பகவத் கீதை உரைக்கும் உன்னத தகவல்கள்
மறுபிறவி குறித்து உலகின் பல்வேறு அறிஞர்களும் வல்லுநர்களும் தெரிவித்துள்ள கருத்துகளில் சிலவற்றை சென்ற இதழில் கண்டோம். அதுகுறித்து பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இந்த இதழில் காண்போம்.
உலக அறிஞர்கள் தங்களது சிந்திக்கும் திறனால் மறுபிறவியைப் பற்றி ஓரளவிற்கு அறிந்துள்ளபோதிலும், இதுபற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள விரும்புவோர் இதற்கான மூல நூலைத் தேட வேண்டும். இன்று கிடைக்கக்கூடிய எல்லா நூல்களிலும் இந்தியாவின் சமஸ்கிருத நூல்களே மிகவும் பழமையானவை. இந்நூல்கள் மறுபிறவியின் விஞ்ஞானத்தை அனைவருக்கும் புரியும்படி தத்துவரீதியாக விளக்குகின்றன. அவற்றிலுள்ள கருத்துகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பயனுள்ளதாக, அனைவரையும் கவரக்கூடியதாக இருந்து வந்துள்ளன.
மறுபிறவியைப் பற்றிய மிகவும் அடிப்படையான தகவல்கள், உபநிஷத் உட்பட எல்லா வேத ஞானங்களின் சாரமாகத் திகழும் பகவத் கீதையில் பொதிந்துள்ளன. வட இந்தியாவின் ஒரு போர்க்களத்தில் தனது நண்பனும் சீடனுமான அர்ஜுனனிடம் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் ஐம்பது நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது பேசப்பட்டது. மறுபிறவியைப் பற்றிய உரையாடலுக்கு போர்க்களம் மிகச்சிறந்த இடமே. ஏனெனில், வாழ்க்கை, மரணம், மறுவாழ்க்கை போன்ற கேள்விகளைப் படைவீரர்கள் இங்குதான் நேரடியாக எதிர்கொள்கின்றனர்.
ஆத்மாவின் அழிவற்ற தன்மையைப் பற்றி கிருஷ்ணர் பேசத் தொடங்கியபோது, “நானோ, நீயோ, இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை,” (பகவத் கீதை 2.12) என்று அர்ஜுனனிடம் கூறினார். கீதை (2.17) மேலும் அறிவுறுத்துவது யாதெனில், “உடல் முழுவதும் பரவியிருப்பதை அழிவற்றதென்று நீ அறிய வேண்டும். அந்த அழிவற்ற ஆத்மாவைக் கொல்லக்கூடியவர் எவருமில்லை.” இங்குள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, ஆத்மா என்பது மனிதனின் மனம் மற்றும் புலன்களின் வரம்பிற்கு அப்பாற்பட்ட சூட்சுமமான ஒன்று என்பதை நாம் அறியலாம். எனவே, ஆத்மாவின் இருப்பை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. “சிலர் ஆத்மாவை ஆச்சரியமாகப் பார்க்கின்றனர், சிலர் அவனை ஆச்சரியமானவனாக வர்ணிக்கின்றனர், மேலும் சிலர் அவனை ஆச்சரியமானவனாகக் கேட்கின்றனர். வேறு சிலரோ, அவனைப் பற்றிக் கேட்ட பின்னும், அவனைப் புரிந்துகொள்ள இயலாதவராக உள்ளனர்,” என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் (பகவத் கீதை 2.29) தெரிவிக்கின்றார்.
இருப்பினும், ஆத்மாவின் இருப்பை ஏற்றுக்கொள்வது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. நமது அறிவிற்கும் தர்க்கத்திற்கும் பொருந்தும்படியான சான்றுகளை பகவத் கீதை நம் முன் வைக்கின்றது. எனவே, கீதையின் போதனைகளைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும் உதாரணத்தைக் கொண்டு கீதை (13.34) உதவி செய்கிறது: “ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறான்.”
உடலினுள் ஆத்மா உள்ளது என்பதற்கு உணர்வே உறுதியான அடையாளமாகும். மேகமூட்டமான நாளில் சூரியன் கண்களுக்குத் தெரியாமல் போகலாம், ஆனால் சூரியஒளியை வைத்து வானில் சூரியன் இருப்பதை நாம் அறிவோம். அதுபோல ஆத்மா இருப்பதை நம்மால் நேரடியாக உணர முடியாவிட்டாலும், உணர்வு இருப்பதை வைத்து ஆத்மாவின் இருப்பை அறிந்துகொள்ளலாம். உணர்வு இல்லாவிடில், உடலானது வெறும் ஜடப் பொருட்களின் கலவையே. உணர்வு இருப்பதால் மட்டுமே இந்த ஜடப் பொருட்கள் சுவாசிக்கின்றன, பேசுகின்றன, அன்பு செலுத்துகின்றன, அச்சமடைகின்றன. சாரம் என்னவெனில், உடல் என்பது ஆத்மா தனது அளவற்ற ஜட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் ஒரு வாகனமே. உடலுக்குள் இருக்கும் உயிர்வாழி, “ஜட சக்தியால் உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தில் அமர்ந்துள்ளான்,” என்று கீதை (18.61) விளக்குகின்றது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகரும் காற்றானது அங்குள்ள நறுமணத்தைத் தாங்கிச் செல்வதுபோல, ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்குச் செல்லும் ஆத்மாவானது பழைய உடலின் எண்ணங்களைத் தாங்கிச் சென்று, தன்னைத் தவறாக உடலுடன் அடையாளம் கொள்கின்றது. ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி இயங்காததுபோல, ஆத்மா இல்லாமல் ஜடவுடல் இயங்க முடியாது.
ஒருவர் வயதில் முதிர்ச்சி பெறும்போது ஆத்மாவிற்கும் ஜடவுடலுக்கும் இடையிலான வேறுபாட்டினை மேலும் தெளிவாக உணரலாம். தனது வாழ்நாளிலேயே உடலானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதை அவரால் காண முடியும். உடல் நிலைத்திருப்பது இல்லை, பிள்ளைப் பருவம் நிலையற்றது என்பதை காலம் நிரூபிக்கிறது. உடலானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி, வளர்ந்து, பருவமடைந்து, விளைபொருட்களை (பிள்ளைகளை) உற்பத்தி செய்து, படிப்படியாக வலிமை குன்றி, இறுதியில் மடிகின்றது. இவ்வாறாக ஜடவுடல் என்பது உண்மையற்றதாக, காலப்போக்கில் மறையக்கூடியதாக உள்ளது. “நிலையற்றதற்கு நீடிப்பு இல்லை,” என்று கீதை (2.16) இதனை விளக்குகிறது. ஆனால், ஜடவுடலில் ஏற்படும் இவ்வெல்லா மாற்றங்களுக்கு மத்தியிலும், உணர்வு, அதாவது ஆத்மாவின் அறிகுறி மட்டும் மாறாமல் இருக்கின்றது. (“நித்தியமானதற்கு மாற்றமில்லை”) எனவே, உணர்வானது நிலையான தன்மையைக் கொண்டுள்ளது என்றும், அத்தன்மையினால் உடல் அழிந்த பின்பும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும் என்றும் நாம் தர்க்கரீதியான முடிவுக்கு வரலாம். இதுகுறித்து கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுவது யாதெனில், “ஆத்மாவிற்கு எக்காலத்திலும் பிறப்போ இறப்போ கிடையாது… உடல் கொல்லப்படும்போது அவன் கொல்லப்படுவதில்லை.” (பகவத் கீதை 2.20)
இருப்பினும், “உடல் அழியும்போது ஆத்மா அழிவதில்லை” என்றால், ஆத்மாவிற்கு என்னவாயிற்று? ஆத்மா மற்றோர் உடலுக்குள் பிரவேசிக்கின்றது என்ற பதிலை பகவத் கீதையில் காணலாம். இதுவே மறுபிறவி எனப்படுகிறது. இக்கருத்தினை ஏற்பது சிலருக்கு கடினமாக இருக்கலாம், ஆனால் இதுவே இயற்கையின் நியதி. இதை நாம் புரிந்துகொள்வதற்கு பகவத் கீதை (2.13) யதார்த்தமான உதாரணங்களைத் தருகின்றது: “உடலானது குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்திற்கும் முதுமைக்கும் மாறும்போது அவ்வுடலிலிருக்கும் ஆத்மாவும் தொடர்ந்து உடன் செல்கிறது. அதுபோல இறப்பின்போது ஆத்மா மற்றொரு உடலுக்குச் செல்கிறது. ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய மனிதன் இவ்வித மாற்றத்தினால் திகைப்பதில்லை.”
வேறு விதமாகக் கூறினால், மனிதன் தனது ஒரு வாழ்நாளிலேயே மீண்டும் மறுபிறவி எடுக்கிறான். உடலில் உள்ள உயிரணுக்கள் தொடர்ந்து மடிகின்றன என்றும் புதுப்புது அணுக்களால் மாற்றப்படுகின்றன என்றும் எந்த உயிரியல் வல்லுநரும் உங்களுக்குக் கூறுவார். நமது தற்போதைய வாழ்விலேயே நாம் எண்ணற்ற வேறுபட்ட உடல்களைப் பெற்றுள்ளோம். இளைஞனின் உடல், அவன் குழந்தைப் பருவத்தில் பெற்றிருந்த உடலைவிட முற்றிலும் வேறுபட்டது. உடலில் மாற்றம் ஏற்பட்டபோதிலும், அதனுள் இருக்கும் ஆத்மா மாறாமல் இருக்கிறான். இதே போன்ற நிகழ்ச்சியே மரணத்தின்போதும் ஏற்படுகிறது. “பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய, உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது.” (பகவத் கீதை 2.22) இவ்வாறாக பிறப்பு, இறப்பு என்னும் முடிவற்ற சுழற்சியில் ஆத்மா சிக்கிக் கொண்டுள்ளான். “பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே” (பகவத் கீதை 2.27) என்று அர்ஜுனனிடம் பகவான் கூறுகிறார்.
வேதங்களின்படி, நுண்ணுயிரியில் தொடங்கி, மீன்கள், தாவரங்கள், பூச்சிகள், ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என 84,00,000 வகையான உயிரினங்கள் உள்ளன. தத்தமது விருப்பப்படி உயிர்வாழிகள் இத்தகைய உயிரினங்களில் இடைவிடாது பிறக்கின்றன.
ஆத்மா புதுப்புது உடல்களுக்கு மாற்றம் பெறுவதற்கு உந்து சக்தியாக விளங்குவது மனமே. “ஒருவன் தனது உடலை விடும்போது எந்த நிலையை எண்ணுகின்றானோ, ஐயமின்றி அந்நிலையை அவன் (அடுத்த பிறவியில்) அடைகிறான்,” என்று கீதை (8.6) விளக்குகின்றது. நமது வாழ்வில், நாம் எதையெல்லாம் நினைத்திருந்தோமோ செய்தோமோ, அவையெல்லாம் மனதில் பதிகின்றன. அந்த மொத்தப் பதிவானது, மரணத்தின்போது நமது எண்ணத்தைத் தீர்மானிக்கின்றது. இந்த எண்ணங்களின் தகுதிக்கேற்ப, தகுந்த உடலை ஜட இயற்கை நமக்கு வழங்குகின்றது. எனவே, நம்முடைய தற்போதைய உடல், கடந்த முறை நாம் இறந்தபோது நமக்கு இருந்த உணர்வின் வெளிப்பாடாகும்.
“இவ்வாறு வேறொரு ஸ்தூல உடலைப் பெறும் உயிர்வாழி, மனதை மையமாகக் கொண்டுள்ள ஒரு குறிப்பிட்ட விதமான காது, கண், நாக்கு, மூக்கு, தொடுபுலன் ஆகியவற்றை அடைகிறான். இதன் மூலம் குறிப்பிட்ட புலனின்ப விஷயங்களை அவன் அனுபவிக்கின்றான்” என்று கீதை (15.9) விளக்குகின்றது. மேலும், மறுபிறவியின் பாதை எப்போதும் உயர்வை நோக்கிச் செல்வதில்லை; அடுத்த பிறவியில் மனிதனாகப் பிறப்பதற்கான உத்தரவாதம் மனிதனுக்கு தரப்படுவதில்லை. உதாரணமாக, நாயின் மனநிலையில் ஒருவன் மரணமடைந்தால், அவன் தனது அடுத்த பிறவியில் நாயின் கண்கள், காதுகள், மூக்கு முதலியவற்றைப் பெற்று நாய்க்குரிய சுகத்தை அனுபவிப்பான். அந்த துரதிர்ஷ்டமான ஆத்மாவின் விதியை, “தமோ (அறியாமை) குணத்தில் மரணமடைபவன் மிருக இனத்தில் பிறவியெடுக்கிறான்,” என்று கூறி பகவான் கிருஷ்ணர் (பகவத் கீதை 14.15) உறுதி செய்கிறார்.
பகவத் கீதையின்படி, ஜடத்திற்கு அப்பாற்பட்ட உன்னத இயற்கையைப் பற்றி மனிதர்கள் அறிந்துகொள்ளாவிடில், கர்மத்தின் சட்டங்களால், அவர்கள் சில நேரங்களில் மனிதர்களாகவும், சில நேரங்களில் மிருகங்களாகவும், வேறு சில நேரங்களில் செடிகள், பூச்சிகள் என்று மீண்டும் பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்னும் சுழற்சியில் தொடர்கின்றனர்.
நாம் நம்முடைய தற்போதைய பிறவியிலும் முந்தைய பிறவியிலும் செய்த பல்வேறு கர்மத்தின் விளைவுகள் நமது தற்போதைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. இவ்வாறு பௌதிகத்தில் பந்தப்பட்டுள்ள ஜீவன் இதிலிருந்து தப்பிப்பதற்கான வழியினை மனித உடல் வழங்குகிறது. மனிதப் பிறவியை முறையாகப் பயன்படுத்துவதால், பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் என்னும் வாழ்வின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, மறுபிறவிகள் என்னும் முடிவற்ற சுழற்சியை உடைத்தெறியலாம். ஆனால் மனிதப் பிறவியை அடைந்த ஜீவன், புலனின்பச் செயல்களில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை வீணடித்தால், ஆயிரமாயிரம் பிறவிகளில் தன்னை பந்தப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான கர்மத்தினை அவனால் எளிதில் உருவாக்கிவிட முடியும். அவனது அத்தகு பிறவிகள் மனிதப் பிறவியாக இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது.
பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்: “முட்டாள்கள், உயிர்வாழி எவ்வாறு தனது உடலைக் கைவிடுகிறான் என்பதையோ, இயற்கை குணங்களின் மயக்கத்தின் கீழ் எத்தகு உடலை அவன் அனுபவித்துக் கொண்டுள்ளான் என்பதையோ புரிந்துகொள்ள முடியாது. ஆனால் யாருடைய கண்கள் ஞானத்தில் பயிற்சி பெற்றுள்ளதோ அவரால் இவையனைத்தையும் காண முடியும். தன்னுணர்வில் நிலைபெற்று முயற்சி செய்யும் ஆன்மீகவாதிகள் இவற்றையெல்லாம் தெளிவாகக் காண முடியும். ஆனால் வளர்ச்சி பெறாத மனமுடையவர்களும் தன்னுணர்வில் நிலைபெறாதவர்களும், முயற்சி செய்தாலும் கூட என்ன நடக்கிறது என்பதைக் காண இயலாது.” (பகவத் கீதை 15.10-11)
மனித உடலைப் பெறும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஜீவன், தன்னை அறிவதற்கும், மறுபிறவியின் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கும், பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தீவிர முயற்சி செய்ய வேண்டும். அம்முயற்சியின்றி நாம் இருத்தல் கூடாது.