வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்த இந்தக் கருத்து புரட்சி இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவுகள் அங்கங்கே இருப்பதை அனைவரும் அறிவர். இதனை ஊரறியத் தெரிவிப்பது குற்றத்தைக் குறைக்குமா, வேறு தீர்வுகள் உண்டா, சற்று ஆராய்வோம்.
பண்பாட்டுச் சீரழிவு
கண்ணகி, சீதை, மண்டோதரி, சாவித்திரி முதலிய கற்புக்கரசிகள் போற்றிப் புகழப்பட்ட இந்த பூமியில், இன்று பிரபலமாக இருக்கும் பெண்கள் யார்? (அரசியல்வாதிகளைத் தவிர்த்தால்) திரைப்படத் துறையில் இருப்பவர்களும் மாடலிங் துறையில் இருப்பவர்களுமே பிரபலமாக உள்ளனர். இந்த இரண்டு துறைகளுமே பெரும்பாலும் உடலைக் காட்டி பணம் சம்பாதிக்கும் துறைகளாகவே உள்ளன என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. இன்றைய சமுதாயத்தில் வளரும் ஆண்கள், பெண்கள் என எல்லாரும் “பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று தப்புக் கணக்குப் போட்டபடியே வளர்கின்றனர். கற்புக்கரசிகளைப் பார்த்து வளர்ந்த சமுதாயம், இன்று யாரைப் பார்த்து வளர்கிறது?
கலி யுகத்தின் தாக்கத்தினால் ஒவ்வொரு நாளும் பண்பாடு சீரழிகிறது. அதிலும் குறிப்பாக, பாலியல் சார்ந்த பண்பாடு வெகு வேகமாக சீரழிந்து வருகிறது. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது. இத்தகு பழமொழிகளை இன்றைய மக்கள் காதில்கூட கேட்பது இல்லை. கட்டிய மனைவியைத் தவிர வேறு யாரையும் நோக்காமல், அவளுக்காகவும் குடும்பத்திற்காகவும் எல்லா சிரமத்தையும் ஏற்று, கண்ணியமாக வாழ்ந்த ஆண்களும் இன்று அரிதாகி விட்டனர். “பிறர் மனை நோக்காமை” என்ற வள்ளுவரின் அத்தியாயத்தை மூச்சுக்கு முந்நூறு முறை “திருக்குறள்,” “தமிழ்” என்று கூறுவோர்கூட படிப்பதே இல்லை.
மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் தாயாக மதிக்க வேண்டும் என்பது பண்பாடு. பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல், “அம்மா” என்று அழைத்து வந்தோம். இன்றோ பெரியவர்களை “ஆன்ட்டி” என்றும் மற்றவர்களை பெயர் சொல்லியும் அழைக்கின்றனர். இதிலேயே நமது பண்பாடு எவ்வாறு சிதைவுற்று இருக்கிறது என்பதை உணரலாம்.
இத்தகு சீர்கேட்டின் விளைவுதான், இன்று நாம் காணும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம். ஓரினச் சேர்க்கை பிழையில்லை என்றும் கள்ளத் தொடர்பு பிழையில்லை என்றும், நீதிமன்றமே தீர்ப்பு கூறுகிறது. இத்தகு சீர்கெட்ட சமுதாயத்தில் பாலியல் தொந்தரவுகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
எங்கும் எதிலும் பாலியல் தொந்தரவுகள்
பாலியல் தொந்தரவு என்பது உடல் ரீதியிலான தொந்தரவு மட்டுமல்ல, மன ரீதியிலான உளைச்சலும் இதில் அடங்கும் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி பார்த்தால், இன்று வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் காண்பவர்களின் மனதைக் கலங்கடித்து மனதளவில் பாலியல் தொந்தரவைக் கொடுக்கின்றன. திரைப்படத்திற்குச் செல்வோர் அதனை விரும்பித்தானே செல்கின்றனர் என்று சிலர் கூறலாம். அப்படிப் பார்த்தால், ஊரெங்கும் அரைகுறை நிர்வாணப் படங்களுடன் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை எதில் சேர்க்க வேண்டும்? நிச்சயம் இவை அனைத்தும் மனதளவில் நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகளே. இதற்கு என்ன தண்டனை?
அரைகுறையாக உடையணிவதை பேஷன் என்று கூறுகின்றனர். “உடையணிவது சொந்த விருப்பம், உன் பார்வையைச் சீர் செய்துகொள்,” என்று சில பெண்ணியவாதிகள் கருத்து கூறுகின்றனர். ஆனால் இவர்கள் அந்தப் பெண்களை மனதளவில் அனுபவிக்க விரும்புகின்றனர் என்பதே உண்மை. அரைகுறை ஆடையுடன் ஆண்களுக்கு முன்னால் வரும் பெண்களும், சாகசச் செயல்களைச் செய்வதுபோன்று பெண்களுக்கு முன்னால் சீன் போடும் ஆண்களும், மனதளவில் எதிர் பாலினருக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். ஆனால் இதனை யாரும் தட்டிக் கேட்பதில்லை. “முறையாக உடையுடுத்துங்கள்” என்று பெண்களுக்கு அறிவுறுத்தினால், நம்மை ஆணாதிக்க சக்தி என்று முத்திரை குத்துவோர் பலர் உள்ளனர். அவ்வாறு முத்திரை குத்தாவிடில், மனதளவிலான பாலின்ப சுகத்திற்கு தடை வந்துவிடும் என்பதே அவர்களது அச்சம்.
இன்றைய சமுதாயம் முழுக்கமுழுக்க பாலியல் தொந்தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள், பேருந்து நிலையம், இரயில் நிலையம், பொது இடங்கள் என எல்லா இடங்களிலும் பாலியல் தொந்தரவுகள் மனதளவில் சகஜமாக நிகழ்கின்றன. மனதளவில் இருக்கும் தன்மைகள் செயலளவில் வெளிப்படும்போது மட்டுமே மக்கள் சுதாரித்துக் கொண்டு தப்பிக்க நினைக்கின்றனர். அதை மனதளவிலேயே கட்டுப்படுத்த ஏன் முயலக் கூடாது?
அதிகரித்து வரும் காம இச்சைகள்
ஒட்டுமொத்த சமுதாயமும் பாலியல் இன்பத்தைப் போற்றிப் புகழ்கிறது, வாழ்வின் நோக்கம் இதுவே என்று போதிக்கிறது. இதில் யாரை யார் குற்றம் சாட்ட முடியும்? பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை பெரும்பாலானோர் உணருவதில்லை. பெண்களை வளர்ப்பவர்கள் அவர்களுக்கு உடுத்தி அழகு பார்க்கும் உடைகள், ஆபரணங்கள் முதலியவை அனைத்தும் பாலியல் கவர்ச்சியைத் தூண்டும் விதத்தில் இருக்குமேயானால், இந்த சமுதாயத்தில் நாம் எதனை எதிர்பார்க்க முடியும்?
காம சுகம் கணவன்-மனைவியிடம் மட்டும் என்பதை சமுதாயத்தின் பெரியவர்கள் இளையவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். ஆனால் காம சுகத்தைத் தீர்ப்பதற்கு இதர பல வழிகளை சமுதாயம் இன்றைய மக்களுக்குக் கற்றுத் தருகிறதே. பல வருடங்களுக்கு முன்பு எங்காவது சில இடங்களில் நீலத் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு வந்தன. சில வருடங்களுக்கு முன்பு அது ‘சிடி’யாக மாறி பரவலாக காணப்பட்டது. இப்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போனாக உருவெடுத்து விட்டது. தகவல் தொடர்பு சாதனம் என்னும் பெயரில் மக்களை அடிமட்டத்திலும் அடிமட்டத்திற்கு ஸ்மார்ட் போன் கொண்டு சென்று விட்டது. ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்யப்படும் தரவுகளில் நீலப் படங்களே முதலிடத்தைப் பிடித்துள்ளன என்னும் தகவல் நமது சமுதாயத்தின் உண்மை நிலையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர், கல்லூரி மாணவ-மாணவியர், பணியிடத்தில் இருக்கும் ஆண்-பெண்கள் என பலரும் தங்களது உரையாடல்களில் பாலுறவு சார்ந்த விஷயங்களை நேராகவும் மறைமுகமாகவும் பரிமாறிக்
கொள்கின்றனர். கொஞ்சம் பழகி விட்டால் போதும், பாலுறவைக் குறித்து பேசத் தொடங்கி விடுவர்.
இவையனைத்தும் மக்களிடையே காம இச்சைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பதையும் பெரும்பாலான மக்கள் இவற்றைக் கண்டுகொள்வதில்லை என்பதையும் பலரும் இதனையே விரும்புகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இப்படிப்பட்ட சமுதாயத்தில் பாலியல் தொந்தரவுகள் இருப்பதில் ஆச்சரியம் என்ன?
ஆண்-பெண் உறவைக் கட்டுப்படுத்துதல்
சமுதாயத்தின் இந்நிலையினை எடுத்துரைப்பதில் ஆன்மீகவாதிகளுக்கு பங்கு உண்டா என்று சிலர் நினைக்கலாம். ஆம், நிச்சயம் உண்டு. காமம் மனிதனை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் கதவுகளில் ஒன்று என்றும், அறிவுடைய மனிதன் இதனைக் கைவிட வேண்டும் என்றும் பகவத் கீதையில் (16.21) கிருஷ்ணர் கூறுகிறார். மேலும், இந்த உலக வாழ்வில் மனிதன் பந்தப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் காமமே. இதனை கிருஷ்ணர் கட்டுண்ட ஆத்மாவின் நித்திய எதிரி என்றும் ஒருபோதும் திருப்தியடையாதது என்றும் பகவத் கீதையில் (3.39) எடுத்துரைக்கிறார்.
எனவே, காமத்தைக் கட்டுப்படுத்துதல் மனித வாழ்விற்கு இன்றியமையாததாகும். அனைவரும் சந்நியாசியாக வேண்டும் என்று கீதை கூறவில்லை, நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்கள் கீதையில் அறிவுறுத்தப்படவில்லை. மாறாக, காமத்தை நெறிப்படுத்த வேண்டும் என்றே கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். நெறிப்படுத்தப்பட்ட காமத்தை அவர் தமது பிரதிநிதியாகவும் (பகவத் கீதை 7.11) வர்ணிக்கின்றார்.
ஆண்-பெண் உறவு என்பது திருமணம் என்னும் கட்டுப்பாட்டிற்குள் இருத்தல் வேண்டும். அதுவே மனித சமுதாயத்தைக் கட்டுப்படுத்தும். அதை விடுத்து, “அனைவரும் சமம்” என்று கூறிக் கொண்டு, இரு பாலினரும் சகஜமாகப் பழகினால், நிச்சயம் சமுதாயத்தில் பலவித பிரச்சனைகள் தலைதூக்கும். இதில் சிறிதும் ஐயமில்லை.
எனவே, வேத சாஸ்திரங்கள் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதை பல இடங்களில் தெளிவாகக் கூறியுள்ளன. வெண்ணையும் (ஆணும்) நெருப்பும் (பெண்ணும்) பக்கத்தில் இருந்தால் வெண்ணை உருகிவிடும் என்றும், ஒருவன் தனது சொந்த மகளுடன்கூட தனிமையில் இருக்கக் கூடாது என்றும், பெண்களுடனான தொடர்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (7.12.9) கூறுகிறது. தினந்தோறும் ஒரே ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகினால், அங்கே இனக் கவர்ச்சி ஏற்படாமல் இருக்குமா? பிரச்சனைகள் எழாமல் இருக்குமா?
வேலைக்குச் செல்லா பெண்கள்
உலகெங்கிலும் நிலவும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு என்ன? ஆண்கள் அனைவரும் முற்றும் துறந்த முனிவர்களாக மாற வேண்டும் என்று சிலர் கூறலாம். நடைமுறையில் அது சாத்தியமல்ல என்பதை அனைவரும் அறிவர். கண்ணியமாக வாழ நினைக்கும் ஆண்மகனும் தொடர்ச்சியான பெண் சகவாசத்தினால் தன்னிலை மறப்பான் என்பது உறுதி. எனவே, நமது பாரம்பரிய பண்பாட்டில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு சமுதாயப் பணிகள் நியமிக்கப்பட்டுள்ளன. ஆண்கள் வெளியே சென்று பொருளீட்ட வேண்டும், பெண்கள் இல்லத்தினுள் இருந்தபடி இல்லற கடமைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேலைக்குச் செல்லும் இடத்தில் பெண்களுக்கு நிகழும் தொல்லைகளுக்கு இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். இந்தத் தீர்வினைப் படித்தவுடன் சிலர் இஃது ஆணாதிக்க எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்று நினைக்கலாம். நீங்கள் என்ன நினைத்தாலும் உண்மை இதுவே. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமுதாயத்தில் வெவ்வேறு கடமைகள் உள்ளன. இல்லத்தைப் பராமரிப்பதும் குழந்தைகளை வளர்ப்பதும் தாய்மார்களின் முக்கிய கடமையாகும். கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இடங்களில் குழந்தைகள் ஏறக்குறைய அனாதைகளைப் போன்று வளர்கின்றனர் என்பதை யாரால் மறுக்க முடியும்? குழந்தைகளுக்குத் தேவையான பாசத்தையும் பரிவையும் ஊட்டி வளர்ப்பவள் தாய். ஆனால் அவள் வேலைக்குச் சென்று விட்டால், அக்குழந்தை எவ்வாறு முறையாக வளரும்?
வேலைக்குச் செல்லா பெண்கள் என்பதே இப்பிரச்சனைக்கு உண்மையான தீர்வு. பெண்ணியத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்கள் நிச்சயம் இக்கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பர். ஆயினும், சமுதாய அளவில் ஆண்-பெண் இடையே வேறுபாடு உள்ளது என்பதையும் இவர்களது பொறுப்புகள் வேறுபடுகின்றன என்பதையும் எடுத்துரைப்பது எமது கடமை. ஆன்மீக அளவில் இருவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது என்பதையும் இந்நேரத்தில் எடுத்துரைக்கக் கடன்பட்டுள் ( இதுகுறித்த ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடலையும் படியுங்கள்).
மொத்த சமுதாயத்தையும் மாற்றுவோம்
பாலுறவினால் நான் இன்பமடைவேன்,” என்று இன்றைய மக்கள் முழுமையாக நம்புகின்றனர். சமுதாயத்தின் உண்மை நண்பனாகத் திகழ்ந்த ஸ்ரீல பிரபுபாதர், மனித சமுதாயத்தின் நோக்கம் புலனின்பத்தில் திளைத்திருப்பது அல்ல என்றும், இந்தப் புலனின்பம் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கான முக்கிய தடை என்றும், இதனை முறையாக வழிநடத்தி, கட்டுப்படுத்தி, நமது கவனத்தை கிருஷ்ணரின்பால் திருப்ப வேண்டும் என்றும் பலமுறை அறிவுறுத்தியுள்ளார்.
நாம் இன்று வாழும் சமுதாயம் இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது, ஆன்மீகப் பண்பாட்டிற்கு சாதகமான சூழ்நிலை இன்று இல்லை என்றே கூறலாம். இதற்கு மத்தியில் நாம் எவ்வாறு சாதுவாக வாழ முடியும்? இருப்பினும், முதலில் குறைந்தபட்சம் கிருஷ்ண பக்தர்களாக இருப்பவர்களும் பக்தியை விரும்புபவர்களும், ஆண், பெண் ஆகிய இருவருக்கும் சமுதாயத்தில் வெவ்வேறு பணிகள் உள்ளன என்பதை உணர்ந்து, காமத்தினால் பைத்தியமாக உள்ள இன்றைய அசுர சமுதாயத்திலிருந்து முதலில் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து நம்மால் இயன்ற வரை மற்றவர்களையும் இதிலிருந்து பாதுகாக்க வேண்டும். முதலில் நம்மை மாற்றுவோம், அடுத்து அனைவரையும் மாற்றுவோம். நாம் அனைவரும் நித்தியமானவர்கள்; கிருஷ்ணரை அறிந்து, கிருஷ்ணருக்கு சேவை செய்து, கிருஷ்ணரை நேசித்து, கிருஷ்ணருடன் இன்பமாக வாழ வேண்டியவர்கள். இதனை உணர்ந்து இதற்கு சாதகமான பணியினை செவ்வனே செய்து வாழ்வைப் பக்குவப்படுத்துவோமாக.
Very rightly said each n every word is true!!!
Hare Krishna Giridhari Prabhu,
Thanks for sharing the sexual harassnment in good spritual ways. It’s very helpfull for me and others like young generations. I request you kindly guide me in spritual path till my last day.Jai Srila Prabhupath
By Sriram Dhamootharmoothy Das from Iskcon Vellore.