இன்னும் எவ்வளவு காலம்? தீர்வு என்ன?
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கடந்த 2017 மே மாதத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான டோனி சேபா என்பவர் 2025ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனைத்து நாடுகளும் நிறுத்தி விடும் என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் அனைத்தும் குப்பைக்குச் சென்று விடும் என்றும் கருத்து தெரிவித்து உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்றைய உலகப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரும்பாலான ஊடகங்கள் இந்த முக்கிய செய்தியை இருட்டிப்பு செய்து விட்டன.
ஆயினும், பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்று வழியினைத் தேடுவதிலும் தற்போதைய கார்களின் உற்பத்தியை நிறுத்துவதிலும் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டன. இந்தியாவில் 2030க்கு மேல் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி இருக்கக் கூடாது என்ற உத்தரவு அனைத்து கார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற பாதுகாப்பினை இவர்கள் வெளிப்புற காரணமாக அறிவித்தாலும், கச்சா எண்ணெய்க்கு விரைவில் தட்டுப்பாடு வரவுள்ளது என்பதே உண்மையான காரணம். பெட்ரோலை அடிப்படையாகக் கொண்டுள்ள நமது சமுதாயம் இன்னும் எவ்வளவு காலம் தப்பிக்கும்? இதற்கான தீர்வு என்ன? சற்று ஆராயலாம்.
கச்சா எண்ணெய் சார்ந்த வாழ்க்கை
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை மட்டுமே கச்சா எண்ணெயிலிருந்து வருவதாக பெரும்பாலான மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் எண்ணற்ற பொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படுகின்றன. இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மசகுப் பொருட்கள் (Lubricants), சாலை போடுவதற்குப் பயன்படும் தார், நம்மைச் சுற்றியுள்ள எல்லா பொருட்களிலும் தவறாமல் நிறைந்துள்ள பிளாஸ்டிக், பல்வேறு சிந்தடிக் பொருட்கள், சோப்பு, உரம் முதலியவை மட்டுமின்றி, சுமார் 4,000 பெட்ரோ கெமிக்கல்ஸ் தயாரிப்புகள் இந்த கச்சா எண்ணெயைச் சார்ந்துள்ளன.
இந்த எண்ணெய் இல்லாவிடில், இன்றைய விவசாயம்கூட நடைபெற இயலாது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள், டிராக்டர், தண்ணீர், மின்சாரம் என பலவும் இதைச் சார்ந்தே உள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பட்டியலை இட்டுப் பாருங்கள், அதில் எதிலாவது இந்த கச்சா எண்ணெய் சார்ந்த பொருள் இல்லாமல் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை.
2017ஆம் ஆண்டின் கணக்குப்படி, அமெரிக்கா மட்டும் தினசரி 1.99 கோடி பேரல் கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி இதற்கான நுகர்வோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்திலுள்ள சீனா 1.32 கோடி பேரல் எண்ணெயைப் பயன்படுத்துகிறது, மூன்றாம் இடத்திலுள்ள இந்தியா 47 இலட்சம் பேரல் தினமும் பயன்படுத்துகிறது. இந்த நுகர்வோர் பட்டியலில் 2007இல் (24.5 இலட்சம் பேரல்களுடன்) ஆறாவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஆயிரம் நபர்களுக்கு 910 நபர்களிடம் கார் உள்ளது என்பதையும் இந்தியாவில் 50 நபர்களிடம் மட்டுமே உள்ளது என்பதையும் கவனித்தல் அவசியம்.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் 10 அல்லது 15 சதவீதம் குறையுமானால், இன்றைய உலகம் ஸ்தம்பித்து விடும். அந்த அளவிற்கு நாம் நம்மை அறியாமலேயே இதனைச் சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.
பல்வேறு போர்களுக்கான மூல காரணம்
வரலாற்றுப் பதிவுகளின்படி உலகின் முதல் எண்ணெய் கிணறு நான்காம் நூற்றாண்டில் சீனாவில் தோண்டப்பட்டுள்ளது. நவீன கால எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முதன்முதலில் 1857இல் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இந்த எண்ணெய் உலகை ஆண்டு வருகிறது.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் என்னும் இரண்டு முக்கிய போர்களுக்கும் இந்த எண்ணெய் காரணமாக அமைந்துள்ளது என்பதை வரலாற்று அறிஞர்கள் அறிவர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட அனைத்து போர்களும் பெரும்பாலும் எண்ணெய் வளத்தைச் சுற்றியே அமைந்துள்ளதை அனைவரும் அறிவர். 1948இல் நிகழ்ந்த அரேபியா-இஸ்ரேல் போரில் தொடங்கி, சமீபத்தில் நிகழ்ந்த அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் போர் வரை அனைத்திற்கும் இந்த கச்சா எண்ணெயே மூல காரணம்.
சதாம் உசைனிடம் உலகினை அழிக்கும் கடுமையான ஆயுதங்கள் இருப்பதாக (கொஞ்சமும் கூச்சமின்றி பொய்) உரைத்த அமெரிக்கா, எண்ணெய் வளமிக்க ஈராக் நாட்டினை தனது கைக்குள் கொண்டு வந்தது. உலகின் பற்பல தீவிரவாத இயக்கங்களுக்கும் இந்த எண்ணெய் வளமிக்க நாடுகளின் செல்வத்திற்கும் நிறைய தொடர்பு இருப்பதாகவும் பலர் கூறுகின்றனர்.
தங்களது நாட்டின் எண்ணெய் வளத்தினைக் குறைவாகப் பயன்படுத்தி, அதே சமயத்தில் தேவையான அனைத்து எண்ணெயையும் வெளிச் சந்தையிலிருந்து விலை கொடுத்து வாங்கியும் அமெரிக்கா இதில் சாமர்த்தியமாகச் செயல்பட்டு வருகிறது. உலகின் இதர நாடுகளில் எண்ணெய் தீர்ந்த பின்னரும், தங்களது நாட்டில் மேலும் சில வருடங்கள் இருக்கும் என்பது அவர்களது கணிப்பு.
தேவை அதிகரிக்கிறது, இருப்பு குறைகிறது
“எனது தந்தை ஒட்டகம் ஓட்டினார், நான் கார் ஓட்டுகிறேன், எனது மகன் ஜெட் ஓட்டுகிறான், அவனது மகன் மீண்டும் ஒட்டகம் ஓட்டுவான்,” என்று சவுதி அரேபிய மக்கள் கூறத் தொடங்கி விட்டனர். உலகின் 5ரூ மக்களைக் கொண்ட அமெரிக்க நாடு 40ரூ சக்தியைப் பயன்படுத்துகிறது. மற்ற நாடுகளும் அதனுடன் முட்டிமோதி இயற்கை வளத்தினைச் சுரண்டி வருகின்றன. ஆனால் உலகின் இயற்கை வளம் ஓர் எல்லைக்கு உட்பட்டது என்பதை நாம் வசதியாக மறந்தது ஏனோ!
விஞ்ஞானிகளுடைய கூற்றின்படி, கோடிக் கணக்கான வருடங்கள் பூமியினுள் புதையுண்ட பொருட்களே கச்சா எண்ணெயாக மாறியுள்ளன. அதாவது, கோடி வருட உழைப்பில் இயற்கை நமக்கு வழங்கிய செல்வத்தை நாம் சுமார் 150 ஆண்டுகளில் ஏறக்குறைய அழித்து விட்டோம். இன்றைய நிலை தொடர்ந்தால், 2060இல் கச்சா எண்ணெய் முற்றிலுமாக உலகெங்கிலும் நின்றுவிடும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்களுடைய தேவை பன்மடங்கு வேகமாக (அதிலும் குறிப்பாக, சீனா, இந்தியா போன்ற நாடுகளில்) வளர்ந்து வருவதால், இன்னும் 25-30 வருடங்களில் அனைத்தும் முடிந்து விடும் என்றும் சிலர் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் நிச்சயம் இந்த எண்ணெய் நின்று விடும். இந்த எதார்த்த உண்மையினை பெரும்பாலான மக்கள் யோசிப்பதே இல்லை.
ஏற்கனவே உலக அளவில் உற்பத்தி குறையத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு அரசு விதித்திருக்கும் தடையானது, காலத்தைக் கடத்துவதற்கான ஒரு முயற்சியே தவிர நிச்சயம் தீர்வு அல்ல. பேட்டரி கார்களுக்கான மூலப் பொருட்களும் அந்த பேட்டரிக்கான பிளாஸ்டிக்கும் பெட்ரோலியப் பொருள்தானே! விரைவில் ஆதார் கார்ட்டை வைத்து பெட்ரோல் வழங்கும் நிலை வரும்; அதனைத் தொடர்ந்து, ஒருவருக்கு இவ்வளவு லிட்டர் என்று கட்டுப்பாடு வரும், விலை தாறுமாறாக எகிறும்; காய்கறிகள், தானியங்களின் விலை எட்டவியலாத அளவில் எகிறிக் கொண்டே போகும்.
இறுதியில் ஒருநாள் அனைத்தும் நின்று விடும். மனிதனை மனிதன் உணவிற்காகச் சண்டையிடுவான், கொள்ளையடிப்பான், நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படும். அப்போது நாம் என்ன செய்வோம்? 10 ஏக்கர் நிலத்தை விற்று இன்று பொறியியல் படிக்கும் முட்டாள்கள் அன்று உணவு உற்பத்திக்கு நிலம் கிடைக்குமா என்று தேடுவர்.
மாற்று எரிபொருட்கள்
கச்சா எண்ணெய் தீர்ந்து விடும் என்பதைப் பற்றி கூறினால், பெரும்பாலான மக்கள் உடனடியாகக் கூறும் பதில்: “விஞ்ஞானிகள் மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்து விடுவர்.” இந்த பதில் முற்றிலும் முட்டாள்தனமானது. இதுவரை அறியப்பட்டுள்ள நிலக்கரி, இயற்கை எரிவாயு, உயிரி எரிபொருள், சூரிய சக்தி, அணு சக்தி முதலியவை எவையும் மனிதனின் இன்றைய தேவையில் சிறிதளவுகூட அருகில் வரவில்லை. எந்தவொரு விஞ்ஞானியின் பார்வையிலும் மாற்று ஏற்பாடு என்பது கண்ணுக்கு எட்டிய (மற்றும் எட்டாத) தூரம் வரை இதுவரை காணவே இல்லை.
நிலக்கரியில் சுற்றுச்சூழல் பிரச்சனை, இயற்கை எரிவாயுவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லும் பிரச்சனை, உயிரி எரிபொருளில் (Biofuels) காடுகள் அழிவுறும் பிரச்சனை, சூரிய சக்தியில் பிளாஸ்டிக் பிரச்சனை, அணு சக்தியில் கழிவு பிரச்சனை என எல்லாவற்றிலும் இன்றைய நிலையை விட அதிக பிரச்சனைகளைத்தான் காண முடிகிறது.
தீர்வு
கடந்த ஒரு நூற்றாண்டில், அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில், எளிய வாழ்வின் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டு, வளர்ச்சி என்னும் பொருளாதாரக் கொள்கை வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த கச்சா எண்ணெய் சார்ந்த பொருளாதாரம் உதவியாக அமைந்துள்ளது. ஆனால் இந்நிலையானது, வேகமாக மலையில் ஏறி அதிலிருந்து வீழ்வதைப் போன்று அமைந்து விடும். இஃது எமது பகிரங்க எச்சரிக்கை.
இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கு சில முக்கிய வழிகள் உள்ளன.
வாழ்வின் தத்துவங்களை மாற்றுதல்: (1) இருப்பவை அனைத்திற்கும் தானே இறைவன் என்று மனிதன் நினைத்துக் கொண்டுள்ளான், அதனால்தான் இயற்கையை எந்தளவு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்குச் சுரண்ட முயல்கிறான். இந்த உணர்வினை மாற்ற வேண்டும். (2) இவ்வுலகில் எல்லாருக்கும் தேவையான அளவு வளங்கள் உள்ளன, ஆனால் யாருடைய பேராசையின் தேவைக்கும் இது போதாது. மனிதன் தனது பேராசையைக் கட்டுப்படுத்தி எளிய வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும். (3) எனக்குக் கிடைத்தால் போதும் என்று ஒவ்வொரு மனிதனும் வாழ்கிறான், இந்த சுயநல மனோநிலை மாற வேண்டும்.
கிராம வாழ்க்கை: பெட்ரோல் சக்தியிலிருந்து காளையின் சக்திக்கு மாற வேண்டும். பெட்ரோலியப் பொருட்களால் பெறப்படும் பெரும்பாலான பலன்களை எளிமையான முறையில் காளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதால் நிறைவேற்ற முடியும். நகரமயமாக்கத்திலிருந்து கிராமமயமாக்கத்திற்கு மாற வேண்டும். ஏதோ ஓர் ஊரில் விளைவித்து ஏதோ ஓர் ஊரில் உண்ணும் வாழ்விலிருந்து விடுபட்டு, நமது உணவை நமது ஊரிலேயே விளைவித்து தன்னிறைவு பெற்ற சமுதாயமாக நாம் மாற வேண்டும்.
நகரங்கள் வேண்டுமானால், அவையும் சின்னஞ்சிறு நகரங்களாக தன்னிறைவு பெற்ற நகரங்களாக அமைக்கப்பட வேண்டும். இயந்திரமயமாக்கத்திற்கு முன்பாக எந்தெந்த கலைகளும் பயிற்சிகளும் மக்களுடைய அன்றாட வாழ்வில் ஒன்றியிருந்தனவோ அவற்றை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆழ்ந்த ஆன்மீக மாற்றம்: கண்மூடித்தனமான பெளதிக வாழ்விலிருந்து மக்கள் ஆன்மீக வாழ்விற்கு மாற வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயமும் மாற வேண்டும் என்றால், அந்த மாற்றம் ஆன்மீக உணர்வின் மூலமாகவே சாத்தியமாகும். மக்களுடைய உணர்வில் இந்த ஆன்மீக மாற்றம் எழுந்தால் மட்டுமே பெட்ரோல் இல்லாத வாழ்வை அவர்கள் எளிதில் சமாளிப்பர். இல்லையெனில், பெட்ரோல் தீரும் சமயத்தில், மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு மடிவர் என்பதும், எண்ணற்ற கலவரங்கள் வெடிக்கும் என்பதும் நிச்சயம்.
தாமாக முன்வந்து எளிமையாக வாழ்தல்: பெட்ரோல் இல்லாத சமுதாயம் விரைவில் வரவுள்ளது என்பதை உணர்ந்து மக்கள் தாமாக முன்வந்து எளிமையாக வாழ வேண்டும். உண்மையில், முறையான கிருஷ்ண உணர்வினைப் பெறும் மக்கள் தாமாக முன்வந்து எளிய வாழ்வினைப் பயில்வர். அவர்களுக்கு பெட்ரோல் தீர்ந்தாலும் அஃது ஒரு சுமையாக இருக்காது.
பகவத் கீதையின் விஞ்ஞானம்: வாழ்க்கை ஒருமுறை வாழ்வதல்ல என்பதையும், மீண்டும்மீண்டும் பிறப்போம் என்பதையும், நமது தற்போதைய செயல்களுக்கான கர்ம விளைவினை அனுபவிப்போம் என்பதையும் நாம் உணர வேண்டும். இதனை உணர்ந்தால், தீய செயல்களைத் தவிர்த்து கிருஷ்ண உணர்வில் ஈடுபட முடியும். எனவே, பகவத் கீதையின் விஞ்ஞானத்தைப் பரவலாக மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும்.
மந்திர தியானம்: எளிய வாழ்வின் உணர்வை வளர்ப்பதற்கு மக்களின் இதயம் முதலில் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். இன்றைய உலக மக்கள் பேராசை, காமம் முதலிய குணங்களுடன் இருப்பதால், அவர்களால் எளிய வாழ்வினை ஏற்க முடியாது. அந்த களங்கமான இதயத்தைத் தூய்மைப்படுத்த ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்னும் மஹா மந்திரத்தை தினமும் உச்சரித்தல் வேண்டும். இந்த நாம உச்சாடனத்தை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டும்.
எதிரி தனக்கு முன்னால் வந்தால் தலையை மண்ணிற்குள் புதைத்துக் கொண்டு “ஆபத்து இல்லை” என்று நினைக்கும் நெருப்புக்கோழியைப் போன்று நாம் வாழக் கூடாது. வருமுன் காப்போம் என்னும் கொள்கையுடன், பெட்ரோல் நிச்சயம் தீர்ந்து விடும் என்பதைத் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்ற எளிமையான வாழ்வை உயர்ந்த சிந்தனையுடன் அமைப்போம், வாரீர்!!
இக்கட்டுரையின் பல தகவல்கள் Oil, Final countdown to a global crisis and its solutions என்னும் பெயரில் இஸ்கான் செகந்திராபாத்தின் தலைவரான திரு ஸஹதேவ தாஸ் அவர்களால் எழுதப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.