் ஏற்படுத்தினார். கருடனின் தாக்குதல் களால் ஏற்பட்ட வலியைப் பொறுக்க முடியாமல் யானைகள் போர்க்களத்தை விட்டு ஓடத் தொடங்கின. பௌமாசுரன் மட்டும் தனித்து நின்று கிருஷ்ணருடன் போரிட்டான். தனது படைவீரர்களும் யானைகளும் கிருஷ்ணரின் வாகனமான கருடனால் பெரும் தொல்லைகளுக்கு உட்பட்டதைக் கண்ட பௌமாசுரன், மிகுந்த கோபம் கொண்டு தன் முழு பலத்தையும் பிரயோகித்துக் கருடனைத் தாக்கினான். அந்தத் தாக்குதல் இடியின் பலத்தையும் மிஞ்சியதாக இருந்தது. ஆனால் கருடன் சாதாரண பறவையல்ல என்பதால், பௌமாசுரனின் அடிகளையெல்லாம் பெரிய யானையின் மீது மலர் மாலைகள் விழுவதைப் போல உணர்ந்தார்.

தன் தந்திரங்கள் எதுவும் கிருஷ்ணரிடம் பலிக்காது என்பதை அறிந்த பௌமாசுரன், கிருஷ்ணரைக் கொல்வதற்கான தனது எல்லா முயற்சிகளும் விரக்தியில் முடியும் என்பதை உணர்ந்தான். இருப்பினும், இறுதி முயற்சியாக அவன் ஒரு திரிசூலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான். கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக, பௌமாசுரன் தனது சூலத்தை எறிவதற்கு முன்பாகவே, தனது சுதர்சன சக்கரத்தால் அசுரனின் தலையை வெட்டி வீழ்த்தினார். (பௌமாசுரன் சூலத்துடன் கிருஷ்ணரை நோக்கி வருவதைக் கண்ட சத்யபாமா, “அவனைக் கொல்லுங்கள்” என்று கூற கிருஷ்ணரும் அவனைக் கொன்றதாக ஆச்சாரியர்கள் விளக்குகின்றனர்) குண்டலங்களாலும் கிரீடத்தினாலும் அலங்கரிக்கப்பட்டு பிரகாசமாக விளங்கிய அசுரனின் தலை போர்க்களத்தில் வீழ்ந்தது. பகவான் கிருஷ்ணரால் பௌமாசுரன் கொல்லப்பட்டபோது, அவனது உறவினர்கள் மனமுடைந்து கதறினர், சாதுக்கள் இறைவனின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்தனர். இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்வர்க லோக வாசிகள் இறைவனின் மீது பூமாரி பொழிந்தார்கள்.

அச்சமயம் பகவான் கிருஷ்ணரின் முன்பு தோன்றிய பூமாதேவி வைஜயந்தி மாலையை அவருக்கு அணிவித்து அவரை வணங்கினாள். தங்கத்தாலும் கற்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அதிதியின் பிரகாசமிக்க காதணிகளையும், வருணனின் குடையையும் பூமாதேவி கிருஷ்ணரிடம் திருப்பித் தந்தாள். மேலும், மற்றொரு மதிப்புமிக்க மணியையும் அவள் கிருஷ்ணருக்குப் பரிசாக அளித்தாள். பின்னர், பிரபஞ்சத்தின் சுவாமியும் மிகவுயர்ந்த தேவர்களால் எப்போதும் வழிபடப்படுபவருமான முழுமுதற் கடவுளான கிருஷ்ணரை நோக்கி பூமாதேவி பிரார்த்திக்கலானாள். விழுந்து வணங்கி இறைவனை நமஸ்கரித்த அவள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் பேசத் தொடங்கினாள்.

“சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு சின்னங்களை எப்போதும் தரித்தவரும், தேவர்களுக்கெல்லாம் இறைவனான உமக்கு நான் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; ஏற்றுக் கொள்வீராக. அன்பார்ந்த பிரபுவே, பரமாத்மாவான தாங்கள் உமது பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு தெய்வீக ரூபங்களில் இப்பூமியில் தோன்றுகிறீர். எனது பணிவான வணக்கங்களை ஏற்று அருள்புரிவீராக.

“எம்பெருமானே, உமது நாபியிலிருந்து தாமரை மலர் தோன்றுகிறது, நீவீர் எப்போதும் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறீர். உமது கண்கள் தாமரை மலரின் இதழ்களைப் போல் விரிந்திருப்பதால், பார்ப்பதற்கு அவை அழகாக விளங்குகின்றன. மென்மையான உமது தாமரைத் திருவடிகள் உமது களங்கமற்ற பக்தர்களால் எப்போதும் வழிபடப்படுகின்றன, அந்த தாமரைத் திருவடிகள் பக்தர்களின் தாமரை போன்ற மென்மையான இதயங்களுக்குத் திருப்தியளிக்கின்றன. எனவே, நான் உமக்குப் பன்முறை வணக்கம் செலுத்துகிறேன்.

“அழகு, பலம், புகழ், செல்வம், அறிவு, துறவு ஆகியவற்றை நீர் முழுமையாகப் பெற்றிருக்கிறீர்; இந்த ஆறு ஐஸ்வர்யங்களின் இருப்பிடம் தாங்களே. தாங்கள் எங்கும் வியாபித்திருந்தாலும் வசுதேவரின் மகனாகத் தோன்றியுள்ளீர். எனவே, தயைகூர்ந்து எனது பணிவான வணக்கங்களை ஏற்பீராக. ஆதிமூலமான முழுமுதற் கடவுள் நீரே, எல்லா காரணங்களுக்கும் உன்னத காரணமும் நீரே. ஞானத்தின் களஞ்சியம் தாங்களே. உமக்கு எமது பணிவான வணக்கங்கள். பிறப்பற்றவரான தாங்கள் மொத்த பிரபஞ்சத் தோற்றத்திற்கும் தந்தையாக விளங்குகிறீர். பலதரப்பட்ட சக்திகளின் உறைவிடம் தாங்களே. இவ்வுலகம் தோன்றுவதற்குத் தாங்களே காரணம், பிரபஞ்சத் தோற்றத்தின் காரணமும் விளைவும் நீரே. தயவுசெய்து என் வணக்கங்களை ஏற்றுக் கொள்வீராக.

“எம்பெருமானே, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தேவர்களும் உம்மைச் சார்ந்தவர்களே. இப்பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான அவசியம் ஏற்படும் போது உமது ரஜோ குணத் தோற்றமான பிரம்மாவைப் படைக்கிறீர். பிரபஞ்சத்தைக் காப்பதற்கு தாங்கள் விரும்பும் போது ஸாத்வீகத்தின் உறைவிடமான விஷ்ணுவாக உம்மை நீர் வியாபித்து அருள்கிறீர். அதுபோலவே தமோ குணத்தின் அதிபதியான சிவபெருமானாகத் தோன்றி நீர் படைப்பு முழுவதையும் அழியச் செய்கிறீர். ஜட இயற்கையின் முக்குணங்கள் உங்களால் படைக்கப்பட்ட போதிலும், தாங்கள் தங்களது திவ்யமான நிலையில் எப்போதும் வீற்றுள்ளீர். சாதாரண உயிர்வாழிகள் ஜட இயற்கையின் குணங்களில் பந்தப்படுகின்றனர், ஆனால் தாங்கள் ஒருபோதும் அவ்வாறு சிக்கிக் கொள்வதில்லை.

