உண்மையான அறிவைக் கண்டறிதல்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

—வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
(16 மே, 1970—லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா)

உண்மையான அறிவைப் பற்றியும் அதனை அடைவதற்காக ஆன்மீக குருவை அணுகுவதைப் பற்றியும் ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

வித்யாம் சாவித்யாம் ச யஸ்
தத் வேதோபயம் ஸஹ
அவித்யயா ம்ருத்யும் தீர்த்வா
வித்யயாம்ருதம் அஷ்னுதே
“அறியாமையின் செயல்முறை, தெய்வீக அறிவின் செயல்முறை ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் அறியத்தக்கவன் மீண்டும்மீண்டும் பிறந்து இறக்கக்கூடிய நிலையினைக் கடந்து அமரத்துவத்தின் ஆசிகளை முழுவதுமாக அனுபவிக்கின்றான்.” (ஸ்ரீ ஈஷோபநிஷத், மந்திரம் 11)

வேத அறிவு

அமரத்துவம் என்றால் என்ன என்பது மக்களுக்குத் தெரியவில்லை. தற்போது நாம் அறிவின் முன்னேற்றத்தினால் பெருமிதம் கொண்டுள்ளோம். ஆனால் நமக்குத் தெரியாத, நாம் தெரிந்துகொள்ள இயலாத பற்பல விஷயங்கள் உள்ளன. அவற்றை நமது நவீன ஆய்வறிவினால்கூட அறிய இயலாது. நீங்கள் உண்மையான அறிவைப் பெற விரும்பினால், அறிவின் மூலமாகிய வேதங்களிடம் செல்ல வேண்டும். வேத என்றால், “அறிவு” என்று பொருள்.
வேதங்களுடன் இணைந்து 108 உபநிஷதங்கள் உள்ளன, அவற்றில் ஒன்பது உபநிஷதங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த ஒன்பதில் இந்த ஈஷோபநிஷத் முதலாவதாக வருகிறது. இதன் பிறகு, தைத்திரீய உபநிஷத், மாண்டூக்ய உபநிஷத், முண்டக உபநிஷத் ஆகியவை வருகின்றன. உப என்றால் “அருகில்” என்று பொருள். இந்த அறிவு உங்களை கிருஷ்ணருக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

குறைவற்ற அறிவு

பண்டிதர்களான ஆச்சாரியர்கள் வேத அறிவை பிரமாணமாக (சான்றாக) ஏற்கின்றனர். இவை பரிசோதித்து அறியப்படும் அறிவல்ல. இவை பக்குவமற்ற புலன்களை உடையவர்களும் உள்ளது உள்ளபடி காண முடியாதவர்களுமான, களங்கமுற்ற, கட்டுண்ட ஆத்மாக்களின் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட அறிவல்ல. கட்டுண்ட நிலையிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், “இஃது இப்படி இருக்கலாம்,” “அப்படி இருக்கலாம்,” என்று வெறுமனே கோட்பாடுகளை வகுக்கின்றனர். இவர்களால் இவ்வாறு யூகிக்க மட்டுமே முடியும். இஃது அறிவே இல்லை. அறிவு என்பது உறுதியாக இருக்க வேண்டும், அதில் எந்தத் தவறும் இருக்கக் கூடாது.
தவறிழைத்தல், மாயையின் வசப்படுதல், குறைபாடுடைய புலன்களைக் கொண்டிருத்தல், ஏமாற்றுதல் ஆகியவை நான்கும் கட்டுண்ட ஆத்மாவின் குறைபாடுகளாகும். பகவத் கீதையைப் புரிந்துகொள்ளாத நபர் அதற்கு விளக்கம் எழுதுதல் மக்களை ஏமாற்றுவதாகும். ஏனெனில், அவர் தன்னை பண்டிதனாக நினைத்துக் கொண்டு, பகவத் கீதையின் பிரசித்திபெற்ற தன்மையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும்பொருட்டு, பகவத் கீதைக்கு தனது சொந்த விளக்கங்களை எழுதுகின்றார்.
அவரைப் போன்றோர் கீதைக்கு யார் வேண்டுமானாலும் கருத்தை வழங்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வழிமுறை அன்று. உங்களது சொந்த கருத்தை அங்கே வழங்க முடியாது. உதாரணமாக, நான் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்பவன், என்னால் எவ்வாறு மருத்துவத் துறையில் கருத்துரைக்க முடியும்? அது நகைப்பிற்குரியதாகிவிடும். எனது எல்லையை அறிந்து, எனது துறையில் மட்டுமே நான் கருத்துரைக்க வேண்டும். அதை விடுத்து, மருத்துவ சிகிச்சைகள் அல்லது சட்டக் குறிப்புகளைப் பற்றி என்னால் எவ்வாறு பதிலளிக்க முடியும்?

குருவின் அவசியம்

உண்மையான அறிவைப் பெற தகுதி வாய்ந்த குருவை நாடிச் செல்ல வேண்டும். தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத், “விஷயங்களை முறையாகப் புரிந்துகொள்ள, வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவரும் பூரண உண்மையிடம் அசையாத பக்தியுடையவருமான ஆன்மீக குருவைப் பணிவாக அணுக வேண்டும்.” (முண்டக உபநிஷத் 1.2.12) மேலும், பகவத் கீதையில் (4.34) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,
தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்
ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
“ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் வினாக்களை எழுப்பி அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” நீங்கள் தன்னுணர்வு பெற்ற தத்த்வ-தர்ஷிகளை அணுக வேண்டும்.
நாம் படித்த ஈஷோபநிஷத் மந்திரத்தில், அவித்யயா ம்ருத்யும் என்று கூறப்பட்டுள்ளது, ஆன்மீக குருவை அணுகவில்லையெனில், நீங்கள் அறியாமையில் இருப்பீர்கள். நான் மேற்கோள்காட்டிய முண்டக உபநிஷத் மந்திரத்திலுள்ள கச்சேத் என்னும் சொல்லுக்கு, “அவசியம் அணுக வேண்டும்” என்று பொருள். “நான் ஆன்மீக குருவை ஏற்கலாம், அல்லது ஏற்காமல் இருக்கலாம். எத்தனையோ புத்தகங்கள் உள்ளன, நான் அவற்றின் மூலமாகவே கற்றுக்கொள்வேன்,” என்று ஒருவன் சிந்திக்க இயலாது. ஆன்மீக அறிவைப் பெற ஆன்மீக குருவிடம் செல்ல வேண்டியது அவசியம்; இல்லையெனில், நீங்கள் அவித்யா எனப்படும் அறியாமையில் இருப்பீர்கள்.

