பாரதப் பண்பாட்டில் பெண்களின் பங்கு

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

வழங்கியவர்: திருமதி. கீத கோவிந்த தாஸி

நிலையான, மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் பெண்கள் தூண்களைப் போன்றவர்கள். பாரதப் பண்பாட்டில், பெண்மை என்பது, மரியாதை, பெருமை, கற்பு, வீடு, குடும்பம், அன்பையும் பாதுகாப்பையும் கொடுக்கும் கணவன், களங்கமில்லாத குழந்தைகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. பெண் தனது இளம் பருவத்தில் பொறுப்பான தந்தையாலும், திருமணத்திற்குப் பிறகு கணவனாலும், முதுமையில் வளர்ந்த மகன்களாலும் பாதுகாக்கப்படுகிறாள்–இதுவே பாரதத்தின் வேதப் பண்பாடு.

பாரம்பரியக் கொள்கைகள் அனைத்தும் பாழாகி வரும் இத்தருணத்தில், பெண்களுடைய கடமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை, யாரும் கேட்பதில்லை, யாரும் நினைத்துப் பார்ப்பதும் இல்லை. “பெண் விடுதலை,” “பெண் உரிமை,” “பெண் புரட்சி,” “பெண் கல்வி” என பல்வேறு விஷயங்கள் சமுதாயத்தில் நிறைந்துள்ளன. இவையனைத்தும் உண்மையில் பெண்மைக்கு நன்மை செய்துள்ளனவா என்றால், சற்று யோசிக்கக்கூடியவர்களின் பதில் நிச்சயம் “இல்லை” என்பதே.

வளர்ந்து வரும் பிரச்சனைகள்

பெண்கள் பெண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது அவர்களது இயற்கைக்குப் புறம்பானதாகும், தற்போதைய நவீன உலகில் அதிகமான பெண்கள் தங்களது இயற்கைக்கு மாறான பாதையில் செல்வதால், பாதுகாப்பின்றி மாசுபடிந்து நிற்கின்றனர். திருமணத்திற்கு முன்பான பாலுறவு, கருச்சிதைவு, தேவையற்ற குழந்தைகள், ஒரு பெற்றோர் கொண்ட குடும்பங்கள், பாலியல் பலாத்காரங்கள் போன்ற பற்பல தீவிரமான பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.

பெண் கல்வி

பெண்களுக்கான கல்வியில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு போன்ற குணங்கள் கற்பிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய கல்விமுறையோ இவை இருக்கக் கூடாது என்ற ரீதியில் அமைந்துள்ளது. எவ்வாறு தன்னிச்சையாக, மனம்போனபோக்கில் செயல்படுவது என்பதையே இன்றைய பெண்கள் கற்றுக் கொள்கிறார்கள். ஆண்களுக்கான கல்வி பிரம்மசரியம் என்றும், பெண்களுக்கான கல்வி கற்பு என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய கல்வி முறை ஆண்களையும் பெண்களையும் ஒன்றாகப் படிக்க வைத்து பிரம்மசரியம், கற்பு ஆகிய இரண்டையும் ஏறக்குறைய இல்லாமல் ஆக்கிவிட்டது.

வேலைக்குச் செல்லும் பெண்கள்

கல்வி கற்கும் பெண்கள் இயற்கையாகவே நவ நாகரிக வாழ்க்கையை விரும்புகின்றனர். அத்தகு வாழ்க்கைக்கு அதிகமான பணம் தேவைப்படுவதால், கணவன் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை. பெண்கள் வேலைக்குச் சென்று, அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, பல்வேறு வசதிகளைப் பெறலாம், ஆனால் பாதுகாப்பைப் பெற இயலாது. வீட்டில் ஓர் ஆணுக்கு பதில் சொல்ல மறுப்போர், வெளியில் பல ஆடவருக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை. மேலும், பணம் சம்பாதிப்பதால் தாங்கள் கணவனுக்குச் சமமானவர்கள், அல்லது சில நேரங்களில் (அதிகம் சம்பாதித்தால்) கணவனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற அகங்காரம் மேலெழுகின்றது. இவற்றையெல்லாம் உணராமல், குடும்பத்திற்கு முக்கியத்துவம் தராமல், வேலைக்கு முக்கியத்துவம் தருவதால், பல்வேறு குடும்பங்கள் நிலையற்று சிதறிப் போவதையும் குழந்தைகள் அன்பின்றி வளர்வதையும் காண்கிறோம்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளுக்கு (குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில்) தாயாகச் செயல்படுவது யார் என்று பார்த்தால், குழந்தைகள் காப்பகமும் தாதியரும்தான். தாய் தந்தையரும் போதிய உறவு கொள்ளாத அக்குழந்தைகள் சற்று வளர்ந்த பின்னர், தொலைக்காட்சிப் பெட்டியும் கணிப்பொறியும் அவர்களின் பெற்றோராகி விடுகின்றன. இதனால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். தாயின் அன்பின்றி வளரும் குழந்தைகள் நிச்சயம் முறையாக வளர இயலாது.

 

 

கவர்ச்சியான ஆடைகளும் ஆடம்பர வாழ்க்கையும்

ஒழுங்கான, ஒழுக்கமான சமுதாயத்தைப் பற்றிய துளியும் அறிவற்ற மேற்கத்திய நாடுகளில் உடலின் அழகைப் பராமரிப்பதே பெண்களின் தலையாய கடமை என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியர்களும் அவர்களைப் பின்தொடர்வதால், அழகு நிலையங்கள், அழகிப் போட்டிகள், விளம்பர நிறுவனங்கள் போன்றவை இந்தியாவிலும் வளர்ந்து, வேத கலாச்சாரத்தைச் சீரழித்து வருகின்றன.

மேற்கத்திய ஆடைகள் அணிவதையும் தலைவிரித்த கோலமாக வெளியில் செல்வதையும் இன்றைய பெண்கள் “பேஷன்” என்று பெருமையாக நினைக்கிறார்கள். பெண்கள் தலையை விரித்தபடி வெளியில் செல்லக் கூடாது என்றும், அவ்வாறு செல்லும் பெண்களின் மூளை பிசாசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு குடும்பத்திற்கு அமங்களத்தைக் கொடுக்கும் என்பதையும் இன்றைய பெண்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது? குங்குமமோ திலகமோ இடாமல் பாழ் நெற்றியாக இருப்பது மாபெரும் பிழை என்பதை இவர்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது? அரைகுறையாக உடையுடுத்தி அழகைக்(?) காட்டும் ஆண்/பெண் அடுத்த பிறவியில் மரமாகப் பிறப்பார்கள் என்பதை எவ்வாறு புரிய வைப்பது? அரை நிஜார் அணிந்து வேகமாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் பெண்களின் நிலை என்ன?

“தூய்மை வெளித்தோற்றத்தில் இல்லை, மனதில்தான் உள்ளது” என்று சிலர் வாதிடலாம். ஆனால், “ஆள்பாதி ஆடை பாதி” என்ற பழமொழியை மறந்துவிடலாமா? ஒருவரின் வெளித்தோற்றம் அவரது மனதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. சூட்சுமமான விதத்தில் காமத்தைத் திருப்தி செய்ய விரும்புவோர் அரைகுறை உடைகளை அணிகின்றனர், அதனை அனுபவிக்க விரும்புவோர் அவற்றை ஆதரிக்கின்றனர்.

தனித்து வாழும் பெண்களின் பிரச்சனைகள்

ஒரு பெண் தனது கணவனை விட்டு விலகும்போதும், படிப்பதற்காகவும் வேலைக்காகவும் வெளியில் செல்லும்போதும், அவர்களுக்கு அரசாங்கமும் சமுதாயமும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பின்றியே இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் இடங்களில் உடனிருக்கும் ஆண்களோடு நெருங்கிப் பழகுவதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. பெண்கள் ஆண்களைவிட ஒன்பது மடங்கு அதிகமான உணர்ச்சி உடையவர்கள் என்று ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. உணர்ச்சி உடையவர்கள் என்பதால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, திருமணம் செய்து கணவனின் பாதுகாப்பில் இருத்தல் பெண்களுக்கு மிகமிக அவசியம்.

தீர்வுதான் என்ன?

பெண்கள் தன்னிச்சையாக செயல்படுவதை பாரதப் பண்பாடு ஆதரிக்கவில்லை. பெண்கள் மட்டுமல்ல, பாரதப் பண்பாட்டில் யாருமே தன்னிச்சையாகச் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவரைச் சார்ந்தே வாழ வேண்டும். வேலை செய்வோர் தங்களது எஜமானரையும், எஜமானர் நாட்டின் உயர்ந்த நிர்வாகிகளையும், நிர்வாகி என்பவர் அறிஞர்களாலும் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தனர். அதன்படி, பெண் என்பவள் ஆரம்பத்தில் தனது தந்தையாலும் பின்னர் கணவனாலும், இறுதியில் வளர்ந்த மகன்களாலும் பாதுகாக்கப்பட வேண்டியவள். எனவே, அனைத்துப் பெண்களும் முறையாக திருமணம் செய்து கொண்டு உரிய பாதுகாப்பைப் பெற வேண்டும்.

பெண்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடுகள்?

பெண்களுக்கு மட்டும் அதிகமான கட்டுப்பாடுகள் ஏன் என்று ஒருவர் கேட்கலாம். உடல் மற்றும் மன ரீதியாகப் பார்த்தால் ஆண், பெண் இருபாலருக்கு மத்தியில் பல்வேறு வேற்றுமைகள் உள்ளன. பெண்களிடம் உள்ள சில தனித்தன்மைகளை மாற்ற இயலாது–உதாரணமாக, குழந்தைகளைச் சுமந்து பாலூட்டுதல் என்னும் தன்மை யினைப் பெண்களிடமிருந்து எந்த காலக்கட்டத்திலும் மாற்ற இயலாது. நாங்கள் ஆண்களுக்கு சமம் என்று பெண்கள் கூறலாம், வாதிடலாம்–பல்வேறு துறைகளிலும் முன்னேறலாம். ஆனால் கர்ப்ப காலத்தில் அவர்களால் தன்னிச்சையாக இயங்க முடியாதே, மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறதே.

அனைவரும் சமம், அனைவருக்கும் சம உரிமை போன்றவை கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாகத் தோன்றலாம். ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் பாரதப் பண்பாட்டில் மட்டுமன்றி, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மதங்களிலும் இருப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய பெண்கள் தங்கள் முழு உடலையும் மறைக்கும்படி பர்தா அணிந்தே வெளியில் செல்கின்றனர். இதைப் போலவே அமிஷ் போன்ற கிறிஸ்துவ இயக்கங்களில், பெண்கள் முழுமையான ஆடை அணிவதும் இல்லறத்தில் மட்டும் ஈடுபடுவதையும் இன்றும் காண்கிறோம்.

கற்புடைய பெண்கள் வாழும் நாட்டில் செல்வத்திற்கு பஞ்சமிருக்காது. அவர்கள் “பெய்” என்று சொன்னால் மழை பெய்யும் என்பதை நாம் பல இடங்களில் காண்கிறோம். கற்புடைய பெண்களின் மகிமைகளை சாவித்திரி, சீதை, தமயந்தி, காந்தாரி போன்றோரின் வரலாற்றில் நாம் எளிதில் காணலாம்.

சாணக்கியரின் சில அறிவுரைகள்

மாத்ருவத் பர-தாரேஷு  பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ரவத்

ஆத்மவத் ஸர்வ-பூதேஷு  ய: பஷ்யதி ஸ பண்டித:

“எவனொருவன் மற்றொருவரின் மனைவியைத் தாயாகப் பார்க்கிறானோ, மற்றவரின் சொத்தைக் குப்பையாகப் பார்க்கிறானோ, மற்றவரின் துன்பத்தை தனதாக நினைக்கிறானோ, அவனே பண்டிதன் ஆவான்.” (சாணக்கிய நீதி 10)

ஓர் ஆண் தனது மனைவியைத் தவிர்த்து மற்ற பெண்கள் அனைவரையும் தாயாகக் கருத வேண்டும். இதனால்தான் பாரதப் பண்பாட்டில் அனைத்து பெண்களையும் (வயதானவர்களா இளையவரா என்று பாராமல்) “அம்மா” என்று அழைக்கும் வழக்கம் இருந்து வந்தது. பாரதப் பண்பாட்டினையும் பகவத் பக்தியின் பெருமையையும் பாரெங்கும் பரப்பிய ஸ்ரீல பிரபுபாதர், இஸ்கானில் இருக்கும் பக்தர்கள் தங்களது மனைவியைத் தவிர மற்ற பெண்களை மாதாஜி (அம்மா) என்று அழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தார்.

பக்குவமான சமுதாயத்திற்கான நீதிக் கருத்துகளை அளித்த சாணக்கியர், பெண்களைப் பற்றியும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

சாணக்கியரின் இதர கூற்றுகள்

“எந்தப் பெண் தூய்மையாகவும், திறமையாகவும், கற்புடையவளாகவும், கணவனுக்கு இனிமையானவளாகவும், உண்மையானவளாகவும் இருக்கிறாளோ, அவளே உண்மையான மனைவி.” (சாணக்கிய நீதி 4.13)

“அரசன், பிராமணன், துறவி ஆகியோர் நாடுகளுக்கு இடையில் சுற்றித் திரிந்தால் புகழ் பெறுவர். ஆனால் ஒரு பெண் அவ்வாறு திரிந்தால், அவள் பாழாகி விடுவாள்.” (சாணக்கிய நீதி 6.4)

பெண்கள் தங்களது வீடுகளில் வசித்தபடி, கணவனையும் குழந்தை களையும் பராமரிக்க வேண்டும்–இதுவே அவர்களின் கடமை என்பதை வேத சாஸ்திரங்கள் மட்டுமின்றி சாணக்கியரின் அறிவுரைகளிலிருந்தும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நாரத முனிவரின் சில உபதேசங்கள்

ஸ்ரீமத் பாகவதத்தில் நாரத முனிவர் மாமன்னர் யுதிஷ்டிரருக்கு வழங்கிய அறிவுரைகளிலிருந்து (7.11.25-29) சில குறிப்புகள்:

கற்புடைய பெண்களின் நான்கு முக்கியமான ஒழுக்கங்கள்: (1) கணவனுக்குத் தொண்டு புரிதல், (2) கணவரின் விருப்பத்திற்கு இணங்க நடத்தல், (3) கணவனின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளுதல், (4) கணவன் அனுஷ்டிக்கும் விரதங்களைத் தானும் கடைப்பிடித்தல்.

கற்புடைய பெண்களின் இதர செயல்கள்: வீட்டைத் தூய்மையாக வைத்திருத்தல், கணவனின் மகிழ்ச்சிக்காக அலங்காரம் செய்து கொள்ளுதல், வீட்டிற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து வைத்தல், கணவனுக்கு உண்மையாக நடந்து கொள்ளுதல், இனிய சொற்களைப் பேசுதல், அன்போடு பணிவிடை செய்தல், மற்றும் நேரம் காலத்திற்கேற்ப பொறுப்புடன் நடந்து கொள்ளுதல்.

மேலும், கற்புடைய பெண் பேராசை இன்றி எல்லாச் சூழ்நிலைகளையும் அனுசரித்து திருப்தியுடன் வாழ வேண்டும், வீட்டு வேலைகளை திறமையாகக் கையாள வேண்டும், மற்றும் மதக் கொள்கைகளை நன்கு அறிந்து அதன்படி நடக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதரின் அறிவுரைகள்

வர்ணாஷ்ரம தர்மத்தின் கொள்கைகள் நல்ல சந்ததிகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தில் நன்மக்கள் உருவாகுதல் பெண்களின் கற்பையும் நேர்மையையும் பொறுத்தே அமையும். எனவே, பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று மனு சம்ஹிதை கூறுகிறது. இதன் பொருள், பெண்களை அடிமைகளாக நடத்த வேண்டும் என்பதல்ல. பெண்கள் குழந்தைகளைப் போன்றவர்கள், சுலபமாக தவறான பாதைக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். எனவே, அவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்.

பெண்கள் நல்ல மனைவியாகவும், நல்ல பக்த குழந்தைகளை உருவாக்கும் தாயாகவும் இருக்க வேண்டும் என்று ஸ்ரீல பிரபுபாதர் பலமுறை கூறியுள்ளார். கணவனைப் பிரிவதோ விவாகரத்து செய்வதோ கூடவே கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து உயர்வான கொள்கைகளைக் கடைப்பிடித்தால் நல்ல முன்மாதிரியான குடும்பங்களை உருவாக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“பிருதாவின் மகனே, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள், என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், என்னிடம் சரணடைபவர்கள் பரமகதியை அடைய முடியும்,” என்று பகவத் கீதையில் (9.29) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். எனவே, சமுதாயத்தில் பெண்களுக்கென்று தனிப்பட்ட கடமைகள் உள்ளபோதிலும், ஆன்மீகப் பாதையில் பக்குவமடைவதற்கு எந்தவொரு தடையும் அவர்களுக்கு இல்லை.

பெண்கள் தங்களது நிலையை மாற்றாமல், குடும்பத்தைப் பராமரித்தபடி, பக்தித் தொண்டில் ஈடுபட்டால், அவர்கள் நிச்சயமாக வாழ்வின் குறிக்கோளை அடையலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives