வழங்கியவர்: திருமதி. கிருஷ்ண காமினி தேவி தாஸி
மிக உயர்ந்ததும் தொன்மை மிக்கதுமான வைஷ்ணவ தர்மம், ஆழமான பக்தி உணர்வுகள் மற்றும் நுணுக்கமான விளக்கங்களுடன் தெய்வீக மணங் கமழும் பொலிவு பெற்றதாகும். தனக்கு வேண்டியவற்றை எல்லாம் பகவான் பார்த்துக் கொள்வார் என்பதை உணர்ந்து, அவரது பாத கமலங்களுக்குத் தொண்டு புரிவதே தமது தொழில் என்று வாழ்வதே சரணாகதி எனப்படும் உயர்ந்த தத்துவமாகும். இதை நமக்குக் கற்றுக் கொடுப்பதற்காக இம்மண்ணுலகில் தோன்றிய பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒன்பதாவது ஆழ்வாராக ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாளின் பெருமை யை இங்கு சற்று பார்ப்போம்.
ஆண்டாளின் அவதார நோக்கம்
லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷிகேஷ: என்று உபநிஷத் சொல்கின்றது. அதாவது, பகவானின் ஒவ்வொரு அவதாரத்தின்போதும் அவருடைய பத்தினிகளும் உடன் அவதரிக்கின்றனர். பகவானின் துணைவியர் மூவர்–திருமகள், மண்மகள், ஆயர் மடமகள். திருமகள் என்பது லக்ஷ்மியையும், மண்மகள் என்பது பூமிப் பிராட்டியையும், ஆயர் மடமகள் என்பது நீளா தேவியையும் குறிக்கும்.
இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமிப் பிராட்டியை சமுத்திரத்தினுள் கொண்டு சென்று மறைத்து வைத்தான். அப்போது பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து தனது கூரிய பற்களால் பூமிப் பிராட்டியை எடுத்தார். அப்போது பூமிப் பிராட்டியின் மேனி நடுங்க, எம்பெருமான் உடனடியாக அவளைத் தமது மடியில் அமர்த்தி ஆலிங்கனம் செய்து கொண்டார். தன்னை ஆட்கொண்டதுபோல் இப்பூமியிலுள்ள எண்ணிலடங்காத குழந்தைகளையும் உய்விக்க ஓர் உபாயம் சொல்லுமாறு அப்போது பூமிப் பிராட்டி பகவானிடம் வேண்டினாள். ஒவ்வொரு ஜீவனின் மனம், வாக்கு, காயம் (உடல்) இம்மூன்றும் என்னிடத்தில் நிலைத்திருக்கட்டும்” என்று பகவான் பதிலளித்தார். மனம் நினைத்ததை வாய் பேசும்படியும், வாய் பேசியதை உடல் செய்யும்படியும் நாம் பழக்கப்படுத்த வேண்டும். மனம், வாக்கு, காயம் இம்மூன்றும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடமே நிலைத்திருக்க வேண்டும். அவரை வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க வேண்டும் என்னும் சுலபமான வழியை நமக்கு எடுத்துரைக்க பூமிப் பிராட்டி உயர்ந்த வைகுண்டத்திலிருந்து பூமியில் அவதரித்தாள்.
ஆண்டாளின் தோற்றம்
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் திருவில்லிபுத்தூரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) வசித்து வந்தார். அவர் பகவான் விஷ்ணுவைத் தனது சித்தத்தில் எப்போதும் வைத்திருந்ததால், அவருக்கு விஷ்ணுசித்தர் என்று மற்றொரு பெயரும் உண்டு. திருவில்லிபுத்தூர் கோவிலுக்கு அருகில் ஓர் அழகிய பூந்தோட்டம் அமைத்து, அதிலிருந்து மலர்களைச் சேகரித்து மாலை தொடுத்து பகவானுக்கு சமர்ப்பித்து பெரியாழ்வார் கைங்கரியம் செய்து வந்தார். ஒருநாள் (ஆடி மாதம், பூர நட்சத்திரத்தன்று) அவர் மலர்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, துளசிச் செடியின் அடியில் ஓர் அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்ட பெரியாழ்வார், அவளைத் தனது மகளாக வளர்க்கத் தொடங்கினார். கோதை என்றால் பூமாலை என்பது பொருள்.
ஆழ்வார்களின் சந்ததியாக
பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார் ஆகிய ஆழ்வார்களின் ஒரே சந்ததியாக ஆண்டாள் கருதப்படுகிறாள். ஆழ்வார்கள், தங்களது சொத்துக்களான ஞானம், பக்தி, வைராக்கியம் ஆகிய மூன்றையும் தங்களின் ஒரே சந்ததியான ஆண்டாளுக்கு சீதனமாக கொடுத்தனர் என்றும் கூறப்படுகின்றது.
சூடிக் கொடுத்த கோதை
கோதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். பெரியாழ்வார் கிருஷ்ண கதைகளைச் சொல்லிச் சொல்லி அவளை வளர்த்தார். விரைவில் கோதையின் மனமும் கிருஷ்ணரின் மீது முற்றிலும் மூழ்கியது. கோதையின் காதல் பெருக, கிருஷ்ணரை மட்டுமே திருமணம் செய்வது என்ற திடமான எண்ணத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டாள்.
திருவில்லிபுத்தூரில், பதினாறு அடி திருமேனி கொண்ட பெருமாள், வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் ஆலிலைத் தளிரில் சயனித்திருக்கும் திருக்கோலத்தில் உள்ளார். அவருக்கு பெரியாழ்வார் தினமும் பூமாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார்.
தன்னைப் பெருமாளின் மணமகளாகக் கருதிய கோதை, அவருக்கான மாலையை யாருக்கும் தெரியாமல் தான் முதலில் அணிந்து அழகு பார்த்து, பின்னர் கூடையில் வைத்து விடுவாள். இதை அறியாத பெரியாழ்வார், கோதை சூடிக் கொடுத்த மாலையினை பெருமாளுக்கு தினமும் சமர்ப்பித்து வந்தார். ஒருநாள் அந்த மாலையில் ஒரு தலைமுடி ஒட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதனை அபசாரமாக எண்ணிய பெரியாழ்வார் பெருமாளுக்கு வேறு மாலையை சமர்ப்பித்தார். ஆனால், பெருமாளோ, கோதை சூடிக் களைந்த மாலையே தனக்கு ஏற்றது என்று பெரியாழ்வாரின் கனவில் தோன்றி உரைத்தார்.
பெருமாள் கூறியதைக் கேட்ட பெரியாழ்வார் பரவசத்தில் மூழ்கியபடி கண்ணீருடன் விழித்தெழுந்தார். தனது மகளின் பெருமையையும் பெருமாளே அவளை விரும்புவதையும் எண்ணி பூரிப்படைந்தார். அன்றிலிருந்து கோதை, ஆண்டாள் (பெருமாளை ஆண்டவள்) என்று பெயர் பெற்றாள். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. இப்பழக்கம் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆண்டாளின் விருந்தாவனம்
கிருஷ்ணர் தனது லீலைகளை அரங்கேற்றிய விருந்தாவனத்திற்குச் செல்ல ஆண்டாளுக்கு மிகுந்த ஆசை. ஆனால் அக்காலத்தில் நினைத்தவுடன் அங்கு செல்ல முடியாது என்பதால், தான் வசித்த திருவில்லிபுத்தூரை கோகுலமாகவும், தன் இல்லத்தை நந்தகோபரின் மாளிகையாகவும், வடபத்ரசாயியை கிருஷ்ணராகவும், தன்னை இடையர் குலப் பெண்ணாகவும், தன் தோழிகளை கோபியர்களாகவும் மனதில் நினைத்து வாழத் தொடங்கினாள். அதே மனோ பாவத்துடன் “திருப்பாவை” என்று அழைக்கப்படும் முப்பது பாசுரங்களைப் பாடினாள். மேலும், “நாச்சியார் திருமொழி” என்றழைக்கப்படும் 143 பாசுரங்களையும் பாடினாள்.
ஆண்டாளின் திருக் கல்யாணம்
ஆண்டாள் திருமண வயதை அடைந்தவுடன், பெரியாழ்வார் தன் மகளிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்க, “மானிடர்கள் எவரையும் நான் மணக்க மாட்டேன், அந்த கண்ணனே என் மணாளன்” என்று பதிலுரைத்தாள். பூலோக வைகுண்டமாகக் கருதப் படும் திருவரங்கத்தில் (ஸ்ரீரங்கத்தில்) சயனித்திருக்கும் அரங்கனை மட்டுமே மணமுடிப்பேன் என்று ஆண்டாள் விருப்பம் தெரிவித்தாள். தனது மகளுக்கு என்ன நடக்கும் என்ற விந்தையுடன் பெரியாழ்வார் வாழ்ந்தார்.
ஒருநாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய ஸ்ரீ ஹரி, “உம்முடைய மகளைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வருக,” என்று கட்டளையிட்டார். அதே போல் பாண்டிய மன்னன் வல்லபதேவரின் கனவிலும் தோன்றி, வில்லிபுத்தூருக்குப் போய் பெரியாழ்வாரையும் ஆண்டாளையும் திருவரங்கத்திற்கு அழைத்து வரும்படி பணித்தார்.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருமணக் கோலத்தில் ஆண்டாள் திருவரங்கம் சென்றாள். கோவிலுக்குள் நுழைந்தவுடன் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல், பல்லக்கிலிருந்து குதித்து கர்ப்ப கிரகத்தை நோக்கி ஓடினாள். உள்ளே சென்று அரங்கனின் திருவடிகளைத் தொட்டாள்; தொட்டவுடன் மறைந்தாள். முழுமுதற் கடவுளின் நித்திய லீலையில் பங்கேற்க சென்றாள். அப்போது அவளது வயது பதினைந்து மட்டுமே.
ஆண்டாளும் இராமானுஜரும்
ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில், நூறு அண்டாக்களில் வெண்ணையும் நூறு அண்டாக்களில் அக்கார அடிசிலும் (சர்க்கரைப் பொங்கல்), திருமாலிருஞ்சோலை பகவானுக்கு அர்ப்பணிக்க விருப்பம் கொண்டு எழுதி வைத்தாள். அவள் தோன்றிய வெகு காலத்திற்கு பிறகு வந்த இராமானுஜாசாரியர், அப்பாடலைப் படித்து பரவசமடைந்து, ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றினார்.
பின்னர், இராமானுஜர் திருவில்லிபுத்தூருக்கு ஆண்டாளை தரிசிப்பதற்காக கோவிலின் உள்ளே நுழைந்தபோது, “எனது அண்ணன் வருகிறார்” என்ற ஆண்டாளின் அசரீரி கேட்டது. ஆண்டாளின் விருப்பத்தை இராமானுஜர் நிறைவேற்றிய காரணத்தினால், அவர் ஆண்டாளின் அண்ணனாகிறார்.