குரு மற்றும் கிருஷ்ணரின் கருணை

வித்யாம் அவித்யாம் ச, அறிவும் அறியாமையும் ஒளி மற்றும் இருளைப் போன்று இரண்டு பக்கங்களாக இருக்கின்றன. மாயை என்றால் என்ன, கிருஷ்ணர் என்றால் என்ன ஆகிய இரண்டு விஷயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய அறிவு பக்குவமடையும்.
நீங்கள் கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தால், மாயை என்றால் என்ன என்பதைத் தானாகவே அறிந்துகொள்வீர்கள். கிருஷ்ணர் உள்ளிருந்து உங்களுக்கு அறிவை வழங்குவார். சைதன்ய சரிதாம்ருதம் (மத்திய லீலை 19.151) கூறுகிறது, குரு-க்ரிஷ்ண-ப்ரஸாதே பாய பக்தி-லதா-பீஜ, ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரின் கருணையால், ஒருவன் பக்தித் தொண்டினுள் நுழைகிறான். இஃது எப்படி? கருணை என்பது இணை கோடுகளைப் போல செயல்படுகிறது எவ்வாறெனில்; உங்களுக்கு இன்னும் ஆன்மீக குரு கிடைக்காவிட்டாலும்கூட, நீங்கள் ஆர்வத்துடன் இருப்பீர்களானால், கிருஷ்ணரே உங்களை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடம் அழைத்துச் செல்வார்; அதுபோலவே, உங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரு கிடைத்திருந்தால் அவரும் உங்களை கிருஷ்ணரிடம் அழைத்துச் செல்வார்.
கிருஷ்ணர் எப்போதும் உங்களது இதயத்தில் ஆன்மீக குருவாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு சைத்ய-குரு என்று பெயர். இதயத்திலுள்ள இந்த சைத்ய-குரு, வெளியில் ஆன்மீக குருவாக வெளிப்படுகின்றார். ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் எழுதியுள்ளார், ஸாக்ஷாத்-தரித்வேன ஸமஸ்த-ஷாஸ்த்ரைர் உக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி:, ஸாக்ஷாத் என்றால் “நேரடியாக” என்று பொருள். ஆன்மீக குருவானவர் கிருஷ்ணரின் நேரடி பிரதிநிதியாவார், இதுவே அனைத்து சாஸ்திரங்களின் தீர்ப்பு, ஸமஸ்த-ஷாஸ்த்ரைர். மேலும், இது தலைசிறந்த ஆச்சாரியர்கள் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது, ஸத்பி:.

வித்யா மற்றும் அவித்யா

வித்யா மற்றும் அவித்யா என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டும். அவித்யா என்பது பௌதிக அறிவைக் குறிக்கிறது. பக்திவினோத தாகூர் பாடுகின்றார், ஜட-வித்யா ஜத, மாயார வைபவ, “பௌதிக அறிவில் முன்னேறுவதன் மூலமாக மாயையின் வைபவம் அதிகரிக்கப்படுகிறது.” நீங்கள் பௌதிக அறிவில் அதிகமாகச் சிக்கிக்கொள்ளும்போது, கிருஷ்ண உணர்வை சிறிதளவே புரிந்துகொள்ள முடியும். பௌதிக அறிவில் மிகவும் முன்னேறியுள்ளதாகக் கருதுபவர்கள், “இஃது என்ன கிருஷ்ண பக்தி இயக்கம்?” என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு இதில் நாட்டமில்லை. உதாரணமாக, தொழில்நுட்பத்தைக் கற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய இளைஞர்கள், “நாம் எதற்காக கிருஷ்ண உணர்வில் ஆர்வம்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த விஷயங்களை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இந்தியாவில் அவர்கள் புறக்கணித்த விஷயங்களை, நான் அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைகின்றனர்.
நவீன இந்தியா ஆன்மீக ஞானத்தைப் புறக்கணித்ததால் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். மேற்கத்திய தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று இந்தியர்கள் நினைக்கின்றனர். இத்தகைய சிந்தனையே மாயை. நம்மைவிட தொழில்நுட்பத்தில் முந்நூறு மடங்கு முன்னேறியவர்களிடம் அப்படி என்ன இருக்கிறது என்பதை அவர்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் இவற்றை ஆராய்வதில்லை.

இந்தியர்களின் அறிவு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போன்று இந்தியாவினால் தொழில்நுட்பத்தில் முன்னேற முடியாது; ஏனெனில், மேற்கத்தியர்கள் அதில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், படைப்பின் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவின் பண்பாடு ஆன்மீகப் பண்பாடாக இருந்து வந்துள்ளது. வியாஸதேவரைப் பாருங்கள். அவரே வேத ஞானத்தின் ஆதி குரு ஆவார். அவர் எவ்வாறு வாழ்ந்தார்? இமயமலையிலுள்ள பத்ரிகாஷ்ரமத்தில் ஒரு குடிசையில் வாழ்ந்தார். ஆனால் அவரது அறிவைப் பாருங்கள்! அவர் பல புராணங்களை எழுதியுள்ளார், அவற்றில் ஒன்று பாகவத புராணம். வேதாந்த தத்துவமான மஹாபாரதத்திலுள்ள ஒவ்வொரு ஸ்லோகத்தையும் உங்களது வாழ்நாள் முழுவதும் படிக்கலாம். அவர் சில நூல்களில் 1,00,000 ஸ்லோகங்களை எழுதியுள்ளார், மேலும் பல நூல்களில் 20,000 அல்லது 25,000 ஸ்லோகங்களுக்கு குறையாமல் எழுதி உள்ளார். ஒவ்வொரு ஸ்லோகமும் நமது வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டிய அளவிற்கு அர்த்தம் நிறைந்தது.
இதுவே வேத கலாச்சாரம். வேத கலாச்சாரத்திலுள்ள அறிவிற்கு இணையாக எதுவுமில்லை. இதில் ஆன்மீக ஞானம் மட்டுமின்றி, வானியல், கணிதம் போன்ற மற்ற துறைகளின் ஞானமும் நிறைந்துள்ளது. பழங்காலத்தில் விமானங்கள் இல்லை என்று நினைக்க வேண்டாம். விமானங்கள் பற்றிய தகவல்களை நாம் புராணங்களிலிருந்து பெறுகிறோம்; மிகவும் சக்தி வாய்ந்த, வேகமாகச் செல்லக்கூடிய அந்த விமானங்களைக் கொண்டு, மற்ற கிரகங்களை மிக எளிதாகச் சென்றடைய முடிந்தது. அர்ஜுனன் ஸ்வர்க லோகத்திற்குச் சென்றதைக் காண்கிறோம்.
வேத கால மக்கள் பௌதிக அறிவில் முன்னேறியவர்களாக இருக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். வேத கால செல்வச் செழிப்பு தற்போதைய நிலையைவிட மிகவும் அதிகமாக இருந்துள்ளது. ஒவ்வொரு சாதாரண மனிதனிடமும் தங்கம் மற்றும் இதர ஆபரணங்கள் இருந்தன; அரசர்கள் மற்றும் செல்வந்தர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அதாவது, வேத காலத்திலும் பெளதிக முன்னேற்றம் இருந்தது, ஆனால் மக்கள் அதற்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்கள் ஆன்மீக ஞானத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தனர்.

உண்மையான அறிவைப் பரப்புங்கள்

பௌதிக அறிவு, தேசியவாதம், பொதுவுடைமைவாதம் இவையனைத்தும் காலத்தை வீணடிக்கின்றன. வேத அறிவும் கிருஷ்ணரைப் பற்றிய அறிவுமே உண்மையான அறிவாகும். பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே, உண்மையான அறிவுடையவன், பற்பல பிறவிகளுக்குப் பின் கிருஷ்ணரிடம் சரணடைகிறான். அவன் வாஸுதேவ: ஸர்வம் இதி, “வாஸுதேவராகிய கிருஷ்ணரே எல்லாம்,” என்பதைப் புரிந்துகொள்கிறான்.
நாம் இந்த ஞானத்தை எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக விநியோகிக்க முயல்கிறோம். நமது நோக்கம் தலைசிறந்தது. நீங்கள் இந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் இந்த மிகவுயர்ந்த விஷயத்தை மனித சமுதாயத்திற்கு வழங்குகிறோம். இதனை முழுமையாகப் புரிந்துகொண்டு விநியோகிக்க முயலுங்கள். அஃது உங்களை கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராக்கும். கிருஷ்ணர் பகவத் கீதையில் (18.69) கூறுகிறார், ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம, “கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவை பிரச்சாரம் செய்பவனைவிட எனக்கு பிரியமான நபர் வேறு எவரும் இல்லை.” எனவே, நீங்கள் விரைவாக கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவராக விரும்பினால், உடனடியாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை சிறப்பாக பிரச்சாரம் செய்யுங்கள். மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives