வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்
இன்றைய இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்ற (ஒன்று சேர்கின்ற) அழகான கரையில் அமைந்திருப்பதே பிரயாகை என்னும் திருத்தலம். பிரம்மதேவர் தனது முதல் பத்து யாகங்களை மேற்கொள்வதற்காக இந்த நதிக்கரையைத் தேர்ந்தெடுத்தார் என்பதால், இவ்விடம் பிரயாகை என பெயர் பெற்றது. முகலாயரின் ஆட்சிக் காலத்தில், சங்கமத்தின் கரையில் மன்னர் அக்பர் ஒரு பெரிய கோட்டையை எழுப்பி இலாகாபாத் (அலகாபாத்) என பெயரிட்டதால், அலகாபாத் என்ற பெயரிலும் இவ்விடம் அறியப்படுகிறது. விஷ்ணுவிற்கு மிகவும் பிரியமான இடம் என்பதால், தீர்த்த ராஜன் (திருத்தலங்களின் மன்னன்) என்றும் பிரயாகை புகழப்படுகின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பிரயாகை என்றவுடன் பலரின் மனதில் எழுவது இலட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும் கும்பமேளா நிகழ்ச்சியாகும்.
கும்பமேளாவின் வரலாறு
தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது, கூர்மர், தன்வந்திரி, மோஹினி என்று பகவானின் மூன்று அவதாரங்கள் அதில் பங்கெடுத்து கொண்டனர். அதனை ஒரு திகைப்பூட்டும் லீலை என்று சாஸ்திரம் வர்ணிக்கின்றது. தன்வந்திரியினால் கொண்டு வரப்பட்ட அமிர்த கலசத்திற்கும் பிரயாகைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதால், பாற்கடலைக் கடைந்த அந்த லீலையை சற்றேனும் தெரிந்து கொள்வது அவசியம்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த ஓர் உச்சகட்டப் போரில் அசுரர்களின் தலைவனான பலி மஹாராஜன் தேவர்களின் தலைவனான இந்திரனை வென்று தன் வலிமையை நிலைநாட்டிக் கொண்டான். நாட்டை விட்டு துரத்தப்பட்ட தேவர்கள் வழி தெரியாமல் பிரம்மாவை அணுகினர். பிரம்மாவோ தேவர்களை அழைத்துக் கொண்டு பகவான் விஷ்ணுவை நோக்கி பிரார்த்தனை செய்தார்.
“அசுரர்களுக்கு இப்போது நேரம் அனுகூலமாக இருப்பதால், அவர்களுடன் நட்பு ஏற்படுத்தி, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு, கூட்டணி அமைத்து பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைப் பருகுங்கள்,” என்று பகவான் விஷ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், “அசுரர்களுடன் இணைந்து பாற்கடலைக் கடையும்போது கோபம் கொள்ளக் கூடாது, அதில் வருகின்ற ஐஸ்வர்யங்களைக் கண்டு மயங்கக் கூடாது. இறுதிவரை அமைதி காக்க வேண்டும்,” எனவும் அறிவுரை கூறினார். (ஸ்ரீமத் பாகவதம் 8.6.19ஶி25)
பாற்கடலைக் கடைதல்
விஷ்ணுவின் அறிவுரைப்படி, தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைவதற்கான பணியைத் தொடங்கினர். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் ஏற்று பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டினர். தங்கத்தினாலான மந்தார மலை மிகவும் கணமாக இருந்ததால், பகவான் விஷ்ணு அதனை தனது வாகனமான கருடனின் மீது மலையை அமர்த்தி பாற்கடலின் மையப் பகுதியில் அதனை நிலை நிறுத்தினார். எவ்வித அஸ்திவாரமும் இல்லாமல் மந்தார மலை பாற்கடலில் மூழ்குவதைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் சோர்வடைந்தனர். அந்த சூழ்நிலையில், பகவான் விஷ்ணு உடனடியாக ஆமை ரூபத்தில் (கூர்ம அவதாரமாக) தோன்றி மந்தார மலையை தன் முதுகில் சுமந்து கொண்டார்.
பாற்கடலைக் கடைந்தபோது, முதன்முதலாக ஹாலஹல என்னும் கொடிய விஷம் தோன்றியது. அச்சம் கொண்ட தேவர்களையும் அசுரர்களையும் காக்கும்பொருட்டு, கடல் போன்ற அந்த விஷத்தை சிவபெருமான் தன் உள்ளங்கையில் சுருக்கிக் கொண்டு அருந்தினார். பாற்கடலை மீண்டும் கடைந்தபோது தோன்றிய சுரபி பசுவினை ரிஷிகள் பறித்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைஷ்ரவா என்னும் குதிரையை பலி மஹாராஜன் பறித்துக் கொண்டான். அவற்றைத் தொடர்ந்து, ஐராவத யானை, இதர எட்டு பெரிய யானைகள், எட்டு பெண் யானைகள், கௌஸ்தூப மணி, பாரிஜாத மலர், அப்ஸரப் பெண்கள், லக்ஷ்மிதேவி, வருணி என பல்வேறு பொக்கிஷங்கள் வெளிவந்தன. இறுதியில், பகவான் விஷ்ணு தன்வந்திரியாக அங்கு அவதரித்தார், அழகான ரூபத்தில் கையில் தங்கத்தினாலான அமிர்த கலசத்துடன் அவர் வெளிவந்தார். அசுரர்களோ அந்த அமிர்த கலசத்தை உடனடியாக அவரது கைகளிலிருந்து பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மோஹினி அவதாரம்
அசுரர்களின் அச்செயலைக் கண்டு சோர்வடைந்த தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் தஞ்சமடைந்தனர். பகவான் விஷ்ணு உடனடியாக தனது மாயா சக்தியினால், யார் முதலில் அமிர்தத்தை அருந்துவது என்கிற சண்டையை அசுரர்களிடையே மூட்டினார். மேலும், குறுக்கு புத்தி கொண்ட அசுரர்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்காக, உடனடியாக அழகான பெண்ணின் உருவில் (மோஹினி தேவியாக) அங்கே அவதரித்தார். அவரது அழகைக் கண்டு வாயைப் பிளந்த அசுரர்கள், தங்களது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மோஹினியை சமரச தூதராக ஏற்றுக் கொண்டனர். மோஹினி தேவி எடுக்கும் எந்த முடிவிற்கும் கட்டுப்படுவோம் என்கிற நிபந்தனையை ஏற்ற அசுரர்கள், அமிர்த கலசத்தை தாங்களாகவே முன்வந்து மோஹினி தேவியிடம் ஒப்படைத்தனர்.
அசுரர்களிடமிருந்து அமிர்த கலசத்தைப் பெற்ற மோஹினி தேவி அதனை தேவர்களிடம் வழங்கினாள். ஆயினும், அசுரர்கள் மோஹினியை எதிர்க்கவில்லை. மோஹினியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ராகு என்கிற அசுரன், மாறுவேடத்தில் தேவர்களைப் போல வேடமணிந்து, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அமர்ந்து அமிர்தத்தைப் பருக ஆரம்பித்தான். ராகுவின் அடையாளத்தை சூரியனும் சந்திரனும் மோஹினியிடம் தெரிவிக்க, மோஹினி உடனடியாக சக்கரத்தின் மூலமாக ராகுவின் தலையைக் கொய்தினாள். ராகுவின் தொண்டை வரை அமிர்தம் சென்றுவிட்டதால், அவனின் தலை மட்டும் இறக்கவில்லை. பின்னர், தேவர்களிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்த மோஹினி, உடனடியாக விஷ்ணு ரூபத்தை எடுத்து கருடன்மீது அமர்ந்து ஆன்மீக உலகைச் சென்றடைந்தார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசுரர்கள் தேவர்களை கடுமையாக தாக்கினர், அமிர்தம் அருந்திய புத்துணர்ச்சியில் தேவர்களும் பதிலுக்கு அசுரர்களை கடுமையாக தாக்கினர்.
கீழே விழுந்த அமிர்தத் துளிகள்
அமிர்த கலசத்தை அசுரர்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்திரனின் மகன் ஜெயந்தன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அமிர்தத்தை மீட்பதற்காக அசுரர்கள் ஜெயந்தனைப் பின்தொடர்ந்தனர். மீண்டும் யுத்தம் தொடர்ந்தது; தேவர்களின் கணக்கில் பன்னிரண்டு நாள்களும் பூமியின் கணக்கில் பன்னிரண்டு ஆண்டுகளும் அந்த யுத்தம் நீடித்தது. இந்திரனின் மகன் ஜெயந்தன் சூழ்நிலை காரணமாக அமிர்தத்தை பூமியில் நான்கு இடத்தில் வைக்க நேர்ந்தது. அதனை அங்கிருந்து எடுத்தபோது, சில அமிர்தத் துளிகள் அந்த நான்கு இடங்களிலும் சிதறி விழுந்தன. அந்த நான்கு இடங்கள்: நாசிக், உஜ்ஜைன், ஹரித்வார், மற்றும் பிரயாகை. பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட கோள்கள் ஒன்று சேரும்போது, அந்த திதியில் அமிர்தம் மீண்டும் இவ்விடங்களில் தோன்றுவதாக ஐதீகம். இதனையே யாத்ரீகர்கள் கும்பமேளா என்று கொண்டாடுகின்றனர், அன்றைய தினத்தில் புனித நீரில் நீராடி அதனைப் பருகும்போது அமிர்தத்தை அருந்திய பலனை அடைகின்றனர்.
எங்களது பிரயாகை பயணம், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல இலட்சம் மக்கள் கூடும் கும்பமேளாவின் போது அமையவில்லை. இருப்பினும், பிரயாகையின் புனிதத் தன்மையை உணர்வதற்கு மிகவும் வசதியான முறையில் பல்வேறு பக்தர்களுடன் இணைந்து பிரயாகையின் பல்வேறு இடங்களை நாங்கள் தரிசித்தோம். அவற்றை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
திரிவேணி சங்கமம்
வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது. அமிர்தத் துளிகள் இந்த சங்கமத்தில்தான் சிதறியது என்பதால், இவ்விடத்தில்தான் கும்பமேளாவின் நீராடும் சடங்கு கொண்டாடப்படுகின்றது. காடுகள், இமயமலையின் குகைகள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்கள், யோகிகள், சாதுக்கள் என பலரும் இங்கு வந்து நீராடியுள்ளனர். நாங்கள் மழைக்காலம் முடிந்த தருணத்தில் சென்றதால், கங்கை, யமுனை என இரு நதிகளிலும் நீர்பெருக்கு அதிகமாக இருந்தது. படகில் ஏறி திரிவேணி சங்கமத்தை அடைந்த நாங்கள், அங்கே இரண்டு படகுகளுக்கு இடையில் மூன்றடி ஆழத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தளத்தில் நின்றபடி புனித நீராடினோம்.
அக்ஷய-வட்
திரிவேணி சங்கமத்தின் கரையில் முகலாய மன்னன் அக்பரால் கட்டப்பட்ட கோட்டையினுள் உள்ள அக்ஷய-வட் என்று அழைக்கப்படும் பிரம்மாண்டமான ஆலமரம் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை கவர்ந்திழுக்கின்றது. பிரயாகைக்கு விஜயம் புரிந்த பகவான் இராமசந்திரர் தன் தந்தைக்கான ஈமச் சடங்குகளை இங்குதான் செய்தார். இந்த ஆலமரம் அதற்கு சாட்சியாக இன்றும் அழியாமல் உள்ளது. சீதை, இராமர், லக்ஷ்மணர் ஆகிய மூவரும் இம்மரத்தின்கீழ் ஓய்வெடுத்துள்ளனர். திரிவேணி சங்கமத்தில் படகில் இருந்தபடி பார்க்கும்போது, அக்ஷய-வட் அமைந்துள்ள கோட்டையின் வடிவமைப்பை வெகுவாக பாராட்டலாம். இக்கோட்டை தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபோதிலும், இதனுள் இருக்கும் அக்ஷய-வடத்தை (ஆலமரத்தை) யாத்ரீகர்கள் தடையின்றி தரிசிக்கலாம்.
வேணி மாதவர் கோயில்
மதுராவில் ஆதி கேசவராகவும் புரியில் ஜகந்நாதராகவும் வீற்றிருக்கும் பகவான், பிரயாகையில் வேணி மாதவராக எழுந்தருளியுள்ளார். அழகான கங்கைக் கரையோரத்தில் வீற்றுள்ள வேணி மாதவர் திரிவேணி சங்கமத்தின் அதிபதியாக திகழ்கிறார், இவர் பிந்து மாதவர் என்றும் அறியப்படுகிறார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பிரயாகைக்கு வந்திருந்தபோது, இவ்விடத்தில் தினமும் ஹரி நாமத்தை ஆடிப் பாடி மகிழ்வார் என்றும், இங்கே அவர் மூன்று நாள்கள் தங்கியிருந்தார் என்றும் சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய லீலை 17.149) கூறுகின்றது. சீதை, இராமர், லக்ஷ்மணர் ஆகியோரும் பிரயாகைக்கு வந்தபோது வேணி மாதவரை தரிசித்துள்ளனர்.
பிரயாகையின் பிரதான பெருமாளான வேணி மாதவரை இன்றைய யாத்ரீகர்கள் பலரும் அறிவதில்லை. வேணி மாதவரை தரிசிக்காமல் கங்கையில் நீராடினால் முழு பலன் கிடைக்காது என்பதால், பிரயாகைக்குச் செல்பவர்கள் நிச்சயம் வேணி மாதவரை தரிசிக்க வேண்டும்.
தஸாஷ்வமேத காட்
வேணி மாதவரின் கோயிலுக்கு சற்று தொலைவில் தஸாஷ்வமேத காட் (பத்து அஸ்வமேத யாகங்கள் நிகழ்ந்த படித்துறை) அமைந்துள்ளது. சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவரான ரூப கோஸ்வாமி, மஹாபிரபுவை சந்திக்கும் பொருட்டு வங்காளத்திலிருந்து பயணம் மேற்கொண்டபோது, அவர்கள் இருவரும் பிரயாகையில் சந்தித்தனர். கங்கைக் கரையோரத்தில் அமையப் பெற்ற இந்த படித்துறையில்தான் மஹாபிரபு பத்து நாள்கள் தொடர்ச்சியாக ரூப கோஸ்வாமிக்கு பக்தித் தொண்டின் ஆன்மீக ஞானத்தை போதித்தார்.
தூய பக்தித் தொண்டின் தன்மைகள், அதன் இன்றியமையாத கோட்பாடுகள், பக்தியை வளர்க்கும் முறை, பக்தியுடன் வளரும் தேவையில்லாத களைகள் போன்ற ஆன்மீக சூட்சும விஷயங்களை மஹாபிரபு இங்கே ரூப கோஸ்வாமிக்கு விரிவாக உபதேசித்தார். தான் இவ்விடத்தில் பெற்ற உபதேசங்களையே பிற்காலத்தில் ஸ்ரீல ரூப கோஸ்வாமி பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் பெயரில் போற்றத்தக்க நூலாக இயற்றியுள்ளார்.
சைதன்ய மஹாபிரபு ரூப கோஸ்வாமிக்கு உபதேசம் செய்த இவ்விடத்தில், ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் சைதன்ய மஹாபிரபுவின் பாதச்சுவடுகளை பதித்திருக்கிறார். கௌடீய வைஷ்ணவர்களுக்கு மிகவும் முக்கியமானதான இவ்விடம், ரூப சிக்ஷாஸ்தலி என்றும் அழைக்கப்படுவதுண்டு.
இஸ்கான் கோயில்
இந்தியாவின் புனித நகரங்களில் கோயில் அமைத்து, அங்கு வரும் யாத்ரீகர்களுக்கு கிருஷ்ண பக்தியின் தத்துவத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் விரும்பினார். அதன் அடிப்படையில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் திருக்கோயில் பிரயாகையிலும் அமைந்துள்ளது. யமுனை நதிக்கரையில் உள்ள பலுவா எனப்படும் படித்துறையின் அருகில் 1995ல் தொடங்கப்பட்ட இக்கோயிலில் இருக்கும் ராதா-கிருஷ்ண விக்ரஹங்கள், ஸ்ரீ ஸ்ரீ ராதா வேணிமாதவர் என்று அழைக்கப்படுகின்றனர். இங்கு வரும் திரளான பக்தர்கள் யமுனையில் புனித நீராடுவது வழக்கம், எங்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியது.
பரத்வாஜ முனிவரின் ஆசிரமம்
சப்த ரிஷிகளில் ஒருவரும் பிரஹஸ்பதியின் மகனுமான பரத்வாஜ முனிவர் பிரயாகையில் வசித்த முனிவர்களில் குறிப்பிடத்தக்கவர். அயோத்தியாவிலிருந்து வனவாசத்திற்காக புறப்பட்ட பகவான் இராமர் முதன்முதலாக பிரயாகைக்கு வந்து, இங்கு தங்கியிருந்த பரத்வாஜ முனிவரை இந்த அசிரமத்தில் சந்தித்துள்ளார். பரத்வாஜரின் அறிவுரைப்படியே இராமர் தனது வனவாசத்தின் பன்னிரண்டு வருடங்களை, இங்கிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்திரகூடத்தில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பரத்வாஜரின் ஆசிரமம் பிரயாகை செல்லும் இராம பக்தர்களுக்கு முக்கியமான இடமாகும்.
ரூப கௌடீய மடம்
இஸ்கான் கோயிலிலிருந்து பரத்வாஜரின் ஆசிரமத்திற்குச் செல்லும் வழியில் ரூப கௌடீய மடம் அமைந்துள்ளது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் பிரயாகையில் ரூப கௌடீய மடம் நிறுவப்பட்டது. இங்கிருக்கும் ராதா கிருஷ்ண விக்ரஹங்கள் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள். ரூப கோஸ்வாமி உபதேசம் பெற்ற ஊர் என்பதால், இங்குள்ள மடத்திற்கு ரூப கௌடீய மடம் என்று அவர் பெயர் சூட்டியுள்ளார்.
சைதன்ய மஹாபிரபு பிரயாகையில் வசித்தபோது, வல்லபாசாரியரையும் சந்தித்தார். பிரயாகைக்கு மறுகரையில் இருந்த வல்லபாசாரியரின் இல்லத்திற்கு ரூப கோஸ்வாமியுடனும் அவரது சகோதரரான அனுபமருடனும் சென்ற மஹாபிரபுவின் லீலைகள் சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீல பிரபுபாதரும் பிரயாகையும்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் தனது லீலையின் பதிமூன்று வருடங்களை பிரயாகையில் கழித்தார் என்பது கவனிக்கத்தக்கதாகும். அவர் 1923ஆம் ஆண்டில் கொல்கத்தாவிலிருந்து குடும்பத்துடன் அலகாபாத்திற்கு இடம் பெயர்ந்தார். பிரயாக் பார்மஸி என்ற பெயரில் ஒரு மருந்து கடையை அவர் அலகாபாத்தில் தொடங்கினார். 1928ஆம் ஆண்டில் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் சில சீடர்கள் இங்கே ராதா கிருஷ்ண கோயிலை தொடங்கிய சமயத்தில், ஸ்ரீல பிரபுபாதர் அவர்களுக்கு பெரிதும் உதவி செய்தார். இங்கு வசித்த முக்கிய நபர்களை கோயிலுக்கு அழைத்து வருவது, நன்கொடை கொடுப்பது, மாலை நேரத்தில் பஜனை நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பது போன்ற பல சேவைகளில் அவர் ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டில் ஸ்ரீல பிரபுபாதரின் தந்தையான கௌர மோகன் அலகாபாத்தில்தான் தனது உடலை விட்டார்.
தொடர்ந்து இங்கே வசித்து வந்த ஸ்ரீல பிரபுபாதர், 1933ஆம் ஆண்டில் தன் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரிடம் இருந்து ஹரி நாம தீக்ஷையையும் பிராமண தீக்ஷையையும் ஒரே சமயத்தில் பெற்றார். அப்போது ரூப கோஸ்வாமி அருளிய பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் ஆன்மீக விஞ்ஞானத்தை நன்கு படித்து, அதனை விரிவான முறையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என பக்திசித்தாந்தர் பிரபுபாதரைக் கேட்டு கொண்டார். பிற்காலத்தில், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகெங்கும் நிறுவிய பின்னர், 1971ஆம் ஆண்டில் ஸ்ரீல பிரபுபாதர் தன்னுடைய மேற்கத்திய சீடர்களுடன் மீண்டும் பிரயாகைக்கு வந்தார். 1972ஆம் ஆண்டில் விருந்தாவனத்தில் இருக்கும் ரூப கோஸ்வாமியின் சமாதிக்கு அருகில், தொடர்ச்சியாக ஒரு மாதம் அவர் அருளிய பக்தி ரஸாம்ருத சிந்துவிலிருந்து உபன்யாசம் வழங்கினாளர்.
ஸ்ரீல பிரபுபாதரின் பிரயாக் பார்மஸி செயல்பட்ட இடத்தில் இப்போது அலகாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. அலகாபாத் இஸ்கான் பக்தர்களின் உதவியுடன், அந்த கூட்டுறவு வங்கி, ஸ்ரீல பிரபுபாதரின் வீடு, ஸ்ரீல பிரபுபாதர் தீக்ஷை பெற்ற இடம் ஆகியவற்றை ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடன் காணும் நற்பேற்றினை நாங்கள் பெற்றோம்.
பிரயாகை பாடங்கள்
தேவர்கள் பருகிய அமிர்தமானது உடல் பிரகாசத்தையும் சக்தியையும் மட்டுமே கொடுக்கவல்லது என்பதால், அவர்கள் பருகியது உண்மையான அமிர்தம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். சைதன்ய மஹாபிரபு பிரயாகையில் ரூப கோஸ்வாமிக்கு அருளிய பக்தி ரஸாம்ருத சிந்து என்கிற அமிர்தமே எல்லா ஜீவன்களையும் ஆனந்த அமிர்தக் கடலில் மூழ்கடிக்கக் கூடியதாகும்.
கங்கை, யமுனை ஆகிய இரு பெரும் நதிகள் பாயும்போதிலும், பிரயாகையில் வெள்ளம் ஏற்பட்டதில்லை. ஆனால், சைதன்ய மஹாபிரபு பிரயாகைக்கு வந்த போது, அனைத்து மக்களையும் ஹரி நாம ஸங்கீர்த்தனம் என்னும் வெள்ளத்தில் மூழ்க வைத்தார். சைதன்ய மஹாபிரபு பிரயாகையில் நிகழ்த்திய அற்புத லீலைகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி ஒப்புக் கொள்கிறார். (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 17.149)
சைதன்ய மஹாபிரபுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நாங்களும் பிரயாகையில் ஹரி நாம சங்கீர்த்தனத்தில் பல மணி நேரங்களை ஆனந்தமாக கழித்தோம்.
பிரயாகையை அணுகும் முறை
புனித யாத்திரையின் நோக்கம் வெறுமனே நதிகளிலும் குளங்களிலும் நீராடிச் செல்வது அல்ல. அவ்வாறு நீராடுதல் நாம் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு உதவும் என்றபோதிலும், திருத்தலங்களில் உள்ள சாதுக்களையும் பக்தர்களையும் தரிசித்து அவர்களிடமிருந்து ஆன்மீக ஞானத்தைப் பெறுவதே உண்மையான நோக்கமாக இருக்க வேண்டும். கங்கையில் பலமுறை நீராடினால் பாவங்கள் படிப்படிய்ாக அழியும்; ஆயினும் பக்தர்களை தரிசித்தாலே போதும், பாவங்கள் பறந்து ஓடி விடும் என்று நரோத்தம தாஸ தாகூர் கூறுகிறார்.
இராமர், சைதன்ய மஹாபிரபு, பஞ்ச பாண்டவர்கள், பலராமர், அத்வைத ஆச்சாரியர், நித்யானந்த பிரபு, ரூப கோஸ்வாமி என பலரும் பிரயாகையில் சில காலம் தங்கியுள்ளனர். இதன் மகத்துவத்தை உணர்ந்து விஜயம் செய்வதும், தனியாகச் செல்லாமல் பக்தர்களுடன் இணைந்து ஹரி நாம ஸங்கீர்த்தனத்துடன் செல்வதும் பிரயாகையை அணுகுவதற்கான சிறப்பான வழிகளாகும்.
ஸ்ரீல பிரபுபாதர் தன் சீடர்களுடன் 1971ஆம் ஆண்டு பிரயாகைக்கு வந்தபோது, நம் நோக்கம் திரிவேணி சங்கமத்தில் நீராடி முக்தியடைவது அல்ல என்றும், சைதன்ய மஹாபிரபு ரூப கோஸ்வாமிக்கு அருளிய பக்தி ரஸத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைப்பதே என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, நாங்களும் பக்தி ரஸாம்ருத ஸிந்துவின் கருத்துகளை பக்தர்களுடன் பரிமாறியபடி பிரயாகையில் எங்களது யாத்திரையை நிறைவு செய்தோம்.