“எம்பெருமானே, உண்மையில் தாங்களே ஜட இயற்கை, தாங்களே இப்பிரபஞ்சத்தின் தந்தை, இயற்கையின் மூலக்கூறுகள் இணைந்து பௌதிக உலகம் தோன்றுவதற்கு காரணமான காலமும் தாங்களே. இருப்பினும் இந்த ஜடச் செயல்களுக்கெல்லாம் தாங்கள் அப்பாற்பட்டவர். பிரபுவே, முழுமுதற் கடவுளே, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், புலனின்பப் பொருள்கள், மனம், புலன்கள், புலன்களுக்கான தேவர்கள், அஹங்காரம், மொத்த ஜட சக்தி என இப்பௌதிக உலகிலுள்ள அசையும், அசையாத அனைத்தும் தங்களையே சார்ந்துள்ளன என்பதை நான் அறிவேன். அனைத்தும் தங்களாலேயே படைக்கப்பட்டது என்பதால், எதையும் தங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இருப்பினும் தாங்கள் எல்லாவற்றையும் கடந்து திவ்யமான நிலையில் இருப்பதால், பௌதிகமான எதையும் உம்முடன் அடையாளம் காண முடியாது. இவ்வாறாக, அனைத்துமே ஒரே சமயத்தில் தங்களுடன் ஒன்றுபட்டதாகவும் வேறுபட்டதாகவும் உள்ளன; அனைத்தையும் தங்களிடமிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயற்சி செய்யும் தத்துவ ஞானிகள் நிச்சயமாகத் தவறான கண்ணோட்டத்தை உடையவர்கள்.

“அன்பான பிரபுவே, பகதத்தன் என்ற பெயரையுடைய இச்சிறுவன் என் மகனான பௌமாசுரனின் மகன். தன் தந்தையின் கோர மரணம் இவனை வெகுவாகப் பாதித்திருப்பதால், இவன் மிகவும் குழப்பமடைந்து நிலை புரியாமல் அச்சம் கொண்டிருக்கிறான். எனவே, உமது பாதகமலங்களில் சரணடைவதற்காக நான் இவனை அழைத்து வந்திருக்கிறேன். இச்சிறுவனுக்கு அடைக்கலமளித்து தங்களது தாமரைத் திருவடிகளால் ஆசிர்வதிக்கும்படி நான் வேண்டுகிறேன். தந்தையின் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து இவன் விடுபட வேண்டும் என்பதற்காக இவனை நான் உம்மிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”

திரிசூலத்தினால் கிருஷ்ணரைத் தாக்க வந்த நரகாசுரன் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தினால் வீழ்த்தப்படுதல்

பூமித் தாயின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் கிருஷ்ணர், எல்லா அபாயங்களிலிருந்தும் பாதுகாப்புத் தருவதாக அவளிடம் உறுதி கூறினார். “பயப்படாதே” என்று அவர் பக்தனிடம் கூறினார். பின்னர், எல்லா வித செல்வங்களும் மிகுந்திருந்த பௌமாசுரனின் மாளிகைக்குள் கிருஷ்ணர் பிரவேசித்தார். அந்த மாளிகையில் பௌமாசுரனால் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த 16,100 இளம் அரச கன்னியரை பகவான் கிருஷ்ணர் கண்டார். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணர் மாளிகையினுள் நுழைவதைக் கண்ட அந்த இளவரசியர்கள், உடனடியாக அவரின் அழகால் கவரப்பட்டு, அவரது காரணமற்ற கருணையை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி கிருஷ்ணரைத் தம் கணவராக மனதினுள் வரித்துக் கொண்டனர். ஒவ்வோர் அரச குமாரியும் கிருஷ்ணர் தனக்குக் கணவராக அமையவேண்டுமென்று விதியை வேண்டிக் கொண்டாள். கலப்பற்ற பக்தியுடன் தங்களது இதயங்களைக் கிருஷ்ணரின் பாதகமலங்களில் ஆர்வத் துடனும் தீவிரத்துடனும் அவர்கள் சமர்ப்பித்தார்கள். எல்லாருடைய இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ள கிருஷ்ணர் அவர்களது களங்கமற்ற விருப்பத்தை புரிந்து கொண்டார், அவர்களைத் தம் மனைவியராக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தார். தகுதியான ஆடைகளையும் ஆபரணங்களையும் அவர்களுக்கு ஏற்பாடு செய்து, ஒவ்வொருவரையும் தனித்தனி பல்லக்கில் அமரச் செய்து துவாரகைக்கு அனுப்பி வைத்தார். மேலும், அம்மாளிகையில் இருந்த அபரிமிதமான செல்வத்தையும் அற்புதமான ரதங்கள், குதிரைகள், ஆபரணங்கள் போன்றவற்றையும் கிருஷ்ணர் சேகரித்தார். நான்கு கொம்புகளைக் கொண்ட ஐம்பது வெள்ளை யானைகளையும் மாளிகையிலிருந்து எடுத்த கிருஷ்ணர், அவையனைத்தையும் துவாரகைக்கு அனுப்பி வைத்தார்.

நரகாசுரனைக் கொன்ற பின்னர், அவனால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 16,100 அரச குமாரிகளை கிருஷ்ணர் விடுவித்தல்

தீபாவளி–மேலும் சில தகவல்கள்

நரகாசுரனை பகவான் கிருஷ்ணர் வதம் செய்த திருநாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளித் திருநாள் மேலும் பல விசேஷங்களைக் கொண்டதாகும். வாமன அவதாரம் எடுத்த இறைவன், பலி சக்ரவர்த்தியிடமிருந்து மூன்று அடி நிலத்தைக் கேட்டு, அதன் மூலம் மூவுலகத்தையும் அளந்ததும் இந்த நாளில் நடந்ததுவே. இராவணனை வெற்றி கொண்ட பகவான் ஸ்ரீ இராமர் அதன் பின்னர் அயோத்யாவிற்குத் திரும்பிய நாளை தீபாவளித் திருநாளாக வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். மேலும், அனைத்து உலகையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அன்னையான யசோதையினால் உரலில் கட்டப்பட்டதும் தீபாவளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.

பாரத நாட்டின் சில பகுதிகளில் தீபாவளி துர்கா பூஜையாகவும், புது வருடப் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. அத்தகு கொண்டாட்டத்திற்கும் வைஷ்ணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

அனுசரிக்கும் விதம்

சிறப்புமிக்க தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோர் இந்த லீலைகளை நினைவுகூர்ந்து தீபாவளியை அனுசரித்தல் மிகவும் அவசியம். தீபாவளியை அனுசரிப்பவர்களில் பெரும்பாலானோர், திரைப்படங்களுக்குச் செல்வதிலும், தொல்லை தரும் தொலைக்காட்சியைக் காண்பதிலும் இத்திருநாளைக் கழிப்பது துரதிர்ஷ்டமே. அசைவ உணவு ஒருபோதும் உண்ணத் தகுந்ததல்ல; அவ்வாறு இருக்கையில், மிகுந்த நன்நாளான தீபாவளியன்று அசைவம் சாப்பிடுதல் சரியானதா என்ன? அத்தகு செயல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சகஜமானதாக இருத்தல் வேதனைக்குரியதாகும்.

கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரித்து, அவரது லீலைகளைக் கேட்டு, அற்புதமான உணவுப் பொருள்களை அவருக்குப் படைத்து, அதனைப் பிரசாதமாக உண்பதன் மூலம் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடலாம். தீபா என்றால் ’தீபம் என்றும், வளி என்றால் ’அதிகமான என்றும் பொருள்படும். எனவே, தீபாவளித் திருநாளன்று நிறைய தீபங்களை ஏற்றிக் கொண்டாடுதல் உசிதமானது. மக்கள் தன்னிடம் வருவதற்கு வசதி செய்வதற்காகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தகு திருவிழாக்களை நமக்கு அளித்துள்ளார். அவற்றை முறையாகப் பயன்படுத்திக்கொள்வது நமது பணி.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives