வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
புலன்களால் அனுபவிக்கப்படுவது உண்மையான ஆனந்தம் அல்ல.
உண்மையான ஆனந்தம் புலன்களுக்கு அப்பாற்பட்டது.
ந ஹி ப்ரபஷ்யாமி மமாபனுத்யாத்
யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம்
அவாப்ய பூமாவ் அஸபத்னம் ருத்தம்
ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம்
[அர்ஜுனன் கூறினான்:] “எனது புலன்களை வறட்டுகின்ற இந்த சோகத்தைப் போக்க ஒரு வழியையும் என்னால் காண முடியவில்லை. மேலுலகில் அதிபதியாக இருக்கும் தேவர்களைப் போல, எவ்வித எதிரியுமில்லாத வளமான ராஜ்ஜியத்தை இப்பூவுலகில் நான் அடையப் பெற்றாலும், இந்த சோக நிலையினை என்னால் அகற்ற முடியாது.” (பகவத் கீதை 2.8)
உண்மையான ஆனந்தம்
பௌதிக உலகில் நாம் எப்பொழுதும் துன்பத்தை அனுபவிக்கின்றபோதிலும், சில நேரங்களில் மட்டுமே துன்புறுவதாக நாம் சொல்லிக்கொள்கிறோம்; ஏனெனில், துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சி எதிர்காலத்தில் மகிழ்ச்சியைத் தரும் என நாம் நம்புகிறோம். உண்மையில், பௌதிக உலகில் மகிழ்ச்சி என்பதே கிடையாது. விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் மரணத்தை வெல்ல முடியும் என்று கனவு காண்கின்றனர். பலரும் இதே கனவில் மிதக்கின்றனர். ஆனால், “எவ்வளவு இனிமையாக இருந்தாலும், எதிர்காலத்தை நம்பாதே” என்பது பண்டிதர்களின் வாக்கு.
உச்சோஷணம் என்றால் “வறண்டு போதல்” என்று பொருள். மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகும்போது நமது புலன்கள் வறண்டு போகின்றன. அதன் பிறகு எந்தவொரு புலனுகர்ச்சியும் நமக்கு மகிழ்ச்சி அளிக்காது. உண்மையான ஆனந்தம் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது, ஸுகம் ஆத்யந்திகம் யத் தத் புத்தி-க்ராஹ்யம் அதீந்த்ரியம். புலன்களால் அனுபவிக்கப்படுவது உண்மையான ஆனந்தம் அல்ல. அதீந்த்ரியம் என்றால் புலன்களுக்கு அப்பாற்பட்டது என்று பொருள். உண்மையான ஆனந்தம் புலன்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
நாம் பௌதிக உலகில் இருப்பதாலும், நம்முடைய புலன்கள் போலியானவை என்பதாலும் புலனுகர்ச்சியின் மூலம் எவராலும் இன்பமடைய இயலாது; ஆன்மீகப் புலன்களே உண்மையான புலன்கள். எனவே, நமது ஆன்மீக உணர்வினை எழுச்சி பெறச் செய்ய வேண்டும். பின்னர், ஆன்மீக புலன்களைக் கொண்டு நம்மால் ஆனந்தத்தை அனுபவிக்க இயலும்.
ஆத்மா என்றும் அருவமானதல்ல
நமது பௌதிகப் புலன்கள் நமது உண்மையான புலன்களை மறைத்து வைத்துள்ளன. நான் உடலல்ல ஆத்மா. ஆனால், இந்த உடல் எனது உண்மையான உடலை (ஆத்மாவை) மறைக்கிறது. ஆன்மீக உடலில் ஆன்மீகப் புலன்கள் உள்ளன. நாம் அருவமானவர்களல்லர். எனது கை துணியால் மறைக்கப்படும்போது அந்தத் துணி எனது கையின் உருவத்தைப் பெறுகிறது. எனக்கு கை இருப்பதனாலே இந்த துணிக்கும் கை இருக்கின்றது. எனக்கு கால் இருப்பதால் எனது கால்சட்டைக்கும் கால் இருக்கின்றது. அதுபோல, ஆன்மீக உடலுக்கு (ஆத்மாவிற்கு) உருவம் இருப்பதனாலேயே, இந்த பௌதிக உடலுக்கும் உருவம் இருக்கின்றது.
இது பொது அறிவு. பகவத் கீதை உடலை ஆடையாக உருவகப்படுத்துகின்றது. உடலுக்குத் தகுந்தாற்போல ஆடை வடிவமைக்கப்படுகிறதே தவிர, ஆடைக்காக உடல் வடிவமைக்கப்படுவதில்லை. எனவே, எனது உண்மையான நிலையில் (ஆன்மீக நிலையில்), நான் கை கால்களைப் பெற்றுள்ளேன். இல்லையேல், உடல் எவ்வாறு வளர்ந்திருக்கும்?
உண்மையில், நாம் அனைவரும் நபர்களே. கிருஷ்ணர் கூறுகிறார், “அன்பான அர்ஜுனா! இந்த போர்வீரர்களோ மன்னர்களோ நீயோ நானோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. வருங்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை. நீ, நான், இங்கு கூடியுள்ள இந்த மன்னர்கள், வீரர்கள் முதலிய அனைவரும் கடந்தகாலத்திலும் இருந்தனர். அவ்வாறே எதிர்காலத்திலும் இருப்போம்.”
குருவின் அவசியம்
எந்தவொரு பொருளின் உண்மை நிலையை அறிய வேண்டுமாயினும், நாம் அர்ஜுனனைப் போல கிருஷ்ணரை அணுக வேண்டும்; இக்கோட்பாட்டினை இந்த ஸ்லோகம் விளக்குகிறது. அர்ஜுனன் கூறுகிறான், “இப்போது உங்களை சரணடைந்த சீடன் நான். எனக்கு அறிவுரை கூறுவீராக! நான் உங்களுடன் சமநிலையில் பேச முயலவில்லை.”
குருவை ஏற்றுக்கொள்ளல் என்றால், அவரது கட்டளைகளை ஏற்க வேண்டும். பகட்டு விளம்பரத்திற்காக குருவை ஏற்கக் கூடாது. இதுவே சரணாகதியாகும். குருவிடம் சரணடைவதன் மூலம் தெய்வீக ஞானத்தைப் பெற முடியும். ஆனால் குருவிற்கு எவ்வளவு தெரியும் என குருவை சோதிக்கக் கூடாது. அவ்வாறு செய்வதாக இருந்தால், குருவை ஏற்பதில் என்ன பயன்? எனவே, அர்ஜுனன் கூறினான், “உங்களைத் தவிர வேறு எவராலும் இந்த குழப்பமான சூழ்நிலையிலிருந்து என்னைக் காக்க இயலாது.” யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம், “எனது புலன்கள் வறண்டு போகின்றன.”
அர்ஜுனன் மேலோட்டமான புலன்களையே குறிப்பிடுகிறான், உண்மையான புலன்களை அல்ல. உண்மையான புலன்கள் உள்ளே இருக்கின்றன. ஹ்ருஷீகேண ஹ்ருஷீகேஷ-ஸேவனம், நமது புலன்களைக் கொண்டு ஹ்ருஷீகேசர் எனப்படும் கிருஷ்ணருக்கு நாம் சேவை செய்ய வேண்டும். கிருஷ்ணரே உண்மை, அவருக்கு சேவை செய்யும் நிலைக்கு நாம் உயர வேண்டும். நமது புலன்கள் தூய்மை அடையும்போது கிருஷ்ணருக்கு சேவை செய்ய இயலும்.
புலன்களுக்கு அப்பாற்பட்ட ஞானம்
இந்த்ரியாணி பராண்யாஹுர் இந்த்ரியேப்ய: பரம் மன:, மனஸஸ் து பரா புத்திர், உடல், மனம், புத்தி என பல்வேறு நிலைகள் உள்ளன. உடல் ரீதியிலான வாழ்க்கை புலன்களின் தளத்தில் உள்ளது. புலன்களின் தளத்தைக் கடக்கும்போது நீங்கள் மனதின் தளத்திற்கு வருகிறீர். மனதின் தளத்தைக் கடக்கும்போது அறிவின் தளத்திற்கு வருகிறீர். அறிவின் தளத்தையும் கடக்கும்போது தெய்வீக ரூபத்தைக் கொண்ட தெய்வீகத் தளத்திற்கு வருகிறீர்.
நாம் பெறும் அறிவானது, ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ, அப்ராக்ருத என பல நிலைகளைக் கொண்டதாகும். ஸ்தூல உடலின் (வெளிப்புற உடலின்) தளத்தில் இருக்கும்போது, நாம் புலன்களால் நேரடியாக உணரப்படும் ஞானத்தையே ஏற்கிறோம், இது ப்ரத்யக்ஷ ஞானம் எனப்படுகிறது. ஆனால், இத்தகைய ஞானம் முழுமையானதல்ல. விஞ்ஞானிகள் என்று கூறிக்கொள்வோரின் அறிவு முற்றிலும் புலனுணர்வின் அடிப்படையிலான சோதனைகளினால் பெறப்படுகிறது.
“கடவுளை நாங்கள் பார்த்ததில்லை” என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் கடவுள் உங்களது நேரடி புலனுணர்வைக் கொண்டு காணப்படக்கூடிய பொருள் அல்ல. இந்த அறையில் நாம் சூரியனை நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் வெளியே சூரியன் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறாக, ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
கிருஷ்ண உணர்வானது அப்ராக்ருத எனப்படும் புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவாகும். புலன்களால் நேரடியாக அறிய இயலாதவற்றை எவ்வாறு அறிவது? ஷ்ரோத-பந்தா (வேதங்களிலிருந்து ஞானத்தைப் பெறுதல்) என்னும் வழிமுறையின் மூலமாக அதனை அறியலாம். வேத ஞானம் குருவினால் விளக்கப்படுகிறது. எனவே, பரம குருவான கிருஷ்ணரிடமோ அவரது பிரதிநிதியிடமோ சரணடைய வேண்டும். அப்போது, அறியாமையினால் எழும் துன்பங்கள் அகன்று விடும்.
“நான் கைநிறைய பணம் ஈட்டுகிறேன். குருவை ஏற்பதால் என்ன பயன்? என்னால் அனைத்தையும் அறிந்துகொள்ள இயலும்,” என சாதாரண மனிதர்கள் நினைக்கின்றனர்.
மற்றோர் அயோக்கியன் கூறுகிறான், “எல்லாருடைய கருத்தும் சரியானதே. யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைக் கூறலாம்! நீ உனது எண்ணத்தின்படி கடவுளை அறிந்துகொள்ளலாம்.” முட்டாள் அயோக்கியர்கள் இவ்வாறு தத்தமது வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். ஆனால் அத்தகு வழிமுறைகளின் மூலம் ஞானத்தைப் பெறுவது சாத்தியமல்ல.
அர்ஜுனனின் துன்பம்
பௌதிக உலகில் ஒருவனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருந்தால், அங்கு போட்டி மனப்பான்மை நிலவும். ஒரு மனைவி, “என் அறைக்கு வா” என்று ஒருபுறம் இழுப்பாள். மற்றொரு மனைவி, “என் அறைக்கு வா” என்று மற்றொரு புறம் இழுப்பாள். இதனால் அவன் குழப்பமடைவான். இதுபோல நம்மிடம் பல மனைவிகள் (புலன்கள்) உள்ளனர். “சினிமாவிற்குப் போகலாம்,” என்று கண்கள் இழுக்கின்றன. “உணவகத்திற்குச் செல்லலாம்,” என்று நாக்கு இழுக்கின்றது. கை ஒருபுறமும் கால் ஒருபுறமும் இழுக்கின்றன. இதுவே நமது நிலை.
மனைவிகள் பலரிடம் ஒரு கணவனுக்காக போட்டி நிகழ்வதைப் போல, மன்னர்கள் பலரிடம் ஒரு ராஜ்ஜியத்திற்காக போட்டி நிலவினால், அது நிச்சயம் துன்பமாக இருக்கும். ஆனால், இங்கோ அர்ஜுனன் எதிரிகளற்ற ராஜ்ஜியமும் துன்பமே என்று கூறுகிறான். அவாப்ய பூமாவ் அஸபத்-நம் ருத்தம், “எதிரிகளற்ற ராஜ்ஜியமும் செல்வமும் கிடைத்தால்கூட துன்பத்திலிருந்து என்னால் மீள முடியாது,” என்கிறான் அர்ஜுனன். எனவே, அர்ஜுனனின் கூற்று இவ்வுலக ராஜ்ஜியத்தை மட்டும் குறிக்கவில்லை, தேவலோக ராஜ்ஜியத்தையும் சேர்த்தே குறிப்பிடுகின்றது.
தேவர்களும் யாகங்களும்
தற்போது மனிதன் நிலவிற்குச் செல்ல முயல்கிறான். நிலவு தேவர்களால் ஆளப்படும் ராஜ்ஜியமாகும். தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். உதாரணமாக, இந்திரன் மழை பொழிவிற்கு அதிபதியாக உள்ளார். அவர் இடி மின்னலை பிரயோகிப்பவர். மக்கள் இவற்றை நம்புவதில்லை, நாங்களோ வேதங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நம்புகிறோம். இது வெறும் நம்பிக்கை அல்ல, முற்றிலும் உண்மை.
இடி, மின்னல் எங்கிருந்து வருகிறது? மழையை வழங்குவது யார்? இவற்றை இயக்குபவர் ஒருவர் இருந்தாக வேண்டும் அல்லவா. அரசாங்கத்தில் பல்வேறு துறைகள் இருப்பதைப் போல இறைவனின் ராஜ்ஜியத்திலும் பல இயக்குநர்கள் இருக்க வேண்டும். இந்த இயக்குநர்களே தேவர்கள். கிருஷ்ணருடைய ஆணையின் பேரில் தேவர்கள் நமக்குத் தேவையான பொருட்களை வழங்குகின்றனர். எனவே, பல்வேறு தேவர்களை திருப்தி செய்வதற்காக பல்வேறு யாகங்கள் உள்ளன. இந்திரன் மழை பொழியச் செய்கிறார்.
ஸங்கீர்த்தன யாகம்
ஒருமுறை கிருஷ்ணர் இந்திரனுக்கு செய்யப்படவிருந்த யாகத்தை நிறுத்தினார். கிருஷ்ணரின் தந்தை நந்த மஹாராஜர் யாகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோது கிருஷ்ணர் கூறினார், “பாசமிகு தந்தையே! இந்திரனுக்காக யாகம் செய்யத் தேவையில்லை.” இதன் மூலம் தேவர்களுக்கு யாகம் செய்ய கிருஷ்ண பக்தர்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
குறிப்பாக, நாம் வாழும் கலி யுகத்தில் எந்த வித யாகத்தைச் செய்வதும் கடினமானதாகும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த திரேதா யுகத்தில் அது சாத்தியமாக இருந்தது. க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும் த்ரேதாயாம் யஜதோ மகை:. யாகம் செய்வதற்கான வழிமுறைகளை இந்த யுகத்தில் எவரும் பின்பற்றுவதில்லை, அது சாத்தியமும் இல்லை. எனவே, யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ:, “பொருட்கள் பலவற்றைக் கொண்டு சிரமப்படுவதற்குப் பதிலாக, புத்திசாலிகள் பகவானின் புனித நாமங்களை உச்சரித்து ஸங்கீர்த்தன யாகத்தைச் செய்ய வேண்டும்.” இதுவே சாஸ்திரங்களின் (ஸ்ரீமத் பாகவதம் 11.5.32) கூற்றாகும்.
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம்
யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸுமேதஸ:
க்ருஷ்ண-வர்ணம் த்விஷாக்ருஷ்ணம் என்பது பகவான் சைதன்யரைக் குறிக்கிறது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே. ஆயினும், அவரது மேனியின் வண்ணம் அக்ருஷ்ண, “கறுப்பு நிறமல்ல,” “மஞ்சள் நிறம்.” ஸாங்கோபாங்காஸ்த்ர-பார்ஷதம், அவர் தமது சகாக்களான நித்யானந்தர், அத்வைதர், ஸ்ரீவாஸர் மற்றும் இதர பக்தர்களால் சூழப்பட்டுள்ளார்.
சைதன்ய மஹாபிரபு கலி யுகத்தில் வழிபடப்பட வேண்டிய கடவுள். அவரை வழிபடுவதற்கான வழிமுறை என்ன? யஜ்ஞை: ஸங்கீர்தன-ப்ராயைர் யஜந்தி ஹி ஸுமேதஸ:. சைதன்ய மஹாபிரபு, நித்யானந்தர் மற்றும் பிறரது முன்னிலையில் நாம் செய்யும் ஸங்கீர்த்தன யாகமே இந்த யுகத்திற்கு ஏற்றது. எனவே, அது வெற்றியடைந்து வருகிறது. இது மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ள யாகம்.
தகுதியான பிராமணர்கள் இல்லை
பலவித யாகங்கள் உள்ளன. சில சமயங்களில் இந்தியர்கள் யாகங்களைச் செய்வதுண்டு. அதற்காக பணம் திரட்டுவதுடன் சரி. யாகம் வெற்றியடைவதில்லை; ஏனெனில், யாகம் செய்யவல்ல பிராமணர்கள் இப்போது இல்லை. யாகம் செய்த பிராமணர்கள் வேத மந்திரங்களின் உச்சரிப்பைக்கூட சோதித்துக் கொண்டிருந்தனர். மந்திரங்களைச் சரியாக உச்சரித்தால் தீயில் இடப்பட்ட விலங்கு புத்தம்புது இளம் உடலைப் பெற்று வெளிவரும், இதுவே சோதனையாகும். இந்த கலி யுகத்தில் இத்தகைய பிராமணர்கள் எங்கே உள்ளனர்? எனவே, யாகங்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரித்து ஆனந்தமாக ஆடுதலே இந்த யுகத்திற்கான யாகமாகும்.
திருநாம அவதாரம்
கலி யுகத்தில் மக்கள் மிகவும் கலங்கியுள்ளனர். எனவே, கிருஷ்ணர் நபராக அன்றி திருநாம ரூபத்தில் வந்துள்ளார். கிருஷ்ணர் பூரணமானவர் என்பதால், அவரது ரூபத்திற்கும் திருநாமத்திற்கும் எந்தவித வேற்றுமையும் இல்லை. கிருஷ்ணர் எவ்வாறு பூரணமானவரோ, அவ்வாறே அவரது திருநாமமும் பூரணமானது; திருநாமம் ஜடப் பொருள் அல்ல; இது நித்தியமானது. கிருஷ்ணர் நித்தியமானவர் என்பதால், அவரது திருநாமமும் நித்தியமானதே! பூர்ண: ஷுத்த: நித்ய-முக்த:. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை உச்சரிப்பதில் எந்தவித பௌதிக எண்ணமும் இல்லை. அபின்னத்வான் நாம-நாமினோ:, “பகவானின் திருநாமத்திற்கும் பகவானுக்கும் வேறுபாடு இல்லை.”
ராஜ்யம் ஸுராணாம் அபி சாதிபத்யம். எனவே, எதிரிகளற்ற தேவலோக ராஜ்ஜியம் கிடைத்தாலும் பௌதிகத் தளத்தில் உள்ள வரையில் ஒருவரால் ஆனந்தமாக வாழ முடியாது. புலன்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக இன்பமே தீர்வு.
மிக்க நன்றி.